நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 16 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 01 Nov, 2017 04:16 pm
thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-16
தற்கொலை வதந்தி..! பின்னணியில் இருந்தது யார்? ரசிகர்கள், நண்பர்கள், கதை சொல்லவும்; கால்ஷீட் கேட்கவும் குவியும் சினிமாக்கார்கள் என்று விஜய் வீடு எப்பவும் திருவிழாக் கூட்டமாக இருக்கும். ஆனால், விஜய் படுக்கையில் விழுந்து, உறவினர்கள்- நண்பர்கள் வந்து நலம் விசாரித்தபோது வீடே களை இழந்தது! ஆபரேஷன் முடிந்து பெட் ரெஸ்டில் இருந்த விஜய் சில நாட்களிலேயே வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வீட்டின் ஒரு அறை மருத்துவமனையாகவே மாற்றப்பட்டது. அப்படி இப்படி அசையக்கூட முடியாதபடி படுத்த படுக்கையாக இருந்த விஜய்யை; கவனித்துக் கொள்வதற்கு நர்சுகள் நியமிக்கப்பட்டனர். தினமும் டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்தனர். ரசிகர்கள் செய்த பிரார்த்தனையின் பலனாலும், மருத்துவர்கள் தந்த தைரியத்தினாலும் சீக்கிரமே குணமானார் விஜய்! பெட் ரெஸ்ட்டில் இருந்து வந்த சோர்வு இல்லாமல்; விஜய்யிடம் பழைய உற்சாகம் திரும்பியது! மகன், மீண்டும் எழுந்து நடமாடிய பிறகு தான் பெற்றோருக்கு நிம்மதி திரும்பியது! அந்தக் குடும்பத்தில் பழைய குதூகலமும், சந்தோஷமும் திரும்பியது! இந்தத் தருணத்தில் விஜய்க்குத் திருமணம் முடிவானது. லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்; தொழிலதிபர் சொக்கலிங்கம் மகள் சங்கீதாவை, 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி மணந்தார் விஜய். சென்னையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் சினிமாத் துறையினர், பல்வேறு பிரபலங்கள் அனைவரும் வந்து வாழ்த்த, தமிழகம் முழுவதும் ரசிகர்கள் திரண்டுவர, திருமணம் சிறப்பாக நடந்தது. சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள், அந்த நேரத்தில் கல்யாணத்தைப் பற்றிக் கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள்! அதற்கு மாறாக; குடும்ப வாழ்க்கைக்குச் சரியான காலகட்டத்தில் விஜய்யின் 27-வது வயதில் திருமணப் பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர் பெற்றோர்கள்! கோலாகலமாகத் திருமணம் முடிந்த குஷியில் விஜய்யும், சங்கீதாவும் தேனிலவுக்காக மொரீஷியஸ் சென்றனர். அந்த நேரத்தில் இங்கே.., சில விஷமிகள், அந்த விஷத்தைக் கக்கினார்கள்! ‘வாழ்க்கையில் விரக்தியடைந்த விஜய், தனது கையிலிருந்த வைரமோதிரத்தை உடைத்துத் தின்று தற்கொலை செய்து கொண்டார்!’ எனப் பத்திரிக்கை அலுவலகங்களுக்குப் போன் செய்தான் ஒருவன். இதைக்கேட்ட அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்! அதிர்ச்சி மாறாமல்; தயக்கத்தோடு இந்தத் தகவலை விஜய்யின் தந்தையிடம் கொண்டுபோனபோது, அவர் முதலில் பதறித் தான் போனார்! பிறகு; சுதாரித்துக் கொண்டு, ‘அதெல்லாம் வதந்தி..!’ எனக் கண்ணீரோடு மறுத்தார்! சத்தியமாக, எல்லோரும் எதிர்பார்த்தது அந்தப் பதிலைத் தான்! சரி.. நிஜத்தில் நடந்தது என்ன? எங்கிருந்து கிளம்பியது இந்த வதந்தி? இதற்குப் பின்னால் இருந்தது யார்? என மண்டையைக் குடையும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் தவித்த போது, ‘இந்த வதந்தியின் பின்னால் இருந்த அந்த நிழல் மனிதன் விஜய்யின் தந்தையே தான்!’ எனச் சில புலனாய்வு பத்திரிக்கைகள் கொளுத்திப் போட்டன! விஜய் மார்கெட் சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில், விஜய்க்கு ஏற்பட்ட சாதாரண முதுகு வலியை; ஊதி பெருசாக்கி; படு சாமர்த்தியமாகவும், விஜய்க்கு சாதகமாகவும் மாற்றி விஜய் பக்கமாக அனுதாப அலையைத் திருப்பிவிட்டது எஸ்.ஏ. சந்திரசேகர் தான்! என்றும், விஜய்யின் தற்கொலை வதந்திக்குப் பின்னால் இருப்பதும் அவரே தான் என்றும் புலனாய்வு புலிகள் கூறின. சங்கீதாவை பேசி முடித்ததிலிருந்தே சினிமாவில் விஜய்க்கு இறங்கு முகம் தான்! திருமணம் முடிந்த பிறகு மின்சாரக் கண்ணா படம் ரிலீசுக்கு தயாராக இருந்தது. ஆகவே, அந்த நேரம் பார்த்து ‘தற்கொலை வதந்தியைக் கிளப்பியிருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகரன். இதன்மூலம் விஜய்க்கு பப்ளிசிட்டி தேடியிருக்கிறார் என்றும் போட்டுத் தாக்கின. இப்படி அபாண்டமான வதந்திகளைக் கிளப்பி, சல்லிசான விளம்பரம் தேடவேண்டிய அவசியம் இல்லை!’ என தன்னிலை விளக்கம் தந்து, அந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன்! இப்படி வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் கிடந்த விஜய், வீறுகொண்டு எழுந்தது எப்படி? நாளை பார்க்கலாம்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close