தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்!

  பால கணேசன்   | Last Modified : 20 Jul, 2018 06:05 pm
success-and-failure-of-remake-films-in-tamil

100 வருட பாரம்பரியம் கொண்ட தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படி மிகப் பெரிய வெற்றியை பெற கதை, திரைக்கதை, நடிகர்கள், இசை என எத்தனையோ காரணங்கள் உண்டு. அதில் அந்தப் படம் வெளியாகும் காலகட்டமும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

கமல்ஹாசனின் பரீட்சார்த்த முயற்சிகள் கொண்ட படங்கள் வெளிவருகையில், இந்தப் படம் இன்னும் 20 வருடங்கள் கழித்து வெளிவந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்று ஒரு வாதத்தை எப்போதும் முன்வைப்பார்கள். இதை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் கூட, சில படங்கள் அந்த நேரத்து ட்ரெண்ட்டுக்கு ஏற்ப எடுக்கப்பட்டு வெற்றிவாகை சூடியதும் உண்டு. அந்தப் படங்களை இப்போது ரீமேக் செய்ய இயலாது. ஆனால், சில படங்கள் உண்டு. எப்போது ரீமேக் செய்தாலும் நன்றாக ஓடக்கூடிய கதையம்சம், சுவாரஸ்யமான திரைக்களமும் அவை கொண்டிருக்கும். அப்படி தமிழில் இருந்தே தமிழில் ரீமேக் செய்யப்பட்ட சில படங்களை இப்போது பார்க்கப் போகிறோம்.

உத்தமபுத்திரன்:

1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய 'தி மேன் இன் தி அயன் மாஸ்க்' என்கிற பிரெஞ்சு நாவலை தழுவி தமிழில் எடுத்த படமே 'உத்தமபுத்திரன்'. தமிழின் முதல் இரட்டை வேட கதாபாத்திரம் நடித்தப் படம் என்கிற பெருமை இதற்கு உண்டு. 

தொழில்நுட்ப வசதிகள் பெரிதும் இல்லாது இருந்த அக்காலகட்டத்தில் வெளியான இந்தப் படம் பார்க்க வந்த ரசிகர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது. இரட்டை வேட கதைகளில் ஆள் மாறாட்டம் செய்து மக்களுக்கு நல்லது செய்யும் கதைகளுக்கு இந்தப் படமே ஆரம்பமாக அமைந்தது. படம் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. பி.யூ சின்னப்பாவின் மகுடத்தில் ஜொலித்த மாணிக்கம் இந்தப் படம் என்று சொன்னால் அது மிகையில்லை. 

பின்னர் 1958-ல் சிவாஜி கணேசன் நடிக்க வீனஸ் பிக்சர்ஸ் சார்பில் மீண்டும் அதே கதை, அதே தலைப்பில் தயாரானது. பி.யூ.சின்னப்பாவின் உத்தமபுத்திரனுக்கு பின்னர் தமிழில் வரிசையாக நிறைய இரட்டைவேட கதாநாயக படங்கள் வெளிவந்து இருந்தன. அதனால் முதல் உத்தமபுத்திரன் வெளிவந்தபொழுது இருந்த எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு இருக்கவில்லை. ஆயினும் கூட சிவாஜி கணேசனின் அட்டகாசமான நடிப்பின் காரணமாகவும், இந்த மாதிரியான கதைகள் கொண்டிருக்கும் சுவாரஸ்யத்தின் காரணமாகவும் படம் 100 நாட்களை கடந்து ஓடியது. 

ஆனால் சிவாஜி கணேசன், "என்னதான் இந்த படம் நூறு நாட்களை கடந்து ஓடியிருந்தாலும் கூட, என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் தோல்விப்படம்தான்"என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். சினிமா அறிஞர்களும் பி.யூ.சின்னப்பாவின் உத்தமபுத்திரனே சிறந்தது என்று தீர்ப்பு எழுதினார்கள். சிவாஜியின் உத்தமபுத்திரன் படத்தில்தான் இந்தியாவில் முதன்முதலில் ஜூம் லென்ஸ் பயன்படுத்தி படமெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சம்சாரம் அது மி ன்சாரம்:

'உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற பெயரில் ஒரு படம் வெளியானது. நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 1970-களில் விசு தொடர்ந்து மேடை நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த பொழுது அவர் நடத்திய ஒரு நாடகத்தின் பெயரே 'உறவுக்கு கை கொடுப்போம்'. இந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முன்வந்தார். அதன்படி ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கத்தில், ஜெமினி கணேசன், சவுகார் ஜானந்தகி முக்கிய வேடத்தில் நடித்து வெளியான இந்தப் படம் பெரும் தோல்வியை சந்தித்தது. 

பின்னர் 1986-ல் ஏ.வி.எம் நிறுவனம் விசு இயக்கத்தில் படம் எடுக்க விரும்பி சில கதைகளை கேட்க, அதில் விசு சொன்ன இந்த 'உறவுக்கு கை கொடுப்போம்' கதையே மிகவும் பிடித்திருந்தது. இது ஏற்கெனவே வெளியாகி தோல்வியடைந்த படம் என்று விசு சொன்னபோது, 'அதனால் என்ன.. இதை நாம் ஹிட் படமாக எடுப்போம்' என்று ஏ.வி.எம் கூறியதால் மீண்டும் அதே கதை 'சம்சாரம் அது மின்சாரம்' என்கிற பெயரில் வெளியானது. பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. 

இந்திய அரசின் தங்கத்தாமரை விருது பெற்ற இந்தப் படம் கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லா முக்கிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஏற்கெனவே தோல்வியடைந்த ஒரு படம், மீண்டும் ரீமேக் செய்யப்பட்டதே ஒரு அதிசயம்தான். அதுவும் அந்தப் படம் மிக உயரிய விருதை பெற்றது என்பது உண்மையில் அதிசயிக்கத்தக்க நிகழ்வேதான். 

இன்று போ ய் நாளை வா:

1981-ல் பாக்யராஜ் ஒரே இரவில் எழுதிய திரைக்கதையே 'இன்று போய் நாளை வா' என்ற பெயரில் படமானது. மூன்று நண்பர்கள் தங்களது பக்கத்துக்கு வீட்டில் புதிதாக குடிவந்த ஒரு பெண்ணை தங்களை காதலிக்க வைக்க செய்யும் தகிடு தத்தங்களும், அதன் விளைவாக ஏற்படும் குழப்பங்களுமே இந்தப் படத்தின் கதை. 

நான் முதல் பத்தியில் சொன்னது போலவே, சில படங்கள் வெளியாகும் காலகட்டங்கள் அந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் வகிக்கும். ஆனால் சில படங்கள் எப்போது எடுத்தாலும், எப்போது பார்த்தாலும் பொருந்தும் சூழலில் அமையும். அப்படி ஒரு படம்தான் இது. இன்றுவரை வெவ்வேறு விதமாக தொடர்ந்து எடுக்கப்படும் கதையை கொண்ட இந்தப் படத்தின் நகைச்சுவை மறக்கவே முடியாதது. லூனா ஸ்கூட்டர், பெல் பாட்டம் பேண்ட், ஒரு பெரிய சதுர கண்ணாடி, ஜெயகாந்தன் கதைகள் என ஏகப்பட்ட நாஷ்டால்ஜியாக்களை இந்தப் படம் கொண்டிருக்கும். 

சில மேஜிக்குகளை மீண்டும் உருவாக்குதல் கடினம். இது புரியாமல் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்கிற பெயரில் 2013-ல் நகைச்சுவை நடிகர் சந்தானம் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து இந்தப் படத்தை ரீமேக் செய்தார். பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு இருந்த இமேஜை ஓரளவு சிறப்பாக பயன்படுத்தி, அதை சுற்றியே காமெடி காட்சிகள் அமைத்து உருவான இந்தப் படம், ஒரிஜினலுக்கு அருகில் கூட வர இயலாது என்றாலும் கூட சுமாராக ஓடியது. அதற்கு காரணம் படத்தின் சாகாவரம் பெற்ற திரைக்கதை வடிவம்தான்.

பி ல்லா

அமிதாப் பச்சன் 'ஆங்கிரி யங் மேன்' கதாபாத்திரங்களில் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் அவருக்கு கிடைத்த படம்தான் 'டான்'. புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர்கள் சலீம்-ஜாவேத் இணை திரைக்கதை எழுதிய இந்தப் படம் இந்தியில் மாபெரும் வெற்றிகண்டது. இதை தமிழில் ரஜினிகாந்த் நடிக்க, பாலாஜி தயாரித்தார். ரஜினியின் இமேஜுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்த இந்தப் படம் 1980-களில் ரஜினி மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக உருவாக உதவிய படம் என்று சொன்னால் அது மிகையில்லை. 

ஏனெனில் பொதுவாகவே ரஜினி வில்லனாக நடிக்கும் கதாபாத்திரங்கள் தனித்துவமாக அமைந்துவிடும். இந்தப் படமும் அப்படியே நிகழ்ந்தது. மேலும் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த முதல் படமும் இதுவே. இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் படத்தில் ஸ்ரீப்ரியா நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் அணுகப்பட்டார். ஆனால் அவர் மறுத்துவிடவே அதில் ஸ்ரீப்ரியா நடித்தார். 

ரஜினியின் படங்களை அடுத்த தலைமுறை மாஸ் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவருமே பல்வேறு காலகட்டங்களில் ரீமேக் செய்ய விருப்பப்பட்டுக் கொண்டுதான் இருந்தனர். குறிப்பாக 'முரட்டுக்காளை' மற்றும் 'அண்ணாமலை' படங்களை விஜய் ரீமேக் செய்ய ஆசைப்பட்டதாகவும், ஆனால் ரஜினி மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. இந்த நிலையில் 'பில்லா'விற்காக ரஜினியை அஜித் அணுக, ரஜினி உடனே ஒப்புக்கொண்டார். 

அஜித் ஏற்கெனவே நெகட்டிவ் ரோல்கள் செய்திருப்பதால் இந்தப் படம் அவருக்கு பொருத்தமாக அமையும் என்றும் கணிக்கப்பட்டது. அதுவே நிகழ்ந்தது, எப்படி அமிதாப்பை காப்பியடிக்காமல் ரஜினி தன்னுடைய இயல்போடும், ஸ்டைலோடும் பில்லாவை தமிழுக்கு கொண்டுவந்தாரோ, அதேபோல் அஜித்தும் செய்தார். அதனாலேயே படம் புதிதாக இருந்தது. 

மேலும் 'பில்லா' கதை முழுக்க முழுக்க மலேசியாவில் வைத்து நடப்பதாக மாற்றப்பட்டதும் நன்றாக வேலை செய்தது. உண்மையில் இந்த மலேசியா யோசனை இந்தியில் ஷாருக்கானை வைத்து பர்ஹான் அக்தர் டானை ரீமேக் செய்தபொழுது செயல்படுத்திய யோசனைதான். அதை தமிழிலும் செய்து வெற்றிகண்டனர். ரஜினியின் 'பில்லா'வில் இடம்பெற்ற இரண்டு பாடல்களும் கூட இந்தப் படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது.

மலையூர் மம்பட்டியா ன்

இடைக்கால தமிழ்ப் படங்களில் வித்தியாசமான ஒரு கதாநாயகன் தியாகராஜன். முரட்டுத்தனமான முக அமைப்பை கொண்ட இவர் நடித்த படங்களும் சண்டை காட்சிகளை மையப்படுத்தியதாகவே இருந்தது. உள்ளூரில் இருந்த புகழ்பெறாத சில ராபின் ஹூட் கதாபாத்திரங்களை திரையில் கொண்டுவந்த தியாகராஜனின் படமே மலையூர் மம்பட்டியான். ராஜசேகர் இயக்கிய இந்தப் படம் நன்றாக ஓடவும் செய்தது. 

பின்னர் இதேபோல் 'சேலம் விஷ்ணு' என்றொரு படமும் தியாகராஜன் எடுத்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. தியாகராஜன் புதல்வர் பிரசாந்த் குறிப்பிடும்படி சில ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் கூட தொடர்ந்து வாய்ப்புகள் இன்றியே இருந்தார். இந்தியில் ராம்கோபால் வர்மா எடுத்த 'பூத்' படத்தை தமிழில் 'ஷாக்' என்கிற பெயரில் தியாகராஜனே தயாரித்து, இயக்கி வெளியிட்டார். படம் குறிப்பிட்ட வெற்றியை பெற்றதால் மீண்டும் தன் மகனை வைத்து, தான் நடித்து ஹிட்டான மலையூர் மம்பட்டியானை, 'மம்பட்டியான்' என்று பெயரில் ரீமேக் செய்தார்.

அந்தப் படம் சீக்கிரமே தயாராகிவிட்டாலும் கூட, வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதால் மிகவும் தாமதமாக 3 வருடங்கள் கழித்தே வெளியானது. ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றாலும் கூட படம் தோல்வி படமாகவே அமைந்தது. இதில் ஒரு கொசுறு தகவல் என்னவென்றால், இந்தப் படத்தை இந்தியில்  ரஜினிகாந்தை வைத்து ராஜசேகர் இயக்கினார். படம் சுமாராக ஓடியது.

பாலைவனச் சோலை

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் ரசித்து பார்த்த படத்தை நீங்களே வெறுக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடக்கவேண்டுமா? 'பாலைவனச்சோலை' படத்தின் ரீமேக்கை பாருங்கள் தெரியும். 1981-ல் இரட்டையர்கள் ராபர்ட்-ராஜசேகரின் இயக்கத்தில் சந்திரசேகர், ராஜீவ், தியாகு, சுஹாசினி நடித்த படமே 'பாலைவனச்சோலை'. எந்தவித பெரிய ஹீரோக்களும் இல்லாமல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஒரு அட்டகாசமான படம் இது. 

நான்கு நண்பர்கள், அவர்கள் வாழ்வில் நுழையும் ஒரு பெண், அந்த பெண்ணுக்கு ஒரு நோய் என கிட்டத்தட்ட தமிழில் ஆயிரம் முறை வந்த ஒரு கதைதான் இந்தப் படத்துடையது. ஆனால் அதை திரைக்கதை மூலம் நமக்கு அளித்த விதம் இந்தப் படத்தை இன்றளவும் க்ளாஸிக் அந்தஸ்தில் வைத்திருக்கிறது. குறிப்பாக படம் முழுவதும் இழையோடும் அந்த மெல்லிய நகைச்சுவை இறுதிவரை நம்மை கட்டிப்போடும். அதேபோல் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகருக்குமான இடம் அருமையாக பிரித்தளிக்கப்பட்டிருக்கும். அவர்களும் அதை உணர்ந்து மிகப்பிரமாதமாக நடித்திருப்பார்கள். இறுதிக்காட்சியில் சந்திரசேகர் மருத்துவமனையில் வைத்து சிகரெட் பற்றவைக்கும் காட்சி எல்லாம் மறக்கவே இயலாத பொக்கிஷம். 

இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என்று யோசனை செய்ததற்கே முதலில் தகுந்த தண்டனை வழங்க வேண்டும். 2009-ல் தான் அந்த துக்க சம்பவம் நடந்தது. நிதின் சத்யா நடிப்பில் வெளியானது அந்தப் படம். ஒரிஜினலுக்கு சற்றும் நியாயம் செய்யாத நடிப்பில் ஆரம்பித்து, மொக்கை நகைச்சுவைகளை நம்மிடம் திணித்து, சுத்தமான அக்மார்க் தலைவலியை தந்த படமாக இந்த ரீமேக் அமைந்தது. "அடேய் இனிமே இந்த கூல் ட்ரிங்ஸ் குடிக்கிறப்ப எல்லாம் இந்த ஞாபகம் தானடா வரும்" என்று சிங்கமுத்து சொல்வது போல, பழைய பாலைவனச்சோலையை பார்த்தால் இந்த புதிய படம் தந்த தலைவலிதான் ஞாபகம் வரும் என்கிற அளவுக்கு அழவைத்தது படம். மறப்போம். மன்னிப்போம். 

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக் கு vinolishan@gmail.com 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close