நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 13 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 27 Oct, 2017 05:34 pm

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-13
‘தேறவே தேறாது’ என ஒதுக்கிய படம் சூப்பர் ஹிட்டானது..! குடும்ப உறவுகளுக்கிடையே இருக்கவேண்டிய அசலான அன்பை, பாசாங்கற்ற பாசத்தை தமது திரைப்படங்களில் அடித்தளமாக வைத்து; ஒரு ஆரோக்கியமான படைப்பாளியாக பெயரெடுத்த இயக்குநர் பாசில், மலையாளத்தில் தான் எடுத்த சில படங்களை தமிழ் பேச வைத்தபோதெல்லாம் முத்திரை பதித்திருக்கிறார். அதைப் போல, தான் மலையாளத்தில் இயக்கிய ‘அன்னியதி பிறவி’ என்கிற படத்தை தமிழில் எடுக்க அவர் களத்தில் இறங்கிய போது; அவர் எதிர்பார்த்தபடி யாரும் அந்தக் கதையைத் தயாரிக்க முன்வரவில்லை! இயக்குநர் பாசில் இதற்கு முன் தனது மலையாளப் படங்களை ரீமேக் செய்ய தயாராகும்போது அவரின் கதையைத் தயாரிப்பதற்கு முண்டியடிக்கும் கோலிவுட்காரர்கள்; இந்த முறை பாராமுகமாகவே இருந்தனர். காரணம், ‘அன்னியதி பிறவி’யில் கதை என பெருசா எதுவும் கிடையாது! என சொத்தையான காரணத்தை சொன்னார்கள். பலரும் தயங்கிய நிலையில், கடைசியில் நடிகரும், தயாரிப்பாளருமான சங்கிலி முருகன் தனது ‘முருகன் சினி ஆர்ட்ஸ்’ பட நிறுவனம் சார்பில் தயாரிக்க துணிச்சலாக முன்வந்தார்! படப்பிடிப்பும் பர பரவென நடந்தது. அப்போது திடீரென, சங்கிலி முருகன் படத் தயாரிப்பிலிருந்து விலகிக் கொள்ளவே, படம் பாதியிலேயே ‘டிராப்’ ஆனது! அதற்கு முன்பு பல படங்களை தயாரித்து; அதில் சில படங்கள் தந்த தோல்வியால் துவண்டுபோன நிலையில்; பைனான்சியரை நம்பித்தான் பாசில் படத்தை தயாரிக்க முன்வந்தார் சங்கிலி முருகன். அவர் கைவசம் இருந்ததை வைத்துப் படத்தை ஆரம்பித்தார். கை இருப்புக் காலியானது, பைனான்சியர்களும் கையை விரிக்கவே வேறு வழியில்லாமல் படத்தை நிறுத்தி வேண்டிய கட்டாயம். மனம் சோர்ந்துபோன இயக்குநர் பாசில், அந்தப் படத்தை மறந்து; ஊர் திரும்பினார்! இந்நிலையில் ஒருநாள், பட விநியோகஸ்தர் ஒருவர் அந்தப் படத்தை ‘அண்டர் டேக்’ செய்ய முன் வந்தார். இயக்குநர் பாசில் முன்னிலையில்; அதுவரை செய்த செலவுகளை கணக்குப் பார்த்து சங்கிலி முருகனுக்கு ‘பைசல்’ பண்ணிவிட்டு, அந்த விநியோகஸ்தரே படத்தைத் தயாரித்தார். படங்களை வாங்கி விநியோகம் செய்து வந்த அவருக்கு அது முதல் தயாரிப்பு என்பதால்; சங்கிலி முருகனே நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்து படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். ‘தேறவே தேறாது’ என கோலிவுட் ஜோதிடர்கள் தவறான ஆருடம் கணித்த அந்தக் கதையை இளைஞர்கள் கொண்டாடினார்கள். அதனால், படம் 200 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. அந்தப் படம் பலரைக் காதலிக்க தோன்றியது! பலருக்கு தங்களது முதல் காதலை நினைவுபடுத்தியது. கெட்ட வார்த்தையைப் போல கருதி; ‘காதல்’ என்கிற வார்த்தையை உச்சரிக்கவே கூச்சப்பட்ட பெற்றோர்கள் மத்தியில், ‘காதலுக்கு மரியாதை’யைப் பெற்றுத் தந்தது! பல இளைஞர்களின் காதல் ஏற்கப்பட காரணமாக இருந்தது. இப்படி அந்தப் படத்தைப் பற்றிய பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்! அந்தப் படம் ‘காதலுக்கு மரியாதை’. பாதியிலேயே சுவாசம் நின்று போக; அதற்கு ஆக்சிஜன் கொடுத்த அந்த விநியோகஸ்தர் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிசந்திரன்! இந்தப் படத்துக்குப் பிறகு தான் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிசந்திரன் தொடர்ந்து படங்களைத் தயாரித்தார். விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடத் தகுந்த படமாக ஆனது ‘காதலுக்கு மரியாதை’. காதலைக் காட்டிலும் தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்-தந்தையின் உணர்வுகள் தான் முக்கியம் என்கிற ஆரோக்கியமான கருத்தை வலியுறுத்திய இந்தப் படம், விஜய்யை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போன மிகப்பெரிய ஹிட் படம். இந்த வெற்றிக்கு ஆதார சுருதியாக இருந்தார் இயக்குநர் பாசில். சாதாரண காதல் கதையை; சொன்ன விதம், கிளைமாக்ஸ் டச்சிங் என தனது மேஜிக்கால் மாஸ் படமாக மாற்றினார் பாசில். தமிழ் சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களை குதூகலப் படுத்திய பேபி ஷாலினி, குமாரியாக மாறி; இதில் முதல் முறையாக கதாநாயகியாக கிரீடம் சூடி வந்தார். நாயகன் விஜய்யும், நாயகி ஷாலினியும் ஆத்மார்த்தமான காதலர்களாகவே வாழ்ந்திருந்தனர். நாயகனின் அப்பா சிவகுமார், அம்மா ஸ்ரீவித்யா, நண்பர்கள் தாமு, சார்லி, நாயகியின் பாசக்கார அண்ணன்கள் ராதாரவி, தலைவாசல் விஜய், காதலர்களுக்கு அடைக்கலம் தரும் மீனவ தலைவன் மணிவண்ணன் போன்ற அனுபவக் கலைஞர்களின் பண்பட்ட நடிப்பும், இந்த உணர்வுப்பூர்வமான கதாப்பாத்திரங்களுக்கு இசையால் உயிர் கொடுத்த இளையராஜாவின் உழைப்பும் உரமாக இருந்து; ‘காதலுக்கு மரியாதை’யை வெள்ளிவிழாப் படமாக மாற்றியது. தனது சினிமா பயணத்தை ஆக்ஷன் ஹீரோவாக ஆரம்பித்த விஜய், திடீரென மென்மையான காதல் ஹீரோவாக மாறியது அவரே எதிர்பார்க்காத ஆச்சரியம்! ‘கதாநாயகிகளின் அங்கங்களில் புகுந்து திரிந்து விளையாடி பெண்கள் கூட்டத்தை முகம் சுளிக்க வைக்கும் விடலைப் பையன்’ என, அவரது ஆரம்ப காலப் படங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட விஜய்க்கு, பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், நினைத்தேன் வந்தாய் போன்ற படங்கள் வந்து அந்த அவப் பெயரை அடியோடு புரட்டிப் போட்டது. அதாவது, கவர்ச்சிப் புழுவை தூண்டிலில் மாட்டிவிட்டு; ரசிகர்களை தியேட்டருக்குள் இழுக்கும் எண்ணத்தை மாற்றியது. இதனால்; விஜய்யின் படங்கள் பற்றிய பார்வையும், கருத்தும் மாறியது. இந்த சமயத்தில் தான் ஒரு படம் வந்து விஜய்யை, குடிசை வாசிகளும் கொண்டாடும்; மாஸ் ஹீரோவாக மாற்றியது! அந்தப் படம்...? திங்கள்கிழமை பார்க்கலாம் . . .

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.