கோடம்பாக்கம் பாராட்டாத விஜய்யின் சூப்பர் படங்கள்!

  shriram   | Last Modified : 22 Jun, 2018 06:44 pm

underrated-movies-of-vijay

தமிழகம் மட்டுமில்லாமல், இந்திய அளவில் வசூல் சாதனை படைத்து தனக்கென ஒரு ரசிகர் படையையே வைத்துள்ளார் நடிகர் விஜய். இயல்பான நடிப்பு, குறும்பான சேட்டைகள், டான்ஸ், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என பல கட்டங்களை டிக் செய்பவர் விஜய். பல வெள்ளிவிழா படங்களை விஜய் கொடுத்தாலும், எல்லா நடிகர்களையும் போல, சில படங்கள் வசூலிலும், விமர்சனங்களிலும் சொதப்பியுள்ளன. 

ஆனால், நல்ல கதையம்சம் கொண்டு, ஆடியன்ஸுக்கு பிடித்திருந்தும், சில விஜய் படங்கள் வசூலில் சரியாக போகாமல் போனதுண்டு. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, கோடம்பாக்கத்தில் வரவேற்பை பெறாத சில நல்ல விஜய் படங்களை பற்றி பார்க்கலாம்...

5. வசீகரா

விஜய், சினேகா, நாசர், வடிவேலு, மணிவண்ணன் ஆகியோர் நடித்து வெளியான படம் வசீகரா. தொடர்ந்து ஆக்ஷன் படங்களை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரம், விஜய் ஒரு ரொமான்டிக் கதையை தேர்ந்தெடுத்து நடித்தார். செல்வ பாரதி இயக்கத்தில், இந்த படம் முழுக்க, விஜய் மற்றும் வடிவேலுவின் நடிப்பும், காமெடியும் செமயாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.

இன்று வரை தொலைக்காட்சியில் இந்த படத்தில் உள்ள பல காட்சிகளை நாம் அடிக்கடி பார்த்து சிரிப்பதுண்டு. ஆனாலும், படம் வெளியான போது, சரியான வரவேற்பை பெறவில்லை. ஆக்ஷன் கதையை எதிர்பார்த்து சென்ற ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் விஜய் - வடிவேலு கூட்டணியின் காமெடிக்காக இன்றும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்படுகிறது. 

4. மின்சார கண்ணா

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில்,  விஜய், மோனிகா, குஷ்பு, ரம்பா, மணிவண்ணன் உட்பட பலர் நடித்த இந்த படமும், ஒரு ரொமான்டிக் படம் தான். படம் முழுக்க குறும்பு சேட்டைகள், படபடவென பேசும் ஸ்டைல் என விஜய்யை பக்காவாக பயன்படுத்தியிருப்பார் இயக்குநர். ஆனால், இந்த படமும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதற்கு முக்கிய காரணம், படம் வெளியான சமயத்தில் இதே கதையம்சம் கொண்ட பூவெல்லாம் கேட்டுப்பார், ஜோடி போன்ற படங்கள் வெளியாகி இருந்தன. அதனால், மின்சார கண்ணா சரியாக பேசப்படவில்லை. ஆனால் ஃபேமிலியாக எல்லோரும் பார்த்து ரசிக்கும் படியான நல்ல பொழுதுபோக்கு படம் இது. 

3. சச்சின்

என்னடா, "நல்லாதானே போச்சு? இந்த படம் ஏன் லிஸ்ட்ல வருது" என்கிறீர்களா? காரணம் இருக்கு. ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய பெரிய படங்களோடு வெளியானது விஜய், ஜெனிலியா நடித்த சச்சின். 2005ல், திருமலை, கில்லி, திருப்பாச்சி என ஆக்ஷன் பீக்கில் விஜய் இருந்த போது திடீரென ஒரு ரொமான்டிக் படம் என்று விட்டார்கள். மென்மையான ஒரு காதல் படம், எப்படி ரஜினி, கமலுடன் போட்டி போட போகிறது  என பலருக்கு கேள்வி.

கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் சொதப்பிவிட, சந்திரமுகி மெகா ஹிட்டானது. ஆனால், விஜய்யின் சச்சினுக்கு மவுசு குறையவில்லை. அலட்டல் இல்லாமல் நடிக்கும் விஜய், வித்தியாசமான ரொமான்ஸ் கதை, வடிவேலு காமெடி என ரசிகர்களுக்கு வித்தியாசமாக தீனி போட்டார் இயக்குநர் ஜான் மஹேந்திரன். படமும் நல்ல கல்லா கட்டியது. ஆனால், அந்த சமயம் தொலைக்காட்சியை ஆட்டிப்படைத்த சன் டிவிக்கு இந்த படத்தின் ரைட்ஸ் கிடைக்கவில்லை. ஜெயா டிவியிடம் சென்றது. அதனால் படத்தின் காட்சிகள், பாடல்கள், காமெடிகள் என எல்லாமே, பெரும்பாலான ஆடியன்ஸிடம் ரீச் ஆகவில்லை. இன்றைக்கு நகைச்சுவை தொலைக்காட்சிகளில் சச்சின் திரைப்பட காட்சிகள் ஒரு முறையாவது ஒளிபரப்பாகிவிடுகிறது. 

2. புதிய கீதை

விஜய், மீரா ஜாஸ்மின், அமீஷா பட்டேல் நடித்த படம் புதிய கீதை. சுறுசுறுப்பான, ஸ்மார்ட்டான, அதிபுத்திசாலியான ஒரு கதாபாத்திரத்தில் வந்திருப்பார் விஜய். விஜய்யின் மிகவும் பலமான கதாபாத்திரங்களுள் ஒன்று என சொல்லலாம். யதார்த்தமான, எல்லோருக்கும் பிடித்த பக்கத்து வீடு பையன் போல அருமையாக அந்த கேரக்டரை விஜய் சுமந்து சென்றிருப்பார். எல்லோரும் எதிர்பார்த்த க்ளைமேக்ஸும், கொஞ்சம் ஓவர் பில்ட் அப் கொடுத்ததும், படத்தின் மைனஸ். பேமிலி ஆடியன்ஸுக்கு படம் பிடித்திருந்தது. ஆனால், ரசிகர்களை கவராததால், படம் சரியாக போகவில்லை.

1. தமிழன்

"உலக அழகியை விஜய்யின் ஹீரோயின் ஆக்குவேன்", என விஜய் படத்தின் வெற்றி விழா மேடையிலேயே பேசி அமர்க்களப்படுத்தினார் தயாரிப்பாளர் ஜிவி. சொன்னது போலவே விஜய், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியானது தமிழன். நல்ல கதையம்சம், உணர்வுபூர்வமான சமூக கருத்துக்களை சொல்லும் படம் என்றாலும் கூட, தமிழன் பாக்ஸ் ஆபீசில் சரியாக போகவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு அடிப்படை சட்டத்தி ன் மு க்கியத்துவத்தை உணர்த்திய படம் தமிழன். அதேநேரம் நல்ல பொழுதுபோக்காக படமும் கூட. காமெடி, சென்டிமென்ட் என எல்லாவற்றிலும் விஜய் பெர்ஃபார்ம் செய்திருப்பார்.

ஆனால், ஒருசில இடங்களில், "கருத்துக்கள் கொஞ்சம் ஓவராக போகுதுப்பா" என படம் பார்ப்பவர்கள் சொல்லும் அளவுக்கு அமைந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், முதல்முறையாக திரையுலகிற்கு வந்த ப்ரியங்காவின் நடிப்பும் படத்தின் சுமாரான விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்தது. இன்று கூட, விஜய் ரசிகர் இல்லாத பலரும், "இந்த படம் எப்படி ஓடாம போச்சு?" என கேட்கும் அளவுக்கு ஒரு குழப்பமான சரித்திரம் கொண்டது தமிழன்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.