மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 3 - எதிர்ப்பும் ஆதரவும்

  இந்து லோகநாதன்   | Last Modified : 26 Jul, 2018 08:42 am
support-and-oppose-on-sri-reddy

"இந்தப் பொண்ணு யார் கூட எல்லாம் தன்னோட படுக்கையைப் பகிர்ந்துகிட்டான்னு ஒரு பெரிய பட்டியலே வெச்சிருக்கா. ஒரு முறை ரெண்டு முறை அவங்க படுக்கைக்கு கூப்பிட்டு, இவள் நம்பி ஏமாந்தான்னா பரவாயில்லை. தன்னை ஏமாத்ததான் செய்றாங்க, இது இப்படித்தான்னு தெரிஞ்சும் மறுபடியும் பலர் கிட்ட அதே தப்பை பண்ணியிருக்கா. இவ நினைச்சா வேணாம்னு சொல்லிட்டு வந்துருக்க முடியும். யாரும் அதைத் தாண்டி கைய கட்டிப்போட்டு கட்டாயப்படுத்தப் போறதில்ல. ஆனா அப்படி செய்யாம சினிமா வாய்ப்புக்காக இதையே தொடர்ந்து பண்ணினது அவளோட சம்மதத்தோடதான் எல்லாம் நடந்துருக்குங்கிறதத்தானே குறிக்குது? செய்றதையெல்லாம் செஞ்சுட்டு நியாயம் வேணும்னு நம்மகிட்டேயே வந்து கேட்டா அப்போ அது தப்பு தானே?

தன்னை எல்லாரும் பாக்கணும், எல்லாருக்கும் தன் மேல கவனம் திரும்பணும், எல்லார் மத்தியிலும் பேசப்படணும்னுதான் இப்படி எல்லா ஊடகங்களையும் கூப்பிட்டு பகிரங்கமா அந்த பொண்ணு பேசிட்டு இருக்கு." - ஸ்ரீ ரெட்டியின் அணுகுமுறையை எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் முதன்மைக் காரணங்கள் இவை.

"இவ்வளவு பேரையும் கூப்பிட்டு தனக்கு நேர்ந்த அவலங்களையும் மிரட்டல் வரும்னு தெரிஞ்சும் பெரிய புள்ளிகளோட பேரை தைரியமா சொல்லிருக்கான்னா அவளோட தைரியத்தை நாம நிச்சயம் பாராட்டியே ஆகணும்.

அதோட, பாலியல் சார்ந்த புகாரை காதுகொடுத்து கேட்டு தீர விசாரிச்சு நடவடிக்கை எடுப்பதோட மட்டுமில்லாம, இந்த மாதிரி நேரத்துலதான் நாம அந்தப் பொண்ணு பக்கம் நிக்கணும். சினிமாத் துறையிலுள்ள பாலியல் குற்றங்கள களையிறதுக்கு இந்தப் பொண்ணு வகுத்ததுதான் சரியான வழி!" - ஸ்ரீ ரெட்டியின் அணுகுமுறையை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் முதன்மை காரணங்கள் இவை. 

இந்த இரண்டு தரப்பு வாதங்களுமே ஏற்புடையதே. இதில் அவருக்கு எதிரானக் கருத்துக்களை அவரே முன்வந்து ஒத்துக்கொண்டது அவருக்கான எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்கிறது. மேலும், அவருக்கான ஆதரவின் சாராம்சம் ஆக்கத்திற்கு வித்திடுவதாய் உள்ளதால் நாம் இதன்பின் நம்பி நிற்கலாம்.

ஸ்ரீ ரெட்டியின் அரை நிர்வாணப் போராட்டத்தின் பின்னணியில் உள்ள உளவியல்தான் என்ன?

அவருடைய எதிர்ப்பாளர்கள் கூறியது போலவே 'கவனக் குவிப்பே'தான்! ஏனென்றால், அவர் நம் மக்களை மிக நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். அதுதான் நாம்! 

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கு ஒரு கமர்ஷியல் கலவைப் பூச்சு நமக்குத் தேவைப்படுகிறது. சினிமாவில் ஆரம்பித்து கடையில் வாங்கும் பொருட்கள் வரையில் எவ்வளவு முக்கியமான / அத்தியாவசியமான விஷயமாக / செய்தியாக இருந்தாலும் அது நம்மை நோக்கிச் வந்தடைவது அவர்கள் அதற்குப் பூசும் கமர்ஷியல் சாயத்தின் அளவைப் பொறுத்தே அமைகிறது. அதை நோக்கியே நம் கவனக்குவிப்பின் உளவியலும் பின்னப்பட்டுள்ளது. 

தேர்தல் வந்த சமயத்தில் 'நீங்க போட்டீங்களா?' என்ற ஒரு ஒற்றை வரி கொண்ட இரட்டை அர்த்ததுடன் ஆர்.ஜே. பாலாஜியின் வீடியோ ஒன்று படு வைரலானது. அவர் அந்த வீடியோ மூலமாகக் கூற வந்ததென்னவோ 'ஓட்டுப் போடுங்கள்' என்ற நற்கருத்தைத்தான் என்றாலும் அந்த சமூகக் கருத்தைப் பரப்புவதற்கே, ஒரு இரட்டை அர்த்த வசனம்தான் நமக்கு லேபிளாகத் தேவைப்படுகிறது. அந்த லேபிளைப் பார்த்து வரும் சிறு சிலிர்ப்புணர்வுக்குப் பின்னரே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஹெட் - செட்டை சொருகி அந்த வீடியோவுக்குள் பயணிக்கிறோம்.

யூட்யூபில், 'இருட்டு அறையில் இவர் செய்த இந்த காரியத்தைப் பாருங்களேன்'' வகை தலைப்புகள் கொண்ட காணொளிகள் பல, பலகோடிப் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருப்பதையும், உண்மையில் அந்தக் காணொளியில் தலை - வால் இல்லாத உலக மகா பொய்யான கிசு கிசுக்கள் இருப்பதையும் நீங்கள் நன்று அறிவீர்கள். அந்தப் போலி வீடியோவின் பார்வையாளர்களில் ஒரு பங்கு பார்வையாளர்களைக் கூட சமூக அவலநிலை குறித்த காணொளி பெற்றிருக்காது.

அந்தக் கவர்ச்சியான கமர்ஷியல் பூச்சையே ஸ்ரீ ரெட்டியும் தன் போராட்டத்தில் பயன்படுத்திக்கொண்டார். அதிகம் பிரபலம் இல்லாத ஒரு நடிகையைப் பிரபலமாக்க 'அரை நிர்வாணப் போராட்டம்' என்ற தலைப்பை விட வேறெந்த தலைப்பு பொருத்தமாக இருக்க முடியும்? அவர் கணித்ததைப் போலவே நம் கவனமும் அவர் மீது திரும்பியது. அவர் குற்றச்சாட்டை கவனிக்க ஆரம்பித்தோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தனக்கு நீதி கேட்கும் போராட்டத்துக்காக ஒரு பெண் தன் உடம்பையே ஆயுதமாக்கிக் கொண்டு பகிரங்கப்படுத்துகிறாள் என்றால், அதை அவருக்கு நேர்ந்தவற்றால் ஏற்பட்ட விரக்தியின் உச்ச நிலை என்பதைத் தவிர வேறு எப்படிச் சொல்ல முடியும்?

அவர் ஏன் தெலுங்கு படவுலகை விட்டு தமிழுக்கு வரவேண்டும்? அதுவும் 'பப்ளிசிட்டி'க்காக அவர் நடத்தும் நாடகம்தானே! அவருக்கு உண்மையில் என்னதான் வேண்டும்?

டோலிவுட்டிலேயே அவர் பலரை நம்பி ஏமாந்திருந்தாலும், அவர்கள் மீதானக் குற்றச்சாட்டுகளுக்கு பல வழக்குகள் இவர் காவல்துறையினரிடம் அளித்திருந்தாலும் அவர்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. அதன் நீட்சியாகவே தான் தமிழ்ப் பட உலகிற்கு வந்ததாகவும் இங்காவது தன் குற்றச்சாட்டுகளுக்கு செவி மடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற நம்பிக்கையிலும்தான் இங்குள்ள மீடியாக்களில் தான் முறையிடுவதாகவும் அவர் கூறுகிறார். ஒருவேளை அங்கேயே அவர் குற்றச்சாட்டு கவனிக்கப்பட்டிருந்தால் இங்கு அரைகுறை மீடியாக்கள் ஸ்ரீ ரெட்டியை வைத்து செய்யும் வியாபாரமும் அரங்கேறாமலேயே போயிருக்கும்.

மலையாளப் பட உலகில் நடிகை பாவனாவிற்கு ஓடும் காரில் பாலியல் தொல்லை நேர்ந்ததையும், அதையொட்டி நடந்த சம்பவங்களுக்கு உறுதுணையாக மலையாள நடிகைகள் இருந்ததையும் அதை அவர்கள் செயலில் காட்டியதையும் நாம் அறிவோம். அந்த ஒற்றுமைக் குறைபாடு தமிழ்ப்பட உலகில் இருப்பதை மறுக்க முடியாது. ஸ்ரீ ரெட்டி விவகாரம் என்று இல்லாமல், இது போன்ற தனிப்பட்ட நடிகை சார்ந்த பல விவகாரங்களில் சக நடிகைகள் ஆதரவாகக் கருத்துத் தெரிவிப்பார்களேயொழிய செயலில் ஆதரவாக இறங்கியதாக தரவுகள் எதுவும் இதுவரை பெரிதாக இல்லை. எனினும் இனி அதை நாம் எதிர்பார்க்கலாம் என்ற ஆரூடத்தை ஒருவாறு நமக்கு நாமே சொல்லித் தேற்றிக்கொள்ளலாம்

காரணம், இதுவரை இருபாலருக்கும் பொதுவாக 'நடிகர் சங்கம்' மட்டுமே இருந்துவந்த நிலையில், மேற்கண்ட சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கமாக, 'தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்' என்றொரு அமைப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது. இது திரைத்துறையின் 24 வெவ்வேறு கலைத்துறைகளில் இயங்கிவரும் பெண்களின் சார்பாக அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. வெளிப்புறப் படப்பிடிப்பில் நடமாடும் கழிப்பறை அமைப்பது, மாதவிடாய், மகப்பேறு காலங்களில் ஓய்வு நேரத்தை நீட்டிப்பு செய்வது, சம்பளத்தில் உள்ள பாலின பேதம் களைந்து சம உரிமை கோருவது, பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் சார்ந்த புகாரை கவனித்து நடவடிக்கை எடுப்பது எனப் பல்வேறு குறிக்கோள்களைக் கொண்ட இந்த அமைப்பிற்கு உதவி ஒளிப்பதிவாளர் செல்வி. வைஷாலி தலைவியாக செயல்பட்டு வர, இந்த அமைப்பிற்கு நம் இயக்குனர்களும் நடிகர்களும் பேராதரவு தெரிவித்து வருகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான முன்னெடுப்பே எனினும் இதில் முழுக்க முழுக்க பெண்களின் ஒற்றுமை ஒன்றே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

சக பெண் கலைஞர்களின் நியாயமானக் கோரிக்கைகள் கேட்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டும். 'திறமை'க்கு மட்டுமே இடம் இருக்க வேண்டிய இந்தத் தளத்தில் 'படுக்கையைப் பகிர்தலை' ஒரு தகுதியாகக் கருதி அதைத் திறமைக்கு சமமாக ஒரே தட்டில் வைத்து பின்னதுக்கு முன்னுரிமைக் கொடுத்து, முன்னதை பின்தள்ளும் நிலை இங்கே உள்ளது. அது தவறு. 'எனக்கு இந்த உடலுறவு வேண்டாம்' என்று சொல்ல தைரியம் இருத்தல் வேண்டும். அப்படிக் கூறுவது அந்தப் பெண்ணின் அடிப்படை உரிமை. அதையும் மீறி 'நீ என்னுடன் படுத்தால்தான் உனக்கு வாய்ப்பு' போன்ற வற்புறுத்தல் மொழிகளுக்கு இடமே இருக்கக்கூடாது. அதைத்தான் நாம் நடைமுறைப் படுத்த வேண்டும். அதற்காகத்தான் நான் பகிரங்கமாக என் பிரச்சனைகளைப் பகிர்ந்து வருகிறேன். இனி என் போன்று வாய்ப்பு தேட சினிமாவிற்கு வரும் எந்தப் பெண்ணிற்கும் இப்படி ஒரு நிலை வந்து விடவே கூடாது" என்ற ஸ்ரீ ரெட்டி எடுத்து வைக்கும் பொதுநலக் கோரிக்கையையும் கூட!

ஸ்ரீ ரெட்டி விவகாரத்தை சம்பந்தப்பட்ட திரைத்துறையினர் அணுகுவது ஒருபக்கம் இருக்கட்டும், அவரது ஃபேஸ்புக் பதிவுகளில் கமெண்ட்ஸ் பகுதியில் கொட்டப்பட்டும் கழிவுகளின் வெளிக்காட்டுவது என்ன? அந்தக் கருத்துகள்தான் பொதுமக்களின் எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பா? பொதுமக்கள் ஸ்ரீ ரெட்டியை எப்படிப் பார்க்கிறார்கள்?

*** தொடர்ந்து அலசுவோம் ***

- இந்து லோகநாதன்


முந்தைய அத்தியாயம்: மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 2 - யாருக்கு அசிங்கம்?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close