நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 17 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 02 Nov, 2017 03:24 pm
thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-17
ஒரு ஹிட் படம் கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் விஜய்! சறுக்கல்கள்... சங்கடங்கள்... சர்ச்சைகள்... இதெல்லாம் மெல்ல மெல்ல சரியாகி, சகஜ நிலைக்குத் திரும்பிய விஜய்க்கு; சினிமாவில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வது பெரும் சவாலாக இருந்தது. இப்படியொரு நெருக்கடியான நேரத்தில், விஜய்யிடம் கதை சொல்ல வந்தார் இயக்குநர் எஸ்,ஜே.சூர்யா. ‘வாலி’ தந்த மெகா ஹிட்டுக்குப் பிறகு விஜய்யைத் தேடி வந்தார். அப்போது, விஜய் டிரைவிங்கில் இருந்தார். ஒரு ‘லாங் டிரைவ்’ போய்க் கொண்டே கதை கேட்டபடி வந்தார் விஜய். கதையில் வரும் எல்லாக் காட்சிகளையும் சூர்யா உணர்ச்சிகரமாக நடித்துக் காட்டி விலாவாரியாக விவரித்துக் கொண்டே போக, எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாகக் கதையைக் கேட்டபடி கார் ஓட்டியிருக்கிறார் விஜய். ‘சரி.. கதை பிடிக்கல போல!’ என்கிற முடிவுக்குச் சூர்யா வர, ‘இந்தப் படம் பண்ணலாம்..!’ என விஜய் ஒரே வார்த்தையில் ‘ஓகே’ சொன்ன படம் தான் ‘குஷி’. இந்தப் படம் கொடுத்த வெற்றி விஜய்யின் சரிவை சரிக்கட்டியது! விஜய்க்கு ‘இமேஜ்’ மேலும் கூடியது. ஜோதிகாவின் இயல்பான நடிப்பும், நொடிக்கு நூறு தரம் மாறும் முகபாவனையும் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது. ஷில்பா ஷெட்டி ஒரு பாடலுக்கு வந்து ஆடினார். விஜய்யுடன் சேர்ந்து மும்தாஜ் குத்தாட்டம் போட்ட ‘கட்டிப்புடி.. கட்டிப்புடிடா...’ என்கிற பாடல் பலரின் தூக்கத்தைக் கெடுத்தது. இளைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்துப் பட்டை தீட்டிக் கொடுத்தார் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா. இளம் காதலர்களின் ஈகோவை மட்டுமே மையமாகக் கொண்டு நடக்கும் சம்பவங்கள், அதை இளசுகளுக்குப் பிடித்த மாதிரி ருசியாகப் பரிமாறியதால் ‘குஷி’ இப்போதும் பெஞ்ச் மார்க் படமாகக் கருதப்படுகிறது. இதே கதை தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்ய அங்கேயும் படம் சூப்பர் ஹிட்டானது. விஜய்யின் திருமணப் பேச்சை எடுத்ததிலிருந்தே அவருக்கு நேரம் சரியில்லை எனப் பேசியவர்கள், ‘குஷி’ யின் வெற்றிக்குப் பிறகு, ‘மனைவி வந்த பிறகு தான் விஜய்க்கு ஏறுமுகம்!’ என மாற்றிப் பேச ஆரம்பித்தனர். தமிழ் சினிமாவில் எப்போதுமே ஹிட் ஃபார்முலா என்றால் அது தாலி சென்டிமென்ட் தான்! தாலி சென்டிமென்ட் படங்கள் என்றாலே அது மினிமம் கேரண்டியாக இருக்கும். சில நேரத்தில் ப்ளாக் பஸ்டராக அமைந்து ஆச்சர்யப்படுத்தும்! குஷி வெற்றிக்குப் பிறகு விஜய் கையில் எடுத்தது தாலி சென்டிமென்ட் படம். மேற்கத்திய கலாச்சாரத்தில் கரைந்து போன ஹீரோ, தனக்கு மனைவியாக வரும் பெண்ணை ஓராண்டுக்கு என்று அக்ரிமென்ட் போட்டுத் தேர்வு செய்கிறார். ஒப்பந்த காலத்தில் அவர்களுக்குள் ஏற்படும் காதல், தாலி சென்டிமென்ட்டை உருக உருகச் சொன்னார் இயக்குநர் செல்வபாரதி. இதனால் என்ன ஆனது தெரியுமா? இந்தி, தெலுங்கு, கன்னட தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்று இந்தக் கதையின் ரீமேக் உரிமையை வங்கிப் போக, படம் எல்லா மொழிகளிலும் ஹிட் ஆனது. அந்தப் படம் ப்ரியமானவளே! அதன்பிறகு நட்பை மையமாகக் கொண்ட காமெடி கலந்த படத்தில் நடித்தார். மலையாளத்தில் ஜெயராம் நடித்து ஹிட்டான ஃப்ரெண்ட்ஸ் படத்தைத் தமிழில் எடுக்க முடிவான போது அதில் நடிக்க விஜய் தான் பொருத்தமான ஹீரோ என உறுதியாக இருந்தார் இயக்குநர் சித்திக். காதலுக்கு மரியாதை படத்தில் உதவி இயக்குநராக இருந்தபோது ஏற்பட்ட நட்பில் விஜய்யை அணுகித் தான் இயக்கிய ஃரெண்ட்ஸ் படத்தைப் பார்க்கும் படியும், அந்தக் கதை பிடித்திருந்தால் கால்ஷீட் தரும்படியும் இயக்குநர் சித்திக் கேட்டார். மொழி புரியாத அந்தப் படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய், அதில் நடிக்கச் சம்மதித்தார். தமிழிலும் ஃப்ரெண்ட்ஸ் என்கிற பெயரிலேயே வந்து சூப்பர் ஹிட்டானது. நேருக்கு நேர் படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக இணைந்த விஜய்யும், சூர்யாவும் பெயிண்டிங் காண்ட்ராக்டர் வடிவேலுவிடம் ‘அப்பரசண்டிகளாக’ இருந்து செய்த காமெடி அலப்பறை அமர்க்களப்பட்டது. குஷி, ப்ரியமானவளே, ப்ரெண்ட்ஸ் என வரிசையாக ஹிட் ஆகி, தானொரு ‘நட்சத்திர நாயகன்’ என்பதைத் திரும்பவும் நிரூபித்தார் விஜய். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று, ‘மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம்’ எடுத்தார் விஜய். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ரூட்டுக்கு விஜய்க்கு மாற, அந்த அதிரடி ஆக்‌ஷன் கதை கை கொடுத்தது. விஜய்யை முழு ஆக்‌ஷன் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொண்ட அந்தப் படம் எது? நாளை பார்க்கலாம்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close