நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 7 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-7
1992 –ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி, விஜய்யின் முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ ரிலீஸ் ஆனது. படத்திற்கு வரவேற்பு எப்படியிருக்குமோ, தன்னையும் ஒரு ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களோ? என்கிற பதற்றம் விஜய்யிடம் தெரிந்தது. ஒரு மனிதன் தனக்குக் கிடைக்கும் முதல் வெற்றியை மறக்க மாட்டான், அதைக் கொண்டாடுவான். ஆனால், அந்த முதல் வெற்றியை விஜய்யால் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால், ரசிக நீதிபதிகள் எழுதிய தீர்ப்பு சாதகமாக இல்லை. முதல் படமே தோல்வி...! நாளைய படத்துககு கிடைத்த வரவேற்பு அப்பாவுக்கும், மகனுக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், மனம் தளர்ந்து போகவில்லை. அதற்குப் பதிலாக தன் மகனை ஒரு வெற்றிப்பட நாயகனாக்கியே தீரவேண்டுமென்கிற வைராக்கியம் தான் வந்தது சந்திரசேகரனுக்கு! இது போல எத்தனையோ தோல்விகளை சந்தித்தவர் என்பதால் அந்த தோல்வி எஸ்.ஏ.சந்திரசேகரனை சஞ்சலப்படுத்தவில்லை! ஆனால், விஜய்க்குத் தான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. பெரிய எதிர்பார்ப்பில் இருந்ததால், அந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தத்தளித்தார். ஒரு முகம்.., ரசிகனுக்குப் பிடித்த முகமாக மாறும் மேஜிக்; அவ்வளவு எளிதில் நடக்காது. அதற்கு நிறைய மெனக்கெட வேண்டும்..! அந்த மேஜிக்கை நிகழ்த்திக் காட்டும் காலம் கனிந்து வரவேண்டும்..! தமிழ் திரையுலக வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் இது புரியும்! தங்கம் போல தக தகதகவென மின்னிய நிறத்தாலும், தனது காந்தர்வக் குரலாலும் வசீகரம் செய்தார் தியாகராஜ பாகவதர்..! பாகவதர் பாட்டால் எட்டிப் பிடித்த உயரத்தை; தன்னுடைய சிலம்ப வித்தையை வைத்து எட்டிப்பிடித்தார் பி.யூ.சின்னப்பா...! நல்ல கருத்துக்களைச் சொல்லி, தன்னையொரு ஒழுக்க சீலனாகப் பிரகடனப்படுத்தி; அநியாயங்களுக்கு எதிராக பொங்கியெழுந்து; சண்டைக் காட்சியில் சாகசம் செய்து; மக்கள் மனங்களை வென்றார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..! எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும்; அந்தப் பாத்திரமாகவே மாறும் நடிப்பு ஆளுமை யாலும், வசன உச்சரிப்பு – தத்துவப் பாடல்களாலும் சிகரம் தொட்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்...! அடுத்த தலைமுறையில்... குரலில்- தோற்றத்தில் வசீகரம், நடிப்பாற்றல், எழுத்தாற்றல் என சகலகலாவல்லவனாக சாதித்துக் காட்டினார் கலைஞானி கமல் ஹாசன்...! தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாத; கருத்த உருவம் கொண்ட; சிறிய கண்கள் உள்ள ரஜினி, தனக்கே உரிய ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப் போட்டு சூப்பர் ஸ்டாராக மாறினார்...! இவர்கள், ஓய்வு காலத்தை நெருங்கும் தருணத்தில்; வேறொரு புதிய முகத்துக்கான அவசியம் ஏற்பட்ட சமயத்தில்; விஜய்க்காக ஒரு கர்சீப்பைப் போட்டு வைத்தார் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். 'நாளைய தீர்ப்பு’ படத்தில் புதுமுகமாக அறிமுகமான விஜய் முகத்தை, ரசிகர்கள் உடனே ஏற்க தயங்கினார்கள். ஒரு முகம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாறுவதற்கு; அந்த முகத்தை தொடர்ந்து பழக்கப்படுத்த வேண்டியுள்ளது. அந்தக் கடமையை தந்தையாகிய எஸ்.ஏ.சந்திரசேகரன் மிகச் சிறப்பாக செய்தார். ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட முகமாக இருந்த விஜயகாந்தின் தம்பியாக ‘செந்தூரப் பண்டி’யில் விஜய்யை நடிக்க வைத்தார். விஜய் முகத்தை பழக்கப்படுத்த அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் பவுண்டேஷன் அடிபோல இறங்கியது! அரசியல் சாடல் கதைகளில், சட்டத்தின் சந்து பொந்துகளிலும் புகுந்து சடுகுடு ஆடிய எஸ்.ஏ.சந்திரசேகரன், சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாதை போட்டுக் கொண்டு, அதில் வெற்றிகளைக் குவித்தவர். ஆகவே, கோபக்கனல் தெறிக்க, கண்கள் சிவக்க; ஆக்ரோஷத்தைக் கொண்டு வரும் விஜய்காந்த், அவரது ஆரம்ப காலப் படங்களில் ஆஸ்தான நாயகனாக இருந்தார். எனவே, ‘செந்தூரப்பாண்டி’யில் நடித்துக்கொடுத்து சந்திரசேகருக்கு உதவினார் விஜயகாந்த். அதற்கு முன்பு, பல படங்களில் ஜூனியர் கேப்டனாக நடித்திருந்த விஜய், ‘செந்தூரப் பாண்டி’யில் அவருக்கு தம்பியாக நடித்தது புதுமையான அனுபவமாக இருந்தது. “ரஜினி சாரும், கேப்டன் அண்ணணும் தான் என்னோட ஆக்ஷன் குரு! முன்னாடி இருக்கறவனப் பாத்துப் பேசிக்கிட்டே; பின்னாடி இருக்கறவன பின்னிப் பெடலெடுக்கும் அவரோட ஸ்டைலான ஆக்ஷனுக்கு குட்டிப் பசங்களும் சாமி ஆடறாங்கன்னா அது தான் அவரோட பவர். கேப்டனோட ஃபைட் வேற ரேஞ்சுல இருக்கும். எதிரிகளை துவம்சம் பண்ற அந்த ஃபைட்டை மறக்க முடியுமா? அதுலயும்; லெக் ஃபைட்னா அது கேப்டன் மட்டும் தான்! எனக்கு ஆக்ஷன்ல அரிச்சுவடி சொல்லித் தந்ததே இவங்க தான். ‘செந்தூரப் பாண்டி’யில் கேப்டனோடு சேர்ந்து நடிச்சத மறக்கவே முடியாது. நான், ஒரு கண்ணாடியை மோதி உடைக்கற மாதிரி சீன். டூப் போட்டுக்கலாம்னு சொன்னாங்க. அவங்களும் என்னைய மாதிரி மனுஷசங்க தானே, அவங்க செய்யும் போது நான் செய்ய மாட்டானான்னு பிடிவாதமா நானே பண்ணிட்டேன். அந்த சீன்ல எனக்கப்புறம் கேப்டன் வந்து ஃபைட் பண்ணணும். நான் பண்ண சாகஸத்த யாரோ சொல்லிட்டாங்க. என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். பாராட்டித்தள்ளப் போறாருன்னு கெத்தாப் போய் நின்னேன். பயங்கரமாத் திட்டித் தீர்த்துட்டார். கண்ணாடிய உடைக்கறப்போ நடக்கும் அசம்பாவிதங்கள் பத்தி பெரிய லெக்சர் தந்தார். 'ஸ்டண்ட் ஆட்கள் அதையே தொழிலா வச்சிருக்கறவங்க. அவங்களுக்கு இருக்கற கவனமும், தொழில் நுணுக்கமும் கண்டிப்பா நமக்கு வராது. சின்னதா ஒரு கண்ணாடி பீஸ் கண்ணுக்குள்ள போனாலும் நடிகனை நம்பி முதலீடு செய்யறவங்க நிலைமை என்னாகும்? கண்ணாடி உடைக்கறது, நெருப்புல விளையாடறது இந்த ரெண்டைத் தவிர; மற்ற விஷயங்கள ஒன்னோட ஆர்வத்துக்கு செய்யலாம். இத எதுக்கு சொல்றேன்னா, நடிகனுக்கு ஒடம்புதான் மூலதனம்'னு அக்கறையோட சொன்னார். பிறகு அதுதான் எனக்கு வேதவாக்கு!” என ‘செந்தூரப் பாண்டி’ அனுபவத்தை சிலிர்ப்போடு சொன்னார் விஜய். கிராமத்தில் ஊர் மதிக்கும் பெரிய மனிதர் விஜயகாந்த், அவரின் அன்புத்தம்பி விஜய். பணக்காரத் திமிரில் திரியும் யுவராணிக்கும், விஜய்க்கும் மோதல், பிறகு காதல். அந்தக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப; பாசக்கார அண்ணன் விஜயகாந்த் காதலர்களை சேர்த்து வைக்கிறார். இது தான் ‘செந்தூரப் பாண்டி’யின் கதை. இந்தக் கடுகு அளவு கதைக்குள் கரம் மசாலா சேர்த்துக் கொடுத்திருந்தார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். படத்தில் ஆக்ஷன் - சென்டிமென்ட் சீன்களைக் காட்டிலும், கிளு கிளு சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. கதாநாயகி யுவராணி, நாயகன் விஜய்யோடு கபடி ஆடிய அந்த சீனுக்கு விடலைப் பசங்களின் விசில் சத்தம் தியேட்டரை திக்கு முக்காட செய்தது. ரசிகர்களின் கவனமெல்லாம் அந்த ‘கபடி ராணி’ மீதே இருந்ததால்; அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் விஜய் என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. 1993-ல் வந்த இந்தப் படம் விடலைப் பசங்களின் ‘தேவையை’ பூர்த்தி செய்ததால், முதலுக்கு மோசம் செய்யவில்லை. வளர்ந்து வரும் சமயத்தில்; விஜய், ஒரு நடிகையுடன் சேர்த்துக் கிசு கிசுக்கப்பட்டார். அந்தக் காதல் கிசு கிசுவுக்குக் காரணமான நடிகை யார்? நாளை பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.