நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 20 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-20


நிழல் யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி! 

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையிலிருந்து சென்னைக்கு வந்து உதவி இயக்குநரான அந்த இளைஞன், அடிக்கடி தன்னுடைய ஊரையும்; சென்னை நகரத்தையும் ஒப்பிட்டு மனசுக்குள் அசைபோட்டபடியே இருந்தார். அப்போது சட்டென்று தோன்றியது ஒரு கதை! 

தமிழ் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்தானுக்கும் சென்னை மீது தீராக் காதல் இருக்கும்! ஆனால், இங்கே வந்த பிறகு தான், ‘நான் கற்பனை செய்து வைத்திருந்த சென்னை இதுவல்லவே!’ என்று உணர்வான்! இந்த ஒன் லைனை வைத்துக் கொண்டு பக்கா கமர்ஷியல் பேக்கேஜில் ஒரு திரைக்கதையை உருவாக்கினார். இந்தக் கமர்ஷியல் கதையில் யார் ஹீரோ? என்றெல்லாம் அப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை! முதலில் தயாரிப்பாளரை தேடினார். 


சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியிடம் கதை சொல்ல வாய்ப்புக் கிடைத்தபோது, இந்தக் கதையைத்தான் சொன்னார். கதையைக் கேட்ட சௌத்ரி, ‘சூப்பர்... இந்தக் கதையில விஜய் ஹீரோவா நடிச்சா பிரமாதமா இருக்கும்!’ எனச் சொன்னதும், அதை அந்த இளைஞனால் நம்பவே முடியவில்லை! முதல் வாய்ப்புக் கிடைப்பதே குதிரைக் கொம்பு, அதிலும்; முதல் படத்திலேயே விஜய் மாதிரி பெரிய ஹீரோவை இயக்கும் வாய்ப்பு என்றால்... நடக்குமா? அன்று மாலையே விஜய்க்கு கதை சொல்ல அனுப்பி வைத்தார் ஆர்.பி.சௌத்ரி. 

உருகி உருகி மூன்று மணி நேரம் கதை சொல்ல, விஜய்யிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ‘அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க..!’ எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார் விஜய். கதை பிடிக்கவில்லை போல, இனி வேற தயாரிப்பாளரைத் தேட வேண்டியதுதான் எனத் தனக்குள்ளேயே புலம்பியபடி இருந்த போது; திரும்பவந்த விஜய், ‘கதை நல்லா இருக்கு, நாம பண்றோம்..!’ என்றார். அந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த இளைஞன் கண்ணில் ஆனந்தக் கண்ணீர். ‘கதைக்கு என்ன டைட்டில்?’ விஜய் கேட்க, ‘திருப்பாச்சி...’ என்று சொன்ன அந்த இளைஞன் இயக்குநர் பேரரசு. 


படம் மெகா ஹிட்டாகி; விஜய்யின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது. விஜய்க்கு ஜோடியாகத் திரிஷாவும், தங்கச்சியாக ‘ஆட்டோகிராப்’ மல்லிகாவும் நடித்திருந்தனர். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தபோதிலும், ரவுடிகளை ஒடுக்கும் கதை என்பதால் ரசிகர்கள் அதை அனுமதித்தனர். 

திருப்பாச்சிக்குப் பிறகு மீண்டும் பேரரசுவுடன் சிவகாசி படத்தில் கை கோர்த்தார் விஜய். இதில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்தார். ‘கோடம்பாக்கம் ஏரியா..’ பாடலுக்கு வந்து குட்டம் போட்டார் நயன்தாரா.  தீபாவளி என்றால்  ‘சிவகாசி’ ஞாபகம் வரும் அளவுக்கு பட்டாசு கிளப்பியது படம்.

பேரரசு படத்தில் நடித்த பிறகு விஜய் வாழ்க்கையில் இன்னொரு முக்கியத் திருப்பமும் ஏற்பட்டது! 

‘சினிமா தொழிலில் எதிரெதிராக மோதிக் கொண்டாலும் ரஜினியும், நானும் நல்ல தோழர்கள். இன்றுவரை எங்கள் நட்பு நிறம் மாறாமலே இருக்கிறது. ஆனால், இன்றைக்கு உள்ள ஹீரோக்களிடம் அந்த ஆரோக்கியம் இல்லை!’ கமல் கவலைப் படும் அளவுக்கு விஜய்-அஜித் நடுவே நிழல் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. 

படங்களில் ‘பன்ச்’ டயலாக்குகளால் ஒருவருக்கொருவர் சவால் விடுவது, பேட்டிகளில் மறைமுகமாகச் சாடுவது, அவ்வப்போது அவர்களின் ரசிகர்கள் உரசிக்கொள்வது... என நிலைமை மோசமாகி வந்தது. நிஜத்திலும் கூட இருவரும் பார்க்காமல், பேசாமல் தான் இருந்தார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார்கள். 


திருப்பாச்சி, சிவகாசியைத் தொடர்ந்து, அஜித்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கினார் பேரரசு. படப் பூஜையில் ஒரு அற்புதத்தை அரங்கேற்றினார். இரு துருவங்களாக இருக்கும் ஹீரோக்களின் சர்ப்ரைஸ் சந்திப்புக்குக் களம் அமைத்துக் கொடுத்தார். படப் பூஜையில் பொக்கே புன்னகையுடன் அஜித் நிற்க, அருகே ஷாலினி இருக்க, திடீரென, விஜய் விறுவிறுவென வந்தார். ஷாலினிக்குஒரு ‘ஹாய்...’ சொன்ன விஜய், ‘ஆல் த பெஸ்ட்...’ என அஜித்துக்குக் கை கொடுத்து அணைத்துக் கொண்டார். கோலிவுட் முழுக்க விஜய்-அஜித் சந்த்தித்துக் கொண்டது பற்றிய பேச்சாகவே இருந்தது! ஒருவழியாக, இருவருக்குள்ளேயும் நிலவிய நிழல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த திருப்பதியில் இருந்தார் பேரரசு. 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவுக்கு விஜய் - அஜித் நடுவே மீண்டும் நெருக்கம் அதிகமானது. “நீங்க ‘கில்லி’யில் செய்த காமெடிய நினைச்சு இப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்பேன். அப்படியொரு அல்டிமேட் காமெடி படம் பண்ணணும்னு ஆசையா இருக்கு!” என அஜித் சொல்ல, “ஆஹா.. அது ஒண்ணு தான் நம்ம ஏரியா, அதுலயும் போட்டிக்கு வர்றீங்களா?” என ஒருவரை யொருவர் ஜாலியாக கலாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நட்பு ஆழமானது. 

விஜய், நட்சத்திர நாயகனாக மாறிய பிறகு, சமூகப் பிரச்னைகளில் அக்கறை காட்ட தொடங்கினார். அதனால், அவர் மீது, அரசியல்வாதிகளின் கவனம் திரும்பியது. இதனால், விஜய் படங்கள் பல சிக்கல்களைச் சந்தித்தது! சிக்கலில் சிக்கித் தவித்த அந்தப் படங்கள் எவை? 

நாளை பார்க்கலாம்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close