மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 5 - அட்ஜஸ்மென்ட் நடப்பது எப்படி?

  இந்து லோகநாதன்   | Last Modified : 30 Jul, 2018 11:15 am
sri-reddy-issue-and-adjustment-scenarios-in-tamil-cinema

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு, முன்னணி திரைப்படங்களில் பங்காற்றும் சிலரிடம் நடிகை ஸ்ரீ ரெட்டி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து பல்வேறு கேள்விகளை அடுக்கியபோது அவர்கள் கூறிய பதில்கள்:

இந்த 'அட்ஜஸ்மென்ட்ஸ்', 'கேஸ்டிங் கவுச்' நடப்பதற்கான காரணங்கள் என்ன?

"சினிமாவைப் பொறுத்தவரை ஒரு பொண்ணு வேணாம்னு சொல்லிட்டு போச்சுன்னா, அவங்க இடத்தை நிரப்ப லட்சக்கணக்கான பொண்ணுங்க லைன்ல இருப்பாங்க. அதனாலேயே வந்த வரைக்கும் யாரும் வாய்ப்புகளத் தவற விடுறது இல்லை. எப்படியாவது முட்டி மோதி எதையாவது பண்ணி மேல வந்து, பேரும் புகழும் சம்பாதிச்சிடணும்ங்கிற குறிக்கோளில் இங்க பல பெண்கள் வர்றதுனால இந்த மாதிரியான 'காம்ப்ரமைஸ்'கள் பண்ண வேண்டியக் கட்டாயம் இந்தத் துறையில அதிகம் இருக்கு."

எந்த வர்க்க மக்கள் இதில் அதிகம் ஈடுபடுகிறார்கள்?

"ஒரு அம்மாவே தன் பிள்ளையை சமாதானப்படுத்தி அறைக்குள்ள அனுப்புறதையெல்லாம் நான் என் கண்ணாலேயே பாத்துருக்கேன். இத்தனைக்கும் அவங்க நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம்தான். அதுக்காக எலைட் க்ளாஸ்ல இந்த மாதிரியெல்லாம் நடக்கலைன்னு இல்ல. அது பார்ட்டி, பப்-ங்கிற வட்டத்துக்குள்ள போயிடுது."

நடிகைகளோட 'அட்ஜஸ்மென்ட்'ல ஈடுபடறவங்க அவங்க கூட இருந்த தருணங்களை புகைப்படம் எடுத்து, பிற்காலத்துல அதை அவர்களுக்கு எதிரா பயன்படுத்தி மிரட்ட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?

"நிச்சயம் அப்படி செய்ய மாட்டாங்க. இந்த விஷயத்துக்காக நடிகைகள் தேர்ந்தெடுக்கிற ஆட்களும் அவங்களுக்கு ஓரளவுக்கு சமமான பேர், புகழோடதான் இருப்பாங்க. 'இவங்க கிட்ட அட்ஜஸ் பண்ணா காரியம் நடக்கும்'னு உறுதியா தெரிஞ்ச பண, ஆள் பலம் உள்ள சிலர் கிட்டேயே இந்த அட்ஜஸ்மென்ட்ஸ அவங்க வச்சுப்பாங்க... இந்த விஷயங்கள் வெளியானா அவங்களோட பேருக்கும் புகழுக்கும் கூடத்தான் பாதிப்பு ஏற்படும். அதனால அவ்வளவு எளிதுல வெளிய தெரிய வராது. அது தவிர்த்து அந்த மாதிரி நேரங்கள்ல அவங்க புகைப்படம் எடுத்துக்கிறதெல்லாம் ஒரு ஃபேண்டஸிகாகதான். விளையாட்டுத்தனமான ஒரு ஆசைக்காக எடுத்துக்கிறாங்களே தவிர யாரையும் மிரட்டணும்னு எடுக்கறதில்லை."

இந்த நிலையை திரைத்துறையில் எப்படிப் பார்க்கின்றனர்? 

"இதை யாரும் இங்க சீரியசா பாக்குறதில்ல. ரொம்ப ஜாலியான விளையாட்டுத்தனமான விஷயமா பத்தோட பதினொண்ணா பாத்துட்டு கடந்து போயிடறாங்க. வெளியில இருந்து பாக்கறவங்களுக்குதான் கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கும். கேரவன் ஓட்டுனர்கள், டச்சப் பாய், மேக்கப் மேன் இவங்களுக்குத்தான் உண்மையிலேயே எல்லா விபரங்களும் தெரிஞ்சிருக்கும். ஏன்னா அவங்கள வெச்சிட்டுதான் பல விஷயங்கள் பேசப்படுது. இன்னும் சொல்லப் போனா இந்த அட்ஜஸ்மென்ட் பல இடங்கள்ல வெளிப்படையாதான் நடக்குது. யாரும் இதை ஒரு அசிங்கமாகலாம் கருதுறது இல்லை."
 
இதில் அதிகம் பாதிக்கப்படுவது யார்?

"நடிகைகள விட துணை நடிகைகள், கதாநாயகிகள் கூட வர்ற 'ரிச் கேர்ள்ஸ்', மத்த கேரக்டர் ஆர்டிஸ்ட்ஸ் நிலைமைதான் ரொம்ப பரிதாபமா இருக்கும். அதில பாதிபேர் தினக்கூலிக்கு தான் வருவாங்க. சிலர் ரொம்பவும் ஏழ்மை நிலைல இருந்து பிழைப்புக்காக வர்றதுனால இதை விட்டா வேற வேலை / தொழில் எதுவும் தெரியாதுங்கிற நிலைமைல இருப்பாங்க. அவங்களோட ஏழ்மை நிலைய அதிகாரத்துல உள்ளவங்க பயன்படுத்திட்டு ஏமாத்தி விட்டுடுவாங்க. அவங்களாலேயும் எதிர்த்து எதுவும் குரல் கொடுக்க முடியாம 'பேட்டா'க்காக இங்க மாட்டிக்கிட்டு கஷ்டப்படுவாங்க. இதுல உதவி இயக்குனர்கள் பாடும் பெரும்பாடு. பல இடங்கள்ல எடுபிடி மாதிரி நடத்தப்படற, ப்ரோக்கரா பயன்படுத்தப்படற பல உதவி இயக்குனர்கள் இங்க இருக்காங்க. இயக்குனர்களுக்கு  வேண்டப்பட்ட பொண்ணுங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி விடறதுல இருந்து ஒரு அடிமை செய்ற எல்லா வேலைகளையும் செய்ற உதவி இயக்குனர்களை எல்லாம் பார்த்தா ரொம்ப பரிதாபமா இருக்கும்."

வெள்ளித்திரையில் இருப்பது போல சின்னத்திரையிலும் இது நடக்கிறதா? 

"நாம் பெரும்பாலும் ஹீரோ - ஹீரோயின் கிசு கிசுக்களிலேயே கவனம் செலுத்துறதுனால ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், சின்னத்திரை நடிகர்கள், வீ.ஜே போன்றவர்களோட விஷயங்கள பெருசா கண்டுக்கறதில்ல. சின்னத்திரைல ரொம்ப நிறையவே நடக்குது. நான் ஒரு தனியார் தொலைக்காட்சியில வேலைப் பார்த்துக்கிட்டு இருந்த சமயம், ஒரு சமையல் நிகழ்ச்சிக்காக எங்க இயக்குனர் என்னை ஆள் எடுக்க சொல்லிருந்தார். சமையலுக்கு வர்றவங்க கூட 18-35 வயசுக்குள்ளதான் இருக்கணும், பாக்கறதுக்கும் ரொம்ப அழகா இருக்கணும்ங்கிறதுதான் அவர் என்கிட்ட சொன்ன நிபந்தனை. அந்த நிகழ்ச்சியப் பாத்துட்டு கலந்துக்க ஆர்வமுள்ள எல்லா தரப்பு வயதினரும் எனக்கு பெயர் பதிவு பண்றதுக்காக கால் பண்ணுவாங்க. அப்போ ஒரு முறை 55 வயது அம்மா ஒருத்தவங்கள நான் நிராகரிச்சப்போ அவங்க காரணம் கேட்டாங்க. அதற்கு நான் 18-35 வயது பெண்களைத்தான் எடுக்க சொல்லிருக்காங்கன்னு சொன்னப்போ, "சமையல்ல என் வயசுக்கு இல்லாத அனுபவம் அவ்வளவு சின்ன பொண்ணுங்கள்ட்ட என்ன இருந்துடப் போகுது?" அப்படி இப்படின்னு ரொம்ப கோபமா பேசுனாங்க. சமையல் நிகழ்ச்சியா இருந்தாலும் அவங்க வயசையும், அழகையும், 'அட்ஜஸ்மென்ட்ஸ்'க்கு ஒத்துழைச்சிப் போற சம்மதத்தையும்தான் ஒரு பொண்ணுகிட்ட எதிர்பார்க்கறாங்கங்கிற உண்மைய அப்போ அந்த அம்மாகிட்ட சொல்ல எனக்கு தைரியம் இல்ல."

திரைக்குப் பின்னால், அதாவது தொழில்நுட்பத் துறைகளில் இந்த 'அட்ஜஸ்மென்ட்' எந்த மாதிரி இருக்கு?

"தங்களோட முகம் திரையில வரணும்னு நினைக்கிறவங்கதான் வாய்ப்புக்காக எதையும் செய்யத் தயாரா இருக்கறவங்களா இருக்காங்க. அவங்களோட அதிகபட்ச விருப்பம் / நோக்கம்லாம் சினிமால நம்ம நடிச்சு நல்லா பிரபலம் ஆகிடணும். நண்பர்கள், சொந்தக்காரர்கள் கிட்டலாம் திரையில வர்ற நம்ம முகத்தைக் காட்டி பெருமைப்பட்டுக்கிறதும் ஒரு வகை போதை தானே. அதான் அப்படி. திரைக்குப் பின்னால் வேலை செய்றவங்களோட நோக்கம் அப்படி இல்லை. வேலையைக் கத்துக்கிட்டு பெரிய ஆளா ஆனா போதும்ங்கிற எண்ணத்துலதான் அவங்க இருப்பாங்க. 'பிரபலம்' ஆகிடணும்னு அதோட நடிகர்கள் ஏதாவது பிரச்னை பண்ணாக்கூட ஒருத்தருக்கு பதில் இன்னொருத்தர போட்டு அந்த இடத்தை நிரப்பி பிரச்னை பண்ணவங்களை வெளிய அனுப்பிடலாம். ஆனா நல்லா வேலை செய்யத் தெரிஞ்ச தொழிநுட்பக் கலைஞர்கள் விஷயத்துல அவங்கள அவ்ளோ எளிதா வெளிய அனுப்பிட்டு வேலை செய்யத் தெரிஞ்ச வேறொருத்தர அவசரமா தேடி நிரப்பிட முடியாது. அதனால தொழில் நுட்ப வல்லுநர்கள்கிட்ட இந்த விஷயத்துல யாரும் அவ்வளவா வச்சுக்கமாட்டாங்க.

ஸ்ரீ ரெட்டி புதிர் போல முன்னணி நடிகைகளை பட்டியலிட்டார். அவர்களும் இப்படியா?

"முதல்லையே சொன்ன மாதிரி அட்ஜஸ்மென்ட் வேணாம்னா ஒரு படத்தோட நீங்க வெளியேத்தப்படுவீங்க. 
நீண்ட நாள் இந்தத் துறையில நீடித்து இருக்கணும்னா இது நடந்தேதான் தீரணும். இப்போ அதிகாரம் பண்ணுற, மத்தவங்கள கேள்வி கேட்கற பெரிய இடத்துல இருக்கற நடிகைகள் பெரும்பாலானோரும் இந்த நிலையக் கடந்து வந்தவங்கதான்னு நிச்சயமா சொல்ல முடியும். அவங்க பிரபலமான நிலைல இருக்கறதுனால அந்த பிரபலத்துவம் கெட்டுடக் கூடாதுன்னு அதை வெளிய சொல்றதில்ல, அவ்வளவுதான்.  இவ்வளவு ஏன், ஸ்ரீ ரெட்டியே ஒரு பெரிய நடிகை ஆகியிருந்தாங்கன்னா இதைப் பத்தி வெளியில சொல்லிருக்க மாட்டேன், தயங்கிருப்பேன்னு ஒரு நேர்காணல்'ல அவங்களே சொல்லிருக்காங்களே!"

தன்னிடம் 'அட்ஜஸ்மென்ட்' எதிர்பார்த்து வர்றவங்களுக்கு தெளிவா 'வேணாம், முடியாது'ன்னு தைரியமா சொல்லி இந்தத் துறையில நீண்ட காலம் நீடித்து இருக்கவே முடியாதா?

நீங்க ஒருத்தர் கிட்ட 'வேணாம்'னு சொன்னா எப்படியும் இன்னொரு ஆள்கிட்டதான் வாய்ப்பு தேடி போவீங்க. அப்படி போறப்போ நீங்க 'வேணாம்'னு சொன்ன அந்த ஆள் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க விடாம பண்ணறதுக்கான முயற்சிகள்ல ஏற்கெனவே இறங்கியிருப்பார். அப்படியும் அங்க இங்க தப்பிச்சு ஒண்ணு ரெண்டு படம் வேணும்னா நீங்க பண்ணலாம். இப்போ வரை ஒண்ணு ரெண்டு படங்கள் மட்டும் நடிச்சிட்டு திரைய விட்டு விலகுன, நாம 'ஃபீல்ட் அவுட்'னு நினைச்சுகிட்டு இருக்கற பல நடிகைகள் இப்படிப் போனவங்கதான். 
இதில் பெண்களுக்கும் பெருமளவில் பங்கு இருப்பதாகவே கூறுகின்றனர். 

'ஆடிஷன்' காலக்கட்டங்களிலேயே இந்த 'அட்ஜஸ்மென்ட்' விஷயங்களுக்கு யார் இசைந்துபோவார்கள் என ஒருவாரியாக கணித்துவிடுவார்களாம். சில பெண்களுடைய பேச்சும் உடல்மொழியும் அதற்குத் தக்கவாறு இருப்பதுடன், 'இதுல நடிக்க நான் என்னனாலும் பண்றதுக்கு தயாரா இருக்கேன்' என்ற வார்த்தைகளையும் விட்டு விடுவார்கள். 

இது ஒன்று போதாதா? 

சில மருத்துவமனைகளில் 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, எப்படியாவது காப்பாத்திடுங்க' என்று ரமணா படத்தில் வருவது போன்ற கதையாகி விடும்.

ஒரு பெண்ணோ, பையனோ யாருடன் தன் இரவைக் கழிக்கவேண்டும் என்கிறது பற்றிய அவர்களின் அந்த விருப்பமும் முடிவும் முற்றிலும் தனிப்பட்டதே! அதை யாரும் சரி, தவறு என்று விவாதிப்பதோ, அதில் தலையிடுவதோ உரித்தன்று. எனினும் திறமையை மையப்படுத்தி செயல்பட வேண்டிய ஒரு தளத்தில் விருப்பமில்லாதவர்களும் 'படுக்கையறை' கட்டாயத்துக்கு உட்படுத்தப்படும் நிலைதான் பரிதாபமானது.

அது சரி, இந்த 'அட்ஜஸ்மென்ட்' விவகாரத்தில் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மட்டும்தானா?! இல்லை, ஆண்களும் இருக்கிறார்கள்.
 
*** இன்னும் அலசுவோம் ***

- இந்து லோகநாதன்

முந்தைய அத்தியாயம்: மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 4 - வீடியோ ஆதாரம் எப்போது?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close