நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 9 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 23 Oct, 2017 06:15 pm

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-9
விஜய்யும் அஜித்தும் சேர்ந்தது எப்படி? கருப்பு நிறத்தை தங்கள் மீதான சாபமாகக் கருதும் தமிழர்கள் மத்தியில்; வெளுப்பாக இருக்கும் ஹீரோக்கள் உடனடியாகக் கவனம் ஈர்க்கிறார்கள். சிவப்பாக-மழு மழு முகத்தோற்றத்தில்; சுருள் முடியோடு இருப்பது நடிகராவதற்கான முதல் தகுதியாகத் தமிழ் சினிமாவில் இருந்தது! கருப்பாக இருக்கும் நடிகர்களின் வாய்ப்பு; ஆரம்பக் காலகட்டத்திலேயே தட்டிக் கழிக்கப்பட்டது! வெள்ளை, சிவப்பு நிறம் மீதான ஈர்ப்பு தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர் எனக் காலகாலமாகத் தொடர்ந்தது. வெகு ஜனங்களை ஈர்க்கக் கூடிய வசீகரம், சண்டையில் சாகசம், நகைச்சுவை நடிப்பு இவற்றில் திறமை கைவரப் பெற்றால் ‘கருப்பு ஹீரோ’ சூப்பர் ஸ்டார் ஆகலாம் என ரஜினி நிரூபித்தார். அவருக்குப் பிறகு விஜய் அதை அடைந்திருக்கிறார்! இன்று, ரஜினிக்குப் பிறகு அடுத்தச் சூப்பர் ஸ்டார் யார்? என்கிற கேள்விதான் பல லட்சம் ரசிகர்களின் மனதில் எழுந்திருக்கிறது. இன்றைய ரசிகர்கள் மத்தியில் விஜய்-அஜித் என்ற இருதரப்பு போட்டி தல-தளபதிக்கு இடையேயான போராக மாறியிருக்கிறது. இணையத் தளங்களில் இன்றைக்கு அதிகம் ஆக்கிரமித்திருப்பது இந்தப் போர்தான். அவ்வப்போது ரசிகர்களின் சண்டைக்குப் பஞ்சம் இல்லை. தொழில் ரீதியாக எதிர் துருவங்களாக, தற்காலத் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்திகளாக இருக்கும் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள். இந்த ‘நட்பு’ திடீரென இப்போது முளைக்கவில்லை! அது, அறிமுகக் காலத்திலேயே அரும்பிவிட்டது. விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்தால் அது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்குமே? என இப்போது பலரும் ஏங்குகின்றனர். இருவரையும் ஒரே படத்தில் இணையவைக்க அவ்வப்போது முயற்சிகளும் நடக்கவே செய்கிறது! ஆனால், அந்த முயற்சியை அவர்களின் ஆரம்பகட்டத்திலேயே செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் சௌந்தர் என்கிற தயாரிப்பாளர். மகன் என்பதற்காக நடிக்க வைக்கிறார், அப்பாவின் இயக்கத்தில் குப்பை கொட்டவே லாயக்கு என்று விஜய்க்கு எதிராக முணு முணுப்பு எழுந்த சமயத்தில்; தனது தந்தையின் கூடாரத்தை விட்டு வெளியேறி; வேறு ஒரு தயாரிப்பாளர் படத்தில் முதல் முறையாக விஜய் நடித்த படம் ராஜாவின் பார்வையிலே. அறிமுக இயக்குநர் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டைக் கொண்ட யூத் லவ் ஸ்டோரி. ஒரு காதல் ஜோடியை, நண்பன் சேர்த்து வைப்பது தான் கதை. இதில், விஜய் - இந்திரஜா காதல் ஜோடி! இவர்களின் காதலை சேர்த்து வைக்கும் நண்பனாக அஜித் நடித்திருந்தார். ‘ராஜாவின் பார்வையிலே’ படப்பிடிப்பு சென்னையிலேயே நடந்தது. எனவே, விஜய்யின் அம்மா, மகனுக்காகக் கொடுத்தனுப்பும் கேரியரில் தினமும் அஜித்துக்கும் சேர்த்தே சாப்பாடு இருக்கும். இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள். ‘ஷாட் பிரேக்’ கில் மனம் விட்டுப் பேசுவார்கள். ‘லன்ச் பிரேக்’கில் அஜித்தின் பைக்கை வாங்கி விஜய் ‘ரவுண்ட்’ வருவதும், பிறகு விஜய்யை ஏற்றிக்கொண்டு அஜித் ‘ரவுண்ட்’ அடிப்பதுமாய் ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலவென இருக்குமாம். 1995 ஆகஸ்டு 5ம் தேதி ரிலீஸ் ஆன ‘ராஜாவின் பார்வையிலே’ படம் சுமார். இந்தப் படமாவது கை கொடுக்குமென நம்பியிந்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது! நாளைய தீர்ப்பு முதல் ராஜாவின் பார்வையிலே வரை விஜய் நடித்த படங்களை எடைபோட்டுப் பார்க்கும் போது விஜய், ஒரு பொறுப்பில்லாத; பெண்கள் பின்னால் ஜாலியாய் சுற்றும்; நியாத்திற்குக் குரல் கொடுத்து சண்டையிடும் ஆவேசக்கார இளைஞனாக; ஒரு ‘ப்ளே பாய்’ போலத் தான் டிசைன் செய்யப்பட்டிருந்தார். இந்த இளைஞனுக்குத் தெரிந்ததெல்லாம் இவ்வளவு தானா? என்கிற மிக முக்கியமான கேள்வி பிறந்தது! தனக்கு முன்னால் இருந்த இந்தச் சவாலை எப்படி வென்றெடுத்தார் விஜய்? நாளைப் பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.