நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 23 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-23

நெகட்டிவ் விமர்சனங்கள்... விஜய் கடந்துவந்த பாதை!

‘ஒரு மனிதன் உயரத்தை அடைந்துவிட்டால்; எல்லா பக்கங்களிலும் உபத்திரவம் தான்!’ என்று சொல்வதைப் போல, படத்துக்குப் படம் தனது உயரத்தைக் கூட்டிக்கொண்டே போகும் விஜய், பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களைத் தாண்டித்தான் இப்படியொரு அசுர வளர்ச்சியை அவர் அடைந்திருக்கிறார்.

அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி அவ்வப்போது ரசிகர்களிடம் தலைகாட்டிவிட்டு ஜகா வாங்கிவிடுகிறார். அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்ன கமல், நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்கிறார். ஆனால், விஜய்க்கு அந்த குழப்பமே இல்லை. எப்போது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினாரோ அன்றைக்கே அவர் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துவிட்டார்.

அரசியலில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் வைக்கிறார். இதற்காக, கடந்த சில வருடங்களாகவே தனது படங்களில் சமூகப் பிரச்னைகளையும் சமூகக் கருத்துகளையும் எடுத்துவைக்கிறார். முன்னணி நடிகர், அதுவும் பல கோடி ரசிகர்கள் பட்டாளம் கொண்டுள்ள ஒரு நடிகர், ஒரு கருத்தைக் கூறும்போது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  


துப்பாக்கி (2012) : இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு எந்த ஒரு பிரச்னையுமே இல்லை! ஆனால்; படம் வெளியானவுடனே, இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த பலரும் படத்தில் தங்களை இழிவுபடுத்தியிருப்பதாக போராட்டத்தில் இறங்கினார்கள். ஒட்டுமொத்த முஸ்லிம்களை தீவிரவாதிகள் என 'துப்பாக்கி' படத்தில் சித்தரித்திருப்பதாக தெரிவித்தர்கள். பிறகு, விஜய்- இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழு, முஸ்லிம் அமைப்புகள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையைச் சுமூகமாக முடித்தார்கள்.

தலைவா (2013): தலைவா சர்ச்சையைப் பற்றி நிறைய பார்த்துவிட்டோம். இந்த படத்துக்குப் பிறகே, ‘விஜய் அரசியல் என்ட்ரி’ பேச்சு குறையத் தொடங்கியது. 'தலைவா பட வெளியீட்டிற்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி’ என்று விஜய் கையை கட்டிக்கொண்டு பேசிய வீடியோ தொகுப்பை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்தனர். படமும் சுமாராக ஓடியது.


கத்தி (2014): இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், ராஜபக்சேவின் நண்பர் என்று பல்வேறு அமைப்புகள் 'கத்தி' படத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கின. சென்னை சத்யம் திரையரங்கம் உள்ளிட்ட பல இடங்களில் கற்கள் வீசப்பட்டதால் பெரும் சர்ச்சை உருவானது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய நிலைப்பாட்டை அறிக்கையாக வெளியிடவே பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பின்னர், படம் வெளியாகி ஹிட் ஆனது. இதன்பிறகு, லைக்கா நிறுவனம் பல படங்களை தயாரித்துவிட்டது. ரஜினியை வைத்து 2.0 கூட தயாரித்து வருகிறது. ஆனால், போராடத்தான் ஆட்கள் இல்லை.


புலி (2015): விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். படம் வெளியாகும் நாளுக்கு முன்னதாக இந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மேலும், பைனான்சியர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காததால், திட்டமிட்டபடி படம் வெளியாகாமல்; ரிலீஸ் அன்று காலை ஷோ ‘கட்’ ஆகி; மதியமே வெளியானது. படம் படுதோல்வியை சந்தித்தது.


தெறி (2016): விநியோகஸ்தர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், தமிழகத்தின் மிகப்பெரிய விநியோக ஏரியாவான செங்கல்பட்டில் இந்தப் படம் வெளியாகவில்லை. ஆனாலும், படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மெர்சல் (2017): இந்தப் படம் ரிலீசுக்குத் தயாராகி வந்த நேரத்தில் மெர்சல் என்கிற டைட்டிலை பயன்படுத்த தடை கோரப்பட்டது. பிறகு, தணிக்கை செய்யப்பட்டதும்  வெளியீட்டு தேதியை அறிவித்தவுடன், விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்தால் சர்ச்சை எழுந்தது. ஒருவழியாக டைட்டில் பிரச்னை, விலங்குகள் நல வாரியம் மற்றும் தணிக்கைக் குழுவின் சிக்கல்களை கடந்து படம் வெளியானது.


ரிலீஸ் ஆன பிறகு யாருமே எதிர்பார்க்காத புதிய சிக்கல் முளைத்தது. ஜிஎஸ்டி வரியை கிண்டல் செய்யும் வசனங்கள், மருத்துவர்களை தவறாக சித்தரித்திருப்பது போன்ற சர்ச்சைகள் எழுந்தது. இதனால், படம் தோல்வியடையுமோ என தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் பதறினார்கள். ஆனால், சாபமே வரமாக மாறியதைப் போல; அந்த சர்ச்சைகளே விலையில்லா விளம்பரமாக மாறி படத்துக்கு வசூலை வாரி வழங்கியது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இதற்கு முன் இருந்த அத்தனை சாதனைகளையும் முறியடித்தது ‘மெர்சல்’..!

எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், மேடையில் பேசினாலும் சைலன்ட் மோடிலேயே இருப்பார் விஜய். அதை வைத்தே, பலரும் விஜய் ரொம்ப அமைதியான ஆள்போல என்கிற அளவுக்கு நினைத்திருப்பார்கள். ஆனால், விஜய்யின் ஒரிஜினல் கேரக்டரைப் பார்க்க வேண்டும் என்றால், அவர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போக வேண்டும்..! அவர் சம்மந்தப்பட்ட காட்சி முடிந்தாலும், கேரவனுக்கு செல்லாமல் மற்ற நடிகர்- நடிகைகளைக் கலாய்த்துக் கொண்டிருப்பாராம். ‘அதுதான் விஜய்யின் ஒரிஜினல் கேரக்டர்’ என்று சர்டிபிகேட் தருகிறார்கள் சக கலைஞர்கள்!


'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “நான் வெளியூர் போறப்பல்லாம்; நிறைய நண்பர்களை சந்திச்சுப் பேசுவேன். அப்ப அவங்க, 'உங்களைச் சுற்றி இருக்கிற நெகட்டிவான விஷயங்களை எப்படி ஹேண்டில் பண்றீங்க?'னுதான் கேட்பாங்க! அது, ரொம்ப சிம்பிள்...! நான் இக்னோர் பண்ணிடுவேன், கண்டுக்கவே மாட்டேன்’’ என்று பேசினார் விஜய். இவை விஜய்யின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அல்ல, அவர் கடந்து வந்த பாதை...!

நிறைவு பெற்றது!

கட்டுரை ஆக்கம்: பாலபாரதி 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.