மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 6 - அட்ஜஸ்மென்ட் வலையில் ஆண்களும்!

  இந்து லோகநாதன்   | Last Modified : 01 Aug, 2018 12:30 pm
sri-reddy-issue-and-adjustment-scenarios-on-males

பாலியல் தொல்லைகள் என்றாலே பெண்களை அபலைகளாக சித்தரித்தே இங்கு பார்க்கப்படுகிறது. பெண்களே பாதிக்கப்பட்டவர்களாக நம் கண்ணுக்குத் தெரிகின்றனர். உண்மையில் உள் சென்று ஆராய்ந்து பார்த்தால் பெண்களுக்கு நேரும் பாலியல் வற்புறுத்தல் போல ஆண்களுக்கும் பல வற்புறுத்தல்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அது பெண்கள் அளவிற்கு அதிகமாக இல்லையென்றாலும் அதிகம் பேசப்படாத விவாதிக்கப்படாத அல்லது மறந்தோ மறைக்கவோ பட்ட விஷயமாகவே இருக்கிறது. ஆனால் நாம் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமும் இதுவே!

'பாடி - பில்டிங்', 'மாடலிங்' துறைகளில் பல வருடங்களாக இயங்கிவிட்டு, இது போன்ற 'அட்ஜஸ்மென்ட்' வற்புறுத்தல்களால் தற்போது வேறு துறையைத் தேர்ந்தெடுத்து பங்காற்றி வரும் சில 'ஆண்' நண்பர்களுடன் உரையாடிய பொழுது அவர்கள் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்:

"'ஒரு முறை மாடலிங்குக்காக என்னை போட்டோ ஷூட் பண்ண ஒருத்தர் வந்திருந்தார். முதலில் மேல்சட்டையைக் கழட்ட சொன்னவர், அப்பறம் கால் சட்டையும் கழட்ட சொன்னார். 'பாடி பில்டிங்' துறையில இதெல்லாம் செய்துதான் மேடைல நாங்க எங்க உடம்ப 'எக்ஸ்போஸ்' பண்ணுவோம்ங்கிறதால நான் இதற்கு ஏற்கெனவே பழக்கப்பட்டிருந்தேன். ஆனா திடீர்னு அளவெடுக்கணும்னு என் பக்கத்துல வந்தவர் என் அனுமதி இல்லாமலேயே எனக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சும் சொல்ல சொல்ல கேக்காம என்னோடத்  தனிப்பட்ட அங்கங்கள்ல கை வைக்க ஆரம்பிச்சார். எனக்கு கோவம் வரவே நான் அவரை அடிக்கவே செஞ்சுட்டேன்."

"அதுக்கப்பறம் ஒரு முறை பிரபல ஃபேஷன் டிசைனர் ஒருத்தரும் படுக்கைய பகிர்ந்துக்க என்கிட்ட வெளிப்படையாவே கேட்டு வற்புறுத்த ஆரம்பிச்சார். முடியாதுன்னு சொல்லிட்டு திட்டிட்டு போன வச்சுட்டேன்."

"பின் ஒரு நாள் என் நண்பரும் நானும் பாருக்கு போயிருந்தப்போ அங்க இருந்த ஆள் ஒருத்தன், ரொம்பச் சின்ன பையன்தான், வெளிப்படையாவே என்கிட்ட வந்து பேசுனான். நீங்க 'அட்ஜஸ்மண்ட்' பண்ண வரணும். சில முன்னணி நடிகர்களோட பேரச் சொல்லி அவங்களாம் 'மேல் எஸ்கார்ட்' எதிர்பாக்கிறாங்க. அவங்களுக்காக வந்தீங்கன்னா அதுக்காக அவங்க கிட்ட பேசி நல்ல தொகையா உங்களுக்கு ஏற்பாடு பண்ணித் தர்றேன். ஒரு ராத்திரிக்கு 10,000-ல் இருந்து ஆரம்பிக்குது. இந்த ரூட்ட பிடிச்சு நீங்க ஃபாலோ பண்ணி போனீங்கன்னா ரொம்ப சீக்கிரம் ஹீரோ ஆகிடலாம். இப்போ இருக்கற ஹீரோஸ் சிலர் கூட இப்படி வந்தவங்கதான்'னு சொல்லி அவன் சிலரோட பேர அடுக்குனதும் எனக்கே பயங்கர அதிர்ச்சியாத்தான் இருந்தது" என்று ஒருவர் கொட்டித் தீர்க்க,

"மாடலிங்க பொறுத்தவரை பொண்ணுங்கள விட பசங்கதான் ஜாஸ்தி. சினிமாவிலாவது தொப்பை இருந்தா கூட பிரச்னை இல்லை. நடிப்ப வச்சு சமாளிச்சிடலாம். ஆனா மாடலிங்கில் உடல்தான் மூலதனமே. அதுதான் மக்களுக்கு நம்மளக் கொண்டுபோய் சேர்க்கிற விசிட்டிங் கார்டே. அது கட்டுக்கோப்பா இல்லைனா ஆட்டம் க்ளோஸ். பசங்களோட உடற்கட்ட முழுசா பாக்கிற உரிமை அவங்களத் தேர்ந்தெடுக்கறவங்களுக்கு இருக்கு. காரணம் என்னன்னா, அவங்களோட உடற்கட்டு, இடுப்பு வளைவு, மார் - தொடை அளவு எல்லாத்தையும் பார்த்துதான் அவங்க உடல்வாகுக்கு ஏத்த மாதிரி உள்ளாடை விளம்பரம் கொடுக்கறதா இல்ல மேலாடை விளம்பரம் கொடுக்கறதான்னு முடிவு பண்ணுவாங்க. உடலுக்கு வேல இருக்கிற இடம் இதுங்கிறதால உடல்சார்ந்த இச்சைகளுக்கு ரொம்ப எளிதா சலனப்பட்டுடறாங்க. 

சினிமாவிலாவது உள்ள போனதுக்கு அப்பறம்தான் அட்ஜஸ்மென்ட் ஜாஸ்தி. ஆனா மாடலிங் துறைல அட்ஜஸ்மென்ட் பண்ணாதான் உள்ளேயே போக முடியும். ஆரம்பக் கட்டத்துல சின்ன அளவுல பண்ணறப்போ கூட நல்ல புகைப்படக்காரர வச்சு நம்ம ப்ரொபைல மெருகேத்தி அத வெச்சே இந்தத் துறையில காலடி வச்சு தப்பிச்சுடலாம். ஆனா தேசிய, சர்வதேச அளவுல போட்டிகளுக்குப் போறப்போதான் நெருக்கடிகள் இன்னும் ஜாஸ்தியா இருக்கும். ஏன்னா அங்க இதெல்லாம் சர்வசாதாரணமா நடக்குற விஷயங்கள்தான். நமக்குதான் புதுசாத் தெரியும்.

மாடலிங்ல நான் ரொம்ப ஆசப்பட்டு அதுக்கு ஏத்த மாதிரி என் உடம்பையும் முகத்தையும் மெருகேத்தி பணம்லாம் கட்டி படிப்படியாக முன்னேறி ஒரு பெரிய இடத்துக்கு தேர்வுக்குப் போனா, நான் 'அட்ஜஸ்மென்ட்' பண்ணாதான் அடுத்தக்கட்டத்துக்கு போக முடியும்னு வெளிப்படையாகவே சொல்லிட்டாங்க. இதை வேணாம்னு சொல்லிட்டு வேற இடத்துல வாய்ப்புத் தேடலாம்னு போனாலும் பெரும்பாலும் எல்லா இடத்துலேயும் இதே நிலைமைதான் இருந்தது. எனக்கு அதுல விருப்பம் இல்லாதனால அப்படி அட்ஜஸ்ட் பண்ணிக் கிடைக்கிற வாய்ப்பு ஒண்ணும் எனக்குத் தேவையில்லைனு அந்தத் துறைய விட்டே வெளிய வந்துட்டேன்" என்று மற்றொரு நண்பர் புலம்பித் தள்ளினார்.

இப்படி ஒவ்வொரு ஆணிடமிருந்தும் வந்த ஆதங்கம் நமக்கு வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

"அட்ஜஸ்மென்டே இல்லாம மாடலிங் துறையில இருந்துட முடியவே முடியாதா?" என முன்வைத்தக் கேள்விக்கு, "இருக்க முடியும்! ஆனா, அது நம்ம அதிர்ஷ்டத்தை பொறுத்து இருக்கு. உழைப்புத் திறமையை மட்டும் நம்புற ஆளுங்கள நாம தேடி போகணும். நம்மகிட்ட அட்ஜஸ்மென்ட் எதிர்பார்க்காத ஆளுங்கள நாம சந்திக்கணும். அந்த மாதிரி அதிர்ஷ்டகரமான விஷயங்கள் நடந்தா திறமைய வச்சு மட்டுமே இந்தத் துறையில நீண்ட நாள் இருக்கலாம். அதுவும் இல்லைனா அந்தத் துறையில இருக்கிற நம்மளோட நண்பர்கள் மூலமா போகலாம். ஆனா அதெல்லாம் அத்திப்பூ பூக்குற மாதிரிதான்" என்றார்.

இதில் பரஸ்பரம் புரிதல் மற்றும் விருப்பத்தோடு உறவு கொள்ளுதல் ஒரு வகை. அவ்வகை உறவினால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கப்போவதில்லை. ஆனால் 'நீ என்னுடன் உறவு கொண்டால்தான் உன் திறமைக்கு நான் பாதை வகுப்பேன்' என்று ஒப்பந்தத்தை முன்வைப்பது கலைக்கு செய்யும் ஆகச் சிறந்த அவமதிப்பல்லவா?

சினிமாவில் இந்நிலை எப்படி இருக்கிறது என்று விசாரித்தபொழுது, அதிலும் இதே நிலைக்கு ஆண்கள் உள்ளாக்கப்படுகின்றனர் என்றும், ஆனால் இதில் பெரும்பாலும் பெண்களே மறைமுகத் தொடக்கப்புள்ளியாக இருக்கின்றனர் என்றும் தெரியவருகிறது.

அதாவது போன அத்தியாயத்தில் கூறப்பட்டது போலவே சினிமாவில் புதிதாக நுழைய நினைக்கும் பெண்கள் 'அட்ஜஸ்மென்ட்ஸ்'தான் சினிமாவில் நுழைவதற்கு ஒரே வழி என்னும் தவறான மனப்போக்குடனேயே வருகின்றனர். காரணம், எல்லாத் துறைகளிலும் இந்த சிக்கல் இருந்தும் சினிமாவில் அதிகம் இருப்பதாக வெளியுலகிற்குக் காட்டப்பட்டிருப்பதுதான். உண்மையில் எல்லாத் துறைகளிலும் இது உண்டு, மூடி மறைப்பதற்கான இடங்களும் சாத்தியங்களும் அங்கு மிக அதிகம். 

மேலும் பிரபலத்துவமற்ற அந்த முகங்களைப் பற்றி பெரிதாய் யாரும் கண்டுகொள்வதுமில்லை. பிரபலத்துவம் அதிகமிருக்கும் சினிமாத்துறையிலோ ஒரு விஷயம் நடந்தாலே அது ஒன்பது விஷயங்களாக ஊரார் முன் சித்தரிக்கப்படுகிறது. அதைப் பார்த்து 'சினிமா என்றாலே இப்படித்தான் இருக்கும், இதுதான் வழி' என்ற தவறானத் தீர்மானத்திற்கு வரும் சில பெண்கள், ஒரு வகையில் இந்த 'அட்ஜஸ்மென்ட்ஸ்' அரங்கேற மூலக்காரணமாகவும் செயல்படுகின்றனர். 

சலனப்பட்டால்தான் அது மனித மனம். "இந்த வாய்ப்புக் கிடைக்க என்னனாலும் நான் பண்ண தயாரா இருக்கேன்" என்று ஒரு பெண் தானாக மனமுவந்து முன்வந்து கூறினால் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் சிலர் அதை மறுத்துவிடுகின்றனர். கிடைத்தவரை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வோம் என நினைப்பவர்கள் அப்பெண்களைத் தங்கள் ஆசைக்கு பலிகடா ஆக்கிக்கொள்கின்றனர். 

இது போன்ற நிலைதான் ஸ்ரீரெட்டிக்கு நடந்திருக்கக் கூடும். சினிமாவிற்குள் புதிதாக நுழையும் பெண்கள் இவ்வகை அறியாமையை களைந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். அந்த அறியாமையைக் களைவதில் ஊடகங்களுக்கும் அதிமுக்கியமானப் பங்கு உண்டென்பதை நாம் மறுக்க முடியாது.

சரி, ஸ்ரீ ரெட்டியின் பகிரங்க குற்றச்சாட்டுகளுக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் எதிர்வினைகள் எத்தகையது? - இதை அடுத்த அத்தியாயத்தில் விரிவாக அலசுவோம்.

*** தொடர்ந்து ஆராய்வோம் ***

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close