விஜய்யின் வெற்றிப் பாதை….!

  பால பாரதி   | Last Modified : 22 Jun, 2018 02:31 pm

vijay-success-story

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் துருவ நட்சத்திரமாக ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ’இளைய தளபதி’ விஜய், கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கலாமா?

சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்கிற ஆவேசமுள்ள இளைஞனாக விஜய் ’நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகம். புதுமுகம் என்கிற பெயரில் மகனை ஹீரோ ஆக்குவதற்காக வேறொரு தயாரிப்பாளரின் முதுகில் ஏறி சவாரி செய்யாமல், தன் சொந்தப் பணத்தில்; இயக்கத்தில் மகனை அறிமுகம் செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
சினிமா உலகத்தைப் பொறுத்தவரை முதல் பட வெற்றி என்பது அரிச்சுவடி மாதிரி, வருங்காலத்துக்கு மிகவும் அவசியமானது. ’நாளைய தீர்ப்பு’ அப்படியொன்றும் பிரமாதமான வெற்றிப் படம் இல்லை! தரத்திலும், நிறத்திலும் கூட சிலாகித்து சொல்ல முடியாத; சாதாரண கமர்ஷியல் ஆக்‌ஷன் படம் தான்! இதன் மூலம் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆர்வமுள்ள ஒரு இளைஞர் இருக்கிறார் என்கிற விசிட்டிங் கார்டு மட்டுமே கிடைத்தது. விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு வேலை வாங்க முடியுமா? 

’நாளைய தீர்ப்பு’ படத்தை தொடர்ந்து ’செந்தூரப் பாண்டி’ வந்தபோது, ’எஸ்.ஏ.சந்திர சேகர், சினிமாவில் சம்பாதித்த பணத்தை அழிப்பதற்காகவே மகன் வந்திருக்கிறான்! மகன் என்பதற்காக அவரும் நடிக்க வைக்கிறார், அப்பா இயக்கத்தில் குப்பை கொட்டவே லாயக்கு!’ என கோலிவுட் வட்டாரமே கொக்கரித்தது!

விஜய்யை ஹீரோவாக்க வேண்டும் என்கிற ஆசை இல்லாவிட்டாலும், மகனின் விருப்பத்தை; அவன் நேசிக்கிற தொழிலில் பாதை அமைத்துத் தருவது தான் ஒரு தகப்பனின் கடமை! அந்தக் கடமையை தான் அப்போது செய்து வந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்! மகனுக்கு ஒரு வெற்றிப் படம் கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர், ’ரசிகன்’ படத்தைத் தொடங்கினார்! அவரது நம்பிக்கையில் ஓரளவு வெற்றியும் பெற்றார். ’ரசிகன்’ சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும், முதலுக்கு மோசம் செய்யாமல் சுமாரான வெற்றியைப் பெற்றது! அப்போதும் ஏச்சும் பேச்சும் ஓயவில்லை! ’அப்பனும் மகனும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள்’ என தூற்ற ஆரம்பித்தார்கள்!

சினிமாவில் நிற்க முதல் வெற்றி அவசியம்தான்! ஆனால், நிலைக்க வேண்டு மானால் அதன்பிறகு நடிக்கும் படங்கள், ஏற்கும் வேடங்கள், இயக்கும் இயக்குநர்கள், தேர்ந்தெடுக்கும் கதைகள், வாய்ப்புத் தரும் தயாரிப்பாளர்கள்… இது போன்ற காரணிகளை ஆராய்ந்து அதற்கேற்ப தன்னை கட்டமைத்துக் கொள்வதும் அவசியம் என்பதை தந்தையும் மகனும் நன்கு அறிந்தே வைத்திருந்தனர். 
’நாளைய தீர்ப்பு’வில் தொடங்கி, தொடர்ந்து ’செந்தூரப் பாண்டி’, ’ரசிகன்’, ’தேவா’, ’விஷ்ணு’, ’மாண்புமிகு மாண்வன்’ வரை விஜய்யை, பொறுபில்லாமல் ஜாலியாய் ஊர் சுற்றும் பெண்கள் பின்னால் அலையும் இளைஞனாய், நியாத்துக்கு குரல் கொடுத்து சண்டையிடும் ஆவேசக்காரனாய் ஒரு ’கெள பாய்’ அளவுக்குத்தான் எஸ்.ஏ.சந்திர சேகரால் உருவாக்க முடிந்தது! இது விஜய்க்குள் இருந்த திறமையின் ஒரு பகுதி தான்! இதை வைத்து, விஜய்க்கு தெரிந்தது இவ்வளவு தானா? என்கிற மிக முக்கியமான கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது?

அதற்கு பதிலாக வந்தது ’பூவே உனக்காக’ படம்! கண்ணியமான கதைகளையே எடுத்து அதில் வெற்றிகளைக் குவித்து வந்த இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில், பல சூப்பர் ஹிட் படங்களை சினிமாவுக்கு வழங்கிய சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ’பூவே உனக்காக’ விஜய்க்கு முதல் வெள்ளி விழாப் படமாக அமைந்தது! இதில் விஜய்யின் ஆர்பாட்டமில்லாத அடக்கமான நடிப்புத் திறனைக் கண்டு எல்லோரும் வியந்தனர்! இதையடுத்து வந்த ’லவ் டுடே’ படமும் விஜய்க்குள் ஹிட் படமாக அமைந்தது. இந்தப் படங்களின் வெற்றி விஜய்க்கு, விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்கிற உந்துதலைக் கொடுத்தது!

பெரிய இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களோடு நடித்து தன்னை பட்டை தீட்டிக் கொள்ள வேண்டும் என விரும்பிய விஜய், இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் ’நேருக்கு நேர்’ படத்திலும், நடமாடும் நடிப்புப் பல்கலைக் கழகமாக திகழ்ந்த நடிகர் திலகத்தோடு ’ஒன்ஸ்மோர்’ படத்திலும் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார்! 

’ஹீரோ என்பவன் நல்லவனாக மட்டுமே இருபான், ரேமாண்ட்ஸ் மாடல் போலவோ, அல்லது ஐடி கம்பெனி ஆள் போலவோ தோன்றுவான்’’ என்கிற பிம்பத்தை அடித்து நொறுக்க ’ப்ரியமுடன்’, ’நிலாவே வா’ படங்கள் விஜய்க்கு அமைந்தது. குடும்பக் கதைகளை கொடுத்து பெண்களின் பேராதரவைப் பெற்றிருந்த இயக்குநர் பாசிலின் ’காதலுக்கு மரியாதை’, சூப்பர் குட் தயாரிப்பில் வந்த ’துள்ளாத மனமும் துள்ளும்’ படங்கள் விஜய்யை, குடும்பத்து பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு வளையம் வைத்து அமரவைத்தது.

’குஷி’, ’ப்ரியமானவளே’, ’ஃப்ரெண்ட்ஸ்’, ’பகவதி’ போன்ற படங்களின் வெற்றி விஜய்யை வேற லெவலுக்கு கொண்டு போனது! 

மென்மையான காதல் படங்கள் ஹிட் அடித்ததால் தொடர்ந்து அந்த ரூட்டிலேயே பாதுகாப்பாக பயணம் செய்யாமல், தான் ஆசைபட்ட ஆரம்ப காலத்தில் செய்ததைப் போன்ற ஆக்‌ஷன் ஹீரோவாக தன்னை மாற்றும் முயற்சியில் இறங்க நினைத்த போது அதற்கேற்ற மாதிரி அதிரடி ஆக்‌ஷன் படமாக அமைந்தது ’திருமலை’. ’மென்மையான நாயகன்’ என்கிற பிம்பத்தை உடைத்து விஜய்யை, அதிரடி நாயகனாக மடை மாற்றியது ’திருமலை’ திரைப்படம் தான்! சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே பெயர் சொன்னால் வியாபாரம் ஆகும் என்கிற நிலை இருந்த காலகட்டத்தில், விஜய் படம் என்றாலே நல்ல விலை போகும் நிலை உருவானது. வினியோகஸ்தர்களின் விருப்ப நாயகனாக மாறினார் விஜய். இதனால், அதிரடி ரூட்டிலேயே பயணத்தை தொடர்ந்தார்! இப்போது வரை அது வெற்றிப் பயணமாகவே தொடர்கிறது! விஜய் வெற்றிகளைத் தொட்டு உயர்கிறார் மேலே…மேலே…!

தொழில் பக்தி, பிறரைப் பற்றி வம்பளக்காத அமைதி, ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை நேசிக்கும் குணம் போனறவை விஜய்யின் கூடுதல் பலமாக துணை நிற்கின்றன. இப்போது விஜய் படங்களை ரசிகர்கள் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், வினியோகஸ்தர்களும் போட்டி போட்டுக் கொண்டு விலை பேசுகிறார்கள்! அதற்கு காரணம், விஜய்யின் படங்கள் வசூலைக் குவிக்கிறது! விஜய் தன் வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்ய நியூஸ் டி.எம் டீம் வாழ்த்துகிறது!
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.