கஜினிகாந்த் படத்தில் அறிமுகமான ஆதித்யா டிவி பிரபலம்

  கனிமொழி   | Last Modified : 04 Aug, 2018 03:47 am

adithya-tv-anchor-debuts-in-gajinikanth-movie

தொலைக்காட்சி தொகுப்பாளர் சினிமா நடிக்க வருவது தற்போது சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக உள்ளார். இவரை தொடர்ந்து மா.கா.பா ஆனந்த் படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித் திரைக்கு வரும் எல்லோரும் வெற்றி அடைவார்களா என்பது கேள்வி குறி தான்.

இந்த வரிசையில் இப்போது ஆதித்யா டிவி தொகுப்பாளர் குருமூர்த்தி, ஆர்யா, சயீஷா நடிப்பில்  வெளியாகியிருக்கும் கஜினிகாந்த் படத்தில் ஒரு சில காட்சிகளில் ஹீரோவின் நண்பராக நடித்துள்ளார். தொலைக்காட்சியிலிருந்து வெள்ளி திரைக்கு அடியெடுத்து வைத்த குருமூர்த்தியிடம் சில கேள்விகள் ....

நீங்க ஆதித்யா டிவியில் எப்படி என்ட்ரி கொடுத்தீங்க?

சின்ன வயசில இருந்தே எனக்கு சினிமால நடிக்க்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆதித்யா டிவி 'டாடி எனக்கு ஒரு டவுட்' நிகழ்ச்சியில நடித்த செந்தில் அண்ணா எங்க ஊர் காரர் தான். அவர்கிட்ட ஆடிஷன் கேட்டு பல வருஷம் கழித்து ஆதித்யா டிவியில் செலக்ட் ஆகி நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பிச்சேன். இதை தவிர்த்து இப்போ ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன். அந்த சேனல் பெயர் 'சொப்பன சுந்தரி 2.0'.  என்னோட நடிப்பு திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள இந்த சேனல் தான் எனக்கு உதவி செய்யுது.

கஜினிகாந்த் படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

வழக்கம் போல ஒரு கேமரா ஒரு டைரக்டர் முன்னாடி நடிப்பது எனக்கு பழகின விஷயம் தான். ஆனால் முதல் முறையாக ஆர்யா, கருணாகரன் அவங்களோட இணைந்து நடிக்க போறோம்ன்னு கொஞ்சம் பயமா இருந்தது. பிறகு அவர்களும் நண்பர்கள் மாறி என்கிட்ட பேச ஆரம்பித்ததும் எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. மொத்தத்தில பட குழிவினார் எப்பவும் ஜாலியாகவே இருந்தார்கள். இந்த படவாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு காரணமா இருந்ததே என்னுடைய யூடியூப் சேனலில் நான் நடித்த வீடியோக்கள் தான். இது எனக்கு ஒரு புது அனுபவம்.

ஒரு டிவி தொகுப்பாளர் சினிமாவிற்கு வருவது கடினம், எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

இங்கிருக்கும் பல பேர் டிவியில் இருந்தால் ஈஸியாக சினிமாவிற்கு வந்துவிடலாம்னு யோசிக்கிறார்கள். ஆனால் அது தவறு. ஏற்கனவே ஒரு டிவி சேனலில் பிரபலமான நபரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்த இயக்குனர்கள் அவ்வளவு சுலபமாக முன் வரமாட்டார்கள். புது முகங்களை அறிமுகம் செய்ய தான் இயக்குனர்கள் விரும்புவர். டிவி தொகுப்பாளராய் இருந்து நடிகனாவது எல்லாருக்கும் சுலபம் இல்லை. இந்த இரண்டு விஷயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு. எனக்கு நடிக்க ரொம்ப ஆசை என்பதால் இது எனக்கு சுவாரசியமாக இருந்தது.

மீடியாவை தவிர்த்து வேற எந்த துறையில் விருப்பம் அதிகம்?

சினிமா மட்டும் தான் எனக்கு 24 மணிநேர யோசனை, விருப்பம்ன்னு சொல்லலாம். வேற விஷயங்களில் ஈடுபட நேரம் இருக்காது. ஆதித்யா டிவி நிகழ்ச்சிக்காக தயாராகணும், அது போக என்னோட யூடியூப் சேனல் வேலைகள் இருக்கும். இதை தவிர்த்து இப்போ படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன். மீடியாவை தாண்டி எதையும் யோசித்து கூட பார்த்தது இல்லை.

அடுத்து வேறு என்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?

மதயானை கூட்டம் கதிர் நடித்து வரும் 'சத்ரு' படத்தில் ஒரு சின்ன நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அடுத்து சித்தார்த் நடிக்கும்' இறுமாப்பு' படத்திலும் ஒரு முக்கியமான காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதை தொடர்ந்து இன்னும் நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறேன்.

உங்கள் வாழ்க்கை லட்சியம் என்ன?

சினிமால காமெடியனா வளரனும் என்பது தான் என்னோட வாழ்நாள் லட்சியம். கவுண்டமணி, செந்தில், வடிவேலு இவர்களை போல எனக்கும் ஒரு தனி காமெடி ஸ்டைல் அமைச்சுக்கணும்ணு ஆசை.

 

இதையும் படிங்க ப்ளீஸ்...

ரஜினி - கமல், அஜித் - விஜய் சண்டையின் ஆரம்பப் புள்ளியை நோக்கிய பயணம்: 

இரு துருவங்கள் - பகுதி 2 | எம்.ஜி.ஆர். Vs சிவாஜி கணேசன் 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.