நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 19 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-19

விஜய் மிஸ் பண்ணிய சூப்பர் ஹிட் படம்...! 

ஆரம்பத்தில் விஜய்க்கான எல்லா விஷயங்களையும் அவரோட அப்பாதான் முடிவு செய்வார். அந்த வழக்கம் மாறியது! ஒவ்வொரு விஷயமாகக் கற்றுக் கொண்டு, தனக்கான கதைகளை விஜய்யே முடிவு செய்யத் தொடங்கினார். 

கதையைத் தேர்வு செய்வதில் எந்தக் காம்ப்ரமைசுக்கும் இடம் தரமாட்டார் விஜய். கதையை அவர் நூறு சதவிகிதம் கேட்க வேண்டும். மேம்போக்காகக் கதையைச் சொன்னால் விஜய்யிடம் வேலைக்கே ஆகாது! மூன்று மணி நேரம்; காட்சி மாறாமல் முழுபடத்தையும் ஓட்டிக் காட்ட வேண்டும். 

திருமலை ஹிட்டுக்குப் பிறகு விஜய், ஆக்‌ஷன் ரூட்டுக்கு வந்திருப்பதை அறிந்து; அவர் விரும்பும் அம்சங்கள் அத்தனையும் உள்ள ஒரு ‘மாஸான கதை’யோடு விஜய்யிடம் வந்தார், அந்த இயக்குநர். அந்த இயக்குநரின் முதல் படம் சரியாகப் போகவில்லை... இரண்டாவது படம் செம ஹிட்! ஆகவே, விஜய், அந்த இயக்குநருக்காக நேரம் ஒதுக்கினார். 


கதை சொல்ல ஆரம்பித்த இயக்குநர், 10வது நிமிடத்தில் கதைக்கு என்டு கார்டு போட்டார்.முழுக் கதையையும் சொல்லாமல், ‘அவுட் லைன்’ மட்டும் சொன்னதால்; அதை வைத்து விஜய்யால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை! ‘நெக்ஸ்ட் டைம் பாக்கலாங்ண்ணா..!’ எனக் கூலாகச் சொல்லி அனுப்பினார். 

ஆனால், அந்த இயக்குநர் அசரவில்லை, அந்தக் கதை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆகவே, இதற்கு முன் இயக்கிய; தனது ஹீரோவையே அந்தக் கதையில் நடிக்க வைத்தார், படம் பட்டையக் கிளப்பியது. விஜய் மிஸ் பண்ணிய அந்தப் படம் ‘தூள்’. விஜய்யால் நிராகரிக்கப்பட்ட அந்த இயக்குநர் தரணி. 

‘தூள்’ படத்தைத் தியேட்டரில் படத்தைப் பார்த்த விஜய், ‘படம், செம மாஸா இருக்கே, என்கிட்டே சொன்ன கதையா இது?’ எனப் பிரமித்துப் போனார்! ‘அடுத்தப் படம் அந்த இயக்குநருடன் தான்!’ என்கிற தீர்மானத்துக்கு வந்த விஜய், இயக்குநர் தரணியைச் சந்தித்தார். ‘ண்ணா.., நீங்க, எனக்குச் சொன்ன கதை வேற மாதிரி இருந்தது, இப்போ எடுத்திருக்கிற கதை வேற மாதிரி இருக்கே?’ என விஜய் கேட்டார். 


அதற்குத் தரணி, ‘இல்லை சார், நான் கொஞ்சம் கொஞ்சமா அந்தக் கதையைப் பண்ணி வச்சிருந்தேன், படமா பார்க்கும் போது இப்படி வந்திருச்சு!’ எனச் சமாளிக்க, ‘இதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்ணா..!’ எனச் செல்லக் கோபம் காட்டவே, ‘அதனால என்ன சார், அத மிஞ்சுற அளவுக்கு ஒரு கதை வச்சிருக்கேன்..!’ என்ற இயக்குநர் தரணி, அப்போது சொன்னது தான் ‘கில்லி’ கதை. 

தெலுங்கு தேசத்தில் சூப்பர் ஹிட்டான ‘ஒக்கடு’ வை தமிழில் தயாரிக்கும் முடிவுக்கு வந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், அதைத் தமிழுக்குத் தக்கபடி மாற்றித் தரும் பொறுப்பை இயக்குநர் தரணியிடம் ஒப்படைத்திருந்தார். 

ஹீரோ முடிவு செய்யப்படாத நிலையில் தான் விஜய்-தரணி சந்திப்பு நடந்தது. அந்தச் சந்திப்பில் தான், ‘கில்லி’க்கு விஜய் தான் ஹீரோ என்பது உறுதியானது. ‘கில்லி’யில் விஜய் நடிக்கிறார் எனத் தெரிந்து ஏக ‘குஷி’யானார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். 


கபடி, காதல், வில்லத்தனம் புகுந்து விளையாடிய இந்தப் படம் விஜய்யை, ஒரு அசத்தலான ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. கபடி விளையாட்டு படத்தின் ஹைலைட்டாக இருந்ததால், படப்பிடிப்புக்கு முன்பு நிஜமான கபடி வீரர்களுடன் பயிற்சி எடுத்துக் கொண்டார் விஜய். அதிரடி ஆக்‌ஷனுக்கு விஜய், ‘கிளாமர் கிக்’ ஏற்ற திரிஷா, கண்டிப்பு காட்ட ஆஷிஷ் வியார்த்தி, உருட்டல் மிரட்டலுக்குப் பிரகாஷ்ராஜ், கலக்கலான காமெடிக்கு தாமு-மயில்சாமி, சூப்பர் ஹிட் பாடல்களுக்கு வித்யாசாகர்... எனத் திறமைசாலிகளின் கூட்டணியில் உருவான ‘கில்லி’யை விஜய் ரசிகர்கள் வெள்ளிவிழாப் படமாக்கினார்கள். அந்த வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் இயக்குநர் தரணி. 

‘கில்லி’க்குப் பிறகு விஜய்-திரிஷா கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகும் என்கிற நம்பிக்கை உருவானது. கோலிவுட்டில் ராசியான ஜோடியாக கொண்டாடப்பட்ட இந்த ஜோடி திருப்பாச்சி, ஆதி, குருவி என தொடர்ந்தது. இதனால், கிசு கிசுக்களும் கை-கால் முளைத்து சிறகடித்துப் பறக்க, அதை இருவருமே ‘ஜஸ்ட் லைக் தட்’ என எளிதாக எடுத்துக் கொண்டனர். அதனால், அந்த கிசு கிசு, பிசு பிசுத்துப்போனது! 

விஜய்க்கும், அஜித்துக்கும் நடுவே ரொம்ப நாளாகவே இருந்து வந்த ‘நிழல் யுத்தம்’ முடிவுக்கு வர ஒரு இயக்குநர் காரணமாக இருந்தார்! யார் அந்த இயக்குநர்?, அந்த யுத்தம் எப்படி முடிவுக்கு வந்தது? 

நாளை பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.