'லஸ்ட் ஸ்டோரிஸ்' பெண்களின் காமத்தை அணுகியது சரியா?- ஐந்து வித பார்வைகள்

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 06:37 pm

lust-stories-and-realities-of-indian-women-s-sexuality

அனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோகர் ஆகியோரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது, 'லஸ்ட் ஸ்டோரிஸ்' எனும் இந்தி படம். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம் 'ஆந்த்தாலஜி' வகை சினிமா. ஒரே கருப்பொருளையும் வெவ்வேறு கதைக்களத்தையும் உள்ளடக்கிய நான்கு அரைமணி நேர குறும்படங்கள். மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் பேச மறுக்கப்படும் 'இந்தியப் பெண்களின் காமம்' என்பதே இப்படத்தின் பேசுபொருள். எதிர்பார்த்ததுபோலவே பொதுத் தளத்தில் வெகுவாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் மேட்டராகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

'லஸ்ட் ஸ்டோரிஸ்' ஒரு நேர்மையான படைப்பா? எடுத்துக்கொண்ட கருப்பொருளை நியாயப்படுத்தியிருக்கிறதா? திரைக்கதை ஆக்கத்தின் நேர்த்தி என்ன? குறிப்பாக, பெண்களின் பாலியல் விருப்பத்தை எப்படி அணுகியிருக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கு, நம் தமிழ்ச் சூழலில் சமூக வலைதளங்களில் இயங்கும் எழுத்தாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள் சிலர் வெளியிட்ட பதிவுகள் தெளிவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அதன் தொகுப்பு:

தமிழில் எதிர்பார்ப்பது வீண்!

'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்பதை நாகரிகமாக 'பாலியல் கதைகள்' என்றும், மஞ்சள் புத்தகப் பாணியில் 'காமக் கதைகள்' என்றும் சொல்லலாம். தலா அரை மணி நேரம் ஓடக்கூடிய நான்கு குறும்படங்களின் தொகுப்பான இத்திரைப்படத்தில் பெண்களின் பாலியல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இதுதான் இவற்றின் சிறப்பு. இது மட்டுமே சிறப்பு.

இப்படங்களையும் முறையே முன்னணி திரைப் பிரபலங்களான அனுராக் காஷ்யப், சோயா அக்தார், திபாகர் பானர்ஜி, கரண் ஜோகர் ஆகியோர் இயக்கியிருக்கின்றனர். (கபாலி புகழ்) ராதிகா ஆப்தே, (இந்தியன், முதல்வன் புகழ் மனிஷா கொய்ராலா), கீரா அத்வானி, பூமி பட்னேகர், விக்கி கெளசல், நீல் பூபாலம், நேகா தூபியா, சஞ்சய் கபூர், (விஸ்வரூபம் புகழ்) ஜெய்தீப் அல்வட், (சாய்ராட் புகழ்) ஆகாஷ் தோசார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கதைக் களம், கதையை கையாண்ட விதம் என்று பார்த்தால் சாதாரண நான்கு குறுப்படங்கள் அவ்வளவுதான். என்ன வழக்கமான சினிமாத் தனத்தை தவிர்த்து கதைக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கும் பகுதியில் கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் ராதிகா ஆப்தே தன் பாலியல் வேட்கையைத் தீர்த்துக்கொள்வதில் சுதந்திரம் கொண்டவளாகவும் அதற்கான நியாயங்களோடும் இருக்கிறாள். அதே நேரத்தில் சுயநலமிக்கவளாகவும் பொறாமை கொண்டவளாகவும் பதபதைக்கிறாள். தன் வகுப்பு மாணவனுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் அவள், அவன் மற்ற பெண்களோடு பழகுவதை தடுக்க படும் பாடு சைக்கோத்தனம்.

சோயா அக்தார் இயக்கியிருக்கும் பகுதியில், பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வேலைக்காரப் பெண்ணோடு தன் பாலியல் தேவையைத் தீர்த்துக்கொள்ளும் இளைஞன், பெற்றோர்களின் முன்னிலையிலும், மணப்பெண்ணின் குடும்பம் வரும் போதும் அவளை எப்படி புறக்கணிக்கிறான், அதை எப்படி அவள் எதிர்கொள்கிறாள் என்பதை சித்திரிக்கிறது.

திபாகர் பானர்ஜி இயக்கியிருக்கும் பகுதியில், பணக்கார கணவன், இரண்டு குழந்தைகளோடு வாழும் ஒரு நடுத்தர வயதைக் கடந்துவிட்ட மனிஷா கொய்ராலா கணவனுடனான உறவில் அதிருப்தியுற்று கணவனின் நண்பனோடு ரகசிய உறவைப் பேணுகிறாள் மேலும் அதை சாதுர்யமாக கையாளவும் செய்கிறாள்.

கரண் ஜோகர் இயக்கியிருக்கும் பகுதியில் பெரும் எதிர்பார்ப்போடு திருமணம் செய்துகொள்ளும் இளம்பெண் படுக்கையில் திருப்தியில்லாமல் போகிறாள். மூன்று நான்கு அசைவிலேயே உச்சம் எட்டி கணவன் சரிந்துவிட ஏமாற்றத்துக்குள்ளாகும் அவள் பாலியல் திருப்திக்காக வைப்ரேட்டரை நாடுகிறாள். அது குடும்பத்துக்குத் தெரிந்துவிட விவாகரத்து வரைக்கும் போகிறது.

தமிழ் இலக்கியத்தில் இதுபோன்ற பெண்களின் பாலியல் உணர்வுகளை நுட்பமாக எழுதியவை என்று நிறைய இருக்கின்றன. ஆனால் சினிமாவில் மிகக் குறைவு. இன்று நீ நாளை நான், ரோஜாப் பூ ரவிக்கைக்காரி, சில பாலுமகேந்திரா படங்கள், சமீபத்தில் ராம் இயக்கிய தரமணி போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய படங்களே உள்ளன.

தரமற்ற கிளிஷே மசாலாக்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் 'லஸ்ட் ஸ்டோரி'யை எதிர்பார்ப்பது வீண். பாலியல் விஷயங்களை திரைப்படங்களில் கையாள வாழ்க்கையின் மீது தெளிந்த, பக்குவமான பார்வையும் நுட்பமானத் திரை மொழியும் தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் இ.அ.மு.கு. போன்ற குப்பைகளைத்தான் அடுல்ட் மூவி என இங்கே காட்ட முடியும்.

மேலும் இது போன்ற படங்களை மனசங்கடமின்ற பார்க்கவும், நேர்மையாக எதிர்கொள்ளவுமான பார்வையாளர்கள் வேண்டும். உள்ளே அழுகிப் போய் மேலே புனித பிம்பம் பூசிய வேஷதாரிகளுக்கு இதெல்லாம் சமூகத்துக்கு அவசியமற்ற ஆர்வக் கோளாராகவேத் தோன்றும்.

சமீபத்தில் என்னுடைய ஆப்பிள் சிறுகதையை நண்பர் வெங்கடேசன் குறும்படமாக்கியிருந்தார். அதைப் பார்த்த பிரபல இலக்கியவாதியும் பதிப்பாளருமான நண்பர் ஒருவர், "இது போன்ற கதைகளையெல்லாம் எதற்கு எடுக்கிறீர்கள். இதைப் பார்ப்பவர்கள் நம் பகுதியிலுள்ள பெண்களெல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று தவறாக எண்ண மாட்டார்களா?" என்று கேட்டிருக்கிறார்.

அவரது சமூக அக்கறையும் தன் பகுதி பெண்களின் கற்பின் மீது அவருக்கிருந்த நன்மதிப்பும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த நண்பர்தான் ராஜேந்திரசோழனின் எட்டு கதைகளை மறுபதிப்பு செய்து, மேடையில் சிலாகித்து சொன்னவர். அத்தொகுப்பில் உள்ள 'கோணல் வடிவங்கள்', 'புற்றில் உறையும் பாம்புகள்' உள்ளிட்ட கதைகள் வடதமிழ்நாட்டுப் பகுதியில் வாழும் பெண்களின் கதைகள்தான். அதை வாசிப்பவர்கள் இப்பகுதிப் பெண்களெல்லாம் இப்படித்தான் போலும் என்று தவறாக எண்ணமாட்டார்களா என்ன?

தமிழ் சூழலில் இது போன்ற கதைகளை எழுதுவதும், திரைப்படங்கள் எடுப்பதும் வெட்கங்கெட்ட செயல். அப்படியான வெட்கங்கெட்ட நாலுபேருதான் லஸ்ட் ஸ்டோரியை எடுத்திருக்கிறார்கள். வெட்கங்கெட்ட முன்னணி நடிகர்கள் பலர் அவற்றில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை திரையரங்குகளில் பார்த்துவிடலாம் என்று நீங்கள் ஆசைப்பட்டால் அது நடக்காது. நெட்பிலிக்ஸில்தான் பார்க்க முடியும். படத்தை நெட்பிலிக்ஸில் வெளியிட்ட இவர்கள் அதே நெட் ஃபிலிக்ஸில் வெளியிடப்பட்ட 'கேம் ஆஃப் த்ரோனை' பின்பற்றியாவது உடலுறவுக் காட்சிகளை எடுத்திருக்கலாம். சுத்த சைவத்தனம்.

- ஜீ.முருகன், எழுத்தாளர்

இதுவும் இன்னொன்றே!

'Lust Stories' அப்படி ஒன்றும் அபாரமாக இல்லை. பொதுவாக, காட்சிசார் படைப்புகளில் பெண்களின் காமம் பற்றிப் பேசும் போதெல்லாம் எப்பொழுதும் பாமரத்தனத்துடன்தான் கையாள்வார்கள். ஆண்களின் காமமே இதில் பேசப்படவில்லை. அப்படியே கொஞ்சநஞ்சம் தென்பட்டாலும் விடலை முற்றிய பையன்களாகத்தான் ஆண்கள் வருகிறார்கள். ஆமாம், ஆமாம். ஆண்களுக்கு காமம் என்று ஒன்று இருந்தால்தானே, உடல் என்ற ஒன்றின் மாண்பு இருந்தால் தானே.

காமம், விழைவு எல்லாம் திரையில் கையாள நேரடியான அழகியலும் விழுமியமும் தேவைப்படுகிறது. இயக்குநர் மணி கெளல் தன்னுடைய படங்களில் முதிர்ச்சியான அணுகுமுறையுடன் கையாண்டிருப்பார். கவித்துவம் மிளிரும், ரசிக்கத்தக்க வண்ணம் இருக்கும். கதையென்று அவசியமே இல்லை. Lust Stories - வியாபாரச் சரக்கு போலவே இருக்கின்றது. மெயின் ஸ்ட்ரீம் படங்களில் வரும் தட்டையான, அர்த்தமற்ற பல் இளிப்புகளை மட்டுமே காதல், காமம், பாலின்பம் என்று பொருள்கொண்டோமானால், இதுவும் அதில் ஒரு வகையே. யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க.

- குட்டி ரேவதி, கவிஞர்

ஒரு கமர்ஷியல் ஐட்டம்!

நான்கு இயக்குநர்கள். நான்கு கதைகள். நான்கு பிட்டுகளாக - இது அந்த பிட்டு இல்லை - இணைத்துக் கொடுத்திருக்கிறார்கள். நான்கு கதைகளிலும் பெண்களின் காமம்தான் பிரதானம். முதல் கதையில் ராதிகா ஆப்தே. கல்லூரி பேராசிரியை. திருமணம் ஆனவர். தனது மாணவனுடன் உறவைத் தொடங்குகிறார். அவனுக்கு இன்னொரு தோழி இருக்கிறாள். அவளைப் பார்த்து ராதிகா பொறாமைப்படுகிறார். இரண்டாவது கதையில் தான் வீட்டு வேலை செய்து கொடுக்கும் பேச்சிலர் பையனோடு வேலைக்கார பெண்மணிக்கு தொடர்பு இருக்கிறது. அவனுக்கு திருமணத்துக்காக பெண் பார்க்கும் படம் அதே வீட்டில் நடக்கிறது. அதை அந்த வேலைக்கார பெண் வருத்தத்தோடு கவனிக்கிறாள்.

மூன்றாவது கதையில் மனீஷா கொய்ராலா. இரண்டு பெண்களின் தாய். அவருக்கும் அவரது கணவனுக்கும் ஒத்துப் போவதில்லை. கணவனின் நண்பனோடு உறவு ஏற்படுகிறது. நான்காவது கதையில் கியாரா அத்வானிக்கு திருமணம் ஆகிறது. பள்ளி ஆசிரியை அவள். கணவனோடு அவளுக்குத் திருப்தி இல்லை. காமத்தை தீர்த்துக் கொள்ள சாதனமொன்றின் உதவியை நாடுகிறாள். 

என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டால், எந்தப் பெண்ணும் கணவனிடம் திருப்தியடைவதில்லை என்று சொல்ல விரும்புகிறார்கள் போலிருக்கிறது. நான்கு கதைகளிலும் திருமணத்துக்கு வெளியிலானவர்களுடன்தான் உறவு. திருமணமான கணவனுக்கும் மனைவிக்குமிடையில் லஸ்ட் இருக்காதா என்ன? அல்லது வெளியாளிடம் உருவாவதுதான் காமமா? முறையில்லாத உறவுகளில்தான் த்ரில் இருக்கிறது என்று சொல்லக் கூடும். 

காதலைவிடவும் காமம் அழகானது. ஆனால் நம்மவர்கள் அதன் அழகியலை விட்டுவிட்டு வெறுமனே உடல் வேட்கை என்று சொல்லிக்  கந்தரகோலம் ஆக்கிவிட்டார்கள். இப்பொழுதெல்லாம் காமம் என்பதே திருட்டு மாங்காய்தான் என்றாகிவிட்டது. இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்பதெல்லாம் பிறகுதான். இத்தகைய படங்கள் எதைச் சொல்ல வருகின்றன என்றுதான் நேரடியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நாம் காமத்தை வெளிப்படையாக விவாதிப்பதேயில்லை. அதுவும் பெண்களின் காமம் பற்றி? ம்ஹூம். மூச். அதனால்தான் இத்தகைய படங்களை காணாத நாய் கருவாட்டைக் கண்டது போல கொண்டாடுகிறார்கள். இதைத்தான் கரண் ஜோஹார் மாதிரியான ஆட்கள் சொல்ல வேண்டுமா என்ன? 

பொதுவாக இத்தகைய படங்களைப் பார்த்த பிறகு படத்துக்கான விமர்சனங்களையும் படிப்பதுண்டு. 'நமக்கு பிடிபடாத ஒன்றை அடுத்தவர்கள் பிடித்திருப்பார்கள்' என்ற நம்பிக்கைதான். ஒரு விமர்சனத்தில் 'ஒரு பெண் ஒரே சமயத்தில் எப்படி இரு வேறு ஆண்களுடன் உறவில் இருக்க முடியும்' என்பதற்கான தர்க்கத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். அடேங்கப்பா. தினத்தந்தியில் தினமும் இதைத்தான் எழுதுகிறார்கள். 'என்னுடன் பேசியதைவிட அவள் செல்போனில் பேசியதுதான் அதிகம்'- திருமணமான இருபத்து நான்கு நாட்களில் மனைவியை தலையை துண்டித்து கொன்ற பாளையங்கோட்டை காவலர். இன்றைய தினத்தந்தியை எடுத்துப் பாருங்கள். 'தனது காதலுனுடன் சேர்ந்து கணவனுக்கு சயனைடு விஷம் கொடுத்த பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை'. நேற்று படித்தேன். 

படத்தை பார்த்தபோது 'இந்த கருமத்தைத்தான் விடிய விடிய ஓட்டிட்டு இருந்தியா' என்கிற கணக்காக இதற்குத்தான் இவ்வளவு பில்ட்-அப் கொடுத்தார்களா என்று தோன்றியது. ஒரு கமர்ஷியல் ஐட்டம். அவ்வளவுதான். இப்படியெல்லாம் தலைப்பு வைத்து 'கியாரா அத்வானி ஹாட்' என்று விளம்பரம் போட்டால் படம் வசூல் காட்டிவிடும் என்று நம்புகிறார்கள். அதற்கு மெனக்கெட்டு அரை வயது ஆன்ட்டிகளும் அங்கிள்களும் - என்னை மாதிரியான என்று சொல்லிவிடலாம்; இல்லையென்றால் கூகுள் பிளஸ்சில் கலாய்ப்பார்கள் -  விமர்சனம் எழுதிக் கொண்டிருப்பார்கள். 

இவையெல்லாம் பார்வையாளனை மேம்போக்காக சொறிந்துவிடுகிற படங்கள். அதற்கு ஓர் அறிவுஜீவி பிம்பம் பொருத்திக் காட்டுகிறார்கள். அதற்கு மேல் ஒன்றுமில்லை. காமத்தைப் பற்றி அழகியலுடன் விவாதிக்க எவ்வளவோ தூரம் செல்ல வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

- வா.மணிகண்டன், எழுத்தாளர் 

ஏக்கங்கள், தாபங்களின் தொகுப்பு

'Lust stories' என்பதைவிட 'Angst stories' என பெயர் வைத்திருப்பின் அதுவே சாலப் பொருத்தம். நான்கு கதைகளிலும் காமம் என்பதே கிஞ்சித்தும் இல்லை. மாறாக, அதுகுறித்த தாபமும், தவிப்பின் தேடலும், ஏக்க விரக்தியுமே விஞ்சியிருக்கிறது.

அனுராக் காஷ்யபின் இளம் பேராசிரியை ராதிகா ஆப்தேவின் தனக்கான தேர்ந்தெடுத்த நியாயங்கள் கொண்ட ஆண் துணைத் தேடல் ஒரு வகை எனில், ஜோயா அக்தரின் வேலைக்காரப் பெண் பூமி, தம் முதலாளியின்பால் காதலுற்ற தகுதி மீறிய உரிமை தேடும் ஏக்கம் வேறொரு வகை. திபாகரின் மனிஷா கொய்ராலாவோ பூரணமில்லா வாழ்வையெண்ணி புலம்பி மருகும் கோடீஸ்வர சுயபச்சாதாபக்காரி எனில், கரண் ஜோஹரின் புதுமணப்பெண் கைரா அத்வானி எதிர்கொள்வதோ பொங்கும் முன்னரே ஓய்ந்துவிடும் கணவனின் துரித ஸ்கலிதத்தின் ஏமாற்றம். அவளுக்காய் நேஹா துப்பியா காட்டிய கை கொடுக்கும் வழி கிட்டும் இன்பம்.

இவற்றில் ஜோயா அக்தரின் பகுதியே மிகச்சிறப்பான ஆக்கம். நுண்ணிய காட்சிகள் வழியே பூமியின் இயலாமையின் வெதும்பல் நமக்குள் தேம்புவது காட்சிப்படுத்தலின் வெற்றி. அனுராக் காண்பிக்கும் ராதிகா மனக்குழப்ப பொறுமல். திபாக்கருடைய மனிஷா சலிப்பூட்டும் சுயநலம். கரண் ஜோஹர் கைராவின் கதை ரியலிட்டி கடந்த மிகையான பகடி. நிற்க... இவற்றில் பெண்ணியம் தேடுவது ஆயாசம். அதற்கான தேவையுமில்லை. மனங்கள், மனிதர்கள், ஏக்கங்கள், தாபங்கள் இவற்றின் தொகுப்பே Lust Stories. கதைகள் என்றால் அவை கருத்தும் தீர்வும் சொல்லவேண்டுமா என்ன?

- கோபிநாத், திரைப்பட ஆர்வலர்

இது பெண்களின் அக உலகம்!

இந்திய சினிமாவில் காமம் என்பது பேசாப்பொருள். அப்படியே பேசப்பட்டாலும் காமம் என்பது ஆணிய பார்வையில், ஒழுக்கம், கற்பு என பலவித கட்டமைக்கப்பட்ட அறங்களால் நிரப்பப்பட்டே வந்திருக்கிறது. இந்திய - தமிழ் சினிமா தனது பெரும்பாலான படங்களின் வாயிலாக கலாச்சார காவலர் வடிவத்தை பிடித்து வைத்துக்கொண்டாலும், மறக்காமல் பெண் கதாப்பாத்திரங்களின் கவர்ச்சியை வணிகத்துக்காக பயன்படுத்திக்கொண்டது முரணான விஷயம். இதனை உடைத்து பெண்ணியப் பார்வையில் காமம் என்பதை குறித்த படங்கள் ஹிந்தியில் அவ்வப்போது வந்து அதிர்வை ஏற்படுத்தத் தான் செய்கிறது. தமிழில் பாலச்சந்தர், ருத்ரய்யா போன்றவர்கள் 80-களில் செய்த முயற்சி அடுத்த கட்டத்துக்கு நகராமலேயே போய்விட்டது.

சில வருடங்களுக்கு முன் லீனா யாதவின் இயக்கத்தில் வெளிவந்த 'பார்ச்ட்' படம் கிராமப்புற பெண்களின் வாழ்வியலை பேசியது. இந்த 'லஸ்ட் ஸ்டோரிஸ்' நகர்புறத்தில் வெவ்வேறு நிலைகளில் வாழும் 4 பெண்களின் கதையை பேசுகிறது. இந்தப் படம் ஆந்த்தாலஜி வகையை சேர்ந்தது. ஒரே தீமைச் சேர்ந்த நான்கு குறும்படங்களின் தொகுப்பு (Wild Stories போல). ஹிந்தி திரைப்பட உலகின் மிக முக்கிய இந்த தலைமுறை இயக்குனர்கள் அனுராக், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் தலா ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரும் பெண்கள் தமது ஆசைகளை பூட்டி வைத்துக்கொள்வதில்லை. தாம் கற்பு குறித்த பொதுவான விதிகளை பின்பற்றாது குறித்தும் அலட்டிக்கொள்வதில்லை. தீதும் நன்றும் சேர்ந்த அவர்களின் ஊசலாட்டமும் இறுதியில் கிடைக்கும் தெளிவும் மிக அழகான சிறுகதைகளாக படமாக்கப்பட்டிருக்கிறது. கதை என்று பார்த்தால் பெருசா சொல்வதற்கில்லை. ஆனால் அதனை பிரசன்ட் செய்த விதம், அந்த தவிப்பை பார்வையாளர்களுக்குள் கடத்திய விதம் அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. சந்தேகமே இல்லாமல் ராதிகா ஆப்தே அசுர நடிப்பை காட்டியிருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் மிக மிக புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர்கள், படத்தை எடுத்த விதம் அனைத்தும் மிக சுவாரசியமாக இருக்கிறது.

சிலருக்கு இந்தப் படம் பிடிக்காமல் போகலாம். உண்மையில் இது பெண்களின் அக உலகம், சற்று வெளிப்படையாக பேசப்பட்டிருக்கிறது. படங்களை இயக்கியிருப்பது ஆண்கள் என்பதால் இது சமகால பெண்கள் பற்றி புரிந்துகொள்ள ஆண்களுக்காக எடுக்கப்பட்ட படம் எனலாம்.

- ஜானகிராமன், திரைப்பட ஆர்வலர்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.