நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி -3 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 13 Oct, 2017 11:20 pm

thalapathy-biograph-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-3
20 ரூபாய்க்கு நாள் முழுக்க அலையவிட்ட நடிகர்..! மனைவி ஷோபா கூறியபடி மகனுக்கு பால் டின் வாங்க 20 ருபாய் வேண்டும். தயாரிப்பாளரோ ஊரில் இல்லை, இயக்குநரோ டென்ஷன் மூடில் இருந்தார், சக உதவி இயக்குநர்களோ அன்றாட செலவுக்கே அல்லாடுபவர்கள். பிறகு, யாரிடம் பணம் கேட்பது? என யோசித்தபடியே சைக்கிள் மிதித்த சந்திரசேகருக்கு ஒரு பிரபல குணச்சித்திர நடிகர் நினைவுக்கு வந்தார். அந்த முன்னணி நடிகர், அவர் பணியாற்றும் படத்தில் அப்போது நடித்துக்கொண்டிருந்தார். தினமும் பார்க்கும் முகம், நிச்சயம் உதவி செய்வார் என நம்பி; சைக்கிளை வேகமாய் மிதித்துப் போய்; அந்த நடிகர் வீட்டில் நின்றார். அவர் வரும் வரை கார் அருகிலேயே காத்திருந்தவர், காரில் ஏறவந்த நடிகருக்கு வணக்கம் வைக்கவும், 'என்னப்பா.. இவ்வளவு காலையில வந்திருக்க?' என நடிகர் கேட்டார். சந்திரசேகர்: அண்ணே.. ஒரு 20 ரூபா கடனா வேணும்ணே..! நடிகர்: அடடா...! நான் வெளிய வரும்போது பணம் வச்சுக்க மாட்டேன்பா! சரி.., ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திரு, ப்ரொடக்சன்ல வாங்கித் தாரேன்! என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப் பறந்தார் அந்த நடிகர். விஜய்க்கு பால் வாங்க வேண்டுமே, பால் டின் வாங்காமல் எப்படி ஷோபாவை எதிர்கொள்வது? என்ற கவலையில், காருடன் போட்டி போட்டு சைக்கிளை மிதித்து பின்னாடியே சென்றார் சந்திரசேகர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் மேக் அப் போட்டார், கேமரா முன் நின்று நடித்தார், ஷாட் பிரேக்கில் வந்து ஓய்வெடுத்தார், அங்கிருந்த சிலருடன் சிரித்துப் பேசினார். ஆனால், சற்று தூரத்தில் நின்ற; 20 ரூபாய் கடன் கேட்டு வந்த உதவி இயக்குனரை மட்டும் கண்டும் காணாதது போல இருந்தார். ஷூட்டிங் முடிந்து நடிகர் காருக்கு வந்தபோது, ஓரமாய் நின்றிருந்த சந்திரசேகரை கண்டுகொள்ளாமல் மீண்டும் காரில் ஏறிப் பறந்தார். மறந்து தான் போயிருப்பார் என நினைத்த சந்திரசேகர் காருக்குப் பின்னால் சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டு நடிகரின் வீட்டுக்கு வந்தார். ஏற இறங்கப் பார்த்த அந்த நடிகர், 'ச்சோ, ச்சோ.. மறந்தே போயிட்டனே! ஷூட்டிங் ஸ்பாட்ல ஞாபகப் படுத்தியிருந்தா வாங்கி கொடுத்திருப்பேனே! சரி... நாளைக்கு வா!' என கேசுவலாக சொல்லிவிட்டு வீட்டிற்குள் போனார். 20 ரூபாய்க்காக நாள் முழுக்க அலைந்தும், மகனுக்கு பால் டின் வாங்கித் தர முடியாமல் போனதை நினைத்து கதறி அழுதார். அதைக் கண்டு கலங்கிய ஷோபா, மீண்டும் மேடைக் கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். ஆனால் வறுமை அவர்களை அதிக தூரம் துரத்தவில்லை... விஜய் வளர வளர, தம்பதியின் வாழ்க்கையில் வளர்ச்சி வந்தது. இணை இயக்குநர், கதாசிரியர், இயக்குநர் என மளமளவென முன்னேறினார் எஸ்.ஏ.சந்திரசேகர். சந்திரசேகர் இயக்கிய முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை 1981இல் வெளிவரும்போது விஜய்யின் வயது 7. தொடர்ச்சியாக, நெஞ்சிலே துணிவிருந்தால், ஜாதிக்கொரு நீதி, பட்டணத்து ராஜாக்கள் என படங்கள் குவிய, குடும்பத்தில் குதூகலம் வளர்ந்தது, படிப்படியாக வசதிகள் பெருகியது. அந்த சமயத்தில், அடுத்தடுத்து நடந்த இரண்டு விஷயங்கள் குடும்பத்தின் குதூகலத்தையே குப்புற தள்ளியது. அந்த துயர சம்பவங்கள் என்ன? திங்கள் சந்திப்போம்....

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.