தமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1

  பால கணேசன்   | Last Modified : 19 Jun, 2018 05:09 pm

failure-of-talented-artists-in-tamil-cinema

தமிழ் சினிமாவில் திடீரென சிலர் அறிமுகமாவார்கள். அதுவரை யாரும் தந்திராத சில அற்புத படைப்புகளையோ அலலது நடிப்பையோ தங்கள் திறமையால் தருவார்கள். பின்னர் இரண்டு, மூன்று படங்கள் அதுவே தொடரும். நாமும் இனி நல்ல வேட்டைதான் என்று நினைத்துக்கொண்டே இருக்கையில் காணாமல் போய்விடுவார்கள். அதோடு அவர்கள் சரித்திரமே முடிந்துவிடும். எப்பொழுதாவது தொலைக்காட்சியில் அவர்கள் பங்குபெற்ற படங்களை பார்க்கையில் ஒரு பெருமூச்சு மட்டுமே மிஞ்சும். அப்படிப்பட்ட சில கலைஞர்களை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

இசையமைப்பாளர் பரணி: எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில்  விஜயகாந்த் மற்றும் சூர்யா ந டித்த படமே 'பெரியண்ணா'. சூர்யா ஆரம்ப கட்டத்தில் தமிழ் சினிமாவில் ஓர் இடம் பிடிக்க தடுமாறிக்கொண்டிருந்த பொழுது வெளிவந்த படம் இது. அந்தப் படத்தில் இசையமைப்பாளராக பரணி அறிமுகமானார். 'நாளைய தீர்ப்பு' படம் வந்தபோதே அதில் ஒரு பாடல் எழுதியிருந்தார் இவர். பின்னர் 'நாளைய தீர்ப்பு' இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரே இசையமைப்பாளருக்கான வாய்ப்பையும் வழங்கினார். அந்நேரத்தில் கானா பாடல்களுக்கு என்று தனி மவுசு இருந்ததால் படம் முழுக்க கானா பாடல்கள் நிரம்பியிருந்தது. குறிப்பா க விஜய் இந்த படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருந்தார். அதில் "நான் தம்மடிக்கிற ஸ்டைலை பார்த்து.." பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. அதேபோல் "நிலவே நிலவே சரிகமபதநி பாடு" பாடலும் புகழ்பெற்றது. இப்படியாக தனது வெற்றிக்கணக்கை துவக்கிய பரணிக்கு உடனே பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. 

2001-ல் குணால், மோனல் நடித்த 'பார்வை ஒன்றே போதுமே' படம் வெளிவந்தது. படத்தின் கதையிலோ அல்லது திரைக்கதையிலோ பெரிய அளவில் எந்த புதுமையும் இல்லாவிட்டாலும் கூட படம் சுமாரான வெற்றியை பெற்றது. அதற்கு முழுமுதற்காரணம் படத்தின் பாடல்கள் மட்டுமே! படத்தின் எல்லா பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டாகின. "துளித்துளியாய்" "ஏ அசைந்தாடும் காற்றுக்கும்" "திரும்ப திரும்ப பார்த்து பார்த்து" ஆகிய டூயட் பாடல்களும், "காதல் பண்ணாதீங்க காதலே பண்ணாதீங்க", "நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்" போன்ற குத்துப்பாடல்களும் மிகப்பெரிய பிரபலமாயின. இதில் இடம்பெற்ற சோகப் பாடலான "திருடிய இதயத்தை திருப்பிக்கொடுத்துவிடு" பாடலும் முக்கியமானது. அந்நேரத்தில் தேவா தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு போட்டியாக பரணி பார்க்கப்பட்டார். 

2002-ல் இவர் இசையமைப்பில் ஆறு படங்கள் வெளிவந்தன. அதில் சார்லி சாப்ளின் படத்தில் இடம்பெற்ற "சும்மா சும்மா" பாடலும், "அவ கண்ண பார்த்தா " பாடலும், "முதலாம் சந்திப்பில் நாம் அறிமுகமானோமே" பாடலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் இடம்பெற்ற "கண்ணும் கண்ணும் பார்த்துக்கிட்டா டிங் டிங் டிங் டிங்.." பாடல் பிரபலமானது. இதன் பின்னரும் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் கூட பாடல்கள் எதுவும் பிரபலமாகவில்லை. அந்தப் படங்களும் கவனிக்கப்படவில்லை. இப்போது கேட்டாலும் இனிக்கின்ற பாடல்களை தந்த ஒருவர் இப்போது காணாமலே போய்விட்டார் என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல? பாடல்களுக்காகவே படம் ஒன்று ஓடுவது எல்லாம் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடக்கும் விஷயம். ஆனால் 'பார்வை ஒன்றே போதுமே' படமெல்லாம் இன்றளவும் பாடல்களுக்காக மட்டுமே நினைவுகூரப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

இயக்குனர் தரணி: 1999-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை அடிப்படையாக வைத்து 'எதிரும் புதிரும்' என்றொரு படம் வெளிவந்தது. அதை இயக்கியது வி.சி.ரமணி என்கிற இயற்பெயர் கொண்ட தரணி. மம்முட்டி, நெப்போலியன் நடித் த இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் கூட தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. படம் மூலம் இயக்குநர் தரணி பெற்ற ஒரே ஆறுதல் இந்த விருதுதான். காரணம் படம் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல் இருந்தது. 2000-ன் ஆரம்பத்தில் நடிகர் விக்ரமுக்கு நல்லகாலம் பிறந்திருந்தது. 'சேது'வின் வெற்றி அவருக்கு நிறைய படவாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

'சேது'வின் வெற்றிக்கு பின் வந்த 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' சரியாக ஓடாதபோது அடுத்து வெளிவந்த படமே 'தில்'. இயக்குநர் தரணியும், விக்ரமும் நண்பர்கள் என்பதால் இந்தப் படம் சாத்தியமானது. காவல்துறை அதிகாரி ஆக நினைக்கும் ஒருவனுக்கும், மோசமான காவல்துறை அதிகாரி ஒருவனுக்கும் இடை யில் நடக்கும் போராட்டமே கதைக்களம். மிகத் தெளிவான திரைக்கதையோடு எடுக்கப்பட்ட இந்தப் படம் இயக்குனர் தரணியின் வரவை அறிவித்தது. இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 

இதற்குப் பின் மீண்டும் தரணி - விக்ரம் இணை இணைந்த படமே 'தூள்'. முதலில் நடிகர் விஜய்க்குதான் இந்தப் படத்தின் கதை கூறப்பட்டது. ஆனால் சில பல காரணங்களால் விஜய் நடிக்க மறுத்துவிட, விக்ரமே இதில் நடித்தார். படம் வெளியாகி தறிகெட்டு ஓடியது. விக்ரமின் திரை வாழ்க்கையில் அதுவரை வந்த எல்லா படங்களையும் விட அதிக வசூல் செய்த படமாக 'தூள்' விளங்கியது. ஒர் அட்டகாசமான மசாலா பட இயக்குனராக தரணி உயர்ந்தார்.

அதன் பின்னர் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற, மகேஷ் பாபு நடித்த 'ஒக்கடு' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார் தரணி. தூளை தவறவிட்டு செய்த தவறை இதில் செய்யாமல் விஜய் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். என்னதான் தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் அப்படியே எடுக்காமல், தெலுங்கில் இருந்து முக்கியமான காட்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழில் தனியாக ஒரு திரைக்கதை அமைத்தார் தரணி. விஜய்க்கு இன்றளவும் நல்ல பெயரை வாங்கித்தந்த படங்களில் ஒன்றாகவும் 'கில்லி' விளங்குகிறது. 

'கில்லி' வெளிவந்த நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தரணியும் விஜயும் இனைந்து 'குருவி' படத்தை வெளியிட்டனர். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற 'சத்ரபதி' படத்திலிருந்து தழுவப்பட்ட இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. பின்னர் 2011-ல் இந்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சல்மான்கானின் 'தபாங்' படத்தை தமிழில் சிம்புவை வைத்து 'ஒஸ்தி' என்கிற பெயரில் ரீமேக் செய்தார் தரணி. படம் பப்படம் ஆனது. தரணியின் வழக்கமான ஆக்‌ஷன் மசாலா எந்தவித பாதிப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தாமல் போக தரணி 'ஒஸ்தி'க்கு பின்னர் காணாமலேயே போனார்.

ஆயினும் 'தூள்', 'கில்லி' இரண்டும் தமிழின் மிகச் சிறந்த மசாலா பட வரிசையில் என்றும் இருக்கும்.

நடிகர் பாபி சிம்ஹா: குறும்பட இயக்குநர்கள் வண்ணத்திரைக்கு வர ஆரம்பித்த காலகட்டத்தில் நிறைய குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கும் சிறு சிறு வேடங்கள் கிடைத்தன. 'காதலில் சொதப்புவது எப்படி', 'நேரம்' போன்ற படங்கள் அதில் முக்கியமானது. நலன் குமாரசாமி இயக்கிய 'சூது கவ்வும்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கிடைக்க, தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிக நல்ல முறையில் பாபி உபயோகித்துக்கொண்டார். 'சூது கவ்வும்' பெரிய வெற்றிபெற அடுத்தடுத்து இவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தன .

'பீட்சா' படம் மூலம் எதிர்பாராத வெற்றியை பெற்ற கார்த்திக் சுப்புராஜ் 'பீட்சா' படத்தில் சிறுவேடத்தில் நடித்த பாபியை தனது அடுத்த படமான 'ஜிகர்தண்டா'வில் யாரும் எதிர்பாராவண்ணம் வில்லனாக நடிக்கவைத்தார். என்னதான் படத்தில் சித்தார்த் நடித்திருந்தாலும் கூட படத்தின் மொத்த புகழையும் பாபியே அள்ளிச் சென்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே மனமுவந்து பாராட்டும் அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை வழங்கி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். 

ஒரே இரவில் மிகப்பெரிய ஸ்டாராக பாபி சிம்ஹா உயர்ந்தார். பட வாய்ப்புகள் மளமளவென்று குவிந்தன. 'ஆடாம ஜெயிச்சோமடா', 'கோ 2', 'பாம்புச்சட்டை' போன்ற படங்களில் கதாநாயகனாகவும், 'பெங்களூர் நாட்கள்', 'உறுமீன்', 'இறைவி' போன்ற படங்களில் இரண்டாவது நாயகனாகவும் நடித்தார். ஆனால் இதில் எந்தப் படமுமே ஓடவுமில்லை. அதில் இவர் நடிப்பும் சிலாகிக்கும்படி அமையவில்லை.

'திருட்டுப்பயலே 2'-ல் மட்டும் ஓரளவு சுமாராக இருந்தது. மிகப் பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஒருவர் ஒன்றுக்கும் உதவாத கதைகளை தேர்ந்தெடுத்ததன் மூலமும், தன் பலம் எதுவென்று தெரியாமல் வந்த எல்லா படங்களையும் ஏற்றுக்கொண்டதன் காரணமாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்.

இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' படத்திலும் கூட இவருக்கு தனிப்பட்ட முறையில் தோல்வியே கிடைத்தது. ஆக வெற்றி பெறுதல் என்பது இங்கே முக்கியமே அல்ல. அதை தக்கவைத்தல்தான் முக்கியம் என்பது பாபி சிம்ஹா மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. வருத்தமான விஷயம் இது. இனி மீண்டும் ஒரு ப்ரேக் கிடைக்குமா என்று காத்திருந்துதான் பார்க்கலாம்.

இயக்குநர் பாண்டிராஜ்: 'சுப்ரமணியபுரம்' படத்திற்காக விஜய் விருதுகளில் சசிக்குமார் விருது வாங்கியபொழுது, அவரிடம் உதவி இயக்குனராக இருந்த பாண்டிராஜ், சசிக்குமாரிடம், "அண்ணே.. இந்த மாதிரியெல்லாம் மேடை ஏறி நான் எப்போ விருது வாங்குவேன்?" என கேட்டாராம். அதற்கு சசிகுமார் "அடுத்த வருஷம் கண்டிப்பா நீயும் வாங்குவ.." என்றாராம். இது அதற்கு அடுத்த வருடமே அதே விஜய் விருது விழா மேடையில் பாண்டிராஜ் அந்த வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதை பெற்றார். அதுமட்டுமின்றி அந்த வருடத்தின் தமிழின் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றார்.

 பல சர்வதேச விருதுகளையும் படம் பெற்றது. இவ்வளவு விருதுகளை பெற முழுத்தகுதியும் 'பசங்க' படத்திற்கு இருந்தது. என்னதான் சிறுவர்கள் நடித்த படமாக இருந்தாலும் சொல்ல வந்த சேதி எல்லாருக்குமானதாக இருந்தது. பின்னர் அடுத்த வருடமே அருள்நிதி அறிமுகமான 'வம்சம்' படத்தை மிகுந்த பொருட்ச்செலவில் இயக்கினார். கதை, திரைக்கதை ரீதியாக படம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிப்பிடித்த படமாக பலராலும் விமர்சிக்கப்பட்டது. படமும் சுமாராக ஓடியது. 

இவரின் அடுத்த படமான 'மெரினா'வில் மீண்டும் சிறுவர்களை களமிறக்கினார். இதிலும் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய இந்தப் படமும் ஓரளவு நன்றாகவே ஓடியது. பின்னர் இவர் நாயகர்களாக அறிமுகப்படுத்திய விமல், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரையும் வைத்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தை இயக்கினார். படம் சுமாராக ஓடினாலும் திரைக்கதை அளவில் படுமொக்கையாக இருந்தது. குறிப்பாக காமெடி காட்சிகள் எதிலும் சிரிப்பு வரவில்லை.

இதன்பின்னர் மீண்டும் பசங்களை வைத்து 'பசங்க 2' எடுத்தார். படம் ஓரளவு ஓடியது. ஆனால் எத்தனை நாள்தான் இவர் இதையே வைத்து காலம் தள்ளுவார் என்கிற விமர்சனமும் அவர் மீது எழுந்தது. இதன் பின்னர் பாண்டிராஜ் விஷாலை வைத்து 'கதகளி' என்றொரு படம் எடுத்தார். சுசீந்திரன் இயக்கிய 'பாண்டிய நாடு' படம் விஷாலுக்கு நல்லபெயர் வாங்கித் தந்ததால் அதேபோன்ற கதையில் நடிக ஆசைப்பட்டு எடுத்த இந்த படம் விஷாலுக்கும் பிரயோஜனமாக இல்லை. பாண்டிராஜுக்கும் ஆக்‌ஷன் படங்கள் கைகொடுக்காது என்பதையும் புரியவைத்தது.

பட்ட இடத்திலேயே படும் என்பதைப்போல சிம்பு - நயன்தாரா ஜோடியை வைத்து இவர் இயக்கிய 'இது நம்ம ஆளு' படம் பலப்பல பஞ்சாயத்துகளுக்கு ஆளாக, வெளிவந்த பின்னர் வேகமாக ஓடிப்போய் பெட்டிக்குள் படுத்துக்கொண்டது. இப்போது கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' எடுத்திருக்கிறார். அவரை இந்தப் படமாவது காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

நடிகை சோனியா அகர்வால்: 'காதல் கொண்டேன்' படமே ஓர் எதிர்பாராத ஆச்சரியம்தான். 'துள்ளுவ தோ இளமை' என்னதான் வெற்றிப்படம் என்றாலும் கூட படத்தின் மீது எதிர்மறை விமர்சனங்கள்தான் அதிகம் இருந்தது. இதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய படமென்பதால் பெரிய ஆர்வமோ அல்லது எதிர்பார்ப்போ 'காதல் கொண்டேன்' படத்திற்கு எழவில்லை.  முதலில் பாடல்கள் ஹிட்டாக சிறிய நம்பிக்கை பிறந்தது. படம் வெளிவந்த பின்னர் முழுக்க முழுக்க நேர்மறை விமர்சனங்களால் படம் வெற்றிகரமாக ஓடியது. தனுஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கூடவே சோனியா அகர்வாலும் கவனிக்கப்பட்டார்.

தமிழில் இது சோனியாவிற்கு முதல் படம். ஏற்கெனவே தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படம் நடித்திருந்தார். மொழியே தெரியாமல் மிகச்சிறப்பாக தனது நடிப்பின் மூலம் திவ்யா என்கிற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார். குறிப்பாக இறுதிக்காட்சியில் ஒரு கையில் காதலனும், மறுகையில் நண்பனும் தொங்கிக்கொண்டிருக்க இவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் தவிப்பு அவரது நடிப்பிற்கு ஒரு நல்ல சான்று.

வழக்கமாக இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் செய்யும் வேறு மாநிலத்து நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சியை மட்டுமே நம்பி நடிப்பார்கள். ஆனால் சோனியா அதிலிருந்து மாறுபட்டு நன்றாக நடிக்கவும் செய்தார். இதில் செல்வராகவனின் பங்கும் இருந்தது என்பது அவரது அடுத்தப் படமான கோவிலில் தெளிவாக தெரிந்தது. என்னதான் படத்தில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் கூட தேமேயென்று வந்துபோனார். 

'மதுர' படத்தில் சிறிது நேரமே வந்துபோனாலும் ஈர்த்தார். பின்னர் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் நாயகியாக நடித்தார். கோவிலில் ஏற்பட்ட கெட்டபெயரை சுத்தமாக இந்த படத்தின் மூலம் அழித்தார். படத்தின் மொத்த கனத்தையும் தாங்கும் சக்தியாக அனிதா என்கிற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார்.

அனிதா நன்றாக வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் மூத்த பெண். ஏற்கெனவே திருமணம் நிச்சயமான அவளை கதிர் காதலிக்கிறான். இவர்களுக்கிடையே மலரும் காதல், அதுவரை பொறுப்பின்றி சுற்றிக்கொண்டிருந்த கதிர் வாழ்க்கையில் இவர் நுழைந்த பின் ஏற்படும் மாற்றம், இறுதியில் தன்னையே கதிருக்கு ஒப்படைத்துவிட்டு ஒரு விபத்தில் மரணமடையும் கதாபாத்திரத்தில் சோனியா நடித்திருந்தார். செல்வராகவன் சோனியாவின் முழு திறமையையும் வெளிக்கொணரும் பல காட்சிகளை படத்தில் அமைத்திருந்தார். குறிப்பாக ஒரு ஃபேக்டரியில் கழிவறையில் வைத்து கதிரும் அனிதாவும் பேசும் காட்சி அட்டகாசமான உதாரணம். 

இதன் பின்னர் சோனியா 'ஒரு கல்லூரியின் கதை', 'திருட்டுப்பயலே' ஆகிய படங்களில் நடித்தாலும் பெரியதாக ஈர்க்கவில்லை. 'திருட்டுப்பயலே' படத்தில் வரும் "தையத்தா தைய்யத்தா" பாடலில் வரும் ஒரு காட்சியில் மட்டும் ஈர்த்தார். மீண்டும் 'புதுப்பேட்டை'யில் செல்வராகவனுடன் இணைந்தார். தனுஷ் கட்டாய திருமணம் செய்துவிடுவதால், தன் காதலனை கரம்பிடிக்க முடியாமல் போன கோபத்தை ஒவ்வொருமுறையும் தனுஷ் மீது காண்பிக்கும் எல்லா காட்சிகளும் கைத்தட்டல் பெற்றது. ஒரு காட்சியில் தனுஷ் தன்  குழந்தைக்காக கெஞ்ச, ஓர் அதிகார தோரணையில் சோனியா நடிக்கும் காட்சி அற்புதம்.

இதன்பின்னர் குறிப்பிடும்படியாக சோனியா எந்தவொரு படத்திலும் நடிக்கவேயில்லை . அந்தப் படங்களும் பெரிய வெற்றி எதுவும் பெறவுமில்லை. செல்வராகவனோடு இவர் இணைந்த மூன்று படங்களுமே தமிழ் சினிமாவில் முக்கியமான படங்கள். அதில் தன் கதாபாத்திரம் உணர்ந்து பிரமாதமாக நடித்த சோனியா அகர்வால் மற்ற படங்களில் கோட்டைவிட்டது எதனால் என்பது புரியவே இல்லை. இது மற்ற படங்களின் இயக்குந ர்களின் தவறா இல்லை செல்வராகவன் உடனான தனிப்பட்ட உறவின் காரணமாக இது நிகழ்ந்ததா என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். மொத்தத்தில் பார்க்க போனால் ஒரு நல்ல திறமையுள்ள நடிகை ஒருவர் வெறும் மூன்றே படங்கள் மட்டுமே குறிப்பிடும்படியாக நடித்திருக்கிறார் என்பது வேதனைதான்.

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.