நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 14 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 30 Oct, 2017 04:28 pm

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-14
‘இளைய தளபதி’ பட்டம் தந்த படம்..! நாகபட்டினத்தை அடுத்துள்ள கயத்தூர் என்கிற கிராமத்தை சேர்ந்த அந்த இளைஞன், ஆட்டோ மொபைல் கோர்ஸ் முடித்துவிட்டு; ஆறு மாத பயிற்சிக்காக ஒரு இடத்தில் 10 பேருடன் தங்கியிருந்தார். அங்கே ஒரு மாதம் என்.எஸ்.எஸ் முகாமுக்கு 60 மாணவிகள் வந்து சேர, அவர்களுக்குள்ளே ஒரு நட்பு உருவானது! கேம்ப் முடிந்ததும், ‘நீ யாரோ.. நான் யாரோ..’ என மாணவிகள் பிரிந்து சென்றபோது; அந்த இளைஞர்கள் உருகிப்போனார்கள்! இந்தப் பாதிப்பு அந்த இளைஞனின் நெஞ்சை விட்டு நீங்கவே இல்லை! பிறகு, பெண் காவல் துறை அதிகாரியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப் படிக்க, அவரது கலை உணர்வும், போராட்ட குணமும் அந்த இளைஞனைக் கவர்ந்தது! அத்துடன், ‘சிட்டி லைட்ஸ்’ என்கிற ஹாலிவுட் படத்தில் சார்லி சாப்ளின் கண்பார்வை இழந்தவராக வந்த அந்த நடிப்பு இம்ப்ரெஸ் செய்தது! என்.எஸ்.எஸ். கேம்ப் சம்பவம், திலகவதியின் வாழ்க்கை வரலாறு, சார்லி சாப்ளின் படம்.. இவற்றோடு கொஞ்சம் தனது கற்பனையும் கலந்து, ஜனரஞ்சகமான திரைக்கதையாக உருவாக்கினார் அந்த இளைஞன். ஒரு நாள் சினிமா கனவோடு சென்னைக்குக் கிளம்பிவந்து; பெரிய போராட்டத்துக்குப் பிறகு, கதாசிரியர் பிரசன்னா குமாரிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர், ராபர்ட்- ராஜசேகரன், பார்த்திபன், ராஜ்கிரண் என ஒரு ரவுண்ட் அசிஸ்டெண்ட்டாக இருந்துவிட்டு தனியே படம் இயக்கக் கிளம்பிய அந்த இளைஞன், அந்தக் கதையை வைத்துக் கொண்டு தட்டாத கதவுகள் இல்லை! கிட்டத் தட்ட நூறு தயாரிப்பாளரிடமாவது அந்தக் கதையைச் சொல்லியிருப்பார். ஆனால் எல்லா இடங்களிலும் ஒரே பதில்தான். கடைசி முயற்சியாக, அந்த இளைஞன் போய் நின்ற இடம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ்! பலராலும் இடது கையால் ஒதுக்கித் தள்ளிய அந்தக் கதையை; அதற்குள் இருந்த ஜீவனை அடையாளம் கண்டு; அந்தக்கதையைத் தயாரிக்க முன்வந்தார் ஆர்.பி.சௌத்ரி. “ஒன்னோட கதைக்கு ஹீரோவா யார மைண்ட்ல வச்சிருக்க?” என ஆர்.பி.சௌத்ரி கேட்க, அந்த இளைஞன் சட்டெனச் சொன்ன பெயர், ‘விஜய்’. விஜய்யை மாஸ் ஹீரோவாக அறிவித்த அந்தப் படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. ஒரு தாய் தன் கருவறையில் பிள்ளையைச் சுமப்பதைப் போல; அந்தக் கதையைத் தூக்கி சுமந்த அந்த இளைஞன் இயக்குநர் எழில். பல தயாரிப்பாளர்கள் கசக்கி எறிந்த அந்தக் கதை மீது; புதியவரான எழில் வைத்திருந்த அசைக்க முடியாத அந்த நம்பிக்கைக்கு மக்கள் மகத்தான ஆதரவு கொடுத்தனர். படம் வெள்ளி விழாக் கொண்டாடியது. குடிசைவாசியாகவும் பார்வை இழந்த காதலிக்கு தன்னுடைய தாயின் கண்களைத் தானம் செய்யும் ஒரு கரிசனமான இளைஞனாகவும் விஜய் நடித்திருந்தார். விஜய்யின் குட்டி கதாப்பாத்திரமும், சிம்ரனின் ருக்குமணி கதாப்பாத்திரமும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது. படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு பெரும் பங்கு இருந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தான்; கல்லூரி இளைஞர்கள் விஜய் ரசிகர்களாக மாறினார்கள். அதனால், விஜய்க்கு என, ரசிகர் வட்டம் விரிவடைந்தது. விஜய் அறிமுகமான நேரத்தில் அவரால் கவரப்பட்ட பள்ளிப் பருவத்துச் சிறுவர்கள் 2000–ல் கல்லூரி படிக்கும் இளைஞர்களாக மாறி; விஜய்யின் ரசிகர் மன்றத்துக்கு வலு சேர்த்தனர். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் குடிசை வாசியாக நடித்ததால்; குடிசைப் பகுதியின் ‘போஸ்டர் ஃபாய்’ ஆக மாறினார் விஜய். ‘இந்தப் படத்துக்குப் பிறகு தான் விஜய்யை, ‘இளைய தளபதி’ எனக் கொண்டாடினார்கள் ரசிகர்கள். பூவே உனக்காகப் படத்தில் தொடங்கித் 'துள்ளாத மனமும் துள்ளும்' என தொடர்ச்சியான ஹிட் படங்கள், விஜய்யை ஒரே தூக்காகத் தூக்கி புகழின் உச்சத்துக்குக் கொண்டு போனது! இனி ரஜினி-கமல் வரிசையில் விஜய் படங்களையும் விநியோகஸ்தர்கள் மொத்தமாக ‘அவுட் ரைட்’ முறையில் வாங்கிக் கொள்வதாக முடிவெடுத்தனர். விஜய், புகழின் உச்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த வேளையில், திடீரென சில படங்கள் வந்து அவரைச் சறுக்கி விழ வைத்தது! தொடர் தோல்வி தந்த சரிவுக்கு நடுவே, ஒரு விபத்தும் ஏற்பட்டு அவரைப் படுக்கையில் விழ வைத்தது! விழுந்தவர், எப்படி எழுந்தார்? நாளைப் பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.