நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 22 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-22

விஜய்க்கும் அறிமுகம் ஆனதில் இருந்தே சர்ச்சைக்குப் பஞ்சம் இல்லை. இளைய தளபதியாக மக்கள் மனதில் உயர்ந்து, ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கு சிறிய சிறிய சேவை செய்ய ஆரம்பித்தபிறகு ஏற்பட்ட சர்ச்சைகள் அவரது திரை வாழ்வுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியது. 

தனக்கு வந்த அரசியல் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்... ஒரு கட்டத்தில் அதைத் தன்னுடைய படங்கள் மூலமாகவே எதிர்கொள்ள ஆரம்பித்தார். குறிப்பிட்ட அந்தக் காலக்கட்டத்தில்தான் ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆதிக்கத்துக்குள் தமிழ் சினிமா உலகமே செல்லும் நிலை உருவாகியது. அதில் விஜய்யும் தப்பவில்லை. 2009ம் ஆண்டு விஜய் தன்னுடைய ரசிகர் நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்று மாற்றினார். அடுத்து வந்த தேர்தலின் போது திருச்சியில் பிரச்சாரத்துக்குச் சென்ற ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசினார். 20 நிமிடம் பேசிய பிறகு வெளியே வந்த அவர், விஜய் ஆதரவு அ.தி.மு.க-வுக்கு என்றார். அந்த தேர்தலில், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக எஸ்.ஏ.சந்திரசேகர் பிரச்சாரம் செய்தார்.  


ஆட்சி மாற்றம் ஏற்பட்டது... ஆனால் நிலைமை மட்டும் மாறவில்லை. 2011-ல் காவலன் படம் வெளியாகத் தயாராக இருந்தது. இதற்கு முன்பு வெளியான சுரா, வேட்டைக்காரன் போன்ற படங்கள் தந்த தொடர் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை விஜய் கொடுக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இறுதியில், விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நஷ்டஈடு தர சம்மதித்த பிறகே 'காவலன்' வெளியானது. முன்னதாக இரண்டு முறை வெளியீடு என அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. 

ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களும் விஜய்க்கு நெருக்கடியையே பரிசாகக் கொடுத்தனர். 2013ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில், விஜய், தனக்குள் இருந்த அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தின் டைட்டிலுக்குக் கீழே ‘The Leader ‘ என டேக் லைன் போட்டதால், அது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாகி படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டது. பல பிரச்னைகள், போராட்டங்கள், நெருக்கடிகள். கடைசியில், தி லீடர் என்ற டேக் லைனை அகற்றிய பிறகே படம் ரிலீஸ் ஆனது. ஆனாலும், கடும் நெருக்கடிக்குப் பிறகு வெளிவந்த படம் என்பதால், சுமாராக ஓடியது. 


2014-ம் ஆண்டின் தீபாவளி விருந்தாக வந்த கத்தி படம், தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய கூர்மையான வசனங்களும், அதற்கு இணையாக விஜய்யின் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றன. இந்தப் படத்தின் போது, விஜய் தலைக்கு மேல் கத்தி தொங்கி; பல பிரச்னைகள் எழுந்தாலும், படம் வசூலை அள்ளிக்குவித்தது. இந்தப் படங்களின் ஹிட், விஜய்யின் மவுசை எங்கேயோ தூக்கிச் சென்றது. தயாரிப்பாளர் நினைத்ததைவிடப் பல மடங்கு அதிகப் பணம் தந்து விஜய் படங்களின் ஏரியா உரிமையை வாங்கிப் போனார்கள். அதுதான் சினிமா..!. 

2015-ம் ஆண்டு வெளிவந்த புலி திரைப்படம் விஜய்க்கு மீண்டும் ஒரு தோல்வியைத் தந்தது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு இரையாக மாறியது. ஆனாலும், இந்தப் படம் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான `தெறி' விஜய்யை மீண்டும் உச்சத்தில் அமரவைத்தது. கம்பீரமான போலீஸ் அதிகாரியாக அதில் விஜய் நடித்திருந்தார். மீனாவின் மகள், நைனிகா இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பைரவா கலவையான விமர்சனத்துக்குள்ளானது. 


தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் கைகோத்து மெர்சல் படத்தில் மிரட்டினார் விஜய். டைட்டிலுக்கு எதிராக வழக்கு, விலங்குகள் நல வாரியம் போட்ட கடிவாளம், பிரதமரின் திட்டத்தைக் கேலி செய்திருப்பதாகச் சொல்லி பாஜகவினர் எதிர்ப்பு எனப் பல சர்ச்சைகளைக் கடந்து வசூலில் மிரட்டியது மெர்சல். விஜய் படங்களிலேயே கோடி வசூல் செய்த சாதனைப் படமாகச் சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது மெர்சல். 

2011-ம் ஆண்டிலிருந்து வெளியான விஜய் படங்கள் எல்லாமே பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இதற்குக் கதைக்களம்; பணப் பிரச்னை எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அனைத்தின் மையப் புள்ளியாக விஜய் மட்டுமே இருக்கிறார். அவரைச் சுற்றிசுற்றிப் பிண்ணப்படும் சதிகள்... அதை அவர் முறியடித்து சாதனையாக்கியது எப்படி என்பதைப் பற்றிச் சிறிய ரீவைண்ட்... 

நாளை பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.