பாகுபலியின் முன்னோடி: 'நான் ஈ' வெளியாகி இன்றுடன் 6 வருடம்!

  Shalini Chandra Sekar   | Last Modified : 06 Jul, 2018 01:07 pm

6-years-of-naan-ee

கண்ணைக் கவரும் பெரிய பெரிய செட்டுகள் இல்லை, உச்ச நட்சத்திரம் யாரும் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வழக்கமான சினிமா பாணியில் இருந்து மாறுபட்டு பார்வையாளர்களுக்கு ஒரு புது வித அனுபவத்தைக் கொடுத்திருந்தப் படம். இன்னும் சொல்லப் போனால் சாதாரண 'ஈ' ஒரு படத்தின் ஹீரோவாக முடியுமா என நாம் நினைக்காத ஒன்றை நிகழ்த்திக் காட்டினார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆம் 'நான் ஈ' படத்தைத் தான் சொல்கிறோம். பாகுபலியில் கிராபிக்ஸ் கலக்கலை, ராஜமௌலி பயன்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்த படம் என்றும் இதை சொல்லலாம்.

நான்கு - ஐந்து படங்கள் நடித்தும் பெரிய அளவில் பெயர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நடிகர் நானிக்கும், பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, விண்ணைத் தாண்டி வருவாயா ஆகியப் படங்களில் நடித்திருந்த சமந்தாவுக்கும் 'நான் ஈ' படம் தான் அடையாள அட்டையாக மாறியது. அதன் பிறகு தான் இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இப்போது போல் 6 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் முன்னணி நட்சத்திரங்கள் இல்லை. 

சில படங்கள் வசூலை குறி வைத்தே தயாரிக்கப்படும், சில படங்களில் கதை தான் அதன் வசூலை நிர்ணயிக்கும். அப்படி, கதையை நம்பி மில்லியனில் தயாரிக்கப்பட்டு, பில்லியன் லாபத்தை ஈட்டியப் படம் என்றும் நான் ஈ -ஐ சொல்லலாம். இன்றோடு இந்தப் படம்  தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 

வருடந்தோறும் தமிழ் சினிமாவில் பல நூறு படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதில் எத்தனைப் படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த இடத்தில் வெற்றி என்பது, ரசிகர்களிடம் அந்தப் படம் பெறும் வரவேற்பு தான். 

ஒரே மாதிரியான ஸோ கால்டு மசாலாக்களை திரையில் பார்த்து போரடித்துப் போன ரசிகனுக்கு ஏதாவது புதுமையாக வந்தால் விட்டு விடுவானா என்ன? அப்படியானப் படம் தான் இந்த நான் ஈ. பொதுவாக மாற்றுமொழி படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்வதை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  அதிலும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் படங்களை சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த ரூல்ஸை பிரேக் செய்து, ட்ரெண்ட் செட்டானப் படம் என்றால் அது நான் ஈ தான். முதலில் குறிப்பிட்டது போல் இதில் கண் கவரும் செட்டோ, லொகேஷனோ இல்லை தான், ஆனால் படத்தின் புதுவித காட்சியமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததென்றே சொல்லலாம். 

இந்த கதைகளம் அமைந்ததே கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம் தான். இந்தக் கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் இயக்குநர் ராஜமெளலியின் தந்தை. ராஜமெளலியின் மஹதீரா, பாகுபலி 1 & 2, போன்ற படங்களுக்கும் இவர் தான் கதையாசிரியர் என்பது கொசுறு தகவல். சரி விஷயத்திற்கு வருவோம்...

அப்பாவுடன் ராஜமெளலி ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் போது, இரவு நேரத்தில் தூங்க விடாமல் தொல்லைக் கொடுத்ததாம் ஒரு ஈ. பொறுமை இழந்த விஜயேந்திர பிரசாத், நடுராத்திரியில் எழுந்து பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனது மகன் ராஜமெளலியின் அறைக் கதவைத் தட்டி விஷயத்தை சொல்ல, ஈ ஹீரோவாகி வில்லனை தொந்தரவு செய்தால் எப்படியிருக்கும் என்ற ஐடியா ராஜமெளலிக்குத் தோன்றியிருக்கிறது. அந்த நேரத்தில் இந்த ஒன்லைனை அப்பாவிடம் சொல்லி, இதற்கேற்றார்போல் கதை எழுத சொல்லியிருக்கிறார் இந்த ட்ரெண்ட் செட்டர் இயக்குநர். இதை அவரே ஒரு நேர்க்காணலில் பகிர்ந்துக் கொண்டார். 

மைக்ரோ ஆர்டிஸ்டாக வரும் சமந்தா மேல் நானிக்கு காதல். ஆனால் சமந்தா வேண்டுமென்றே நானியை அலைய விடுவார். ஒரு கட்டத்தில் சமந்தாவும் ஓ.கே சொல்ல முன்வரும் நேரத்தில், கொலை செய்யப்படுகிறார் நானி. பிறகு, ஈயாக மறுபிறவி எடுத்து வில்லன் சுதீப்பிடமிருந்து தனது காதலி சமந்தாவை காப்பாற்றுவார். தமிழில் அதிக ஃபேன்டஸி படம் எடுத்த ராம நாராயணன் அவரது படங்களில் குரங்கு, யானை, பாம்பு போன்றவற்றை ஹீரோவாக காட்ட முற்பட்டிருப்பார், ஆனால் பல லாஜிக்குகளால், அது குழந்தைகளை மட்டுமே ரசிக்க வைக்கும். அதுவும் விபரம் தெரிந்த சுட்டிக் குழந்தையாக இருந்தால் அதுவும் இல்லை.

அதேப் போன்று தான் இங்கும் ஒரு ஈயால் எப்படி பழி வாங்க முடியும் என்ற லாஜிக் இடிக்கிறது. ஆனால் அந்த சந்தேகத்தை மேலும் வளர விடாமல், விஷுவல்களால் நம்மை சாந்தப்படுத்திவிட்டார் ராஜமெளலி. இதற்காக விஷூவல் எபெக்ட்ஸ் செய்த கமலக்கண்னன் மற்றும் எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது. 

 "வீசும் வெளிச்சத்திலே, கொஞ்சம் உளறிக் கொட்டாவா" என காதல் பாடல்களாகட்டும், ஈடா ஈடா என ஈ வில்லனை மிரட்டும் பாடலாகட்டும் மரகதமணியின் இசை நம்மை ரசிக்க வைத்தன. ஒரு காதல் படத்தை இப்படியும் இயக்க முடியும் என்பதை புதுவிதமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. தான் இறந்து விட்டாலும் மறு பிறவி எடுத்து, தன் காதலியை இப்படியும் கலங்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பதைத்தான் இத்தனை ஃபேன்டஸியுடன் சொல்லியிருக்கிறார்கள். 

காதல் படங்கள் என்றால், எமோஷனலாகவும், ஃபாரினினில் டூயட் பாடியும், கடைசிவரை இருவரும் காதலில் கசிந்துருகியும் இல்லை பிரச்னைகளை சரிசெய்து இறுதியில் இருவரும் இணைய வேண்டும்  போன்ற இத்யாதி இத்யாதி விஷயங்களுக்கு நடுவே இப்படியொரு 'வாவ்' ஃபீலைக் கொடுத்ததற்காகவே 'நான் ஈ' படத்திற்கு ஒரு கூடை பூங்கொத்து!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.