• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

சூர்யா எனும் சாமானியன் - பிறந்த நாள் ஸ்பெஷல்!

  பால பாரதி   | Last Modified : 23 Jul, 2018 04:30 pm

suriya-birth-day-special

வசூல் நாயகன்:

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டு வசூல் வேட்டை நாயகனாக ஓடிக்கொண்டிருப்பவர் சூர்யா. தமிழ் சினிமாவைப் போலவே, அதற்கு சற்றும் குறையாமல் தெலுங்கில் இவரது படம் ரிலீஸ் என்றால் அங்கும் திருவிழாதான்.

முன்னணி ஹீரோவாக மாறிய பிறகும் கதை கேட்பதில் தொடங்கி, படப்பிடிப்புக்கு வந்து செல்வது வரைக்கும் அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரின் நாயகனாக இருந்து வருகிறார். படப்பிடிப்பு இருக்கும் தேதிகளில் சூர்யா, எந்த ஒரு நிகழ்ச்சியும் ஒப்புக்கொள்வதில்லை. ’தன்னை வைத்துப் படம் தயாரிக்கும்  ஒரு தயாரிப்பாளர் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது’ என தந்தை சிவக்குமார் சொன்ன அட்வைஸ் தான் அதற்கு காரணம். இதை சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியும் பின்பற்றுகிறார்.

ரியல் ஹீரோ:

’தனக்கு ரசிகனாக இருப்பவர்கள் குடும்பத்துக்கு பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும்’  என்பது சூர்யாவின் விருப்பம். ஒரு கல்லூரி நிகழ்ச்சியிலோ, அல்லது பொது நிகழ்ச்சியிலோ ‘இளைஞர்கள் முதலில் குடும்பத்தை கவனியுங்கள். அப்பா, அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்பதை வலியுறுத்தாமல் மேடையை விட்டு இறங்கமாட்டார். 

சமீபத்தில், காரில் செல்லும்போது தன்னைப் பைக்கில் பின் தொடர்ந்து ஒரு ரசிகன் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்ததும் காரை நிறுத்தி, ‘எதற்காக இப்படி ஒரு அபாயப் பயணம். நடிப்பது என் தொழில். அதேபோல உன் குடும்பத்துக்காக நீயும் உழைக்கணும். வீட்டுக்கு திரும்புங்க’ என அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தபோது, அந்த ரசிகனின் மனதில் ஆனந்தம் பூத்தது.  அதேமாதிரி; காரில் வரும் வழியில், ஒரு பெண்ணிடம் கலாட்டா  செய்துகொண்டிருந்த சிலரைப் பார்த்து பெரும் கோபம் கொண்ட சூர்யா, காரை விட்டு இறங்கி அவர்களிடம் வாக்குவாதம் நடத்தி, பிறகு அடித்து விரட்டி, அவர்களிடமிருந்து அந்தப் பெண்ணை பாதுகாத்து, தன்னையொரு ரியல் ஹீரோவாகவும் நிரூபித்தார். 

’அகரம்’ வழியாக சிகரம் தொட்டவர்: 

கல்வியை ஒரு எட்டக் கனியாக நினைத்து ஏங்கும் திறமையான ஏழை மாணவ, மாணவிகளுக்காக சூர்யா உருவாக்கிய அமைப்புதான்  ‘அகரம் அறக்கட்டளை’. இந்த அமைப்பு வழியே ஒவ்வொரு ஆண்டும், மாவட்டம் தோறும் தனது ’அகரம் ஃபவுண்டேஷன்’ நிர்வாகிகள், தன்னார்வளர்களை அந்தந்தப் பகுதிகளுக்கே அனுப்பி திறமையான, ஏழை எளிய மாணவ - மாணவிகளைக் கண்டெடுத்து, அவர்களுக்கு உயர்கல்வி தருவதில் முழு மூச்சாக ஈடுபட்டு ’அகரம்’ வழியாக சிகரம் தொட்டுள்ளார் சூர்யா.

விளம்பர படங்களில் நடிப்பது ஏன்?

‘முன்னணி நடிகர்கள் சிலர் விளம்பரப் படங்களில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், சூர்யாவை விளம்பரப்படங்களில் பார்க்க முடிகிறதே?’ என பலரும் கேட்கிறார்கள். தான் விளம்பர படங்களில் நடித்து கிடைக்கும் கடைசி ஒரு ரூபாய் வரைக்கும் தனது ‘அகரம் ஃபவுண்டேஷன்’ நிறுவனக் குழந்தைகளின் கல்விக்காகவே செலவிடுகிறார் சூர்யா. அதற்காக மட்டுமே விளம்பர படங்களில் நடிக்கிறார்.     

நல்ல தயாரிப்பாளர்: 

சூர்யா தனது பிள்ளைகள் தியா, தேவ் பெயரில் தொடங்கப்பட்ட 2டி தயாரிப்பு நிறுவனம் வழியே அனைவரும் விரும்பும் நல்ல படங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதில் கொஞ்சமும் சமசரம் செய்து கொள்ளாதவர்.  தான் நடிக்கும் சினிமாவை  தேர்வு செய்வதில் எப்படி கவனம் செலுத்தி வருகிறாரோ அந்த அளவுக்கு தான் தயாரிக்கும் சினிமாவிலும்  மிகுந்த கவனம் செலுத்துபவர். தான் தயாரித்த முதல் படமான ‘பசங்க 2’ தொடங்கி தற்போது வெளிவந்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ வரைக்கும் அவரது தேர்வு ரசிக்கும் படியாகவே இருக்கிறது. 

 

குடும்பத் தலைவன் :

’லட்சுமி இல்லம்’ என தனது அம்மா பெயரில் ஒரு அன்பு மாளிகையை உருவாக்கி அதில் தன் அப்பா, அம்மா, தம்பி  கார்த்தி குடும்பம், தன் குடும்பம் என எல்லோரையும் ஒரே இடத்தில் வசிக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறார் சூர்யா. அவரது கூட்டுக் குடும்ப நேசத்தை வீட்டு விஷேசங்களுக்கு வரும் உறவினர்கள், ’‘மனைவியை கவனிச்சிக்குறதுல நம்ம சூர்யா மாதிரி இருக்கணும்!’’ என சொல்வது வழக்கம். அதை எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கும் சூர்யா, பெற்றோர்களை இந்தியாவில் ஒரு இடம் விடாமல் சுற்றுலா அழைத்துப்போவதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தால் ஒரு மகனாக, ஒரு கணவனாக, பிள்ளைகளுக்கு அப்பாவாக பார்க்க முடியுமே தவிர நடிகனாக பார்க்கவே முடியாது. திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த மனைவி ஜோதிகா,  ‘குழந்தைகள் வளர்ந்துட்டாங்க. இனி சினிமாவில் நடிக்கலாமே?’ என சொன்னபோது, அவரது உணர்வுகளை மதித்து நடிக்க அனுமதித்திருக்கிறார்.

சூர்யா எனும் சாமானியன்: 

இப்படி ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக, சமூக சிந்தனையாளனாக, குடும்பத் தலைவனாக எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்து வரும் சூர்யா, பொது விஷயங்களிலும், மக்கள் சார்ந்த நிகழ்வுகளிலும் தன்னை ஒரு சாமானியனாக அடையாளப்படுத்திக் கொள்வதையே விரும்புகிறவர். 

இந்த குணம்தான் சிறு வயதில் ஒரு  ஃபேக்ட்ரிக்கு வேலைக்கு போன ஒரு இளைஞனை, இன்று காலம் ஒரு பெரும் ஃபேக்ட்ரியை (படத் தயாரிப்பு நிறுவனம்) உருவாக்கியுள்ள மாமனிதனாக உயர்த்தியிருக்கிறது!  ஹேப்பி பர்த் டே சூர்யா...! 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close