'சுப்ரமணியபுரம்' வெளியாகி 10 ஆண்டுகள்: இது 'க்ளாஸிக்' சினிமா ஆனது ஏன்?

  பால கணேசன்   | Last Modified : 04 Jul, 2018 10:19 am
10-years-of-subramaniapuram-why-this-movie-is-classic-work-of-tamil-cinema

2008-ல் ஆனந்த விகடன் தீவிரமாக படித்துக்கொண்டிருந்த காலகட்டம். ஆனந்த விகடனில் திரைப்படங்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்து ஒரு படத்தை பார்ப்பதா வேண்டாமா என்று தீர்மானம் செய்துகொண்டிருந்தபொழுது சசிக்குமார் என்கிற புதியவர் ஒருவர் சொந்தமாக தயாரித்து, இயக்கிய 'சுப்ரமணியபுரம்' என்கிற படத்தை பற்றிய அறிமுகக் கட்டுரை வெளிவந்திருந்தது. நான்கு இளைஞர்கள் தாடியுடனும், ஒரே ஒரு பெண் இடையில் பாவாடை தாவணியிலும் தோன்றும் சில புகைப்படங்களும் கட்டுரையோடு இருந்தது. 

அந்த நேரத்தில் நான்கு இளைஞர்கள் கதை மிகவும் பிரபலம். இந்த அடிப்படையில் நிறைய படங்கள் வந்து, அதில் சில வெற்றியும் பெற்றன. இயக்குனரின் சொந்த தயாரிப்பு வேறு என்பதால் எனக்கு பெரிதாக எந்த நம்பிக்கையும் இல்லை. 1980-களில் நடக்கும் கதை என்று குறிப்பிட்டு இருந்ததும், தொலைக்காட்சிகளில் ஏற்கெனவே ஓரளவு தெரிந்த முகமாக இருந்த ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார் என்பதும்தான் சற்று ஈர்த்தது. 

படம் வெளியானது. நான் அப்போது சென்னையில் இருந்தேன். முதல்நாளே படம் பார்த்த நண்பன் ஒருவன் "உனக்கு கண்டிப்பா பிடிக்கும்டா.. வா.." என இழுத்துக்கொண்டு சென்றான். அவன் சாதாரணமாக ஒரு படத்தை இரண்டாம் முறை பார்ப்பவன் அல்ல. அதனால் நம்பிக்கை பிறந்து ரோகினி காம்ப்ளக்சில் படம் பார்க்கப் போனோம். பின்னர் நடந்தது வரலாறு.

சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியா என்பதும், எதை திரையில் உரையாடல்கள் மூலம் சொல்லவேண்டும், எதை சொல்லக் கூடாது என்பதும் அடிப்படை பாடங்கள். இந்த வித்தையை கற்றுக்கொண்ட இயக்குனர்களின் படங்கள் கருத்து ரீதியாக எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் நிராகரிக்கக் கூடியதாக கண்டிப்பாக இருக்காது. பெரிய இயக்குனர்கள் என்று இன்று புகழப்படும் அனைவருக்கும் இது பொருந்தும். ஆனால் அதை தன் முதல் படத்திலேயே 100% மிகச் சரியாக செய்தவர்கள் மிக மிக குறைவு. அப்படி அந்த மிகக் குறைவு பட்டியலில் எந்தவித சந்தேகமும் இல்லாமல் இடம்பெற்றார் இயக்குனர் சசிக்குமார். 

நட்பு கதவு வழியே தென்றலாக நுழைகையில், துரோகம் ஜன்னல் வழியே புயலாக நுழைந்து ஆட்டிப்படைக்கும் ஒரு கதையை சிறிது கூட சமரசமின்றி, மிகத் தெளிவான ஒரு திரைக்கதையின் மூலம் வெளிபடுத்தி, அதைவிட மிகச் சிறப்பான படமாக்கல் மூலம் மேலும் இன்னொரு தளத்திற்கு அதை உயர்த்திய படமே 'சுப்ரமணியபுரம்'. 

இந்தக் கதையை இன்றைய காலகட்டத்தில் நடப்பதாகவும் எடுத்திருக்கலாம். அதற்கான இடமும் கதையில் இருக்கிறது. ஆனாலும் 1980-களின் மதுரையின் அழகையும், 'சுப்ரமணியபுரம்' என்கிற பகுதியின் நிலவியலையும் அதி அற்புதமாக காட்சிப்படுத்தி, இந்தக் கதை அந்தக் காலகட்டத்தில் நடந்தது போன்று எடுத்ததுதான் நியாயமானது என்கிற அளவில் படம் இருந்தது.

தமிழ் சினிமாவின் மிக சிறப்பான காட்சிகளில் ஒன்றாக சந்தேகமே இல்லாமல் கனகு, பரமனையும் அழகரையும் லாட்ஜ் அறையில் வைத்து மூளைச்சலவை செய்யும் காட்சியை குறிப்பிடலாம். படத்தின் மொத்த வர்ணமும் மாறும் காட்சி அது. மிகக் குறைந்த ஒளியில், அமைதியான ஒரு சூழலில், மெதுமெதுவாக இருவரின் மனதிலும் விஷமேற்றும் காட்சி அது. 

முதல் கொலைக்கு இவர்கள் தயாராவது இப்படி என்றால், இரண்டாம் பகுதியில் அழகரை வெட்ட தெருத்தெருவாக ஒரு கும்பல் விரட்ட, அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரு வீட்டுக்குள் நுழைந்து விட்டு, அங்கே ஒரு பெண்ணிடம் கெஞ்சி உயிர்ப் பிச்சை வாங்கிய பின், பரமனை சந்தித்து, "மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா.." என்று அரற்றிவிட்டு, அடுத்த நொடியே, "அவங்க எல்லாத்தையும் கருவருக்கணும் பரமா.." என்று சொல்வது, தீயது எவ்வளவு சீக்கிரம் உள்ளுக்குள் மரமிட்டு, கிளைபரப்பி அமரும் என்பதற்கான சான்று.

மானுட இடத்தின் மிகப்பெரிய துரோகங்கள் பலவும் பெண்களை அடிப்படையாக வைத்தே செய்யப்பட்டு வந்துள்ளன. அழகர், துளசியை காதலிப்பது கனகுவுக்கு தெரியும். ஆனால் அதைப்பற்றி ஒரு வாய் கூட திறக்கமாட்டான். அதேநேரம் கனகுவை கொல்ல, அழகரும் பரமனும் வெறிகொண்டு வீட்டுக்குள் புகும் சமயத்தில் கனகு சரியாக துளசியின் அறைக்குள் போய் ஒளிந்துகொள்வான். பின்னர் அதே கனகு, அழகரை வெட்டிச் சாய்க்க, துளசியை மூளைச்சலவை செய்து, அழகரை தனியாக வரவைத்து மொத்த ஆத்திரத்தையும் தீர்ப்பான். துளசி செய்த இந்தத் துரோகம் நமக்குள் ஈட்டியை பாய்ச்ச முக்கிய காரணம், ஆரம்பத்தில் வரும் காதல் காட்சிகள்தான். 

இளையராஜாவின் பின்னணி இசையோடு அவள் நடந்துவர, அவன் அவளை கண்களால் பருக, அங்கேயும் இங்கேயும் காணுதல், ரகசிய சிரிப்புகள் பரிமாறிக்கொள்ளுதல் என நம் மனதை பறிகொடுக்கும் விதத்தில் காட்சியமைப்புகள் இருக்கும். கண்கள் இரண்டால் பாடல் பெற்ற மிகப்பெரிய வெற்றி, படத்தின் வெற்றியையும் பறைசாற்றும். 

அழகர், பரமன் என இரண்டு முக்கிய பாத்திரங்கள் இருந்தாலும் கூட நாம் இங்கே ஆழ்ந்து கவனிக்கவேண்டியது கஞ்சா கருப்பு நடித்த காசி கதாபாத்திரத்தைதான். நடக்கும் எல்லா சம்பவங்களிலும் காசி இருப்பான். அந்தக் காதலுக்கும், அந்த துரோகத்துக்கும் ஒரு மவுன சாட்சி அவன். கனகுவை லாட்ஜ் அறையில் சந்திக்க ஏற்பாடு செய்பவனும் அவன்தான், வாக்கு கொடுத்தது போல ஜாமீன் எடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று சிறைக்கு வந்து கூறுபவனும் அவன்தான். இறுதியில் பரமனை சாய்க்க கனகுவின் அண்ணனுக்கு கைகாட்டிவிட்டு நடந்தே அந்த ஆற்றங்கரையில் இருந்து கார் வரை நடக்கும் அந்த ஷாட் தரும் அதிர்ச்சியும், பயமும் என் மனதில் இருந்து அகல  நீண்ட நாள் ஆனது. அந்த வகையில் காசியின் கதாபாத்திர வடிவமைப்பு நான் பார்த்த பல சிறந்த கதாபாத்திர வடிவமைப்புகளில் ஒன்று.

பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது 'கேங்ஸ் ஆப் வாசேபூர்' படத்தின் டைட்டிலில் "எனது வேர்களை தேடிப்போக என்னை அழுத்திய படைப்புக்களை கொடுத்த அமீர், பாலா மற்றும் சசிகுமாருக்கு எனது நன்றிகள்" என்று சொல்லியிருந்தார். அந்தளவிற்கு இந்தப் படம் ஒரு காலக்கட்டத்தை படமாக்கிய விதத்திலும், அந்தக் கதையின் மூலம் சொல்ல வந்ததை சமரசமின்றி சொன்ன விதமும் இந்தப் படத்தை தமிழில் 'க்ளாஸிக்' படங்கள் பட்டியலில் எளிதாக சேர்க்கவைக்கிறது. ஆனால் இப்படி ஒரு க்ளாஸிக்கை தந்த இயக்குனர் இப்போது நடிகராக மாறி டார்ச்சர் செய்வதுதான் இடையில் ஞாபகம் வந்து சற்று வருத்தத்தை அளிக்கிறது. 

படம் வெளியாகி இன்றோடு பத்து வருடங்கள் ஆகிறது. கடந்த பத்து வருடங்களின் சிறந்த படங்கள் பட்டியலில் எந்தவித சந்தேகமும் இல்லாமல் இந்தப் படம் இடம்பிடிக்கும். பீரியட் படங்களே தமிழில் மிகவும் குறைவு. அந்த வகையில் உருப்படியான  படம் இது என்பது இன்னொரு விசேஷம். மீண்டும் ஒருமுறை சசிகுமார் மற்றும் டீமிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close