ஸ்கிரிப்ட் படிக்கும் போதே சிரிச்சிட்டு தான் இருந்தேன்: 'தமிழ்படம் 2' கலை இயக்குநர் செந்தில் ராகவன் பேட்டி

  Soundarya Ravi   | Last Modified : 24 Jul, 2018 05:06 am
art-director-senthil-ragavan-about-working-experience-in-tamilpadam-2

எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றி.. ரொம்ப நாளுக்கு பிறகு எனக்கு கிடைக்கும் வெற்றியும் கூட.. சந்தோஷமாக இருக்கிறேன் என்று தொடங்கினார் கலை இயக்குநர் செந்தில் ராகவன். 

படம் வெளியாகி ஒரு வாரம் ஆன பிறகும் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் 'தமிழ்படம்-2' படத்தின் கலை இயக்குநர் தான் செந்தில் ராகவன். ஆய்வாளர் விஷால், கிருஸ்துமஸ் குகை, பாகுபலி செட் என படம் முழுக்க ஸ்ஃபூப் சினிமாவிற்கு தேவையான கச்சிதமான உழைப்பை கொடுத்து கவனம் ஈர்த்தவர். இதற்கு முன் யாமிருக்க பயமேன், ஆந்திரா மெஸ், களம், கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிவர்.

ஆனால் இனி இவர் ‘தமிழ்படம் ‘ செந்தில் ராகவன் என்றே அறியப்படுவார். அத்தனை உழைப்பும் கற்பனையும் இன்று படத்தோடு சேர்த்து கலை இயக்கத்தை கவனித்து மக்களை பாராட்ட வைத்திருக்கிறது. அவரிடம் தமிழ் படத்தின் வெற்றி குறித்தும் அனுபவம் குறித்து பேசினோம்.

தமிழ் படம் வாய்ப்பு கிடைச்சப்போ எப்படி இருந்தது?

நான் ஒரு விளம்பர வீடியோவில் வேலை செஞ்சிருந்தேன். அது மூலமாக தான் இந்த வாய்ப்பு கிடைச்சது. அதற்கு முன் இந்த டீமில் எனக்கு யாரையும் தெரியாது. நான் தமிழ்படம் முதல் பாகத்தின் பெரிய ரசிகன். அந்த படத்தில் கலை இயக்கம் சூப்பராக இருக்கும். இப்போ அந்த வாய்ப்பு நமக்கு கிடைச்சிருக்கு, அவர விட நாம நல்ல பண்ணனும் என்ற எண்ணம் இருந்தது. அது தான் என் முன் வைக்கப்பட்ட பெரிய சவால். 

தமிழ்படம் ஸ்கிரிப்ட் படிக்கிறப்போ என்ன நினைச்சீங்க? 

ஸ்கிரிப்ட் படிக்கிறப்போவே சிரிச்சிட்டே தான் படிச்சேன். ஸ்கிரிப்ட்ல இருந்ததுல கொஞ்சம் தான் நாம பார்த்திருக்கோம். எடுக்காத சில விஷயங்களை தனியா ஒரு படமா எடுக்கலாம். அதுவே அவ்வளவு நல்லா இருக்கும். எப்போதும் ஸ்கிரிப்ட் கொடுத்துட்டு இரண்டு நாளாவது டைம் கொடுப்பாங்க. ஆனால் ஒரு நாள் ஈவினிங் என்கிட்ட ஸ்கிரிப்ட்ட கொடுத்துட்டு இரவே சொல்லிடுங்க செந்தில் என்றார்க்ள.. போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிவதால் எனக்கு பெரிதாக டைம் கொடுக்கவில்லை. அன்று இரவே நான் என்ன பண்ணலாம் என்று கூறிவிட்டேன். 

ஒரு படத்தின் கதையை பொறுத்து கலை இயக்கம் செய்யலாம்.. ஆனால் தமிழ்படத்தை பொறுத்தவரை 50க்கும் மேற்பட்ட படங்கள், ஹாலிவுட் சீரிஸ், அரசியல் நிகழ்வுகள் கொண்ட ஸ்ஃபூப் சினிமா.. அதற்காக எப்படி உழைத்தீர்கள்? 

நிறைய ரிஃப்ரென்ஸ் எடுக்க வேண்டி இருந்தது. இந்த படத்தை பொறுத்தவரை எந்த காட்சியை காட்டவிருக்கிறோம் என்பதை உணர்த்தினால் மட்டும் போதும். அந்த படத்தின் கலை இயக்கத்தை அப்படியே செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை தான் செய்திருந்தோம். படத்தில் பணமதிப்பிழப்பு பற்றிய காட்சி ஒன்று வரும். அதற்காக எங்களுக்கு பழைய 500 ரூபாய் டம்மி நோட்டுகள் கிடைக்கவில்லை. இனி அது பயன்பெறாது என்று எடுத்துப் போட்டுவிட்டார்கள். அதை ரொம்ப தேடினோம். பின்னர் அந்த நோட்டுகளை அடித்தோம். இதுபோல கடைசியில் கிளைமாக்ஸில் ஒரு ஐய்யனார் சிலை தேவைப்பட்டது. அதற்காக நாங்கள் சொல்லி வைத்திருந்த சிலை கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு இடத்தில் உடைந்து கிடந்த சிலையை எடுத்துவந்து தயார் செய்து வைத்தோம். அந்த சீனுக்கு அச்சிலை கச்சிதமாக இருந்தது. அந்த சிலையை நாங்களே உருவாக்கி இருந்தால் கூட அப்படி இருந்திருக்காது. 

பாகுபலி, ரெமோ போன்ற மக்கள் அதிகம் பார்த்த செட்களை மீண்டும் உருவாக்கும் போது என்னென்ன சவால்கள் இருந்தன?

பாகுபலி செட்க்கு பெரிய ஏரியா தேவைப்பட்டது. ஐதராபாத்தில் மிக பெரிய இடத்தில் அதை அவர்கள் செய்திருந்தார்கள். ஆனால் எங்களுக்கு 3 மாதத்தில் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயம். மே மாதமே படம் வெளியாக வேண்டியது. பின் சினிமா ஸ்டிரைக்கினால் முடியாமல் போனது. எனவே மே மாதத்திற்கு பட வேலைகள் முடிந்திருக்க வேண்டும். எனவே என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தோம். பின் ஃபிலிம் சிட்டியில் பெரிய இடத்தில் பாகுபலி செட் போட தொடங்கினோம். நடுவில் வந்து பார்த்த இயக்குநர், "நாம பண்றது ஸ்ஃபூப் படம். இவ்வளவு ஒரிஜினாலா பண்ண வேண்டுமா" என்று கேட்டார்.

பின் கேம் ஆஃப் த்ரோன்ஸ், லார்ட் ஆப் தி ரிங்ஸ், டாவின்சி ஓவியங்கள் போன்றவற்றை வைத்து செட் போடலமே என்றார். அது எப்படி சார் செட் ஆகும் என்று கேட்டேன். எல்லாம் இங்க இருந்து போனது தான் செந்தில் என்று சிரித்துக்கொண்டே கூறினார். பின் அவர் கூறியது போல மாற்றங்கள் செய்தோம். 

'விஷால் ஆய்வளார்-சிடி தடுப்பு பிரிவு' யாரோட ஐடியா? 

அது ஸ்கிரிப்ட்ல இல்ல. ஆர்ட் டீமோட ஐடியா தான். விஷால் ஆய்வாளர் மட்டும் இல்ல.. அந்த கமிஷனர் ஆபிஸ் செட்டில் பல நுணுக்கங்கள் இருக்கும். அந்த செட்டில் முன்னாடி இருந்த கமிஷனர்கள் பெயர்கள் எல்லாம் குறிப்பிட்டிருக்கும் பலகையில் ஏ.சத்யதேவ், வி.விஜயகுமார், எம்.ஜி.ஆர்.நாதன்(எம்.ஜி.ஆரின் பழைய பெயர் நாதன்), ஆர்.அலெக்ஸ்பாண்டியன் போன்றவற்றை வைத்திருந்தோம். ஏ.சத்யதேவ் என்பது அஜித்குமார் சத்யதேவ். அதுபோல விஜய், ரஜினி பெயர்கள் வைத்தோம்.

இப்படி முடிந்த இடத்தில் எல்லாம் கற்பனையை சேர்த்தோம். இவற்றை திரையில் மக்கள் "அத பாருடா.. இத பாருடா" என கண்டுப்பிடித்து ரசித்தார்கள். கமிஷ்னர் செட்டை பார்த்துவிட்டு அமுதன் சிரித்தார் இருந்தார். அதுவும் விஷால் பெயரை பார்த்தும், "நான் ஒருபக்கம் செய்றேன்.. நீங்க ஒரு பக்கம் செய்றீங்க" என்று கூறினார். அப்போது செட்டில் வேலை செய்தவர்களிடமே அந்த செட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. 

இதே போல ஒரு சீனுக்காக குகை தேவைப்பட்டது. ஒரிஜினல் குகைக்கு சென்று படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை. மேலும் அது சின்ன சீன். அதற்காக ஒரு குகையை உருவாக்க முடியாது. அந்த சீன் படப்பிடிப்பு கிருஸ்துமஸ் சீசனில் நடந்தது. ஒருநாள், “செந்தில் எங்க வீட்டுக்கிட்ட ஒரு கிருஸ்துமஸ் குகை பார்தேன்.அது மாதிரியே செட் போட்டால் என்ன” என்றார். அவர் அப்படி கூறியவுடன் அனைவரும் சிரித்து விட்டோம். பின் அதையே செய்தோம். அதற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

வழக்கமான கலை இயக்கத்தை விட இதுபோன்ற எளிமையான காட்சிகளுக்கான கலை இயக்கம் கடினமாக இருந்திருக்குமே?

ஆமாம்.. ஆனால் இயக்குநர் எங்களை நம்பினார். உங்களால் செய்ய முடியும் செந்தில் என்பார். அதனால் அனைத்து சவால்களையும் ஏற்று செய்தோம். படத்தில் ஒரு சீனில் விமானம் காட்டப்பட்டு இருக்கும். அதனை முழுவதுமாக உருவாக்கினோம். இதுவரை ஃபோம் போர்டில் விமானம் செய்திருப்பார்களா என தெரியவில்லை. வழக்கமாக செட் போடும் போது ஸ்கேட்ச் போட்டு கொடுத்தவுடன் கார்பென்டர்கள் செய்வார்கள். ஆனால் இந்தபடத்தில் நாங்களே பல வேலைகளை செய்தோம்.

இந்த படத்தில் மிகவும் கடினமாக உழைத்த செட்?

பாகுபலி செட் போட 13 நாட்கள் ஆனது. பொங்கல் விடுமுறையின் போது அந்த வேலையை செய்தோம். ஆட்கள் குறைவாகவே இருந்தனர். அது மிக பெரிய சவாலாக இருந்தது.

அதற்கு பின் ‘எவடா உன்ன’ பாடல் காட்சிகளுக்காக ஒரு பார் செட் போட்டோம். அது சர்பத் கடை ஆனால் பார் செட் போல இருக்க வேண்டும். அதில் சின்ன சின்ன விஷயங்கள் செய்திருப்போம். பின் அதே பாடலுக்காக ஹைடெக் பார் காட்சிகள் எடுக்க வேண்டும். அடுத்த ஒரு நாள் மட்டும் தான் இருக்கிறது. பிறகு சில கால்ஷீட் பிரச்னைகள். எனவே அந்த சர்பத் கடை செட்டப்பை அப்படியே மாற்றி ஹைடெக் பாராக செய்தோம். அது சவாலாக இருந்தது.

தமிழ்படம் குழுவுடன் வேலை செய்தது பற்றி?

அவர்கள் அனைத்தையும் பார்க்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் ஒரு செட்டை உருவாக்கி கொடுத்தால், கேமரா ஆங்கிள்கள் மூலம் அதனை இன்னும் சரியாக காட்டுவார்கள். காலப்போக்கில் ஆர்ட் டீமை ஒட்டுமொத்த படக்குழுவும் உற்சாகப்படுத்த தொடங்கினர்.

ஆர்ட் டீம் எப்போதும் உழைக்க வேண்டி இருந்தது. எனவே படக்குழுவின் ஆதரவு மிகவும் முக்கியம். இயக்குநர் வேலை வாங்கும் விதம் நல்லா இருக்கும். தயாரிப்பாளரை பொறுத்தவரை தரத்தில் காம்பிரமைஸ் பண்ண மாட்டார்கள்.

இதற்கு முன் வேலை பார்த்த படங்கள் பற்றி?

கலை இயக்கத்தை பொறுத்தவரை ஸ்கிரிப்ட் படி தான் அனைத்துமே. சமீபத்தில் ஆந்திரா மெஸ் என்ற படத்தில் வேலை பார்த்திருந்தேன். அதில் வட மாநிலம் போன்ற செட் தேவைப்பட்டது. படத்துக்கு அந்த செட் மிகவும் வலிமை சேர்ப்பாதாக இருந்தது. என்னுடைய முதல் படம் யாமிருக்க பயமேன். அந்த படத்தில் பங்களா காட்சிகளை உத்தர்காண்டில் மொழி தெரியாத இடத்தில் எடுத்தோம். முதல் படமே கடினமாக தான் இருந்தது. அங்கு இருப்பவர்கள் பலரிடம் வரைந்து காட்டி தான் புரியவைக்க வேண்டி இருந்தது. வேறு விதமான அனுபவம் அது.

கலை இயக்குநர் ஆக காரணம்?

என் குடும்பத்தில் பெரியப்பா, அப்பா, அண்ணா என அனைவரும் கலை இயக்குநர்கள் தான். ஆனால் நான் முதல் படம் கமிட் ஆகும் வரை அந்த விஷயம் யாருக்குமே தெரியாது. அந்த அடையாளத்தோடு நான் துறைக்குள் வர விரும்பவில்லை. அவர்களை பார்த்து பார்த்து தான் இந்த துறையின் மீது ஆர்வம் வந்தது.

இந்த துறைக்கு வரும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

இத கடினமான துறைதான். ஆனால் அனைவரும் இதற்குள் வருவது குறித்து யோசிக்க மாட்டார்கள். அந்த ஆர்வம் இருக்க வேண்டும். அப்படி உள்ளே நுழைந்ததும் ஒரு வேலையை சரியாக செய்துவிட்டால் கிடைக்கும் மனநிறைவு எல்லா கஷ்டங்களையும் போக்கிவிடும்” என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close