நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி -5 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 17 Oct, 2017 06:28 pm

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-5
விஜய் ஹீரோ ஆன கதை! குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடிக்க வைத்தாலும்; மகனை, சினிமாவில் இறக்கிவிட பெற்றோருக்கு விருப்பமில்லை! பெரிய படிப்பு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். பள்ளிப்படிப்பு முடிந்ததும்; விஜய்யை, லயோலா கல்லூரியில் சேர்த்து விட்டனர். ஆனால் அவரோ, சினிமா கனவில் மிதந்தார். பெற்றோரின் கட்டாயத்தில்; ஏதோ பெயரளவுக்கு காலேஜ் போய் வந்தார். சினிமா ஹீரோவாகும் கனவை சுமந்து திரிந்த விஜய், அப்பா- அம்மாவுக்குத் தெரியாமலேயே நிறைய படங்கள் பார்த்தார். தனது ரூமில் கதவை சாத்திக் கொண்டு வெறித்தனமாக டான்ஸ் ஆடி பயிற்சி எடுத்தார். ஜிம்முக்குப் போய் உடம்பை உறுதியாக்கினார். இதெல்லாம் தெரிய வந்தபோது கோபக்கார அப்பா கொதித்துப் போனார். உனக்கு சினிமா சரிப்பட்டு வராது, "நடிப்ப மறந்துட்டு கவனத்த படிப்புல வை..!" என்றார். அதற்கு மறுப்பு சொல்லவே, ஆத்திரமான அப்பா, பெல்ட் எடுத்து விளாசினார். குறுக்கே வந்த அம்மாவுக்கும் பெல்ட் அடி கிடைத்தது. கன்னம் சிவந்தது, உடம்பெல்லாம் வரிக்குதிரையைப் போல ஆனது! அப்பாவும், அம்மாவும் வெளியே போனதும், ‘என்னைய யாரும் தேடாதீங்க..!’ என ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு விறு விறுவென கிளம்பினார் விஜய். ஆனால், எங்கே போவதென தெரியாமல் கே.கே.நகரை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, உதயம் தியேட்டரில் ரஜினி படம் பார்க்கப் போனார். வீட்டுக்கு வந்த சந்திரசேகர் - ஷோபா மகனைக் காணாமல் தேடினர். அவர்களுக்கு விஜய் எங்கு இருப்பார் என்று ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. விஜய், படம் முடிந்து வெளியே வரும்போது தியேட்டர் வாசலில் அவரை வரவேற்றனர் அவர் பெற்றோர். ஒருவழியாக சமாதானம் சொல்லி வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர். சினிமாவின் அத்தனை பயங்கர முகங்களையும் பார்த்த எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மகன் சினிமாவுக்கு வருவது கொஞ்சமும் பிடிக்கவில்லை! “உனக்கு இந்த ஃபீல்டு வேண்டாம், இங்க தாக்குப் பிடிக்கறது கஷ்டம்!” என சினிமா உலகில் உள்ள சங்கடங்கள், பிரச்னைகள் பற்றி அன்புடன் எச்சரித்தார். அதற்கு விஜய், ”எனக்கு நடிக்கத் தான் ஆசை! முடிஞ்சா நீங்க அறிமுகப்படுத்துங்க, இல்லேன்னா; நானே வாய்ப்பை உருவாக்கிக்கறேன்” என உடும்புப்பிடியாக நின்றார். அப்போது, “எத்தனையோ நடிகர்கள உருவாக்கின நீங்க, நம்ம மகன ஹீரோவா உருவாக்க, ஒரு படம் பண்ணக் கூடாதா?” என மகனுக்காக; ஒரு வக்கீல் போல வாதாடினார் தாய் ஷோபா. ஒருவழியாக சமாதானமான தந்தை, “சரி... சினிமால இவ்வளவு ஆர்வமா இருக்கியே, உனக்கு என்ன தெரியும்?” என மகனை சீண்டினார். அதை தனக்கு வைத்த அக்னிப் பரீட்சையாக நினைத்த; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான விஜய், அப்போது ரிலீஸான ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினி சவால் விடும் காட்சியை உணர்ச்சிகரமாகப் பேசி நடித்துக் காட்டினார். மகனுக்குள் இருக்கும் திறமை எனும் தீப்பொறியை அடையாளம் கண்டுகொண்ட தந்தை, கிரீன் சிக்னல் காட்டினார். படம் இயக்குவது இல்லை என்று சந்திரசேகர் ஒதுங்கிய காலம் அது. எனவே, அப்போது பிரபலமான இயக்குநர்களிடம் விஜய்யை அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். ஆனால், விஜய்யை அறிமுகம் செய்ய யாரும் முன்வரவில்லை. "நான் படத்தை ப்ரொடியூஸ் செய்றேன் என்று கூறியபோதும்..." மழுப்பலான பதிலே வந்தது. அந்த சமயத்தில், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு துடிப்பான மாணவனின் கதையை எழுதியிருந்தார் ஷோபா. அந்தக் கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என தேடிக்கொண்டிருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதனால், ஷூட்டிங் தொடங்குவதில் தாமதமானது. கல்லூரிக் காளையாக இருந்த மகன் ஜோசப் விஜய், அந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால்; உடனே படப்பிடிப்புத் தொடங்கியது. இப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் விஜய், ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு; அவரது சினிமா வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்ட படம். இப்படித்தான் ஜோசப் விஜய், நடிகர் விஜய் ஆனார். ஒருவழியாக நடிகராக கேமரா முன்னால் வந்து நின்றார். ஷூட்டிங்கின்போது இவனெல்லாம் ஹீரோவா...? என தன்னுடைய கல்லூரி நண்பர்களே விஜய்யை சீண்டினர்கள்... இதுபற்றி நாளைப் பார்க்கலாம்... வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.