விஜய் கிராஃப்: பல நிறைகளும், சில குறைகளும்!

  பால கணேசன்   | Last Modified : 21 Jun, 2018 07:43 pm

actor-vijay-s-plus-and-minus-vijaybirthdayspecial

தமிழ் சினிமாவில் மக்கள் அபிமானம் பெறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. மதுரையில் நீங்கள் எங்கு திரும்பினாலும் ஒரு ரசிகர் மன்றம் இருக்கும். அது பாகவதர் ரசிகர் மன்றமாகவும் இருக்கலாம், நேற்று வந்த பாடாவதி நடிகர் ஒருவரின் ரசிகர் மன்றமாகவும் இருக்கலாம். பிரச்னை என்னவென்றால் எத்தனை நாளைக்கு அந்த ரசிகர் மன்ற பலகை வண்ணம் மங்காமல் பாதுகாக்கப்படுகிறது என்பதுதான்! 

அப்படி வைக்கப்பட்ட ஒரு பலகை தொடர்ந்து பராமரிக்கப்படுவதுதான் ஒரு நடிகரின் வெற்றியை, மக்கள் மனதில் அவர் இடத்தை பறைசாற்றும். அந்த விஷயத்தில் ஆரம்பத்தில் "இளைய தளபதி" என்றழைக்கப்பட்டு, இப்போது "தளபதி"யாக பரிணமிக்கும் விஜய் அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல; நல்ல திறமைசாலியும் கூட. 

விஜய் நடித்த 'நாளைய தீர்ப்பு' படம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் இயக்கப்பட்டது. அதற்கு முன்பே அவர் நாற்பது படங்களை இயக்கி மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான இயக்குனராக விளங்கினார். 'நாளைய தீர்ப்பு' வெளிவருகையில் "எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன்" என்று அடையாளம் காணப்பட்டவர் விஜய். இப்போது நிலைமை தலைகீழ். தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்பதுதான் இப்போதைய எதார்த்தம். ஆக, அப்பா சினிமாவில் இருந்ததால் எளிதாக நாயகனாக பட வாய்ப்பு கிடைத்து மேலே வந்தவர் விஜய் என்கிற வாதம் அவர் தொடர்ந்து நிலைத்து நின்றதன் மூலம் பொய்யாகி இருக்கிறது. காரணம் இங்கே அறிமுகமான எல்லா வாரிசு நடிகர்களும் நிலைத்து நின்றுவிடவில்லை. பலர் காணாமலே போயிருக்கின்றனர். 

விஜய் நிலைத்து நின்றதோடு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். தமிழின் சகாப்தங்களான எம்ஜிஆர், ரஜினியின் வரிசையில் ஒரு மாஸ் ஹீரோவாக உருவெடுப்பது என்பது எளிதான காரியமல்ல. அதற்கு அபரிதமான உழைப்பும், தோல்வி அடைகையில் அசாத்திய பொறுமையும் வேண்டும். இந்த குணங்கள் விஜயிடம் நிரம்பி உள்ளது.

விஜயின் ஆரம்பகால காதல் படங்கள் கதாநாயகிகளின் கவர்ச்சியினால் ஓடியது என்கிற வாதம் இங்கே உண்டு. அதில் உண்மையும் இருக்கலாம். ஆயினும் அந்தப் படங்களிலும் தன் பாத்திரத்திற்கான பங்களிப்பை சிறப்பான முறையில் கொடுத்ததை யாராலும் மறுக்க இயலாது. 'பூவே உனக்காக' படத்திற்கு பின்பு விஜய்க்கு ஒரு பொறுப்பு வந்து சேர்ந்தது. ஏனெனில் 'பூவே உனக்காக'விற்கு முன்புவரை இருந்த விஜய் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தார். 'பூவே உனக்காக' மூலம் கிடைத்த பெண்களின் ஆதரவும், குடும்பங்களின் ஆதரவும் விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் தொடர வேண்டி கதைகளை கவனமாக தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். அதன்பின்னர் விஜய்க்கு ஏறுமுகம்தான். 

'லவ் டுடே' படத்தில் ஆரம்பித்த வெற்றி 'நேருக்கு நேர்', 'காதலுக்கு மரியாதை', 'நினைத்தேன் வந்தாய்', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'குஷி', 'ப்ரியமானவளே', 'ப்ரெண்ட்ஸ்' என தொடர்ந்தது. இந்தப் படங்களின் வெற்றி விஜயை தமிழ் குடும்பங்களில் ஒருவராக நிலைநிறுத்தியது. 

'திருமலை' படத்திற்கு முன்பே விஜய் 'பகவதி' போன்ற ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தாலும் கூட 'திருமலை' படமே விஜயின் மாஸ் ஹீரோ பயணத்திற்கு அடித்தளமாக விளங்கியது. தொடர்ந்து வந்த 'கில்லி' விஜயின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக மாறியது. 'மதுர', 'திருப்பாச்சி', 'சிவகாசி', 'போக்கிரி', 'துப்பாக்கி', 'கத்தி', 'தெறி' போன்ற படங்களின் மிகப்பெரிய வெற்றி விஜயை வேறு தளத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. 

இந்த நேரத்தில் விஜய்யின் ஆக்‌ஷன் படங்களை பற்றி சற்று நாம் விரிவாக அணுகவேண்டும். ரஜினி இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒரு படம் என்று குறைத்துக்கொண்ட காலகட்டத்தில்தான் விஜய்யின் ஆக்‌ஷன் படங்கள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது. எப்படி ரஜினி படங்களில் நகைச்சுவை காட்சிகளில் ரஜினியின் பங்களிப்பும் இருக்குமோ அதேபோல விஜயும் நகைச்சுவை காட்சிகளில் நகைச்சுவை நடிகருக்கு இணையாக நடிக்க ஆரம்பித்தார். 'திருமலை'யில் கூட விவேக் இருந்தார். 'கில்லி' படத்தில் விஜயே நகைச்சுவை நடிகராகவும் பங்களித்தார். 'திருப்பாச்சி'யிலும் இது தொடர்ந்தது. 'சச்சின்' படத்தில் வடிவேலுக்கு இணையாக விஜய்யும் நகைச்சுவையில் கலக்கினார். 'போக்கிரி' படத்தில் மிக சீரியசான கதாபாத்திரமாக இருந்தாலும் கூட வடிவேலுவுடன் இவருக்கு நகைச்சுவை காட்சி இருந்தது. 

அதேபோல் சண்டைக்காட்சிகளிலும், பன்ச் வசனம் பேசும் காட்சிகளிலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒருவித உடல்மொழியை கையாண்டு காட்சிகளை சுவாரஸ்யமாக்கினார். இவரின் நடனம் பற்றி நான் சொல்வதற்கு புதிதாக எதுவும் இல்லை. இவரின் மிகப்பெரிய பலம் அது. இப்படி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களையும் தன்னகத்தே வளர்த்து எடுத்தார். மிகக் குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் ரஜினியைப்போல உடல் எடை அதிகரிக்காத வண்ணம் ஒரேமாதிரியாக பேணிக்காத்தார். இது இன்றைய இளம் நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

மேற்கண்ட பத்திகளில் விஜயின் வளர்ச்சியையும் அதற்கு அவர் கொடுத்த உழைப்பையும் கண்டோம். ஆனால் அவரிடமும் சில குறைகள் இல்லாமல் இல்லை. 'திருமலை' படத்திற்கு பின்னர் ஆக்‌ஷன்தான் எனது பாதை என்று முடிவெடுத்தது தவறில்லை. ஆனால் 'போக்கிரி'க்கு பின்னால் வெளிவந்த 'குருவி', 'வில்லு', 'வேட்டைக்காரன்', 'சுறா' போன்ற படங்கள் கதையும் பலமில்லாமல், திரைக்கதையிலும் சொதப்பல் பல இருந்த படங்கள். தன்னை முன்னிலைப்படுத்தும் திரைக்கதை இருந்தால் மட்டும் போதும் என்று முடிவு செய்து எடுக்கப்படும் இந்த மாதிரி படங்களை ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர் எளிதில் தவிர்க்கலாம். ஆனால் அதையும் மீறி விஜய் இதை செய்தது இன்றளவும் சமூக வலைத்தளங்களில் அவர்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பெருங்காரணமாக அமைந்திருக்கிறது.

முன்னர் காதல் படங்கள் விஜய் செய்துகொண்டிருந்தபொழுது ஒரு குறும்புத்தனமான விஜய் இருந்தார். அவரை சுத்தமாக காணாமலேயே ஆக்கிவிட்டார்கள். இடையில் கூட 'சச்சின்' போன்று ஒரு படம் செய்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 'சந்திரமுகி' அலையில் அந்தப் படம் அடித்து செல்லப்பட்டதால் அதன்பின் அந்த விஜய் காணக் கிடைக்கவேயில்லை. அவர் இப்போது நடிக்கும் ஆக்‌ஷன் படங்களில் எப்போதேனும் அந்த விஜய் தென்படுவார். அவ்வளவுதான். இது அவரின் காதல் பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம் அளிக்கும் விஷயம். 

தனது தனிப்பட்ட வாழ்விலும் முடிந்தளவு ரசிகர்களுடன் நெருக்கமாக விஜய் இருப்பது பாராட்டுக்குரியதுதான். ஆனால் இதன்பின்னால் அரசியல் பயணத்திற்கான அடித்தளம் இருக்கிறது போன்ற தோற்றத்தை விஜய் ஏற்படுத்தி இருப்பது அவருக்கு மேலும் இன்னல்களையே வழங்கும். ஏற்கெனவே அவரது சில படங்கள் இதன் காரணமாக பல பிரச்னைகளை சந்தித்துள்ளன. சமூகத்தின் அன்றாட பிரச்னைகளில் படம் மூலமாக மட்டும் கருத்துக்களை சொல்லாமல், நிஜத்திலும் தன் கருத்தை அவ்வப்போது வெளிப்படுத்தினால் இவரது அரசியல் பயணமும் கூட இனிதாக அமையும். இல்லையெனில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் இன்னொரு நடிகர் என்பதோடு இது முடிந்துவிடும்.

ஒரு நடிகராக விஜய் தனக்கென தமிழ் சினிமாவில் நிரந்தரமாக ஒரு இடத்தை பெற்றிருக்கிறார். எல்லாருக்கும் கிடைக்கும் விஷயமில்லை இது. அதை தக்கவைக்கவும் செய்திருக்கிறார். இந்த பிறந்தநாளில் அவரது வாழ்வெங்கும் வெற்றி வழிந்தோட மனமார வாழ்த்துவோம்.

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close