இம்சை அரசன் 23-ம் புலிகேசி: இது வெறும் ஸ்பூஃப் சினிமாவா என்ன?

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 01:52 pm

12-years-of-imsai-arasan-23-pulikesi-is-this-just-a-spoof-film

வடிவேலு தனது திரையுலக வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபொழுது அவருக்கு கதாநாயகனாக நடிக்க தினந்தோறும் வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. அவரும் மறுத்துக்கொண்டே வந்தார். பெரும்பாலும் ஒரு புதிய நடிகர் துணைக் கதாபாத்திரத்திலோ அல்லது நகைச்சுவை பாத்திரத்திலோ அறிமுகமாகி புகழ்பெற்ற கொஞ்ச நாட்களில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தால், உடனடியாக ஒப்புக்கொள்வார்கள். அந்தப் படம் க்ளிக் ஆனால் பிழைத்தார். இல்லையெனில் அதோடு அவரின் சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிடும்.

அதேபோல் வடிவேலுக்கு முன்பிருந்த தலைமுறையில், கவுண்டமணி நான்கைந்து படங்கள் நாயகனாக நடித்திருந்தார். அதில் ஒன்று நன்றாகவும் ஓடியது. மற்றவை எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை. விவேக் நாயகனாக நடித்த 'பஞ்சுமிட்டாய்' படம் பெரிய அளவில் விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டும் வெளியாவதில் சிக்கல் ஆகி, இறுதியில் வந்ததே தெரியாமல் அடங்கியது. 

இந்த நிலை தெரிந்து இருந்ததாலோ என்னவோ வடிவேலு மிகவும் ஜாக்கிரதை உணர்வோடு நாயகன் வாய்ப்பை தவிர்த்து வந்தார். சச்சின் படத்தில் ஒரு காமெடிக் காட்சியில் "நமக்கு வேண்டாம்பா இந்த ஹீரோ வேஷமெல்லாம்.." என்று ஒரு வசனமே வைத்தார். அப்படிப்பட்ட வடிவேலு கதாநாயகனாக நடிக்க, அதுவும் மஹாராஜா வேஷத்தில் தோற்றமளிக்க, ஷங்கர் தயாரிப்பில், 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி' என்கிற விளம்பரம் நாளிதழில் வெளிவந்த அன்று அந்தப் புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு திரைப்பட ரசிகனாக சில படங்களின் அறிவிப்பை நாளிதழிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அன்றைய காலகட்டத்தில் பார்க்கும்போது, "இந்தப் படத்தை முதல்நாளே பார்த்துறணும்டா.." என்று உள்ளுக்குள் ஒரு குரல் சத்தமாக கேட்கும். அப்படி ஒரு குரல் பெரும் ஓலமிட்டு உள்ளே கதறியது... நீண்ட நேரமாய்!

ஷங்கர் தயாரித்த 'காதல்', 'வெயில்' எல்லாமே நல்ல படங்களாக இருந்ததும், நன்றாக ஓடியதும் இந்தப் படத்திற்கு வெளிவரும் முன்பே ஓசி விளம்பரமாக இருந்தது. மேலும் ஆனந்த விகடனின் மிகப் பெரிய ரசிகன் என்பதால் படத்தின் இயக்குனராக அறிமுகமாகும் சிம்பு தேவன் பற்றிய அறிமுகம் ஏற்கெனவே ஒரு சித்திரமாக மனதில் பதிந்திருந்தது. அவரோடது 'கிமுவில் சோமு' போன்ற சித்திரக் கதைகள் எங்கள் குழாமில் அவ்வளவு பிரபலம். புது இயக்குனர், நகைச்சுவை நடிகர் ஒருவர் நாயகனாக அறிமுகமாகும் படம் என்பது இதற்கு முன்பு பலமுறை நடந்திருந்தாலும், இம்சை அரசனுக்கான எதிர்பார்ப்பு அதுவரை நான் காணாத ஒன்று. 

படத்தை பற்றிய முதல் பெரிய கட்டுரை விகடனில்தான் வந்தது. கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் சரித்திரக் கதை என்கிற விஷயம் புதிதாக இருந்தது. அதுவும் இதுவரை இந்திய சினிமாவில் சரித்திர கதைகளை யாரும் ஸ்பூஃப் செய்ததாகவும் சரித்திரம் இல்லை என்கிற விவரமெல்லாம் அந்தக் கட்டுரையில் இருக்க, மீண்டும் எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு எகிறியது. வழக்கமாக இவ்வளவு எதிர்பார்ப்போடு வெளிவரும் படங்கள் சந்தித்த தோல்விகள், எதிர்கொண்ட விமர்சனங்களும் நாம் அறியாதது அல்ல. சரியாக 12 வருடங்களுக்கு முன்னர் இதே நாள் புலிகேசி வெளிவந்தான். ஒரே வார்த்தையில் சொல்வதானால், "ஒரு நகைச்சுவை சரித்திரப் படம், வசூல் சரித்திரம் படைத்தது."

திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கோலம் என்கிற வார்த்தை பிரயோகத்தை இதற்கு முன் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அன்று திரையரங்குகளில் எல்லாம் நான் நேரில் பார்த்தேன். படம் முடிஞ்சு வெளியே வரும் எல்லோர் முகத்திலும் புன்னகை. படம் பார்த்த அலுப்பே தெரியாமல், படத்தில் வடிவேலு பேசிய பல வசனங்களை சத்தம் போட்டு பேசி சிரித்துக்கொண்டே மக்கள் வந்தனர். முதல்நாள் மட்டுமே இளைஞர்கள் கூட்டம். மறுநாளில் இருந்து குழந்தைகள் கூட்டம். குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்கை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். சிரிப்பு சத்தம் காதைப்பிளக்க வசூல் மேளம் கொட்டியது.

உண்மையில் படத்தில் அப்படி என்னதான் இருந்தது என்று யோசித்தால் முதலில் தோன்றுவது "எளிமையான நகைச்சுவை" என்பதுதான். படத்தை ரசித்து பார்த்த இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் முன்பு தமிழில் வெளிவந்து வெற்றிவாகை சூடிய பல சரித்திரப் படங்களின் பெயர்கள் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் எல்லா நகைச்சுவை காட்சிகளும் எல்லாருக்கும் புரியும்படி மிக எளிமையாக இருந்தது. அதேபோல் வசனங்கள் மூலம் ஒரு பக்கம் காமெடி இருந்தாலும், வடிவேலு என்னும் மிகச் சிறந்த நடிகனின் உடல்மொழி இன்னும் அதிகளவில் சிரிப்பை வரவழைத்தது. பற்றாக்குறைக்கு படத்தில் பகடி செய்யப்பட்ட பல விஷயங்களும் இன்றைய அரசியல் நடைமுறையை கேலி செய்யும் வகையில் அமைந்திருந்ததால் மிக எளிதாக அதை சமகாலத்தோடு பொருத்திப் பார்க்கவும் முடிந்தது.

இயக்குனர் சிம்புதேவனை நான் ஒரு விஷயத்திற்காக மீண்டும் மீண்டும் பாராட்டுவேன். அது என்னவென்றால், நல்ல கான்செப்ட் கிடைத்துவிட்டது, வடிவேலு மாதிரி காமெடியன் கிடைத்துவிட்டார், ஷங்கர் போன்ற தயாரிப்பாளரும் இருக்கிறார் என்பதால் வெறும் நகைச்சுவை துணுக்குகளாக படத்தை எடுக்காமல், ஒரு சீரியசான உழைப்பை திரைக்கதை, படமாக்கல் என எல்லா விஷயத்திலும் செலுத்தியிருந்தது படம் பார்க்கும்போது நாம் உணரலாம். உதாரணமாக உக்கிரபுத்தன் என்கிற இன்னொரு வடிவேலு கதாபாத்திரத்தை கவனியுங்கள். அவர் நடிக்கும் காதல் காட்சியாகட்டும், ஸ்ரீமன் உடன் ஆப்பிள் கடித்துக்கொண்டே வாளை சுழற்றும் காட்சியாகட்டும், நாசரும், உக்கிரபுத்தனும் காரசாரமாக பேசிக்கொள்ளும் காட்சிகள் ஆகட்டும், இந்த காட்சிகள் எல்லாம் கதையை வளர்க்கும் காட்சிகள். இம்சை அரசனின் காமெடிகள் ருசிக்க, அதற்கு சரியான அளவில் சேர்க்கப்பட்ட உப்பு போன்றவை இந்த காட்சிகள். இந்த சீரியஸ் காட்சிகளில் இருக்கும் மெனக்கெடல் மிக முக்கியம். அப்படி இல்லாமல் காமெடி காட்சிகளை வைத்து ஒப்பேற்றிக் கொள்ளலாம் என சிம்புதேவன் நினைத்திருந்தால் இந்தக் கட்டுரைக்கான அவசியமே இருந்திருக்காது. ஒரு சாதாரண ஸ்பூஃப் படம் என்பதை தாண்டி பலரும் ரசிக்க இது முக்கிய காரணம்.

கதாபாத்திர தேர்வுகளும் இந்தப் படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கியது. மங்குனியாக வரும் இளவரசு, ராஜகுரு நாசர், அந்த காறித்துப்பும் கரடியாக நடித்தவர் முதற்கொண்டு நல்ல தேர்வு. கார்டூனிஸ்ட்டுகள் பெரும்பாலும் கம்யூனிச கருத்துக்களை முன்வைப்பதை நாம் பார்க்கலாம். சிம்புதேவனும் ஒரு கார்டூனிஸ்ட் என்பதால் படத்தின் வசனங்களில் நகைச்சுவை தவிர்த்து கம்யூனிச சிந்தனைகளும் பெருமளவில் இடம்பெற்றிருக்கும். அதைச் சரியான இடத்தில சொன்னதில் சிம்புதேவன் மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். அதேபோல் முதல் காட்சியில் "அரண்மனை காவலன்" என்று ஒருவரின் மீது பெயர் போட்டுவிட்டு, பின்னர் சுவற்றில் நகரும் ஒரு பல்லியின் மீது, "அரண்மனை பல்லி" என்று எழுதிப்போடும் அந்தக் குறும்பு மிகவும் அபூர்வமானது. இந்த நுண்ணிய விஷயங்கள் படத்தின் மிகப்பெரிய பலம்.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னதுபோல இதே படம் ஹாலிவுட்டில் வந்திருந்தால், இந்நேரத்தில் 23-ஆம் புலிகேசி என்பது மிகப்பெரிய ப்ராண்டாக மாறி இருக்கும். 23-ஆம் புலிகேசி பெயரில் உடைகள், கம்பியூட்டர் கேம்ஸ் மாதிரியான பல விஷயங்களை வெளியிட்டு படத்தை இன்னும் அதிகம் கொண்டாட வைத்திருப்பார்கள். அவர் சொன்ன இன்னொரு விஷயமான "இரண்டாம் பாகம் உடனே எடுத்திருப்பார்கள்" என்பது மட்டும் சற்று தாமதமாக இதோ இப்போது நடக்கப்போகிறது. இந்த முறை அரசியல் நிலைமைகள் இன்னும் மோசமாக இருக்கின்றது. மோசமானதை கேலி செய்து அந்த மோசமானததின் உண்மைத்தன்மையையே மறந்து போகவைக்கும் தன்மை நகைச்சுவைக்கு எப்போதும் உண்டு. அந்த வகையில் 24-ஆம் புலிகேசி என்ன மாயாஜாலம் செய்ய காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதேபோல் வடிவேலுக்கு இந்த வெற்றி மிகவும் அவசியத் தேவை இப்போது. மீண்டு வருவார் என நம்புவோம்.

வடிவேலு, சிம்புதேவன், இயக்குனர் ஷங்கர் மூவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். காத்திருக்கிறோம் இரண்டாம் சரித்திரத்திற்கு!

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.