நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 8 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 20 Oct, 2017 06:50 pm

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-8
முதல் வெற்றியைக் கூட அனுபவிக்க விடாத விமர்சனம்...! ஒரு பிரபலத்தின் மகனாகப் பிறப்பது மற்றவர்களுக்குக் கிடைக்காத ‘வரம்’ தான்! சில விஷயங்களில் செளகர்யம் தான். அது ஒரு என்ட்ரியை எளிதாக்கும் தான். ஆனால், அந்த வரத்தை சரியாகப் பயன்படுத்தி அடுத்தக் கட்டத்துக்குத் தாண்டவில்லை என்றால்; அந்த வரமே சாபமாக மாறும். அந்தத் தோல்வி தரும் மன உளைச்சல்; மீளவே விடாது. அதைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வாய்க்காது. பக்குவம் வாய்த்தாலும்; மீண்டும் எகிறி அடிக்கப் பலம் போதாது. அந்தப் பக்குவம், பலம் இரண்டும் விஜய்க்கு இருந்தன. சினிமாவில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்பது விஜய்யின் ஆசை. உள்ளே நுழைந்த பிறகே அதிலுள்ள சிரமங்கள் அவருக்குப் புரிந்தது. சினிமா உலகத்தைப் பொறுத்தவரை முதல் பட வெற்றி என்பது அரிச்சுவடி மாதிரி. வருங்காலத்துக்கு அது மிகவும் அவசியமானது. விஜய்யின் ‘நாளைய தீர்ப்பு’, ‘செந்தூரப் பாண்டி’ இரண்டுமே பிரமாதமான வெற்றிப் படங்கள் இல்லை! தரத்தை வைத்து எடை போட்டுச் சிலாகித்துப் பேசவும் கூட எதுவும் இல்லை! சாதாரணக் கமர்ஷியல் படங்கள் தான். இதன் மூலமாக ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆர்வமுள்ள ஓர் இளைஞன் இருக்கிறார் என்கிற விசிட்டிங் கார்டு மட்டுமே விஜய்க்குக் கிடைத்தது. விசிட்டிங் கார்டு வேலை வாங்கித் தருமா? எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்கிற தகுதியை மட்டுமே நம்பி காலம் தள்ள முடியுமா? இதை அப்பா, மகன் இருவருமே நன்கு உணர்ந்து வைத்திருந்தனர். ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால்; தனது வாழ்க்கையைச் சினிமாவுக்காக அர்ப்பணித்து விட்டு, கல்லூரிப் படிப்புக்கு ‘குட் பை’ சொல்லி; முழுநேர நடிகனாக மாறினார் விஜய். இப்படியொரு சவாலான சூழ்நிலையில் ஆரம்பிக்கப் பட்ட படம் தான் ‘ரசிகன்’. இந்தப் படத்திலிருந்து தான் விஜய் பாடகராக மாறினார். அவர் சொந்தக் குரலில் பாடிய, ‘பம்பாய் பார்ட்டி சுக்கா ரொட்டி...’ என்கிற பாடல் ஹிட் ஆனது. பின்னணிப் பாடகராக ‘ரசிகன்’ படத்தில் ஆரம்பித்த விஜய், ‘தெறி’ வரை ஏகப்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். ‘ரசிகன்’ படத்தில், விஜய்க்கு ஜோடி சங்கவி. இந்தப் படத்திலும், மசாலா அம்சங்களுடன் கிளாமர் தூக்கலாகவே இருந்தது. கவர்ச்சியைப் பந்தி வைத்துப் பரிமாறியிருந்தார் சங்கவி. ‘செந்தூரப் பாண்டி’யில் விஜய்- யுவராணியைக் கபடி ஆட வைத்து கிறக்கடித்ததைப் போல, இதில்; விஜய்யுடன் சங்கவியை ஜலக்கிரீடை செய்ய வைத்தும், சங்கவியின் அம்மாவாக வந்த ஸ்ரீவித்யாவுக்குச் சோப்பு போட வைத்தும்; விடலைப் பசங்களின் விருப்பத்தை நிறைவேற்றினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். விஜய்யும் உயிரைக் கொடுத்து நடித்திருப்பார். 1994-ல் வெளிவந்த ‘ரசிகன்’ படம் சூப்பர் ஹிட் ஆனது. சினிமாப் பயணத்தில் விஜய் சந்தித்த முதல் வெற்றி இதுதான்! ஆனால், அந்த வெற்றியும் விமர்சனத்துக்கு உள்ளானது. விஜய்யின் நடிப்பைப் பற்றி யாரும் பேசவில்லை... ‘சங்கவியின் தாறுமாறான கிளாமர் தான்; படத்தை ஓட வைத்தது’ எனப் பேச்சுத்தான் வந்தது. சில காலம் கழித்து விஜய்யை சங்கவியுடன் இணைத்தும் பேசினர். இது குறித்துப் படத்தின் நாயகி சங்கவி பிற்காலத்தில் கூறுகையில்... “அப்ப சினிமாவுக்கு அவரும் புதுசு, நானும் புதுசு. அதனால இயல்பா பேசிப் பழக முடிஞ்சது. நான் கன்னடப் பொண்ணு, எனக்குத் தமிழ் அவ்வளவா பேச வராது! அவர் தான் எனக்குத் தமிழ் வாத்தியாரா இருந்தார்! வசன உச்சரிப்பையும், அர்த்தங்களையும் சொல்லிக் கொடுத்தார். ‘ஷாட்’டுக்கு போறதுக்கு முன்னாடி; அந்தந்தக் காட்சிக்கான வசனங்களை ரிகர்சல் பாத்துக்குவோம். இதனால எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா ஒர்க் அவுட் ஆச்சு! அது படத்திலும் பிரதிபலித்தது. ரசிகன் 175 நாட்கள் போச்சு. ரசிகன் பட வெற்றிக்குப் பிறகு விஜய்யும், நானும் சக்சஸ் ஃபுல் ஜோடியானோம். நானும், அவரும் சேர்ந்து விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே, நிலாவே வா ஆகிய படங்கள்ல நடிச்சோம். இதனால அடிக்கடி சந்திக்கவும், பழகவும் வாய்ப்பும் கிடைச்சது. அதனால, வதந்திகளுக்குக் கை கால் முளைத்தது. நாங்க கல்யாணம் பண்ணிக்கப்போறோம்னு கூட வதந்தி பரப்பினாங்க. வதந்தியலா எங்களோட நட்புக்கு எந்தப் பாதகமும் ஏற்படல. ஆனா, தொடர்ந்து விஜய் கூட நடிக்க முடியாமப் போனதுக்கு அது ஒரு முக்கியக் காரணமா ஆச்சு. விஜய்யோட அப்பா இயக்குநரா இருந்ததால தான் அவரால ஹீரோ ஆக முடிஞ்சதுன்னு சொல்றத நான் ஏத்துக்க மாட்டேன். இதே சினிமா இண்டஸ்ட்ரில எத்தனயோ வாரிசு நடிகர்கள் வந்திருக்காங்க. ஆனா, அவங்கெல்லாம் ஏன் பெரிய அளவுக்கு முன்னேற முடியல? அப்பாவோட சப்போர்ட் என்பதைத் தாண்டி, விஜய்யோட வளர்ச்சிக்கு அவரோட கடின உழைப்பு தான் காரணம். சினிமால ஒருத்தர் ஜெயிக்கணும்னா கட்டாயம் ஹார்டு ஒர்க் அவசியம். அதோட கொஞ்ச ‘லக்’கும் இருக்கணும். இந்த ரெண்டும் விஜய்க்குக் கிடைச்சிருக்கு. சினிமால முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருத்தரும் கடினமா உழைத்துத்தான் மேல வர்றாங்க. ஆனா, விஜய் மாதிரி சிலருக்கு மட்டும் தான் ரசிகர்கள் மனங்களை வெல்லும் சக்தி வாய்க்கிறது” எனப் பரவசப்படுகிறார் சங்கவி. ஆம், விஜய்யின் கடின உழைப்புதான் ரசிகர்களை அவர் பக்கம் ஈர்க்கச் செய்திருக்கிறது. அதை மெர்சல் ரிலீஸ் தினத்தன்று கூட பார்த்தோம். விஜய்யின் சமகாலத்தில் சினிமாவில் அறிமுகமான அந்த நடிகர், பின்னாளில் விஸ்வரூபம் எடுத்து நிற்பார் என்றோ, இருவரும் எதிரும் புதிருமாக மாறுவார்கள் என்றோ யாருமே எதிர்பார்க்கவில்லை! விஜய்க்கு சம போட்டியாளராக இருந்த இருந்த அந்த நடிகர் யார்? விஜய், அவருடன் சேர்ந்து நடித்தது எப்படி? திங்கட்கிழமை பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.