நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி -4 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 16 Oct, 2017 06:58 pm

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-4
புதிய பட வாய்ப்பு வரவர... எஸ்.ஏ.சந்திரசேகர் வசதியும் அதிகரித்தது. கோடம்பாக்கத்தில் ஒண்டிக்குடித்தன வீட்டில் இருந்து, சாலிகிராமத்தில் சொந்த வீட்டுக்குக் குடியேறினார். விஜய்யை வசதியானவர்களின் குழந்தைகள் படிக்கும் விருகம்பாக்கம் பால லோக் பள்ளியில் சேர்த்தார். கூச்ச சுபாவம் கொண்ட, அமைதியான மாணவனாக ஐந்தாம் வகுப்பு படித்த விஜய்க்கு ஆரம்பக் காலங்களிலேயே நண்பர்கள் குறைவு. ஒருமுறை பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் நடிக்க ஆசிரியர் பெயர் சேர்த்தபோது; வேண்டவே வேண்டாம் என அடம்பிடித்தார். விடாப்பிடியாக அவர் பெயரைச் சேர்க்கவே; மறுநாள் ஸ்கூலுக்குப் போகாமல் லீவு போட்டாராம் விஜய்! விஜய், படிப்பில் சுட்டி இல்லை! ஆனால், ஓவியம் வரைவதிலும், விளையாட்டிலும் படு கெட்டி! கோ கோ, தடகளம் போன்ற விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்றார். ஒருமுறை கான்பூரில் நடந்த தேசிய கைப்பந்துப் போட்டியில் கலந்து கொண்ட தமிழக அணியில் முக்கிய வீரராக இருந்திருக்கிறார் விஜய். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் வாழ்வில், ஸ்டாப் போர்டு போட்டது; அந்த இரண்டு சம்பவங்கள்..! 'தன் கூட விளையாட ஒரு தம்பி வேணும்' எனச் சிறுவன் விஜய் அடம் பிடித்தபோது வெட்கப்பட்ட அப்பாவும், அம்மாவும் கொஞ்ச நாள் கழித்து, 'சீக்கிரமே தம்பி வரப்போறான்'னு நல்ல செய்தி சொன்னார்கள். விஜய்க்கு குஷியோ குஷி! அம்மா வயிற்றில் இருக்கும் போதே அந்தக் குட்டிப் பையனுக்கு வினோத் என்று பெயர் கூட வைத்தார். ஆனால், அவன் வெளியுலகத்தைக் கூடப் பார்க்கவில்லை! அம்மா வயிற்றிலேயே அவனது ஆயுள் முடிந்து போனது. தம்பி வருவான், விளையாட்டுக்குத் துணையாக இருப்பான் என்கிற கனவில் மிதந்த விஜய் கண்ணில் கூடக் குட்டிப் பையனைக் காட்டவில்லை! மறுபடியும் ஷோபா கர்ப்பம் தரித்தார். இந்தமுறை ஆர்ப்பாட்டமோ, ஆரவாரமோ விஜய் செய்யவில்லை. அம்மா வயிற்றிலிருந்து வெளியுலகத்துக்கு வந்த பிறகு பார்த்துக் கொண்டாடலாம், என அமைதி காத்தான். கொஞ்ச நாளுக்குப் பிறகு விஜய்க்கு அழகான தங்கச்சி பாப்பா பிறந்தாள். அவளுக்கு வித்யா எனப் பெயர் வைத்தனர். 'தனக்காகவே தேவதூதனால் அனுப்பிவைக்கப்பட்ட தேவதை அவள்..!' எனத் தங்கை வித்யாவை கொண்டாடினார் விஜய். தனக்குக் கிடைக்கும் சாக்லேட்கள் அத்தனையையும் தங்கச்சிப் பாப்பாவுக்கே கொடுத்தார். சந்தோஷத்தை அதிகம் கொண்டாடக் கூடாது என்கிற பக்குவம் சிறுவன் விஜய் அப்போது தெரியவில்லை! வாழ்க்கையின் மிக முக்கியமான அந்தப் பாடத்தை அவருக்குப் போதிப்பதற்காகவே கடவுள் வித்யாவை இந்த உலகத்துக்கு அனுப்பி வைத்தாரோ என்னவோ? இல்லையென்றால், மூன்று வயது குழந்தைக்குக் கேன்சர் வருமா? ஒரு சின்னத் தலைவலி வந்தால் கூடக் கத்தி கதறி வீட்டையே ரெண்டு செய்கிறவர் விஜய். ஆனால், உயிர் குடிக்கும் கேன்சர் உடம்புடன் கை தட்டிச் சிரித்தவள் வித்யா. ஒருநாள்... அப்பா, அம்மா, அண்ணா என எல்லோரையுமே விட்டு, இந்த உலகத்தை விட்டே போனாள். குடும்பத்தில் எல்லோருக்கும், ஒரு பெண் குழந்தையைப் பறிகொடுத்த சோகம். விஜய்யோ, இந்தச் சோகத்தில் தன்னுடைய உற்சாகமான உலகத்தையே இழந்தார். அப்பா- அம்மா இருவரும் ஷூட்டிங் என வெளியே போய்விட, வித்யா இல்லாத வெறுமையான வீட்டில் அவர் மட்டும் தனியே இருந்தார். பெற்றவர்கள் முன்னிலையில் கூட அழுகையை அடக்கி வைத்திருந்த விஜய், தனியாய் இருக்கும் போது தங்கையை நினைத்துக் கதறி அழுவார். அந்தத் துக்கம், வாழ்நாள் வரை அவரைத் துரத்துகிறது..! விஜய் மனதிற்குள் இப்படியொரு ஆறாத வடு இருக்கும்போது; முகத்தில் எப்படி மலர்ச்சி இருக்கும்? அவரது அமைதிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்! சொந்த வாழ்க்கையில் தான் இவ்வளவு சோகப் புயல் என்றால், சினிமா வாழ்க்கையில் இதையும் மிஞ்சும் அளவுக்குப் பல சோதனை சூறாவளிகளைச் சந்தித்தார் விஜய்! அவர் ஹீரோவாக அறிமுகமான போது என்னென்ன அவமானங்களுக்கு ஆளானார் தெரியுமா? நாளைப் பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.