நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 21 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-21

பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்த விஜய்!
சாட்டிலைட் சேனல்கள் தங்கள் பல்வேறு அவதாரங்களைக் காட்டி, தமிழகத்தில் படையெடுத்த காலம் அது. அனைத்து சேனல்களிலும் எப்போதும் விஜய்தான் ஆடிக்கொண்டிருப்பார். தமிழகத்தைப் போலவே; கேரளாவிலும் விஜய்க்கு கிரேஸ் அதிகமாகி அங்கு அவருக்கு பெரிய ரசிகர் படையே உருவானது! விஜய்க்கு கேரளாவில் சிலை வைக்கும் அளவுக்கு, அங்குள்ள ரசிகர்கள் விஜய் படங்களை வெறித்தனமாக ரசிக்கிறார்கள்!  தமிழகத்தில்,  விஜய் படங்களுக்கு எந்த அளவுக்கு மார்க்கெட் இருக்கிறதோ அதே அளவுக்கு, சில சமயங்களில் அதிகமாகவே மார்க்கெட் இருக்கிறது. இத்தனைக்கும் மொழிமாற்றம் செய்யாமல் நேரடியாகவே ரிலீஸ் செய்கிறார்கள். இது, வேறு எந்த தமிழ் நடிகர்களுக்கும் எளிதில் கிடைக்காத வெற்றி!

எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வளர்ந்தவர் என்பதால், விஜய்க்கு வியாபார நுணுக்கம் அத்துப்படி. நடிப்பு, நடனம், ஹிட் என சினிமாவுக்குள் மட்டும் இல்லாமல் அதையும் தாண்டி யோசிக்கக்கூடியவர் விஜய். எந்த மாவட்டத்தில் தனக்கு ரசிகர்கள் அதிகம் என்பதைப் பார்த்து, தனது படங்களின் ஷூட்டிங் அல்லது இசை வெளியீட்டு விழா என எதையாவது ஒன்றை அந்த மாவட்டத்தில் வைத்து, ரசிகர்களை குஷிப்படுத்த ஆரம்பித்தார். கில்லி  படத்தின் ஷூட்டிங்கை மதுரையிலும்,  நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோவையிலும்,  பைரவா படத்தின் ஷூட்டிங்கை நெல்லையிலும் வைத்தார். அதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமானார்கள். 

சிவகாசி படம் வரை; வருடத்துக்கு மூன்று அல்லது  நான்கு படங்களில் நடித்துவந்த விஜய், ஆதி படத்திலிருந்து ஆண்டுக்கு ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார். இது அவரது மார்க்கெட் வேல்யூவை அதிகரிக்கச் செய்தது. ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து ரிலீஸ் வரை அனைத்தும் முடிந்த பின்னரே, அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்குவது என்று மாறினார். இருப்பினும், 2006-ம் ஆண்டில் விஜய்க்கு மீண்டும் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. 

'தன்னுடைய ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் மக்களுக்கு போரடிக்கிறதோ!' என்ற சந்தேகம். 'ஆமாம்' என்றது 'ஆதி'யின் படுதோல்வி. அந்த வருடம் வேறு எந்தப் படமும் நடிக்கவில்லை விஜய். போக்கிரி மூலம் தன்னை  மாற்றிக்கொண்டார். ‘மகேஷ்பாபு ஸ்டைலைக் காப்பியடிக்கிறார்' என்ற குற்றச்சாட்டு இருந்தாலும்,'போக்கிரி வெற்றி, விஜய்யைத் தொடரச் செய்தது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மூன்று படங்கள் எனக் குறைத்துக்கொண்டார். 2007, 2008 ஆம் ஆண்டில் போக்கிரி, அழகிய தமிழ் மகன், குருவி படங்களிலும், 2009, 2010 ஆம் ஆண்டில் வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்களிலும் நடித்தார் விஜய்.

போக்கிரி படத்தைத் தவிர மற்ற எதுவும் பெரிய வெற்றிபெறவில்லை.   மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான விஜய்யின் 50-வது படமான சுறா மிகப்பெரிய தோல்வியடைந்தது. ஒரே மாதிரியான கதைக்களம், தேவையற்ற வசனம் எனப் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த விஜய், சினிமா மாறுவதை கவனித்தார். இனி நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களிலும்,  பெரிய இயக்குநர்களின் படங்களிலும் மட்டும் நடிப்பதென முடிவு செய்தார். 

ஏற்கனவே, ப்ரெண்ட்ஸ் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சித்திக் இயக்கத்தில், பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே வந்த காவலன், ஜெயம் ராஜாவின் இயக்கத்தில், பல அரசியல் நெருக்கடிகளுக்கு ஆளாகி வந்த வேலாயுதம் இந்த இரண்டு படங்களும் ஹிட் ஆகி முந்தைய தோல்வியை துரத்தியடித்தன. 

அந்த சமயத்தில் தான் ஷங்கரின் இயக்கத்தில் நண்பன், அதே ஆண்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படங்கள் வந்து விஜய்யின் புகழை மேலும் உயர்த்தியது. ‘அமீர்கான் அசத்திய கதாபாத்திரத்தை விஜய் சமாளித்துவிட்டார்!’ என நண்பன் படத்தில் பெயர் எடுத்தார். துப்பாக்கி, விஜய் இதற்குமுன் செய்த அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து; பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்தது. விஜய் நடிப்பில், ‘100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம்' என்ற பெருமையை துப்பாக்கி படம் பெற்றது.

அடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில், விஜய்,  தனக்குள் இருந்த அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தின் டைட்டிலுக்கு கீழே ‘The Leader ‘ என Tag Line போட்டதால் அது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாகி படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு, அதுவே தோல்விக்குக் காரணமானது.  அதன்பிறகு விஜய், ஜில்லா படத்தில் மசாலா- ஆக்‌ஷன் பாணி நடிப்பைக் காட்டவே, அது கமர்ஷியல் ஹிட்டாக அமைந்தது. 

இன்று..., முந்தைய படத்தின் வெற்றி- தோல்விகள் விஜய்யின் மார்க்கெட்டை ஒன்றும் செய்வதில்லை! அதையெல்லாம் தாண்டி அவர் வளர்ந்து விட்டார். இந்த வளர்ச்சி, விஜய்க்கு எளிதாக வரவில்லை! பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களைத் தாண்டித் தான் இப்படியொரு அசுர வளர்ச்சியை அவர் அடைந்திருக்கிறார். 

சர்ச்சைகள், விமர்சனங்களை சந்தித்த படங்கள் எவை? நாளை பார்க்கலாம்... 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.