நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 11 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 25 Oct, 2017 06:40 pm

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-11
தந்தை படத்தில் நடிக்க விஜய் போட்ட கண்டிஷன்...! விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் 70 லட்சம் ரூபாயை இழந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அது, விஜய்க்கு அனுபவக் கொள்முதலாக இருக்கட்டுமே என நினைத்து; அடுத்தடுத்து விஜய்க்காகவே சொந்தப் படங்களை எடுத்து தொடர்ந்து நஷ்டத்தை விரும்பி ஏற்றார் ஏஸ்.ஏ.சி! அப்பாவின் இயக்கத்தில் கொஞ்சம் நடிக்கவும் கற்றுக் கொண்டு; பிற இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் துவங்கினார் விஜய். ‘பூவே உனக்காக’ படத்தின் வெற்றிக்குப் பிறகு முன் வரிசைக்கு வந்து அதிகச் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்த நிலையை எட்டிப்பிடித்தார். இருந்தாலும் அப்பாவின் படங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை. இதுவே விஜய்க்கு எதிராகத் திரும்பியது. அப்பாவின் ‘விஷ்ணு’ படம் வெளிவந்த பிறகே மற்ற படங்கள் வெளிவர வேண்டுமெனக் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்... விஜய் வழக்கத்திற்கு மாறாகப் பந்தாப் பண்ண ஆரம்பித்திருக்கிறார்... நண்பர்கள் கூட்டத்தை வரவழைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கொட்டமடிக்கிறார் என்றும், ‘ஷாட் ரெடி’ என உதவி இயக்குநர்கள் அழைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே கால தாமதத்தோடு கேமரா முன் நிற்கிறார், திடீர் திடீரென ‘மூட் அவுட்’ ஆகி முகத்தைத்தூக்கி வைத்துக் கொள்கிறார் என்றும் அடுக்கடுக்காக விமர்சன அம்புகள் விஜய் மீது வீசப்பட்டன. விஜய்யை வீழ்த்த வந்த அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மிகப்பெரிய விளக்கம் கொடுத்து; நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன். கொஞ்ச காலத்துக்கு விஜய்யை வைத்துப் படம் எடுப்பதை நிறுத்தினார் எஸ்.ஏ.சி. ‘என் மகன்’ என எஸ்.ஏ.சந்திரசேகரன்; பெருமையுடன் சினிமாவுக்கு அறிமுகப் படுத்திய காலம் மாறிப்போய்; இளம் ஹீரோக்களில் தனக்கென ஓர் தனி இடத்தை விஜய் பிடித்த பின்பு; “விஜய்யின் தந்தை எனப் பேசுமளவுக்குப் பட உலகத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. சினிமாவில், விஜய் முன் வரிசைக்கு வந்த பிறகு மறுபடியும் மகனை இயக்கும் ஆசை வந்தது எஸ்.ஏ. சந்திரசேகருக்கு! “விஜய்.. நான், ஒன்ன வச்சுப் படம் எடுத்து ரொம்ப வருஷமாச்சு, எனக்குக் கால்ஷீட் கொடுப்பியா..?” எனத் தந்தை கேட்டபோது; ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி’யாக; மகனால் அதை மறுக்க முடியவில்லை! “கதை எனக்குப் புடிக்கணும்” என்கிற கண்டிஷனோடு கால்ஷீட் தந்தார் விஜய்! அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், அப்படியே ஆகட்டும் ஹீரோ சார்! ஒங்க சினிமா லைப்ல பெருமைக்குரிய படமா இருக்கற மாதிரி ஒரு கதை வச்சிருக்கேன், இந்தக் கதையில் நடிகர் திலகமும் இருக்கார்..!” என ‘ஒன்ஸ் மோர்’ கதையைச் சொன்னார். பல வருடங்களுக்கு முன்பு, சிவாஜி- சரோஜாதேவி நடித்த ‘இருவர் உள்ளம்’ படத்தின் தொடர்ச்சியாக; அதாவது; அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் கதையை உருவாக்கி வைத்திருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன். அந்தப் படத்தின் சில காட்சிகளையும் இந்தப் படத்தில் பயன்படுத்தினார். அத்துடன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு; வயோதிக வயதில் சிவாஜி– சரோஜாதேவி மீண்டும் இணைந்து நடித்ததாலும் அதைக் குறியீடாக வைத்து ‘ஒன்ஸ் மோர்’ எனப் படத்துக்கு டைட்டில் வைத்தார் எஸ்.ஏ. சந்திரசேகரன். இளம் ஜோடிகளாக விஜய்- சிம்ரன் நடித்தனர். பொறுப்பில்லாமல் ஊர்சுற்றிக்கொண்டு; ஜாலியாகப் பெண்கள் பின்னால் திரியும் பணக்கார வீட்டுப் பிள்ளை விஜய், சொத்துக்களைத் தன் பெயரில் மாற்றுவதற்காகச் சிவாஜியை அப்பாவாக நடிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். பிறகு, மனைவி சரோஜாதேவியைப் பிரிந்து வாழும் சிவாஜியைப் புரிந்துகொண்டு; தன் குறும்புத் தனங்களை மூட்டைக் கட்டிவைத்து விட்டு; அவர்களைச் சேர்த்து வைக்கிறார். இது தான் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் கதை. இதில் சிவாஜி, சோகத்தைக் கொட்டி அழாமல்; எல்லாக் காட்சிகளிலும் நகைச்சுவை ததும்பும் நடிப்பை வாரி வழங்கினார். தனது பண்பட்ட நடிப்பைப் பதிவு செய்தார் சரோஜாதேவி. அனுபவக் கலைஞர்களான சிவாஜி - சரோஜாதேவிக்கு ஈடு கொடுக்கும் விதத்தில்; விஜய்யின் நடிப்பு இருந்தது. ‘மென்மையான ஹீரோ’ இமேஜ் உருவாகியிருந்த நேரத்தில், அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து; முதல் முறையாக ‘ஆன்டி ஹீரோ’ வாக மாறினார் விஜய். விஷப்பரீடசை வேண்டாமென எச்சரிக்கை மணி அடித்தும் அவர் அதை அலட்சியப் படுத்தினார். விஜய் வில்லன் போலச் சித்தரிக்கப்பட்ட அந்தப் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்களா? நாளைப் பார்க்கலாம் . . .

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.