நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 10 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 24 Oct, 2017 06:20 pm

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-10
விஜய் வாழ்வில் வந்தது வசந்தம்... விஜய்யின் திரை வாழ்க்கையைத் திட்டமிட்டே உருவாக்கினார் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். வெற்றியோ... தோல்வியோ... அடுத்தடுத்துப் படங்களைக் கொடுத்து; விஜய்யின் வருகையைத் திரை உலகத்துக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தார். இதனால், 1995-ம் ஆண்டில் இருந்து விஜய்யின் கேரியர் கிராஃப் ஏறியது... அந்த ஆண்டில் மட்டும் ராஜாவின் பார்வையிலே, தேவா, விஷ்ணு, சந்திரலேகா என விஜய்யின் நான்கு படங்கள் வெளியாகின. ‘ரசிகன்’ படம் தந்த தெம்பில் ‘தேவா’ என்கிற படம் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில்; இந்தியில், அனில்கபூர்- மனிஷா கொய்ராலா நடிப்பில் வந்து சூப்பர் ஹிட்டான ‘1942 எ லவ் ஸ்டோரி’ கதையைத் தழுவி தேவா படத்தை எடுத்தார் எஸ்.ஏ.சி. சங்கவியைச் சைடுவாங்கி அவரை மிஞ்சும் அளவுக்கு விஜய்யுடன், நெருங்கியும்; கவர்ச்சியில் தாராளம் காட்டியும் நடித்தார் ஸ்வாதி. இதையடுத்து விஷ்ணு, வசந்த வாசல், செல்வா போன்ற படங்களில் விஜய்- ஸ்வாதி ஜோடி தொடர்ந்தது. அப்போது, விஜய்- ஸ்வாதி காம்பினேஷன் என்றாலே; ‘மசாலா திரைப்படம்’ என்கிற முத்திரை குத்தப்பட்டது. மீண்டும் சங்கவியோடு சேர்ந்து, கொங்கு நாட்டு மாப்பிள்ளையாக விஜய்; கலக்கிய படம் கோயமுத்தூர் மாப்பிள்ளை. படத்தை, எஸ்.ஏ. சந்திரசேகரின் உதவியாளர் சி.ரங்கநாதன் இயக்கினார். இதில் விஜய், சங்கவியோடு சேர்ந்து அடித்த கும்மாளத்துக்கு விசில் பறந்தது. இந்தப் படத்தில் விஜய் பேசி நடித்த கொங்குத் தமிழ் ரசிக்கப்பட்டது. ‘ண்ணா.. வாங்க ண்ணா... வணக்கங்க ண்ணா..’ என்கிற விஜய்யின் கோயமுத்தூர் பாணி பேச்சு பிரபலமானது. பிறகு அதுவே; விஜய்யின் ‘டிரேட் மார்க்’ காக மாறியது. விஜய்யின் படங்கள் எல்லாமே இளமைக் கொண்டாட்டமாகவே இருந்த நேரத்தில், அவரைப் புது வழியில் திருப்பிவிட்ட படம் ‘பூவே உனக்காக’. விஜய்க்கு தனி அடையாளத்தை இந்தப் படம் தந்தது. இந்தப் படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க, விக்ரமன் இயக்கினார். படத்தின் பாடல்களும், மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்ட காதலும், காமெடியும் வெற்றிக்கு முக்கியக் காரணிகளாக இருந்தன. விஜய்க்கு ஜோடியாகச் சங்கீதா நடித்தார். மேலும், நம்பியார், நாகேஷ், மலேசியா வாசுதேவன், ஜெய்கணேஷ், விஜயகுமாரி, சுகுமாரி, அஞ்சு, சிவா, சக்திகுமார் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் அணிவகுத்து நின்றது. இயக்குநர் விக்ரமன், இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது, இதில் நடித்த ஒரு சீனியர் நடிகர், “டைரக்டர் தம்பி.., கதை ரொம்ப நல்லாயிருக்கு... என்னய மாதிரி பெரிய நடிகர்கள் பலர் இதில் இருந்தாலும்; ஹீரோ கதாப்பாத்திரம்தான் இந்தக் கதைக்கு உயிர்நாடி, அப்படியிருக்கும்போது; அந்தக் கதாப்பாத்திரத்த புதுப் பையனுக்குக் குடுத்து எதுக்கு ரிஸ்க் எடுக்கறீங்க? இண்டஸ்ட்ரில லீடுல இருக்கற ஹீரோ யாருக்காச்சும் குடுக்கலாமே”ன்னு சொல்ல.., “சார்.. என்னோட கதை மேலயும், அந்தப் பையனோட திறமையிலயும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு!” எனப் பதிலடி தந்தார் விக்ரமன். யார் அந்தச் சீனியர் நடிகர் என்பதைச் சைலண்ட் மோடில் போட்டுவிட்டு; அவர் சொன்ன விஷயத்தை மட்டும் விஜய்யிடம் இயக்குநர் விக்ரமன் சொல்ல; அதற்கு விஜய், “இந்தப் புறா தலையில எத்தனை பாரத்தை வச்சாலும் தாங்கும் சார்..!” எனச் சிரித்த முகத்தோடு கூறினாராம். அத்துடன், தன்னை விமர்சனம் செய்த அந்தச் சீனியர் நடிகருக்கு தனது உழைப்பின் மூலமாகப் பதிலடி கொடுத்தார் விஜய். படத்துக்கு அமோகமான ஆதரவைக் கொடுத்து ஜெயிக்க வைத்தார்கள் ரசிகர்கள். 275 நாட்கள் ஓடி வசூலை வாரிக் குவித்தது அந்தப் படம். சினிமாவில் காதல் ஜோடியை, கிராமத்துப் பெரியவரோ; அண்ணனோ அல்லது தாய் மாமனோ சேர்த்து வைப்பது போலத்தான் படங்கள் வந்தது. ஆனால்; நான் அதிலிருந்து மாறுபட்டு, ஹீரோவே தனது காதலை தியாகம் செய்யும் விதமாக நாயகியை; அவளை நேசித்தவனுடனே சேர்த்து வைக்கும்படி திரைக்கதை அமைத்திருந்தேன். அதுதான் படத்தின் ஜீவனாக இருந்தது” என ‘பூவே உனக்காக’ கதை பிறந்த கதையைச் சொல்லி சிலாகிக்கிறார் இயக்குநர் விக்ரமன். இன்றைக்குச் 'சிங்கம்', 'சிங்கம் 2', 'பில்லா', 'பில்லா 2' என்று ஒரு வெற்றி பெற்ற படத்தின் கதையின் தொடர்ச்சியாக அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் பெருகியிருக்கிறது. அந்த ஸ்டைலை தமிழகத்தில் தொடங்கி வைத்ததே விஜய் தான் எனச் சொல்லலாம். சினிமாவுக்கு உதாரணமாக இருக்கும் பிரபல நடிகரின் ஹிட்டான கதையை அடிப்படையாகக் கொண்டு, அதன் தொடர்ச்சியை எடுத்து, அதில் அதே நட்சத்திரத்தையும் நடிக்க வைத்து பல புதுமைகளைத் தமிழ் சினிமாவில் புகுத்தினார் விஜய். அத்துடன், அவரோடு சேர்ந்து நடித்ததைத் தனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதினார் விஜய். யார் அந்தச் சீனியர் நட்சத்திரம்? அந்தக் கதை என்ன? நாளை பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.