மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 4 - வீடியோ ஆதாரம் எப்போது?

  இந்து லோகநாதன்   | Last Modified : 28 Jul, 2018 10:33 am

social-media-reactions-on-sri-reddy-issue

இந்த குறுந்தொடருக்கான முழுமுதற் மூலக்காரணமே ஸ்ரீரெட்டியின் ஃபேஸ்புக் பதிவுகளுக்குக் கீழே நம் நெட்டிசன்கள் பதிவிட்ட கீழ்த்தரமானக் கருத்துகள்தான். 

சிறிது காலத்திற்கு முன் அமலா பால் அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவருடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தன் முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். அதற்குக் கீழ் அவரை "தே*** பு**! கண்டவன் கூடலாம் இப்பிடி நீ சுத்துறதுனாலதான்டீ உன் புருஷன் உன்ன டைவர்ஸ் பண்ணிட்டு ஓடிட்டான்" என்று ஒரு கமெண்ட். அங்கு அவரை வசைபாடிய கமெண்ட்டுகளில் இங்கு ஓரளவிற்கு டீசண்ட்டான கமெண்ட் என்று நான் இதைக் கூறினால் பின் மற்ற கமெண்டுகளின் இண்டீசன்ஸியின் அளவுகோல்களை நீங்களே அளந்து கொள்ளுங்கள்.

அதன்பின் ஒருநாள் நயன்தாராவின் புகைப்படத்துக்குக் கீழும் அவரின் முன்னாள் காதலர்களை இவருடன் சம்பந்தப்படுத்தி பார்த்தாலே கண்கூசும் அளவிற்கு படு ஆபாச, வக்கிரத்துக்கு சற்றும் வறட்சியில்லாத கமெண்ட்டுகள். இவையெல்லாம் என் பார்வையில் பட்டவை மட்டுமே. என் பார்வையில் படாதவைக் கோடி உண்டு.

இன்று ஸ்ரீ ரெட்டியின் விஷயத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் கமெண்ட் பகுதி காறித் துப்பும்படி இருக்கிறது. ரெட்டிக்கும் நாடார் ஜாதிக்கும் குழாயடி சண்டை, தல - தளபதி ரசிகர்களுக்கு குடுமிப்பிடி சண்டையெனப் பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாமல் கமெண்ட்ஸ் பகுதி இருந்தாலும் அளவில்லாத ஆபாசத்தையும் அள்ளித் தருகிறது.

இப்படி கமெண்ட் போடுபவர்கள் யாரென்று ஆராய்ந்தால், தமிழகத்தின் முன்னணிக் கட்சியைச் சார்ந்தவர்கள், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் வெறித்தன ரசிகர்கள், பக்திப் படங்களை ப்ரொபைல் பிக்சராக வைத்திருக்கும் பக்தகேடிகள், பெண் பெயரில் உலா வரும் போலி ஆசாமிகளாகவே இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையுமே நிஜ வாழ்க்கையில் நாம் அன்றாடம் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

"நடிகர்கள், அரசியல்வாதிகள்லாம் பொது வாழ்க்கைக்கு வந்துட்டாங்கன்னாலே இந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டுதான பாஸ் ஆகணும்?" என்றொரு கேள்வி உண்டு.

தனிப்பட்ட ஒரு மனிதன் நடிப்பைத் தன் தொழிலாகக் கையில் எடுத்து நடிகன் என்ற பெயரில் அவன் தன் ரசிகர்களை, அவர்தம் மனதை வந்தடையும் பட்சத்தில், அவனுடைய தொழில் வாழ்க்கையை (அதாவது தொழிலாகிய 'நடிப்பு' வாழ்க்கையை) பற்றி விமர்சிப்பதிற்கு மட்டுமே அவன் ரசிகர்களுக்கு உரிமையுண்டு. அப்படி விமர்சிப்பதே உத்தமமும் கூட. 'ஒரு நடிகனா எனக்கு அவர பிடிக்கும், ஆனா தனிப்பட்ட வாழ்க்கைல அவர எனக்குப் பிடிக்காது' என்று ஒருவர் இனி உங்களிடம் ஏதேனும் ஒரு நடிகரைப் பற்றிச் சொல்ல நேர்ந்தால், நடிகரை நடிகரா பிடிச்சாலே போதும்யா. தனிப்பட்ட வாழ்க்கைல உனக்கு அவங்கள பிடிக்கணும்னு அவசியமே இல்ல' என்று தைரியமாக நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் கூறலாம்.

ஒரு பெண்ணை வசைபாடவேண்டும் / அவதூறாகப் பேசவேண்டுமென்றால் அவள் திறமைரீதியாகவோ கருத்துரீதியாகவோ எதிர்வாதம் வைத்து அணுகாமல், உடலுறுப்புக்களை காமத்தையும் முன்னிருத்தியே தனிமனிதத் தாக்குதலுடன் அந்த அவதூறு இனிதே அரங்கேறுகிறது!

சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் நடிகர் மம்முட்டியின் நடிப்பை மெய் சிலிர்த்து விரும்பிய இயக்குனர் மிஷ்கின் அன்பின் மிகுதியால் அவர் நடிப்பின் தரத்தை உயர்த்திப் பேசுவதற்காக ஒரு உவமையைக் கையாண்டார் 'நான் மட்டும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் மம்முட்டியைக் காதலித்திருப்பேன்' என்றவர் ஒரு படி மேலே போய் 'நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் மம்முட்டியை வன்புணர்ந்திருப்பேன்' என்றார். அதற்கு நம் ஊர் 'கலாசார காவலர்களாகத் தன்னைக் கருதிக்கொண்டவர்கள்' எல்லாம் கொந்தளித்துவிட்டார்கள்.

'என்னைப் பார்த்தால் எனக்கே என்னைப் புணரணும் போல இருக்கே' என்று சமீபத்தில் முகநூலில் பெண்ணொருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு அவர் பேசக் கூடாததைப் பேசிவிட்டதைப் போல் பொங்கல் வைத்துவிட்டனர் நம் நெட்டிசன்கள். ஒரு பெண் தன் உடலை எந்த அளவிற்கு ரசித்திருந்தால், எந்த அளவிற்குக் காதலித்திருந்தால், தன் உடலழகில் எந்த அளவிற்கு லயித்திருந்தால் பொது வெளியில் இவ்வாறு கூறியிருப்பார்?

மேற்கண்ட இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் ஒரு விஷயத்தை உயர்த்திப் பிடிக்க, உயர்வானாதாய்த் தூக்கிப் பேச காமத்தைக் கையாண்டிருக்கின்றனர். காமம் ஒன்றும் அத்தனை அருவருப்பானதோ கொடூரமானதோ அல்ல. நாம் ஒத்துக்கொள்ளத் தயங்கும் அண்டர் - ரேட்டட் அழகியலது. அதை அங்கீகரிக்கத் தெரிந்தால் இங்கே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

சில காலங்களுக்கு முன் ராதிகா ஆப்தேவின் படத்திலிருந்து அவரின் அரை நிர்வாணக் காணொளிக் காட்சியொன்று படக்குழுவிற்கே தெரியாமல் திருட்டுத்தனமாக இணையத்தில் கசிந்தது. அதைக் குறித்து அவரிடம் ஒரு நிருபர் கேட்டபொழுது, "தத்தம் உடலை அவரவர் அழகென்று உணர்ந்து ரசிக்க வேண்டும். தன் உடலை அருவருப்பாகக் கருதுபவர்களே மற்றவர் உடல் பற்றிக் கவலைப்படுவார்கள். நிர்வாணத்தை ரசிக்க ஆசையென்றால் முதலில் உங்கள் உடலைக் கண்ணாடியில் பார்த்து ரசித்துவிட்டு வாருங்கள். பின் என் உடலைப் பற்றி நாம் விவாதிக்கலாம்" என்றார்.

இது ஆழ விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். பெண்ணோ ஆணோ தன் உடலைப் புரிந்து கொண்டு, அதன் அழகை அங்கீகரிக்க வேண்டும். அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினால் கூடத் தப்பேயில்லை. நம் உடலை நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவார்? அதுவே ஆரோக்கியமான மனநிலை. தத்தம் உடல் மீது அவரவருக்கு உரிமை உண்டு. அதைக் கொண்டாடக் கூடாது எனச் சொல்ல இங்கு யாருக்கும் உரிமையில்லை.

ஆனால் இங்கோ திட்டவேண்டுமென்றால் கூட அவச் சொற்களாய் உடலுறுப்புக்களின் பெயரையே பயன்படுத்துகின்றனர். அந்த சொற்கள் வைத்துத் திட்டினால் அது பெருத்த ஆபாசமாகவும் அவமானமாகவும் இங்கு பார்க்கப்படுகிறது. இதற்குப் பின் பெரிய வார்த்தையரசியலே இருந்தாலும், மனைவி ஊருக்குப் போன வறட்சி, கல்யாணம் ஆகாத வறட்சி, மனைவிக்கு 'அந்த மூன்று நாட்கள்' வறட்சி, நட்பாய்ப் பேசிப் பழகக் கூட பெண் அமையாத வறட்சி, போன்ற பல்வேறு வறட்சிகள் கொண்ட ஆண்மகன்கள் ராத்திரி 11 மணிக்கு மேல் ஸ்ரீ ரெட்டியின் முகநூல் பக்கத்தில் சென்று அவரின் ஆரம்ப கால புகைப்படத்திலிருந்து அனைத்துக் கவர்ச்சிப் படங்களையும் பார்த்துக் சுய இன்பம் அடைந்துவிட்டு, பின் அவர் பதிவின் கீழேயே போய் அவர் உடலுறுப்பை வைத்தே பகடி செய்து திட்டுவதெல்லாம் வேற லெவல் மதிகெட்ட மனநிலை அல்லவா?

த்ரிஷாவின் குளியலறை வீடியோவைப் பார்த்திராத ஆண்களே இல்லை எனலாம். இன்று வரை அந்த வீடியோவிலுள்ள காட்சி ஒன்று மீம் டெம்ப்ளேட்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீம் க்ரியேட்டர்ஸுக்கு கான்செப்ட் பஞ்சம் வரும்போதெல்லாம் அதை தூசு தட்டி லைக் வாங்கிக் கொள்கின்றனர். இன்னொரு பெண்ணின் அந்தரங்கம் அந்த அளவிற்கு நம்மைக் கவர்கிறது. அவரின் அந்தரங்கத்தைத் திருட்டுத்தனமாக ரசித்துவிட்டுப் பின் அவருக்கே வந்து அறிவுரை சொல்வது போன்ற சல்லித்தனம் வேறேதும் உண்டா என்ன?

நாம் சல்லாபமாக ராக்காலங்களில் சிலிர்த்திருக்க யாரோ ஒரு பெண்ணின் அந்தரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது, பின் அதே பெண் மீதானக் காழ்ப்புணர்ச்சியை நாம் பார்த்த அதே உடலுறுப்புக்களின் பெயரில் திட்டித் தீர்க்க அவளின் முகநூல் பதிவும் தேவைப்படுகிது எனில் எவ்வளவு ஆரோக்கியமற்ற சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்?

ஸ்ரீ ரெட்டியின் பதிவுகளில் ஆபாச இரட்டை அர்த்த வசனங்களில் வார்த்தை ஜாலங்கள் காட்டி அவரைப் படுக்கைக்கு ஒரு கோஷ்டி அழைத்துக்கொண்டிருக்க, மறுபுறம் 'வீடியோ ஆதாரம் வேணும். அது எப்போ வரும்? அத ரிலீஸ் பண்ணு. அப்போதான் உன்ன நம்பி உனக்கு நாங்க சப்போர்ட் பண்ணுவோம்' என்று கமெண்ட் போட்டு,பார்ன் சைட்ஸ் பார்த்து போரடித்து ஸ்கேண்டல் வீடியோக்களை விரல் தேய தேடிய, #சுச்சிலீக்ஸுக்காக அவதி அவதியாய் ட்விட்டர் கணக்கு தொடங்கி முதல் வரிசையில் மண்டி போட்டு நின்ற கோஷ்டி ஒரு பக்கம் தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் ஸ்ரீ ரெட்டியைப் படுக்கைக்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கும் இவர்களுக்கும் எவரேனும் நூலளவு வித்தியாசம் கண்டுபிடித்தால் கண்டுபிடிப்பவர்களுக்குத் தக்க சன்மானமே அளிக்கலாம்.

சரி, ஸ்ரீ ரெட்டி சொல்வது போலவே நம் திரையுலகில் நடிகைகள் பட வாய்ப்புகள் பெற படுக்கையை பகிர்ந்தே தீரவேண்டிய சூழல்தான் நிலவுகிறதா? இந்த விவகாரத்தில் யாரெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்? 'அட்ஜெஸ்ட்மெண்ட்' ஒப்பந்தத்தின் உண்மை நிலைதான் என்ன?

*** விரிவாகப் பார்ப்போம் ***

- இந்து லோகநாதன்

முந்தைய அத்தியாயம்: மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 3 - எதிர்ப்பும் ஆதரவும்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.