தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்

  Soundarya Ravi   | Last Modified : 09 Sep, 2018 11:15 am

best-tamil-songs-on-father-child-relationship

அன்னையர் தினம் அளவுக்கு தந்தையர் தினத்திற்கு யாரும் பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பத்தில்லை. அதே போல தான் தந்தைகளை கொண்டாடவும் மறந்துவிடுகிறோம். தாய் பெற்றெடுக்கிறாள்.. தாய் பாலூட்டுகிறாள்.. என்று அன்னைகள் பற்றி பேசும்போது தந்தைகளின் முக்கியத்துவத்தை பேச மறக்கிறோம்.

தந்தை தான் ஒரு குழந்தையின் முதல் சூப்பர் ஹீரோ என்பது மிகவும் பழைய வழக்கு. ஆனால் இன்னும் வரும் அத்தனை காலமும் அந்த வழக்கு நம் சமூகத்திற்கு பொருந்தும். ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர்ந்து ஆளாவது வரை கைப்பிடித்து அழைத்துவரும் தந்தைகளை கொண்டாடி தமிழ் சினிமாவில் வந்துள்ள பாடல்களின் தொகுப்பு இது..

ஆனந்த யாழை

ராமின் 'தங்கமீன்கள்' பெண் குழந்தைக்கும் தந்தைக்கும் இடையேயான பாசத்தின் வழியாக பெருகி வரும் உலகமயமாக்கல் குறித்து பேசிய மிக முக்கியமான படம். தனது மகள் கேட்ட நாய்க்குட்டியை வாங்குவதற்காக ஊர் விட்டு ஊர் சென்று செத்து பிழைக்கும் தந்தை கல்யாணி எத்தனையோ தந்தைகளின் பிரதிநிதி. 

இப்படத்தில் வரும் 'ஆனந்த யாழை' பாடலுக்காக கவிஞர் நா.முத்துகுமாருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இன்றும் பல அப்பாக்களின் ரிங்டோனாக இந்த பாடல் இருப்பது தான் இதனை இசையமைத்த யுவனுக்கு கிடைத்த விருது. 'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கும் மட்டும் தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று" என ராமின் குரல் முடியும் போது தொடங்கும் பிரீலூடிலேயே பாசத்தை தெளித்திருப்பார் யுவன்.

உனக்கென்ன வேணும் சொல்லு

என்னை அறிந்தால் படத்தில் தனது காதலியின் மகளை தன் மகளாக ஏற்கும் தந்தையாக அஜித் நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் உனக்கென்ன வேணும் சொல்லு பாடலின் இசை, குரல், காட்சிகள், வரிகள் அத்தனையும் அவ்வளவு அழகு. காதலை மட்டும் அல்ல பாசத்திலும் தனது அழகியலை காட்டி இருப்பார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இந்த பாடலுக்காக கவிஞர் தாமரைக்கு 2016ம் ஆண்டுக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. அலட்டல் இல்லாமல் 'நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன் என சிம்பிள் வரிகளை பயன்படுத்தி இருப்பார் தாமரை. 

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

நா.முத்துகுமாரை விட உறவுகளை பற்றி யார் அழகாக எழுதிவிட முடியும். எப்போதும் பிள்ளைகளை கொண்டாடி தந்தை பாடிய பாடல்கள் வெளியாகும் தமிழ் சினிமாவில் தந்தையை கொண்டாடிய பாடல் "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்தில் வரும் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல். 'நமக்கெனவே வந்த நண்பன் தந்தை..' என விஜய் யேசுதாசின் குரலில் அந்தபாடலை கேட்கும் போது உங்கள் தந்தையின் முகம் கண் முன் வருகிறதல்லவா?

வா வா என் தேவதையே

அபியும் நானும் படத்தில் த்ரிஷாவின் தந்தையாக நடித்த பிரகாஷ் ராஜ் பல டீன் பெண்களின் தந்தைகளை அச்சு அசலாக திரையில் காட்டியிருப்பார். மகளுக்கு சைகிள் வாங்கி கொடுத்துவிட்டு பின்னால் செல்வது முதல் மகளின் காதலை முதலில் ஏற்க முடியாமல் தவிப்பது வரை எல்லார் வீட்டிலும் இருக்கும் தந்தை அவர். இப்படத்தின்  வா வா என் தேவதையே பாடலில் வரும் " தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா... என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே" என்ற வரிகளுக்கு மேல் எப்படி தந்தை பாசத்தை விளக்கிவிட முடியும்.  

ஆரிரோ

ஜி.வி.பிரகாஷ் செம இசையமைப்பாளர் என்பதை மிக குறுகிய காலத்தில் நிரூபித்தவர். குறிப்பாக ஏ.எல்.விஜய் படங்கள் என்றால் அவரின் இசை இன்னும் அழகாக மாறிவிடும். அதற்கு மிக பெரிய உதாரணம் தெய்திருமகள் படத்தின் பாடல்கள். படத்தின் அத்தனை பாடல்களும் அப்பா பாடல்கள் தான். குழந்தை பிறக்கும் போது பாபா பாடல், தாய் இறந்த பின் மகளை தனியாக வளர்க்கும் போது ஆரிரோ பாடல், கதை சொல்லும் போது கதை சொல்ல போறேன் என அத்தனை பாடல்களும் படத்துடன் மிக சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக ஆரிரோ பாடலில் வரிகள் ஒவ்வொன்றிலும் படத்தின் கதையே சொல்லப்பட்டிருக்கும். 

அப்பன் மவனே வாடா

சிம்புவும் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போடா போடி படத்தில் இளம் தந்தையாக நடித்த சிம்பு அதில் வரும் அப்பன் மவனே வாடா பாடலுக்கு அவரே வரிகளும் எழுதி உள்ளார். மதராவும் இருப்பேன்பா.. உன் பெஸ்ட் ஃபிரெண்டு பா.. உன் பெஸ்ட் ஃபிரெண்டு பா.. என பொங்கி பொங்கி அவரே அந்த பாடலை பாடியும் உள்ளார். 

கனவெல்லாம் பலிக்குதே

கீரிடம் படத்தில் அப்பாவின் கனவை நிறைவேற்ற முயற்சிக்கும் மகனாக அஜித் நடித்திருப்பார். என் வானத்தில் ஒரு நட்சத்திரம்.. என்ற வரிகளோடு தன் மகனை பார்த்து ரசிக்கும் ராஜ்கிரணின் முகம் அவ்வளவு அழகு. இரவில் படிக்கும் பிள்ளைக்கு டீ கொடுப்பது, தந்தையுடன் வாக்கிங் செல்வது என உங்கள் வீட்டிலும் இதெல்லாம் நடந்திருக்கும் தானே..

ஒரே ஒரு ஊருக்குள்ளே

தவமாய் தவமிருந்து படத்தில் வரும் பாடல்களை பார்த்து அழுத தந்தைகளும் மகன்களும் பலர். குறிப்பாக ஒரே ஒரு ஊருக்குள்ளே பாடல் பல கிராமங்களில் நடந்த கதைகளின் சுருக்கம். 'கணக்கு பாடம் தெரியாம பரிட்சையில தோத்தேன்' தொடங்கி 'உங்கள பெத்ததே சந்தோசம்' என்பதை வரை கனவுகளும், வலிகளும் நிறைந்திருக்கும் பாடல். 

பற பற பற பட்டாம்பூச்சி

பலருக்கும் மறக்க முடியாத வாத்தியார் என்று யாராவது இருப்பார்கள். கற்றது தமிழ் பட நாயகனுக்கு தனது வாத்தியார் தான் தந்தை. ரத்த சொந்தம் மட்டுமே தந்தை-மகன் என்ற உணர்வை தந்துவிட முடியாது அல்லவா. வழித்துணையாக.. பலவற்றை கற்றுக்கொடுக்கும் ஒரு மனிதன், ஹீரோவாகி பின்பு அச்சிறுவனுக்கு தந்தையாகிறார். அதற்கு அவர் சாகசம் எல்லாம் செய்துவிடவில்லை பாசத்தை மட்டுமே கொடுக்கிறார்.  இப்படத்தில் சிறு பகுதியாக வரும் பற பற பற பாட்டாம்பூச்சி பாடலின் காட்சிகள் புதுகவிதை புத்தகத்தின் ஓவியம் போல இருக்கும். 

ஈனா மீனா டீக்கா

விஜய் தந்தையாக நடித்த படம் தெறி. அவரின் மகளாக மீனாவின் மகள் நைனிகா. விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகளை விட அவரின் காமெடி காட்சிகளும், ரொமான்ஸ் காட்சிகளும் பலருக்கு பிடிக்கும்.அதற்கு அடுத்ததாக அவர் இந்தபடத்தில் தந்தையாக நடித்த காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் வரும் ஈனா.. மீனா.. டீக்கா பாடல் அவ்வளவு க்யூட். அதன் வரிகளும் காட்சிகளும் சேர்ந்து அந்த பாடலை இன்னும் துள்ளலாக மாற்றி இருக்கும். 

குறும்பா..

'டிக் டிக் டிக்' படம் இன்னும் வெளியாகவில்லை ஆனால் இந்த படத்தின் குறும்பா பாடலுக்கான காட்சிகளை ஒவ்வொரு 20'ஸ் தந்தைகளும் தனி தனியாக உருவாக்கி வைத்துள்ளனர். 'உயரம் குறைந்தேன் உன்னால், மணலில் வரைந்தேன் உன்னால்' என எளிமையாகவும், 'விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழிதானே' என படத்திற்கேற்ற டெக்னிக்கல் வரிகளாகவும் தனது ஸ்டைலில் கலக்கியிருக்கிறார் மதன் கார்க்கி. இந்த பாடல் இன்னும் சிறப்பாக மற்றொரு காரணம் ஜெயம் ரவி தனது மகனோடு நடித்திருக்கிறார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.