மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 2 - யாருக்கு அசிங்கம்?

  இந்து லோகநாதன்   | Last Modified : 25 Jul, 2018 06:32 pm
mini-series-views-on-actor-sri-reddy-issue

முதல் அத்தியாயத்தைப் படித்து விட்டு "ஸ்ரீ ரெட்டி பத்தி ஏன் எழுதனீங்க? அவங்களுக்கு ஏற்கெனவே தேவையான அளவு கவனம் கிடைச்சிடுச்சு. நீங்களும் அவங்களப் பத்தியே தொடர்ந்து எழுதிட்டு வர்றது அவங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரில்ல இருக்கு!' எனவும், ''நீங்க அவங்கள ஆதரிச்சிருக்கீங்களா, இல்ல எதிர்த்திருக்கீங்களா?" எனவும் வித விதமாக விமர்சனங்கள் வந்தபடி உள்ளன.
ஆனால், இந்தத் தொடரின் நோக்கம் அவரை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ நிச்சயமாக அல்ல. 

முதல் அத்தியாயத்திலேயே நான் கூறியது போல இது மிகவும் முக்கியமான விவகாரம். அனைவரும் கவனத்தில் கொண்டு தத்தம் கருத்துக்களின் வீரியங்களை சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டிய விவகாரம். இதை விவாதிப்பதன் மூலமும், இதற்கு எதிர்வினை ஆற்றுபவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அலசுவது மூலமும் இத்தனை நாள் நம் சமுதாயக் கட்டமைப்பிலுள்ள ஓட்டை உடைசல்களையும், தவறான மரபுகளையும் எளிதில் கண்டறிந்து அதற்கான தீர்வை முடிந்தவரையில் உள்ளுணர்ந்து செயல்படுத்துவதுதான்.

வற்புறுத்துதல் எனும் நோய்

ஸ்ரீ ரெட்டியிடம் 'ஓர் இரவு தன்னுடன் கழிக்க வேண்டும்' என ஓர் இயக்குநர் கூற, 'நான் யோசிக்க வேண்டும்; சிறிது அவகாசம் வேண்டும்' என அவர் கேட்க, அடுத்து வந்த இரண்டு நாட்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை அனைவரின் முன்னும் 'சரியாக நடிக்கவில்லை' எனக் குறை சொல்லியும் திட்டியும் அவமானப்படுத்தியுள்ளார். அந்த நெருக்கடியினாலேயே தான் அவருடன் நேரம் செலவழிக்க விருப்பமில்லாமல் சம்மதித்ததாக ஒரு நேர்காணலில் ஸ்ரீ ரெட்டி குறிப்பிடுகிறார். 

ஆக, ஒரு பெண் தான் யாருடன் படுக்க வேண்டும் என்பதைக் கூட சுயவிருப்பமின்றி இன்னொருவரின் வற்புறுத்தல் மற்றும் கட்டாயத்தின் பேரில் முடிவு செய்ய வேண்டியுள்ளது. பெண் என்று இல்லாமல் ஓர் ஆண் இந்த வற்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தால் அதுவும் கண்டிக்கத்தக்கதே!

சராசரியாக இங்கு பெண்களுக்கு கல்யாணத்திற்கு முன்னான வன்புணர்தல் கொடுமைகளை விடக் கல்யாணத்திற்குப் பின்தான் அக்கொடுமை அதிகமாக இருக்கிறது எனலாம். நம் ஊரைப் பொறுத்தவரை பெரும்பாலும் உடலுறவு கொள்வதற்காக சட்டப்படி வாங்கிய அனுமதியே கல்யாணச் சான்றிதழாக இருக்கிறது. அதிலும் ஓர் இணை தன் இணையின் சம்மதத்தை / விருப்பத்தை அறிந்த பின்னரே உடலுறவு கொள்ளுதல் உத்தமம். ஆனால், நம் வீட்டுப் பெரியவர்களோ ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாவிட்டால் கூட, 'புருஷன்தான தொட்டான். பேசாம இரு' என்று கூறுவதில் வல்லவர்கள். பரஸ்பரம் புரிதலும் விருப்பமும் வந்த பின்னரே அடுத்த கட்டத்திற்கு நகருதல் சாலச் சிறந்தது.

எதிர்வினை என்னும் அச்ச உணர்வு

ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 'உங்க பிரச்சனைய சமூக வலைதளங்கள்ல போடாம காவல்துறையில போய் நேரடியா புகார் கொடுங்க' என்று கருத்து தெரிவித்ததற்கே பவன் கல்யாணின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கொதித்து எழுந்திருக்கிறார்கள்.

இதில் ஸ்ரீ ரெட்டி செய்தது சரி என்றோ, தவறு என்றோ அல்லது தனிப்பட்ட முறையிலோ எந்த விதத்திலும் அவர் கருத்துக் கூறவில்லை. வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பாராமல், ஒரு பொறுப்பான நடிகராக பொதுவுடைமையான விஷயத்தையே அவர் கூறியிருக்கிறார் இதைக் கூடக் கூறக் கூடாதென்றால், பின் நாளை இது போன்றதொரு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணொருத்தி எப்படி தைரியமாகத் தனக்கு நேர்ந்தவற்றை வெளியே சொல்ல முன்வருவாள்?

இதில் சென்னை அயனாவரத்தில் தொடர்ந்து ஏழு மாதங்களாக போதை ஊசி போடப்பட்டு பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட அந்த 12 வயது சிறுமி பற்றி, 'இத்தனை மாசம் நடந்துச்சே, இதையெல்லாம் அந்தப் பொண்ணுக்கு வீட்டுல சொல்லணும்னு தோணுச்சா? இத்தனை மாசமும் அந்த பொண்ணோட சம்மதம் இல்லாமலா நடந்துருக்கும்? இதெல்லாம் நம்பும்படியாக இல்லையே' என தோண்டி துருவி ஆராய்ச்சி செய்த சமூக விமர்சகர்களின் மனசாட்சி இல்லாத மொண்ணைத்தனமானக் கருத்துக்கள் வேறு. 

நாம்தான் எந்த ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டுக் கூறினாலும் அதைக் கேட்கும் நிலையிலேயே இல்லையே. அப்படியே அதைக் கேட்டால் கூட ' நீ ஏன் அங்க போன? நீ ஏன் அதப் பண்ண? அது உன் தப்புதான்' என்று நம் குழந்தைளையே அரட்டியும் மிரட்டியும் வைத்திடுவோமே! பாதி பெண் குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர் மீது இருக்கும் பயத்தினாலேயே தங்களுக்கு நேரும் பாலியல் குற்றங்களை வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். 

ஏன் எனக்கும் என் தோழிகளுக்குமே ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் மக்களின் எதிர்வினையைப் பார்த்து வருங்காலத்தில் நமக்கே இது போன்ற பிரச்சனைகள் எதுவும் வந்தால், அதற்கு நம் நண்பர்கள் நம்மை 'மட்டுமே' குறை சொல்வரோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.

யாருக்கு அசிங்கம்?

நம் ஊரைப் பொறுத்தவரை பெரும்பாலும் பாலியல் சார்ந்த பிரச்னைகளுக்குப் பெண்களே 'விக்டிம்' ஆக்கப்படுகின்றனர். "அவன் உன் போட்டோவ வச்சு ஒண்ணு கணக்க ஒண்ணு பண்ணிட்டான்னா அப்பறம் யாருக்கு அசிங்கம்? உனக்குத்தானே அசிங்கம்" இதை கேட்டிராத பெண்களே இங்கு இருக்க முடியாது.

சமீபத்தில் 'லென்ஸ்' என்று ஒரு படம் வந்தது. ஒரு புதுமணத் தம்பதியின் முதலிரவுக் காட்சியை அவர்களுக்குத் தெரியாமல் படம் பிடித்து சிலர் இணையதளத்தில் வெளியிட, அது தெரியவந்த அந்த மனைவி அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வாள். பின் அந்த வீடியோ வெகு வேகமாக இணையத்தில் பரவுவதற்குக் காரணமான காட்சி சம்பந்தப்பட்ட ஒருவனின் மனைவியைக் கடத்திக் கொண்டுவந்து அவளை மயக்க நிலைக்குத் தள்ளி, அவள் உடைகளைக் களைந்து அவள் கணவனுக்கே அதை நேரடியாக ஒளிபரப்பி அவனைக் கூனிக் குறுக வைத்து பழிவாங்குவதாக கதை நகரும். இந்த இரண்டு விஷயங்களிலுமே பெண்தான் 'விக்டிம்' ஆக சித்தரிக்கப்படுகிறாள். முதலிரவுக் காட்சி வெளியானாலுமே அதில் கணவன் - மனைவி இருவருமே இருந்தாலுமே அசிங்கப்பட்டு, அவமானப்பட்டுக் கூனிக் குறுகுவதில் பெரும் பங்கு மனைவிக்கு (அதாவது ஒரு பெண்ணுக்கு) இருப்பதாகவே சமூகத்தால் நம்பவைக்கப்படுகிறது. 

'இவள் அழகு' என்றொரு குறும்படத்தைப் பார்த்திருப்பீர்கள். தன்னுடைய குளியலறைக் காணொளி வேகமாக வலைதளங்களில் பரவ, அதனால் வருத்தமடையும் பெண்ணொருத்தி பின் தைரியம் வந்தவளாய் மறுபடி தன் அலுவகம் சென்று அலுவல்களை கவனிக்க ஆரம்பிப்பாள். அலுவலக நண்பர்கள் அனைவரும் அவளை வியந்து பார்ப்பார்கள். அலுவலகத் தோழி விசாரித்ததற்கு, 'என்னோட வீடியோக்கு அப்பறம் இன்னொரு நடிகையோட வீடியோ வந்துச்சு. அப்பறம் என்னை மக்கள் மறந்துட்டாங்க. அவ்ளோதான், நானும் என் வாழ்க்கைய பாக்க ஆரம்பிச்சிட்டேன்' என்று தெளிவாகக் கூறுவாள். 

அதற்காக நம் அந்தரங்கமான விஷயங்கள் வெளியே பரவினால் வருத்தப்படக்கூடாதா எனக் கேட்டால், தாராளமாக ஒரு சில நொடிகள் வருத்தப்படுங்கள். அது மனித இயல்பே! ஆனால் அடுத்த சில நொடிகளில் இயல்பாகிவிடுங்கள். ஏனென்றால் இந்த இடத்தில் உங்கள் அந்தரங்களை குடைந்து உங்களுக்கு மன உளைச்சல் கொடுக்க ஊருக்குப் பரப்பியவன்தான் தவறு செய்தவன். தண்டனை அவனுக்கே போய் சேர வேண்டும். அவனது நோக்கமே உங்களுக்கு மன உளைச்சல் கொடுப்பதாகத்தான் என இருக்கவே நீங்கள் இயல்பாய் இருத்தலின் மூலம் அவன் நோக்கத்தை நிறைவேற விடாமல் செய்கிறீர்கள். இதைவிட சிறந்த அவமானமும் தண்டனையும் வேறென்ன இருக்கமுடியும்?

இதைப்போலவே நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை 'ஏமாற்றிவிட்டார்கள்' என்றும், தான் 'அவமானப்பட்டேன்' எனவும் ஸ்ரீ ரெட்டி கூறும் அந்த பதங்களை நான் எதிர்க்கிறேன். அவர் குற்றச்சாட்டு உண்மையானதாக இருந்தால் மெய்யாகவே வருத்தப்பட வேண்டியது அதைச் செய்தவர்தானேயொழிய இவர் இல்லை. இங்குதான் குற்றம் செய்தவரைத் தவிர, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் வருத்தப்படும் அவல நிலையெல்லாம். அதிலும் அதில் சம்பந்தப்பட்டவர் பெண்ணாக இருந்தால் போயே போச்சு. அனைத்துத் தவறுகளுக்கான பழியும் அவளே ஏற்றுக்கொள்ளும்படியாக ஆகி விடும். இந்த மனப்போக்கைத்தான் நாம் மாற்ற வேண்டும். அதற்கு பெண்களுக்கு சுயபுரிதல் மிக மிக அவசியம்.

பல காலம் முயன்றும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மக்களிடம் பகிரங்கப்படுத்த முடிவு செய்தார் ஸ்ரீ ரெட்டி. எல்லாவற்றும் உச்சமாக, பொதுவெளியில் ஆடைகளைக் களைந்து போராட்டம் செய்ததன் பின்னணியில் இருந்த உளவியல் என்ன?

தெலுங்கு திரையுலகில் எவ்வித முயற்சிகளும் போராட்டங்களும் பலன் தராத நிலையில், தன்னிடம் இருந்துவிட்டு வாய்ப்புத் தருவதாக உறுதியளித்து ஏமாற்றிவிட்டதாக இயக்குநர் முருகதாஸ் தொடங்கி நடிகர் ஸ்ரீகாந்த் வரை பலர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியதுடன் சென்னைக்கே கிளம்பி வந்துவிட்டார். சரி, ஸ்ரீ ரெட்டிக்கு என்னதான் வேண்டும்?

*** இன்னும் விரிவாக புரிந்து கொள்வோம் ***

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close