'பாகுபலி' வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகும் திரை அனுபவம் நீடிப்பது எப்படி?

  பால கணேசன்   | Last Modified : 10 Jul, 2018 09:14 am

three-years-of-bahubali-the-beginning

ஒரு மசாலா படம் எடுக்க வேண்டும். மசாலா படங்கள் புதிதில்லை நமக்கு. அதனாலேயே இந்த மசாலா படம் மற்றவர்களில் இருந்து வேறுபட்டு, இதுவரை இல்லாத ஒரு பிரமாண்டத்தை நமக்கு காட்டி, ஒரு புது சரித்திரம் எழுதும் வண்ணம் படைக்கப்பட வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு இயக்குனருக்குள்ளும் உண்டு. ஏனெனில் ஒரு புதுவிதக் கதையை யோசித்து, அதற்கு ஒரு வடிவம் கொடுத்து, அதைப் படமாக்கி வெளியிடும்பொழுது, வெற்றி - தோல்வியையும் தாண்டி, குறைந்தபட்சம் புதுவித முயற்சி என்கிற அளவிலாவது அது பெயர் பெறும்.

ஆனால், ஒரு மசாலா படம் நன்றாக இல்லையென்றால் நேராக அந்தப் படம் குப்பைக்குதான் செல்லும். இது உலக வரலாறு. இந்த மிகப்பெரிய சோதனையை எல்லோரும் வெற்றிகரமாக தாண்டிவிடுவதில்லை. அதற்கு மிக நுண்ணிய திட்டமிடலும், அசாத்திய உழைப்பும் தேவை. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த படமே 2015-ல் இதே நாளில் வெளியான 'பாகுபலி'.

16 வருடங்கள். 11 படங்கள். எல்லாமே வெற்றிப் படங்கள். ஒரே இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது மசாலா படங்களின் சிறப்பே, வெளிவந்த சிறிது நாட்களிலேயே தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உடனே ரீமேக் செய்யப்பட்டுவிடும். இதற்கு முக்கிய காரணம், அந்தப் படங்களின் திரைக்கதையே! 

சற்றும் அலுப்பு தட்டாத சுவாரஸ்யமான ஒரு கதை சொல்லும் முறை ராஜமவுலிக்கு எப்போதும் கைகூடி வந்திருக்கிறது. மேலும் அவரின் திரைப்பட வரலாறை பார்த்தால், அவர் மெதுமெதுவாக தனது இலக்கை நோக்கி பயணித்ததும் தெளிவாக புரியும். 'விக்ரமார்குடு' (தமிழில் 'சிறுத்தை') படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் எடுத்த 'எமதொங்கா' படத்தில் அதுவரை இல்லாத அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகளை தனது படத்தில் பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றி கண்டார். அதன் பின் இந்த கிராஃபிக்ஸ் கலையை இன்னும் உன்னிப்பாக பயன்படுத்தி எடுத்த படமே 'மஹதீரா'. 

'மஹதீரா'வில் பிளாஷ்பேக் காட்சிகள் முழுதும் சரித்திரப் பின்னணி கொண்ட காட்சிகள். அதுவரை ராஜமவுலி தொடாத விஷயம் இந்த சரித்திரக் கதை. 'பாகுபலி' படத்திற்கான விதை இவருக்குள் பல வருடங்களாக இருந்தது என்று ஏற்கெனவே இவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் 'மஹதீரா', 'பாகுபலி' எடுப்பதற்கான ஒரு முன்னோட்டம் என்றே சொல்லலாம்.

நாயகனே இல்லாமல் ஒரு ஈயை வைத்து மெகா ஹிட் படம் கொடுக்கக்கூடிய திறமை உள்ள இயக்குனர் என்று நிரூபித்தார் ராஜமவுலி. அதற்கு முன்பே ஒரு நகைச்சுவை நாயகனை முழுநேர கதாநாயகனாக வைத்து 'மரியாதை ராமண்ணா' (தமிழில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்') படம் எடுத்தும் வெற்றிகண்டார். இதில் 'நான் ஈ' படத்தில் அவர் பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் இல்லாமல், நம் இந்திய கலைஞர்களை மட்டுமே வைத்துக்கொண்டு செய்திருந்த ஆச்சரியங்கள் எல்லாம் கனவு கூட காண இயலாத விஷயம். இப்படி மெல்ல மெல்ல தயாரான ராஜமவுலியின் உலகளாவிய பாய்ச்சல்தான் 'பாகுபலி'.

ராஜமவுலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத்தின் கதையான இந்த 'பாகுபலி' முழுக்க முழுக்க கற்பனை சரித்திரக் கதை என்பதால், ராஜமவுலிக்கு திரைக்கதை அமைப்பதில் முழு சுதந்திரம் இருந்தது. கதை ஒன்றும் புதிதில்லை. எல்லா சரித்திரக் கதைகளை போலவே இதுவும் பங்காளிச் சண்டை, போர், வாரிசு வேறு இடத்தில் வளருதல், உண்மை தெரிந்து வெகுண்டெழுதல் போன்றவையே இந்தப் படத்திலும் அடிப்படையாக இருந்தது. ஆனால் இந்த அதே அரைத்த மாவு எப்படி ஆயிரம் கோடி வசூல் செய்யும் ஒரு சரித்திரமானது என்பதுதான் படத்தை விசேஷமாக்குகிறது.

'டைட்டானிக்' போன்ற படங்கள் திரைக்கதை எழுதி வெறும் காகிதத்தில் இருந்தபொழுதே அந்தப் படம் இவ்வளவு வசூல் செய்யும் என்பதையும் கூட கணக்கிட்டுவிட்டதாக சொல்வார்கள். அதற்கு காரணம் திட்டமிடல். அதே அளவு திட்டமிடல் 'பாகுபலி'யில் இருந்தது. ஒரு டிபிகல் தெலுங்குப் படத்திற்குரிய எல்லா அம்சங்களோடும் ஆரம்பிக்கும் படம், பிளாஷ்பேக் காட்சிகள் வந்ததும் எடுக்கும் வேகம் இறுதியில் படம் முடியும்போதுதான் போதை தெளிந்தது உணரவைக்கும். அவ்வளவு வேகம். 

இந்த 'பாகுபலி' படத்தை முதல்நாள் சென்று பார்க்கும்பொழுது, இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் உண்டு என்கிற விஷயமே தெரியாது. படம் இடைவேளைக்கு பிறகு ஓட ஆரம்பிக்க, காலகேயர்கள் வருகையினால் போர் ஏற்பட, அந்தப் போர் முடிந்ததுமே படம் முடிந்துவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. காரணம் இதற்கு முன்னரும் இந்திய சினிமாவில் இரண்டாம் பாகம் உள்ள படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அதில் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு தனி முடிவு இருக்கும். தனித்தனியாக பார்த்தாலும் இரண்டு படங்களுமே புரியும். அப்படித்தான் திரைக்கதையும் எழுதப்படும். 

ஆனால் 'பாகுபலி'யில் நடந்ததோ வேறு. திடுக்கென்று படம் முடிந்து, இரண்டாம் பாகம் விரைவில் வரும் என்று அறிவிப்பதற்கெல்லாம் ஓர் அசாத்திய தைரியம் வேண்டும். எத்தனையோ கோடிகள் செலவு செய்து எடுத்த ஒரு படத்தை, இது இரண்டாம் பாகத்தில்தான் முடியும் என்று சொல்லவேண்டுமெனில், தன் திரைக்கதை மீது, தன் திறமை மீது பெரும் நம்பிக்கை வேண்டும். அது ராஜமவுலிக்கு நிறையவே இருந்தது. இதனாலேயே படம் பிரமாண்ட வெற்றியும் பெற்றது.

மேலும் அதோடு நிற்காமல், பாகுபலியை கட்டப்பா கொல்லும் ஒரே ஒரு ஷாட் மட்டும் இறுதியில் வைத்துவிட்டு, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அதை ஒரு பேசுபொருளாக வைத்திருந்ததெல்லாம் வேற லெவல். 

இதில் நடிகர்களின் பங்களிப்பையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும். பிரபாஸ் ஏற்கெனவே தெலுங்கில் ஓரளவு மாஸ் அந்தஸ்து உள்ள படங்கள் நடித்து தெரிந்த முகமாக இருந்தார். ராணா கதாநாயகனாக அறிமுகமாகி இந்தி, தமிழ் மொழிகளிலும் நடித்துக்கொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஐந்து வருடம் இந்தப் படத்திற்காக (இரண்டு பாகங்களும் சேர்த்து) உழைத்தனர். அதன் பலன் திரையில் தெளிவாக தெரிந்தது. ராஜமாதா ரம்யா கிருஷ்ணன், கட்டப்பா சத்யராஜ், பிங்களதேவன் நாசர் என ஒரு மிக வலுவான நடிகர் தேர்வு படத்தின் வெற்றிக்கு எவ்வளவு உதவி செய்தது என்பதை இவர்கள் தோன்றும்போதெல்லாம் எழுந்த ஆரவாரத்திலேயே புரிந்துகொள்ளலாம்.

சரித்திரங்கள் எல்லாம் ஒருமுறைதான் எழுதப்படும் என்று கிடையாது. ஒவ்வொரு புது சரித்திரம் படைக்கையிலும் அது மாற்றி மாற்றி எழுதப்பட்டுக்கொண்டேதான் வந்திருக்கிறது. 'பாகுபலி'யின் வெற்றியை 'பாகுபலி'யின் இரண்டாம் பாகம் எளிதாக உடைத்தது. ஆனால் விதை 'பாகுபலி' போட்டது. இவற்றைத் தாண்டும் படமும் கூடிய விரைவில் வரலாம். ஆனால் இதை முதலில் செய்தது 'பாகுபலி'தான் என்கிற பெயர் என்றும் மாறாது. 'பாகுபலி' வெறும் திரைப்படமாக மட்டும் அல்லாமல், ஒரு திரை அனுபவமாக மாறி நின்றதை யாராலும் மறுக்க இயலாது.

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.