இரு துருவங்கள் - பகுதி 1 | தியாகராஜ பாகவதர் Vs பி.யூ.சின்னப்பா

  பால கணேசன்   | Last Modified : 26 Jul, 2018 06:29 pm
tamil-cinema-super-stars-thyagaraja-bhagavathar-vs-pu-chinnappa

மவுனப் படங்கள் காலாவதியாகி டாக்கீஸ் வெளிவர தொடங்கிய அந்த நொடியில் இருந்து தமிழ் சினிமா ரசிகன் அடிமையாக தொடங்கினான். இதில் அடிமையானான் என்கிற வார்த்தையை நான் குறை சொல்லும் தொனியில் எழுதவில்லை. சில நேரங்களில் இந்த அடிமைத்தனம் தேவை. சில பைத்தியக்காரத்தனங்களும், அபத்தங்களும் இல்லாமல் வாழ்க்கை ருசிப்பதில்லை. இவையின்றி  சுவாரஸ்யமற்ற ஒரு ஜடமாகத்தான் மனிதன் தென்படுவான். என்ன ஒன்று இந்த பைத்தியக்காரத்தனத்தின் அளவீடுகள்தான் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. அதுவே பல விதண்டாவாதங்களுக்கு அடிகோலும் பிரச்னையாகவும் உருவெடுக்கிறது. 

இந்த அடிமைத்தனம், பைத்தியக்காரத்தனம் இரண்டும் தொடர்ந்து இன்றுவரை உயிரோடு இருக்க ஒரு கனல் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்தக் கனலை அணையாமல் பாதுகாக்கும் தேவதூதர்களாக வண்ணத்திரையில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இரண்டு நடிகர்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களே அறியாமல் அவர்களுக்குள் ஒரு யுத்தம் உருவாகிறது. அந்த யுத்தத்தின் சிப்பாய்களாக ரசிகர்கள் இருத ரப்பும் இருக்க, ஒரு நீண்ட போர் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

சரி.. இந்த போரின் வேரான அந்த இருவரும் எப்படி ராஜாவானார்கள்? அப்படி என்ன அவர்களுக்குள் யுத்தம் மூளும் அளவிற்கு இங்கே சம்பவங்கள் நடந்தன என்பதையெல்லாம் சற்று பின்னோக்கி சென்று பார்த்தால் ஆச்சரியப்படும் வகையில் ஒற்றுமைகளும், எண்ணிப் பார்க்கவே இயலாத விஷயங்களும் ஏராளம் நடந்திருக்கின்றன. பி.யூ.சின்னப்பா - தியாகராஜ பாகவதர் தொடங்கி, எம்.ஜி.ஆர் - சிவாஜியில் வலுப்பெற்று, ரஜினி - கமலில் தீராத நோயாகி, விஜய் - அஜித்தில் கடுப்பேற்றி, சிம்பு - தனுஷில் சற்று தாக்கம் குறைந்து, விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயனில் வந்து நிற்கிறது. நாம் சுதந்திர இந்தியாவுக்கு முன்பிருந்து தொடங்குவோம். வாருங்கள்.

தொடக்கம்:

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் என்கிற எம்.கே.டி பாகவதர் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார். அற்புதமான பாடகர். 1910-ல் தஞ்சாவூரில் இருக்கும் மயிலாடுதுறையில், தங்க ஆசாரிக்கு மகனாக பிறந்த இவர், மொத்த தமிழகத்தையும் தன் வசீகர குரலால் ஆண்டவர். பொன்னிற மேனியும், வெண்ணிற சிரிப்பும் கொண்ட இவரின் ஆகிருதியைக் கண்டு மயங்காதோர் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத பாகவதர் ஒரு பாடகராக ஆகவேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார். ஆனால் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் பாடுவது போன்ற கலைகளை தொழிலாக நடத்துவதென்பது குடும்பத்திற்கே இழுக்கு என்பது மாதிரியான மனநிலை வேரூன்றி இருந்ததால் அவருக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கவில்லை. 

பின்னர் ஒருநாள் வீட்டை விட்டு பாகவதர் ஓடிப்போய்விட, சில வருடங்கள் கழித்து இன்றைய ஆந்திர மாநிலத்தின் கடப்பா நகரில் வைத்து இவரின் தந்தை இவரை கண்டடைந்தார். இவர் பாடிக்கொண்டிருக்க, அதை மெய் மறந்து பலரும் ரசிக்கும் காட்சியையும் கண்டார். மகனை தொடர்ந்து பாட ஊக்குவிக்க ஆரம்பித்தார். தியாகராஜனின் வாயிலிருந்து பக்தி பரவசமிக்க பாடல்கள் வரலாயின. பின்னர் ஹரிச்சந்திரா நாடகத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவரது பத்தாவது வயதில் கிட்டியது. அதில் மிக நன்றாக நடித்து, பாடி புகழ்பெற்றாலும் கூட நடிப்பின் மீது இவருக்கு அவ்வளவாக நாட்டம் இல்லை. சங்கீதம் கற்றுக்கொள்வதில்தான் அதிக ஆர்வம் இருந்தது. ஆறு வருடங்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டார் பாகவதர். 

புதுக்கோட்டை உலகநாதன் பிள்ளை சின்னப்பா என்கிற பி.யூ.சின்னப்பா 1916-ல் ஒரு நாடக நடிகருக்கு மகனாக புதுக்கோட்டையில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் படித்தாலும் கூட ஆரம்பத்தில் இருந்தே நாடக நடிப்பின் மீதே இவருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. தந்தை நாடக நடிகராக இருந்ததால் சிறுவயதிலேயே பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதுபோக மல்யுத்தம் மற்றும் சிலம்பம் கற்றுக்கொள்வதிலும் அதிக ஆர்வத்தை சின்னப்பா கொண்டிருந்தார். ஏழ்மையான குடும்பம் என்பதால் 5 வயதில் இருந்தே வேலைக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தமும் இவருக்கு இருந்தது. இவரின் நடிப்பார்வத்தை பார்த்த அவரின் தந்தை, சின்னப்பாவின் எட்டாவது வயதில் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த நாடகக்குழுவில் இவரை சேர்த்தார். ஆனால் அங்கே சரியான வேஷங்கள் கிடைக்காததால் நீண்ட நாள் அங்கே பணிபுரியாமல் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் குழுவில் சென்று இணைந்தார். 

ஒரிஜினல் பாய்ஸிலும் சிறு சிறு வேடங்கள் அளிக்கப்பட்டாலும் கூட அங்கே பல வித்தியாசமான  வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அங்கேயே தொடர்ந்து இருந்தார். ஒருநாள் அன்றைய நாடகத்திற்கான பாடலை தனியே இவர் மட்டும் பாடிக்கொண்டிருந்ததை கேட்ட மதுரை ஒரிஜினல் பாய்ஸ் உரிமையாளர் சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் இவர்தம் குரலிலும், திறமையிலும் மயங்கி உடனே அவர் சம்பளத்தை 15 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக மாற்றி ராஜபார்ட் வாய்ப்பும் வழங்கினார். நாடகங்களில் இவருக்கு ஜோடியாக பெண் வேடத்தில் எம்ஜிஆர் போன்றோர் நடித்தது இங்கே கொசுறுத் தகவல். 

சினிமா அழைக்கிறது:

ஒருவர் தங்க ஆசாரி மகன். இன்னொருவர் நாடக நடிகரின் மகன். இருவரின் வாழ்க்கையும் இணைந்த ஒரு புள்ளி திரைப்படம். அன்றைய நாடக நடிகர் எல்லோருக்குமான கனவு சினிமாவாக இருந்தது. ஆனால் சினிமாவை விட நாடகங்களுக்கு அதிக மதிப்பும் இருந்தது. பத்தில் ஒன்பது திரைப்படங்கள் மேடை நாடகங்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டன. அப்படி ஒரு வாய்ப்புதான் இருவருக்கும் கிட்டியது. 1934-ல்  பவளக்கொடி என்கிற மேடை நாடகத்தில் பாகவதரின் நடிப்பு மற்றும் பாட்டை கண்டு மயங்கிய லக்‌ஷ்மண செட்டியார் மற்றும் அழகப்ப செட்டியார் அதே கதையை திரைப்படமாக எடுக்கவும், அதில் பாகவதரை கதாநாயகனாக நடிக்கவைக்கவும் அணுகினர். படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் திரையரங்கில் இந்தப்படம் ஓடியது. 

அங்கே இன்னொரு பக்கம் பி.யூ சின்னப்பா ஒருபுறம் குஸ்தி, சிலம்பம் என இருந்தாலும் சங்கீதத்தை முறைப்படி கற்கவேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருந்தார். கற்கவும் செய்தார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் குழுவில் இருந்து வெளியில் வந்தபிறகு பளு தூக்குதல், சாகசங்கள் செய்தல், வாள் சண்டை பழகுதல் என நிறைய கற்றுக்கொண்டார். சொந்த கம்பெனி தொடங்கி இலங்கை வரை சென்று நாடகங்கள் போட்டார். 1936-ல் இவரின் சந்திரகாந்தா நாடகத்தை பார்த்து அதிசயித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தார் இவரையே கதாநாயகனாக வைத்து அதை திரைப்படமாக எடுத்தனர். இவ்வாறாக சின்னப்பாவும் சினிமாவில் குதித்தார்.

வளர்ச்சிப் பாதை:

பாகவதரின் இரண்டாவது படமான நவீன சாரங்கதாராவும் நன்றாக ஓடியதால், மூன்றாவது படமான சத்யசீலனை பாகவதரே சொந்தமாக தயாரித்தார். 1937-ல் இருந்து பாகவதரின் ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அந்த ஆண்டு இவர் நடித்து வெளியான சிந்தாமணி படம் தமிழில் ஒரு வருடம் தொடர்ந்து ஓடிய முதல் படம் என்கிற பெயரை பெற்றது. மதுரை சிந்தாமணி திரையரங்கம் தெரியுமா? அது இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களால் கட்டப்பட்டு, இந்தப் படத்தின் நினைவாக சிந்தாமணி என பெயர் சூட்டப்பட்டது. அதே வருடத்தில் எல்லீஸ்.ஆர். டங்கன் இயக்கத்தில் வெளியான அம்பிகாபதி படமும் தாறுமாறாக ஓட, பாகவதர் சூப்பர் ஸ்டார் ஆனார். 

தமிழின் முதல் முத்தக் காட்சியும், நாயகன் - நாயகியின் நெருக்கமான காதல் காட்சியும் இடம்பெற்ற முதல் திரைப்படமும் இதுவே. இந்தக் காட்சிகளின் மூலம் பாகவதர் இளைஞர், இளைஞிகளின் கனவு நாயகர் ஆனார். ஒரு புது சரித்திரம் எழுதப்பட்டது. பின்னர் வந்த திருநீலகண்டர், அசோக் குமார், சிவகவி ஆகிய படங்களும் ஹிட்டாக, ஒரு தனித்துவமிக்க ஆளுமையாக பாகவதர் உயர்ந்து நின்றார். அவர் காலடி மண் தேடி அலையும் ரசிகர்கள் உருவாகினர். 'மணந்தால் பாகவதரையே மணப்பேன்... இல்லையேல் மரிப்பேன்' என்று சூளுரைத்த பெண்கள் தமிழகமெங்கும் நிறைந்து இருந்தனர். 

சந்திரகாந்தா படத்திற்கு பிறகு 1937-ல் இருந்து 1939 வரை ராஜ மோகன், பஞ்சாப கேசரி, அனாதைப்பெண், மாத்ருபூமி ஆகிய படங்களில் நாயகனாக நடித்த சின்னப்பா பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இடையில் அவருக்கு வந்த பல வாய்ப்புகளை ஒதுக்கினார். அவரது குரல் வேறு மாறிவிட்டதால் நீண்ட நாள் விரதமிருந்தார். இதனால் உடல் மெலிந்து முன்பை விட ஸ்லிம்மாக மாறினார். 1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் உத்தமபுத்திரன் படத்தில் நடிக்க சின்னப்பாவை அழைத்தபொழுது மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இந்த முடிவு அவரின் தலையெழுத்தையே மாற்றி அமைத்தது.

தமிழில் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நாயகன் நடித்த படம் இதுவே. படம் வெளியிட்ட இடமெல்லாம் வெற்றிமேல் வெற்றி பெற்றது. பாகவதர் முன்னணியில் இருந்த நேரத்தில் இன்னொரு நடிகரின் படம் ஒன்று இவ்வளவு பெரிய பிரமாண்ட வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அந்த நொடியிலிருந்து தமிழ் சினிமாவில் இரு துருவங்கள் என்கிற கான்செப்ட் உண்டானது.

பாகவதரின் மிகப் பெரிய பலம் அவரின் தேனினும் இனிய குரல். இவர் குரல் கேட்டே ஆர்கஸம் அடைந்த பெண்கள் அதிகம். இதனால் பாகவதரின் படங்கள் பெரும்பாலும் பாடல்களை மையமாக வைத்தே எடுக்கப்பட்டன. பாகவதர் நன்றாக நடிப்பவர் என்றாலும் கூட, வசனக் காட்சிகளையும் கூட பாடல் காட்சி போன்றே எடுத்தனர் அப்போதைய இயக்குநர்கள். ஆனால் பி.யூ.சின்னப்பா இதற்கு நேர் எதிர். 

சின்னப்பா நன்றாக பாடக் கூடியவர் என்றாலும் கூட அதற்கும் மேலாக சண்டைக் காட்சிகளுக்கு தேவையான எல்லா கலைகளிலுமே விருப்பம் கொண்டிருந்தார். சொந்தமாக உடற்பயிற்சி கூடம் ஒன்று கூட அவருக்கு இருந்தது. இந்த திறமைகளை வெளிக்கொணர அவருக்கு கிடைத்த வாய்ப்பை சின்னப்பா மிக அருமையாக உபயோகித்துக்கொண்டார்.

உத்தமபுத்திரன் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் இன்றும் காண்பதற்கு இன்பமூட்டுபவை. டூப் போடாமல் எடுக்கப்பட்ட பல காட்சிகளை நீங்கள் காணமுடியும். தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இரட்டை வேட படமென்றாலும் கூட அமெச்சூர்தனமாக இல்லாமல், ஓரளவு நியாயம் கற்பிக்கும் வகையில் இருந்ததும் இதன் சிறப்புகளில் ஒன்று.

இதைத் தொடர்ந்து ஆரியமாலா, மனோன்மணி, கண்ணகி, குபேர குசேலா போன்ற படங்களும் சின்னப்பாவிற்கு 1941-ல் இருந்து 1943 வரையிலான காலகட்டத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்றன. ஆனாலும் கூட பாகவதரின் புகழ் மங்கவில்லை. முதலில் பாகவதர் அடுத்துதான் சின்னப்பா என்கிற அந்த இரண்டாம் இடமே கிடைத்தது.

1944. சம்பவங்கள் நிறைந்த ஆண்டு. ஹரிதாஸ் வெளியான ஆண்டு. தொடர்ந்து மூன்று தீபாவளிகள் ஓடிய ஒரே தமிழ்ப்படம். பாகவதர் என்கிற மந்திரப்பெயர் மீண்டும் ஒரு சாதனை செய்த படம் இது. அதே வருடம் சின்னப்பாவின் மஹாமாயா, ஹரிச்சந்திரா மற்றும் ஜெகதலப்ரதாபன் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. இதில் மஹாமாயா தவிர்த்து மற்ற இரண்டும் மிகப் பெரிய வெற்றி பெற்றன.

ஹரிச்சந்திரா தமிழின் முதல் டப்பிங் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் இருந்து இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டது. ஜெகதலப்ரதாபன் படத்தின் வெற்றிக்கு சின்னப்பாவை தவிர வேறு யாருமே காரணமில்லை. காரணம் படத்தின் கதையே அப்படி. தனது திறமைகள் மூலம் பல பெண்களை மயக்கி தன்னுடைமை ஆக்கிக்கொள்ளும் இளவரசன் வேடத்தில் சின்னப்பா அசத்தியிருந்தார். அவரின் முழு திறமையையும் வெளிக்கொணர்ந்த படங்களில் இதுவும் ஒன்று. ஆனாலும் கூட இந்த மூன்று படங்களும் சேர்ந்தும் பாகவதரின் ஒற்றைப்படமான ஹரிதாஸுக்கு ஈடாக முடியவில்லை. 

வீழ்ச்சியும் மரணமும்:

அதே 1944. லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்கள். சிறைக்கு போகும்பொழுது பாகவதரின் கைகளில் 12 படங்கள் நடிப்பதற்கான ஒப்பந்தம் இருந்தது. 1947-ல் குற்றம் நிரூபிக்கப்படாமல் நிரபராதியாக வெளியே வந்தார் பாகவதர். சிறையிலிருந்து வந்து அவர் நடித்த முதல்படமாக ராஜமுக்தி வெளியானது. படம் பெரும் தோல்வி. ஒரு சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி ஆரம்பம் என்று பத்திரிகைகள் எழுதத் துவங்கின. அது உண்மையும் ஆனது. அடுத்தடுத்து வெளியான ஷ்யாமளா, அமரகவி, புதுவாழ்வு ஆகிய மூன்று படங்களும் கூட தோல்வியடைய, பாகவதரின் திரைவாழ்க்கை அஸ்தமனம் ஆனது. 26 வருடங்களில் வெறும் 14 படங்கள் மட்டுமே பாகவதர் நடித்தார். ஆனால் அதற்குள் இவர் அடைந்த பெயர், புகழ் எல்லாம் 260 வருடங்கள் நடித்தாலும் கூட இனி யாருக்கும் கிட்டவே கிட்டாத ஒன்று. 

ஜெகதலப்ரதாபனுக்கு பிறகு அர்த்தநாரி, விகடயோகி, கிருஷ்ண பக்தி, பங்கஜவல்லி, மங்கையர்க்கரசி போன்ற பல வெற்றிப் படங்களை சின்னப்பா தந்தார். பாகவதர் சிறையில் இருந்தபோதும் சரி, வெளியே வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னும் சரி... சின்னப்பாவின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்றுக்கொண்டிருந்தன. இதில் கிருஷ்ணபக்தி படத்தில் தொடர்ந்து ஆறு நிமிடங்கள் ஒலிக்கும் ஹரிகதாவை பி.யூ. சின்னப்பா ஒரே டேக்கில் பாடி அசத்தினார். பாடலுக்கு பெயர் போன தியாகராஜ பாகவதர் கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தமபுத்திரனில் இரட்டை வேடத்தில் அசத்திய சின்னப்பா, மங்கையற்கரசி படத்தில் மூன்று வேடத்தில் தோன்றி கலக்கினார். இந்தப் படத்தில் உடன் நடித்த என்.எஸ் கிருஷ்ணனும் இரட்டை வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 1949 வரை பல வெற்றிப் படங்களை கொடுத்த பி.யூ சின்னப்பா தான் பிறந்து வளர்ந்த புதுக்கோட்டை முழுக்க முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கினார். ஒருகட்டத்தில் புதுக்கோட்டை அரசர் இவர் இனி புதுக்கோட்டையில் வீடு வாங்கக் கூடாது என்று தடை போடுமளவிற்கு பெயர், புகழ் சம்பாதித்தார். தனது 15 வருட சினிமா வாழ்க்கையில் 26 படங்களில் நடித்த பி.யூ சின்னப்பா யாரும் எதிர்பாராவண்ணம் தனது 36-வது வயதில் இறந்தார். 

ரசிகனின் பார்வை:

காந்தக்குரலோன் தியாகராஜ பாகவதர் திரையில் வீர தீர சாகசங்கள் புரிந்ததில்லை. எல்லா சாகசங்களையும் அவரின் குரலே செய்தது. கிராமபோன் தட்டுகள் மெல்லிய கீறலோடு ஒலிக்க துவங்கி, பின்னர் "ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே" என பாட ஆரம்பிக்கையில் அங்கே ஒரு மனிதன் சொர்க்கம் கண்டான். அந்த தெய்வீகக் குரலை ஆராதித்தான். போற்றினான். அந்தக் குரலுக்கு சொந்தக்காரனை சூப்பர் ஸ்டார் ஆக்கினான். இன்னொரு புறம் சிறுவயதில் இருந்தே தான் கற்றுக்கொள்ள நினைத்த எல்லா கலைகளிலுமே தனித்துவம் பெருமளவிற்கு உழைத்து, அதை சரியான முறையில் வெளிக்காட்டிய ஒருவராக சின்னப்பா இருந்தார். அவரின் சாகச சண்டை காட்சிகளுக்கு மெய் மறந்து கைத்தட்டிய ரசிகர்கள் அவரைப் போலவே தங்களையும் இந்த மாதிரியான ஆரோக்கிய விளையாட்டில்  ஈடுபடுத்திக்கொண்டனர்.

பாகவதர் ரசிகர்கள் பாடல் கற்க முயற்சித்த கதையை விட இது மோசமானதல்ல. மேலும் பாகவதர் தீவிர கடவுள் பக்தர். அவரின் திரைப்பாடல்கள் தவிர்த்து தனியாக வெளிவந்த இறைபக்தி பாடல்கள் மிகவும் பிரசித்தம். இதை தனது படங்களிலும் வெளிக்காட்டினார். ஆனால் சின்னப்பா அப்படி அல்ல. உத்தமபுத்திரனிலும், ஜெகதலப்ரதாபனிலும் பெண்களை மயக்கும் அல்லது பெண்களிடம் மயங்கிக்கிடக்கும் ஸ்த்ரீலோலனாக கூட நடித்திருக்கிறார். இதிலும் இரு துருவங்களாகத்தான் இருவரும் இருந்தனர். இதனாலேயே ஆராதித்த ரசிகர்கள் இரு துருவங்களாக பிரிந்ததில் ஆச்சரியமில்லை. 

தனிப்பட்ட வாழ்விலும் சின்னப்பா பீடி புகைக்கும், மதுவருந்தும் மனிதராகத்தான் இருந்தார். அதனாலேயே இளம்வயதில் மரணமடைந்ததாக கூறுவர். ஆனால் அந்தக் கொலை வழக்கு மட்டும் இல்லை என்றால் பாகவதரின் திரை வாழ்க்கை இன்னும் வேறு ஒரு உயரத்திற்கு கண்டிப்பாக சென்றிருக்கும். பாகவதரின் வீழ்ச்சியே திராவிட இயக்கங்கள் சினிமாவில் நுழைந்து பெருவெற்றி பெற ஏதுவாக இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

பாகவதரின் சினிமா வாழ்க்கை அஸ்தமித்தாலும் கூட அவரின் கச்சேரிகளை கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டுதான் இருந்தனர். இது அவரின் ரசிகர்களுக்கும் பெரும் ஆறுதலாக இருந்தது. பாகவதர் சிறையில் இருந்த காலகட்டங்களில் சின்னப்பாவின் படங்கள் மட்டுமே வந்தாலும் கூட பாகவதரின் ரசிகர்கள் தடம் மாறவில்லை. கடவுள் - பக்தனுக்கு இடையிலான உறவு போல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 

பி.யூ சின்னப்பாவின் இளவயது மரணமும், கொலைக்குற்றம் சாட்டப்பட்டதால் பாகவதருக்கு உண்டான தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து இந்த இரு துருவங்களின் சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. அவர்களின் ரசிகர்களின் மோதலும் ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் இது ஒரு வெறும் தொடக்கம்தான் என்பது எம்ஜிஆர் - சிவாஜி மூலம் உறுதியானது. இன்னும் வேகமாக, இன்னும் கடினமாக ரசிகன் அடிமைப்பட தொடங்கிய அந்த வரலாறு அடுத்த பகுதியில்.

*** காத்திருங்கள் ***

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close