நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 15 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 31 Oct, 2017 06:29 pm

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-15
வீழ்ச்சி... விரக்தி... விபத்து..! கோடியைத் தொட்ட சம்பளம், ரஜினி- கமல் படங்களுக்கு இணையாக வியாபாரம், கல்லூரிப் பெண்கள் நடுவே கிரேஸ், காந்தமாய் இழுக்கும் கருப்பு நிறம், சொந்தக் குரலில் பாடும் திறமை, கலக்கலான டான்ஸ், ரிம்லெஸ் கண்ணாடியோடு படத்துக்குப் படம் காதலின் மேன்மையைச் சொல்லி, வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த விஜய், திடீரென ஒரு அதிரடி முடிவுக்கு வந்தார்! மென்மையான ஹீரோவாக, கண்ணியமான குடும்பத்துப் பிள்ளையாக, படித்த சராசரி இளைஞனாக, எதார்த்தமான நடிப்பால் நட்சத்திர நாயகனாக உயர்ந்த விஜய்க்கு, காதல் கதைகளில் நடித்துப் போரடித்துப் போனது! அதனால், ஆக்‌ஷன் கலந்த காதல் கதைகளில் நடிக்கும் முடிவுக்கு வந்தார்! விஜய்யின் இந்த அதிரடி முடிவு பத்திரிகை வட்டாரத்தில் ஆச்சர்யத்தையும், விநியோகஸ்தர்கள் வட்டாரத்திலும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. “லவ் பண்ண வேண்டியது, கடைசியில் தியாகம் பண்ண வேண்டியது. இந்த மாதிரி எத்தனை படத்துல தான் நடிக்கிறது! புதுசா கதை சொல்ல வர்றவங்களும் காதல் கதைகளையே தூக்கிட்டி வர்றாங்க. தொடர்ந்து அதே டைப்ல படம் பண்ணினா ரசிகர்களுக்கு வெறுத்து போகும்” என அப்போது விளக்கம் கொடுத்தார் விஜய். சரியான நேரத்தில் சரியான முடிவு தான் என்றாலும் விஜய்யின் புதிய முடிவில் ஒரு அபாயமும் காத்திருந்ததை அவரால் அப்போது உணர முடியவில்லை! திடீரென விஜய் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறியதால் வெறுப்பின் உச்சத்துக்கே சென்றனர் விஜய் ரசிகர்கள். காதலை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததே, தொடர் தோல்விக்கும்; சரிவுக்கும் காரணமாக அமைந்தது! என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சாரக் கண்ணா, கண்ணுக்குள் நிலவு என விஜய்யின் படங்கள் வரிசையாக விழுந்தன! இதற்கிடையே, விஜய்க்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. இந்தச் செய்தி அவர், ரசிகைகளுக்கு நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போட்டதைப் போலவே, விநியோகஸ்தர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது! தொடர் தோல்வி அவரின் ‘நட்சத்திர நாயகன்’ நாற்காலியை அசைத்துப் பார்த்தது! படத்தின் வெற்றி எந்தளவுக்கு மகிழ்ச்சியைத் தந்ததோ, அதே அளவுக்குத் தோல்வி துயரப்படுத்தியது. இந்த வீழ்ச்சி, விரக்திக்கு நடுவே; யாருமே எதிர்பாராமல் திடீரென ஒரு விபத்து ஏற்பட்டு விஜய்யைப் படுக்கையில் தள்ளியது! நம்பவே முடியவில்லை...! 30 அடி உயரத்திலிருந்து குதிக்கவில்லை, ஃபைட் சேஸிங், ஸ்டண்ட் சீன் மாதிரி சாகசம் எதுவும் செய்யவில்லை! கண்ணுக்குள் நிலவு படத்தின் கடைசி நாள் ஷூட்டிங், ஷாலினியுடன் ஜாலியா டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். ஒரு கிரேன் ஷாட்டுக்காகக் குனிந்து நிமிர்ந்தபோது லேசா எறும்பு கடித்த மாதிரி முதுகில் ஒரு வலி, அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து டூயட் பாடிவிட்டு ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்து படுத்த விஜய்க்கு; எழமுடியாமல் முதுகு வலி! சுளுக்கு அல்லது கேஸ் ட்ரபிளா இருக்கும் என ஆஸ்பத்திரிக்குப் போக, “முதுகுத் தண்டில் பயங்கர அடி, உடனே ஆபரேஷன் செய்தாகணும், பெட் ரெஸ்ட்ல இருக்கணும், எழுந்து நடமாடவே ஒரு வருஷமாகும்” என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் டாக்டர். திகு திகுவெனத் தீயாய் தகவல் பரவ, திகைத்துப் போனது திரையுலகம்! ‘அச்சச்சோ நல்ல புள்ளையாச்சே, அதுக்கா இப்படியொரு சோதனை?’ என சிலரும், ‘அவ்வளவு தான்... விஜய் காலி..!’ என பலரும் பேச ஆரம்பித்தனர்! இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இன்னொரு சோதனையும் விஜய்க்கு காத்திருந்தது. அந்தச் சோதனை என்ன? அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார்? நாளை பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.