விரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 07 Jul, 2018 02:06 pm

dhanush-to-mortgage-his-own-debt-to-pay-rs-40-crore

ரஜினியின் இத்தனை ஆண்டுகால மரியாதையை எள்ளி நகையாடிவிட்டது காலா. பாபா படுதோல்வி படம் என்றால், காலா கணக்கில்லாத டென்ஷனை ரஜினியின் குடும்பத்திற்கு ஏற்றி விட்டது. இப்போது பல கோடி ரூபாய் கடனில் மூழ்கித் தவிக்கிறார் தனுஷ். இந்தப்படம் எப்படி உருவானது? ஏன் உருவானது? இதற்கெல்லாம் விடை தேடக் கிளம்பினால், அதுதான் சோகத்திலும் சோகம்.

ஒரு நாள் தன் அப்பாவிடம் மனம் விட்டு பேசிய ஐஸ்வர்யா தனுஷ், “தனுஷுக்கு நிறைய கடன். கிட்டதட்ட நாற்பது கோடி. நீங்க கால்ஷீட் கொடுத்தால் அவர் ஒரேயடியாக எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டு நிம்மதியாகிவிடுவார்’’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினியும் சம்மதித்து இருக்கிறார். ஆனால், தனக்கான சம்பளத்தை ரஜினி விட்டுக் கொடுக்கவில்லை. சுமார் ஐம்பது கோடி ரூபாயை தனது சம்பளமாக நிர்ணயித்து படத்தை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறார் ரஜினி.

சொல்வதை கேட்கிற, சம்பளமாக என்ன தருகிறார்களோ, அதை வாங்கிக் கொள்கிற, அதைவிட கட்சி துவங்குகிற நேரத்தில் ஜாதிய ரீதியாக சப்போர்ட் தருகிற இயக்குநர் என்று முக்கால பூஜைக்கு தற்கால நிவாரணமாக கண்முன் வந்தவர் பா.ரஞ்சித். பொசுக்கென்று அமுக்கிப் போட்டு காரியத்தில் இறங்கினார் தனுஷ். 

படமெல்லாம் நன்றாகவே முடிந்தது. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளின் போதுதான் காலா மீது கரம் வைக்க தொடங்கியது காலம். இந்தப்படத்திற்கு ‘இணைத் தயாரிப்பு’ என்று ஐஸ்வர்யாவின் பெயரை டைட்டிலில் போடுவார் என்று எதிர்பார்த்தாராம் ரஜினி. அது நடக்கவில்லை என்றதும் கடும் மன வருத்தத்தில் இருந்தாராம்.

இது குறித்து தனுஷிடம் பேசியபோதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் கவலைப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல… தாணு கபாலிக்கு விளம்பரம் செய்தது போல இந்த காலாவுக்கு தனுஷ் பெரிய அளவில் விளம்பரம் செய்வார் என்று எதிர்பார்த்தார்... அதுவும் நடக்கவில்லை.

கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத தனுஷ் மீது ஏற்பட்ட கோபத்தை வேறு வேறு வழியில் காட்ட ஆரம்பித்தார் ரஜினி. 
காலா படம் ஓடாமல் போனதற்கு காரணம், ரஜினி மீது மக்களுக்கு ஏற்பட்ட திடீர் வெறுப்பா, அல்லது படமே கபாலியின் பார்ட் 2 வாக இருந்த காரணத்தாலா? என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்... தற்போதைய நிலவரப்படி, தனுஷை காலா மேலும் கடன்காரர் ஆக்கி விட்டது.

கபாலி வெளியான நேரத்தில் ‘படம் சுமார்’ என்கிற கருத்து பரவலாக வந்தாலும், கலெக்சன் மட்டும் இளைக்கவில்லை. அதற்கு தயாரிப்பாளர் தாணுவின் விளம்பர யுக்தி பெரும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கபாலியின் வெளிநாட்டு வசூல் 87 கோடி. அதுவே காலாவின் வசூல் 47 கோடி. இப்படி பாதிக்கு பாதியாக குறைந்தது அங்கு மட்டுமில்லை. தெலுங்கு, கன்னடம், கேரளா என்று மற்ற மூன்று இடங்களிலும் இதே நிலைதான். ரஜினியின் முந்தைய படமான கபாலி வசூலில் பாதியைதான் தொட முடிந்தது காலாவால். தமிழகத்தை பொறுத்தவரை சேலம், திருச்சி இரண்டு ஏரியாவை தவிர மீதி எல்லா ஏரியாவிலும் படத்தை டிஸ்ட்ரிபுயூஷன் அடிப்படையில்தான் கொடுத்திருந்தார் தனுஷ். 

படம் சரியாக வசூலாகவில்லை என்றால், ரஜினியின் வீட்டுக்கு முன் கூடி ‘பணத்தை திருப்பிக் கொடுங்க’ என்று கோஷமிடும் போக்கை தடுப்பதற்காகதான் அப்படி செய்திருந்தார் தனுஷ். இந்த முறையில் சிரமம் அதிகம். விளம்பரம் மற்றும் பிற செலவுகளை கழித்துக் கொள்வார்கள். முன்பணமாக கொடுத்த பணம் வசூல் ஆகாவிட்டால் தயாரிப்பாளர்தான் மீதி பணத்தை வட்டியோடு திருப்பித்தர வேண்டும்.

இந்த வகை வியாபாரத்திற்கு ஒப்புக் கொண்டு சுமார் 62 கோடி வரை தமிழக விநியோகஸ்தர்களிடம் பெற்றுக் கொண்டிருக்கிறது தனுஷின் தயாரிப்பு நிறுவனம். இப்போது சுமார் 40 கோடியை திருப்பித்தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார் தனுஷ். இது தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் தரவேண்டிய பணம். வேறு ஏரியாக்களுக்கு தனிக்கணக்கு.

ஏற்கெனவே கடனில் இருந்த தனுஷ் காலா படத்தின் நஷ்டப் பணமான 40 கோடி ரூபாயை விநியோகஸ்தர்களுக்கு திருப்பதி தர முன்வந்துள்ளார். கடனில் இருந்தவருக்கு எங்கிருந்து வந்தது இந்த 40 கோடி ரூபாய்..? ரஜினி கொடுத்திருப்பாரோ..? என்று நினைக்ககூடும். அதுதான் இல்லை. காலா படம் ரிலீசாவதற்கு முன்பே இருவருக்கும் முட்டிக்கொண்டது. அடுத்து படம் ரிலீசாகி எதிரான விமர்சனங்கள் கிளம்ப, இப்படியொரு படத்தில் நடித்ததும், தனுஷ் பேச்சை கேட்டதும் தப்பு’’ என புலம்ப ஆரம்பித்து விட்டாராம் ரஜினி. 

அடுத்து ரஜினி, தனுஷுடன் பேசவே இல்லை என்கிறார்கள். இந்த 40 கோடி ரூபாயில் பெரும் தொகையை கலைப்புலி தாணு செட்டில் செய்கிறாராம். அவரது தயாரிப்பில் தனுஷ் மூன்று படங்களில் நடிப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வடசென்னை படத்தையும் தனுஷ், காலா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களிடமே தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆக, மொத்தத்தில் தனுஷ் தன்னையே டகு வைத்திருக்கிறார். இந்த சோகம் ஒருபுறமிருக்க, இனி எனது திரையுலக வாழ்க்கையிலும், அரசியலிலும் தனுஷ் தலையிடக்கூடாது என கறாராக சொல்லி விட்டாராம் ரஜினி. 

இதனை சற்றும் எதிர்பார்க்காத தனுஷ் தீடீரென தனது ரசிகர் மன்றத்தினருக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், நன்றி தெரிவித்துள்ள அவர், திரைப்பட இயக்குநர் சுப்ரமணியம் சிவாவை ரசிகர் மன்ற தலைவராக நியமித்துள்ளார். அத்துடன் தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் வேலைகளிலும் தீவிரம் காட்ட உத்தரவிட்டு இருக்கிறாராம். 

காலா படம் தொடங்கப்பட்டதில் இருந்து நஷ்டமானது வரை தனுஷ், ரஜினி இடையே ஏற்பட்ட சோகக்கதையை படமாக்கினால் நிச்சயம் படம் சூப்பர் ஹிட்டாகும். அத்தனை சமாச்சாரங்கள் அவர்களது குடும்பத்திற்குள் நடந்திருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கம் கோடாங்கிகள்.

காலா ப(பா)டத்தை காலம்தான் சரிசெய்யவேண்டும்...

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close