மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 7 - எதிர்வினைகள் எத்தகையது?

  இந்து லோகநாதன்   | Last Modified : 03 Aug, 2018 01:04 pm
sri-reddy-issues-and-reactions-from-film-industry

ஸ்ரீ ரெட்டி புகார் அளித்ததும், அதற்கு சினிமா தரப்பிலிருந்து நடிகர்கள் ஆற்றிய எதிர்வினையும் அவர்களின் வாதமும் விவாதத்திற்குரியது. பலர் நியாயமானக் கருத்துக்களை முன்வைத்தாலும் சிலர் பூசி மெழுகி, பட்டும் படாமலும் பேசுகின்றனர். முழுதாக அவர் கருத்தை மறுத்து ஆணித்தரமாகப் பேசியவர்களும் உண்டு.

அவர் குற்றம் சாட்டிய பலர் அமைதி காத்த நிலையில், ராகவா லாரன்ஸ் மட்டும் எதிர்க்குரல் எழுப்பியுள்ளது நாம் அனைவரும் அறிந்த சமீபத்திய சூடான செய்தியாகும். அவர் 'நான் ஹோட்டலில் சாமிப் படங்களை வைத்துப் பூஜை செய்ததாக ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். அந்த அளவிற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. மேலும் அவர் என்மீது சாட்டியக் குற்றச்சாட்டு உண்மை இல்லையென்பது எனக்கும் கடவுளுக்கும் தெரியும். 

வேண்டுமென்றால் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்துக் கொள்வோம். அதில் அவருக்கு நடிக்க ஒரு காட்சியும் நடனத்திற்கு சில எளிதான அசைவுகளையுமே தருகிறேன். அதை அவர் நல்ல முறையில் எல்லார் முன்னும் நடித்து, ஆடிக் காட்டு பட்சத்தில் நானே என் அடுத்த படத்தில் கூப்பிட்டு வாய்ப்புத் தருகிறேன்' என சவால் விட அதைத் தொடர்ந்து, ஸ்ரீ ரெட்டி ஒரு பாடலுக்கு நடனமிட்டு ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் நண்பர்கள், ஊடகங்களின் கேள்விக்கு இணங்கி இந்தக் குற்றச்சாட்டைத் தெளிவுபடுத்த இவ்வாறு பதிலளித்துள்ளார். ஆனால் இவருடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்ட மற்ற நடிகர்கள், இயக்குநர்களோ இதற்கு எவ்வித சலனமுமின்றி மவுனம் சாதிக்கின்றனர். ஏன் என்று விசாரித்தபொழுது அவருக்கு எதிர்வினையாற்றி நேர விரயம் செய்து மேலும் கவனத்தை அவர் பக்கம் திரும்பச் செய்வதை விட இதைக் கண்டுகொள்ளாமல் இப்படியே விட்டு விடுவதே புத்திசாலித்தனம் என்கிற எண்ணத்தில் அவர்கள் இருப்பதாக சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.

பல நடிகைகள் இவரைத் தொடர்ந்து வெளிப்படையாகவே 'ஆமாம். சினிமாவில் இது இருக்கிறது' என ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தாலும் பல வருடங்களாக தமிழ் ரசிகர்கள் மனதில் கோலோச்சி வரும் நடிகை குஷ்பு முழுவதுமாக மறுத்துள்ளார். 'இத்தனை வருடங்களாக சினிமாவில் நான் இருக்கிறேன். இது போன்ற பிரச்னைகள், குற்றச்சாட்டுகள் நடந்ததே இல்லை' என அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். நம்புவதற்கு சாத்தியமற்றக் கூறுகள் அவர் பேச்சில் வெளிப்படையாகவே தெரிந்தன. 

இலைமறைகாயாக இருக்கும் ஒரு விஷயத்தைக் கூட ஏதாவது தர்க்கங்கள் பேசி மூடி மறைத்து விடுதல் சாத்தியம். ஆனால் இத்தனை காலங்களாக பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலும் வெளிப்படையாக பலமுறை ஆதாரங்களுடனே அலசப்பட்ட இந்த 'அட்ஜஸ்மென்ட்' விஷயங்களை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முன்னணி நடிகை மறுத்துப் பேசும்பொழுதுதான் நமக்கு ஆச்சரியக்குறி எழுகிறது!

குட்டி பத்மினி பேசுகையில், "ஸ்ரீ ரெட்டியை யாரும் பலாத்காரம் அளவில் கட்டிப்போட்டெல்லாம் நிச்சயம் வற்புறுத்தியிருக்க முடியாது. இவர் சம்மதம்தான் அனைத்திற்கும் மூலக்காரணம். முதல் சம்பவத்திலேயே வாயைத் திறக்காமல் இத்தனை சம்பவங்கள் கழித்து  நியாயம் கேட்க வருவதன் பின்னணி என்ன?" என்ற கேள்வியையும் முன்வைத்து, "என்றாலும் அவர் வாய்ப்பு கேட்டு வந்தால் அதைத் தருவதற்கு நான் தயாராக உள்ளேன். ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நானும் ஒரு பெண் என்ற வகையில் இந்த உதவியை நிச்சயம் செய்வேன்" என உறுதியும் அளித்துள்ளார்.

தனிப்பட்ட நடிகர்கள் மேல் ஸ்ரீ ரெட்டி வைக்கும் குற்றச்சாட்டை ஒட்டுமொத்த நடிகர்கள் அத்தனை பேர் மீதும் வைக்கும் குற்றச்சாட்டாகவும் தமிழ்ப்பட உலகிற்கே அது களங்கம் ஏற்படுத்துகிறது என்கிற ரீதியிலுமே பல நடிகர்கள் பார்க்கின்றனர். அதோடு நில்லாமல் அதைக் காக்கும் பொருட்டாகவே அவர்களின் பேச்சும் நடவடிக்கையும் இருக்கிறது.

கார்த்தி, விஷால் போன்றோர் ஸ்ரீ ரெட்டியை நடிகர் சங்கம் மூலமாக புகாரளித்து இந்தப் பிரச்சனையை அணுகினால் அதை விசாரிக்கிறோம் எனச் சொன்னாலும், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், 'இதுவரை எந்த நடிகையிடமிருந்தும் எந்த நடிகர் மீதும் நடிகர் சங்கத்திற்கு பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் வந்ததே இல்லை" என்று கூறியதுதான் நகைமுரண்.

இந்த இடத்தில் சமீபத்தில் அவர் மகள் வரலட்சுமி அளித்த பேட்டியையும் நினைவுகூர வேண்டும். "நானும் என் துறைசார்ந்த ஒருவரும் வருங்கால ப்ராஜக்ட் குறித்து எங்கள் வீட்டிலேயே கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும்போது, என் அம்மா அடுத்த அறையில் இருக்கும்பொழுது அவர் ரொம்ப சகஜமாக என்னை அட்ஜஸ்மென்டிற்கு அழைக்கிறார். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இதை எப்படி இவ்வளவு சாதாரணமாக ஒரு பெண்ணிடம் கேட்க முடிகிறது? அப்பா பிரபல நடிகராக இருந்து நல்ல சினிமா பின்புலம் உள்ள எனக்கே இந்த நிலைமை என்றால், சினிமா பின்புலமே இல்லாமல் தனித்து இந்தத் துறைகளுக்கு வரும் பெண்களை நினைத்தால் மனம் இன்னும் பதறுகிறது" என்றவரின் முகத்தில் அவ்வளவு கவலை.

சமீபத்தில் அயனாவரம் சிறுமி குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை நிஷா கணேஷ் வெங்கட்ராம் தன் பால்யகால பாலியல் தொல்லைகளைப் பொதுமக்களிடம் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். தன் தாய் முழு நேர வேலைக்குச் சென்றதனால் தன்னை கவனிக்க முடியாததையும், அதனால் 60 வயதுக்காரர் ஒருவரிடம் தான் தத்துக் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், அந்த 60 வயதுக்காரர் தன்னை தினமும் லத்தியால் அடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பழைய காலத்து கறுப்புப் பக்கங்களை கசப்புடன் நினைவுகூர்கிறார்.

"அம்மாவிடம் சொல்வதற்கு நான் பயந்துகொண்டு அவன் சித்ரவதைகளை அனுபவித்து வந்தேன். பின் ஒருநாள் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என அவனிடம் எதிர்க்குரல் எழுப்பிய பொழுது, உன் அம்மாவிற்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது என்று கூறி, மேலும் அதிகமாக அடிக்கத் தொடங்கினான். பத்து வயதுக் குழந்தையான நான் அதையும் அப்பாவித்தனமாக நம்பிவிட்டேன். பின் அவன் ஆட்டம் இன்னும் அதிகமானது. 19 வயது வரை இந்தக் கொடுமைத் தொடர்ந்தது. பின் மாடலிங் துறையில் நான் கால்வைத்து சுயமாக சம்பாதிக்கத் தொடங்கிய பின் வீட்டைவிட்டு வெளியேறி விட்டேன். அதன் பின் கணேஷை சந்தித்து காதல் வந்து என் திருமண வாழ்க்கை ஆரம்பித்தது. 

திருமணத்திற்குப் பின் ஒருமுறை கருவுற்றேன். பாலியல் வன்கொடுமை செய்திகளைத் தொடர்ந்து பார்த்து மன உளைச்சலுக்கு உள்ளாகி அந்தக் கருவும் கலைந்தது. என் அம்மா என் பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் அவர்தான் என்ற எண்ணத்தில் இன்று வரை குற்றவுணர்ச்சியில் அவதிப்படுகிறார். என்னைச் சித்ரவதை செய்தவனோ மாரடைப்பில் இறந்துவிட்டான். அவனைத் திட்டியோ அவனுக்கு எதிராகவோ ஒரு கேள்வி நான் கேட்டிருந்தால் என் மனது ஆறியிருக்கும். அப்படி நடக்காமல் போனதால் இன்றும் என் மனது ஆற்றாமையால் அவதியுறுகிறது. இதை நான் இப்படி பொதுவெளியில் உடைத்துப் பேசுவதற்குக் காரணமே என் கணவர் கொடுத்த தைரியம்தான். இந்த தைரியம் எனக்கு அன்றே இருந்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரி மாறியிருக்கும். இதை நான் ஏன் இப்பொழுது கூறுகிறேன் என்றால், 'அயனாவரம் சிறுமி ஏன் இத்தனை நாட்களாக தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லவில்லை என அச்சிறுமியிடம் சிலர் முன்வைத்தக் கேள்விதான் காரணம்.

சின்னத்திரையில் முன்னணி நடிகையான நிஷாவிற்கே அவருக்கு நடந்த பாலியல் குற்றங்களைப் பொதுவெளியில் கூறுவதற்கு அவர் கணவரிடமிருந்து தைரியமும் இத்தனை கால அவகாசமும் ஏற்ற சூழ் நிலையும் தேவைப்படிருக்கிறது எனில் நாம் அன்றாடம் சந்திக்கும் எவ்வித பின்புலமும் இல்லாத சாமானியப் பெண்களுக்கு இன்னும் எத்தனை விஷயங்கள் தேவைப்படும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தைரியமாய் வாய்விட்டு வெளியே சொல்ல?

இதற்கு முன்னாலுள்ள அத்தியாயங்களிலும் நாம் கூறியது போல குழந்தைகளிடமும் சரி, பெண்களிடமும் சரி, நாம் களையவேண்டியது அவர்களின் பயத்தைத்தான். அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டியது சீரிய தைரியத்தைத்தான். ஏதோ ஒரு புள்ளியில் ஸ்ரீ ரெட்டியும் அந்த பயத்தைக் கடந்துதான் வந்திருப்பார்.

சரி, ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் முடிவுதான் என்ன?

*** விடை தேடுவோம் ***

- இந்து லோகநாதன்

மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 6 - அட்ஜஸ்மென்ட் வலையில் ஆண்களும்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close