மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் (நிறைவு பகுதி) - எது தீர்வல்ல?

  இந்து லோகநாதன்   | Last Modified : 06 Aug, 2018 10:53 am
sri-reddy-issue-and-conclusion-points

கடந்த அத்தியாயங்களில் கூறப்பட்டது போல் திரைத் துறையில் மட்டுமே பாலியல் குற்றங்கள் நடப்பதில்லை என்பது நிதர்சனம். கல்வித் துறையில் அதற்கு சமமாக நடந்து வருகிறது என்ற சமீபத்தில் நாமறிந்த செய்தி கவலைகொள்ளத்தக்கதே!

சமீபத்தில் ஆசிரியை நிர்மலாதேவியின் ஆசைப் பேச்சின் ஆடியோவை நாம் அறிவோம். அதே போல ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடுவர்களுக்கு இதில் பெரும்பங்கு இருப்பதாக ஒரு பேராசிரியை என்னிடம் மிகவும் வருத்தப்பட்டுப் பகிர்ந்து கொண்டார். 

"நீ என்னுடன் படுத்தால்தான் உனக்கு நான் மதிப்பெண் போடுவேன், என் கையெழுத்துக் கிடைக்கும் என ஓர் ஆராய்ச்சிப் படிப்பு பெண்ணின் வழிகாட்டி (ப்ராஜக்ட் கைட்) அப்பெண்ணிடம் கூறி வற்புறுத்துவதெல்லாம் வன்கொடுமைக்கும் மேலே. அந்தப் பெண் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் படிப்பு போய்விடும் என அஞ்சி, அங்கேயும் போக முடியாமல் வீட்டில் சொல்வதற்கு போதிய தைரியமும் இல்லாமல் குழம்பிக்கொண்டு, பின் ஒருவாரியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டில் போய் சொன்னால் நம்மூரில் பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது, "25 வயசுல என்ன உனக்கு படிப்பு? அப்படி ஒரு படிப்பு உனக்குத் தேவையில்லை. மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கிறோம். கல்யாணம் பண்ணிகிட்டு பேசாம வீட்டோட இரு. அதான் உனக்கும் உன்ன சுத்தி உள்ள எங்களுக்கும் நிம்மதி. கல்யாணமாகாத பொண்ண இத்தன வயசுல வச்சுக்கிட்டு ஒவ்வொரு செகண்டும் வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்கிறது பெத்தவங்க எங்களுக்குதான் தெரியும்" என்று கண்ணீர் சிந்தி முடிப்பார்கள். 

முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டது போலவே நம்மூர் பெண்கள் பெரும்பாலானோர் எமோஷனல் இடியட்ஸ் ஆதலால், பெற்றோர்களின் பேச்சுக்கு எளிதில் இசைந்து லட்சியத்திற்கு முழுக்குப் போடும் அபாயம் அதிகமாகவே இங்கு இருக்கிறது. 

எது தீர்வல்ல?

இந்தப் பிரச்சனைக்கு எது தீர்வு என யோசிக்கும் முன்பு எது தீர்வல்ல என்றும் யோசிக்க வேண்டும். மேலே கூறியது போல ஒரு பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிட்டால் பாலியல் குற்றங்கள் குறைந்துவிடுமா எனக் கேட்டால், நிச்சயமாக இல்லை. அதுவரை 'பெண்' என்று பார்த்த சமூகம் திருமணத்திற்குப் பிறகு 'ஆன்ட்டி' என்ற முத்திரையில் அவரை இன்னும் அதிகமாகவே காமக் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறது. 

'எம்.ஐ.எல்.எஃப்' என்ற பிரத்யேக வார்த்தைச் சுருக்கமும், அத்தகைய பெண்களுக்காக குறியீடாக இளையோர்களிடையே உலவி வருகிறது. கணவன் இருக்கும்பொழுதே இந்த நிலை என்றால் கணவனை இழந்த கைம்பெண்ணுக்கெல்லாம் அனுதினமும் அவஸ்தைதான். எனவே திருமணம் நிச்சயமாக இதற்கு தீர்வாகாது.

சரி, எல்லா துறையிலும்தான் இது இருக்கிறது என நாம் உணர்ந்தாலும் இவ்வகைப் பிரச்னைகள் மூடி வைக்கவே படுகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வர என்ன வழி? தீர்வு என்ன?

'அட்ஜஸ்மெண்ட்' இல்லாமல் திரைத்துறையில் இருந்துவிடவே முடியாதா?

ஒருமுறை தமிழ் சினிமாவின் பழங்கால நடன இயக்குனர் ஒருவரை நான் நேர்காணல் செய்தபொழுது அவர் சொன்ன வார்த்தைகள் இவை:

'வெளியூர் ஷூட்டிங்கின்போது பகல் முழுவதும் ஷூட்டிங், டான்ஸ் ஸீன்ஸ் இருக்கும். ராத்திரி 'பேக்-அப்' சொன்னதும் எல்லாரும் டயர்ட்ல ஹோட்டல் ரூமுக்கு போய் படுத்துருவோம். ராத்திரி எல்லாரும் தூங்குனதுக்கப்பறம் நான் கார்ல ஹோட்டல சுத்தி ரவுண்ட்ஸ் வருவேன். ஆனா நான் காருக்குள்ள இருக்கறது வெளிய யாருக்கும் தெரியாதபடிக்கு பாத்துகிட்டு ஹோட்டல் ஏரியாவ சுத்தி நோட்டம் விடுவேன். டான்ஸ் க்ரூப்ல உள்ள பொண்ணுங்க - பசங்க சிலர் யாருக்கும் தெரியாம ராத்திரி நேரத்துல ரகசியமா சந்திச்சுக்கிட்டு இருப்பாங்க. 

என் அனுபவத்துலதான் காதலுக்கும் காதலல்லாத மத்ததுக்கும் வித்தியாசம் தெரியுமே. அதனால அந்த ரகசிய சந்திப்புல ஈடுபடறவங்கள நல்லா பாத்து வெச்சுப்பேன். மறுநாள் டான்ஸ் ப்ராக்டிஸ் அப்போ அவங்கள மட்டும் ஸ்பெஷலா கவனிச்சு பெண்டு கழட்டிடுவேன். கால் வலிக்குதுன்னு கத்துனாலும் கதறுனாலும் முந்துன நாள் இரவு நடந்ததச் சொல்லி அவங்கள தாளிச்சு விட்டுருவேன். ஏன்னா, என் டான்ஸ் க்ரூப்ல இருக்கிறவங்களுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். அப்புறம்தான் டான்ஸ்லாம். அதனால அவங்ககிட்ட ஒரு தாயைப் போல கண்டிப்போடதான் நடந்துக்குவேன். 

அது தவிர எங்க துறை ஆளுங்க ஒருத்தரும் என்கிட்டயும் அட்வாண்டேஜ் எடுத்து பேசிட முடியாது. தவறான எண்ணத்தோட என்னை நெருங்கிடவும் முடியாது. யாரும் என்கிட்ட உரிமைல ஒருமைல பேசுனா நானும் பதிலுக்குத் தயங்காம ''நீ, வா,போ'ன்னே பேசிடுவேன். அதுக்கு பயந்துட்டே எல்லாரும் என்னை மரியாதையாதான் நடத்துவாங்க. இப்படி இருக்கறதுனாலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி அண்ணன்களுக்கு என் மேல தனி மரியாதை உண்டு. அவங்களோட செல்லப் பிள்ளை நான்." என்றவர் அதை முடிக்கும்போது என்னிடம், "எங்க இருந்தாலும் தனி மனித ஒழுக்கம்தான் ரொம்ப முக்கியம்டா கண்ணா. யார் எப்படி இருந்தாலும் நாம மத்தவங்க நமக்கு மரியாத குடுக்கற அளவுக்கு கண்ணியமா நடந்துக்கணும்'னு வாஞ்சையாய்த் தன் மகளுக்கு கூறுவதைப் போல அக்கறையுடன் கூறி வழியனுப்பி வைத்தார்.

மேலும், இதற்கான தீர்வு குறித்து திரைத்துறை கலைஞர்கள் சிலரிடம் கேட்டபொழுது அவர்கள் பகிர்ந்து கொண்டவை:

* "எனக்குத் தெரிந்த ஒரு பிரபல இயக்குநர் இதற்காகவே தனி ஏஜண்ட் வைத்திருக்கிறார். அந்த ஏஜெண்ட் படங்களுக்கு ஆள் எடுக்கப் போகும்பொழுது அந்த இயக்குநர் கூட இரவைக் கழிப்பதெற்கென்றே சில பெண்களை பிரத்யேகமாக கிராமங்களிலிருந்து தேர்வு செய்து கொடுப்பார். பின்னாளில் அவர்களே ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக உருவெடுக்கிறார்கள். இதெல்லாமே சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம். ஆனால் இப்பொழுது ஸ்ரீ ரெட்டி விஷயம் தொடங்கி அவரும், பின் வரலட்சுமியும், அவர்களைத் தொடர்ந்த நடிகைகள் சிலரும் வெளிப்படையாக இந்தப் பிரச்னையைப் பேச ஆரம்பித்துவிட்டனர். அப்படி எல்லா பெண்களும் பேசத் தொடங்க வேண்டும்.

* ஒரு கதைக்கு நடிகர்களைத் தேர்வு செய்பவர்கள் 'இவர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவாரா?" என்ற ஒற்றைக் கேள்வியை மட்டுமே மனதில் நிறுத்த வேண்டும். அதற்கு பதில் கூறும் விதமாக அந்த நடிகையின் முகமும் திறமையும் அமைந்துவிட்டால் மறு சிந்தனை ஏதும் இல்லாமல் தேர்வு செய்திட வேண்டும். அதைத் தாண்டி வேறு எதையும் யோசித்தல் கூடாது. கலைக்காக ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை யாசகம் கேட்பது முற்றிலும் மனிதத்தன்மையற்ற செயல். கலைக்கு நாம் செய்யும் துரோகம். 

இவ்வளவு பெரிய துறையில் 'நீங்கள் இப்படி மற்றவரை வற்புறுத்துதல் தவறு. உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்' என ஒவ்வொருவரிடமும் போய் நாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அது நம் வேலையுமல்ல. அவரவர் திருந்துவது அவரவர் கையில்தான் இருக்கிறது. சுயஒழுக்கமே பிரதானமானது. 'என்னுடன் இரவைக் கழித்தால் நான் உனக்கு இந்த வாய்ப்பளிப்பேன்' என்கிற மற்றொருவர் வாக்கின் மீது வைக்கின்ற நம்பிக்கையை நம் திறமையின் மீது வைக்க வேண்டும். உண்மையானத் திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் உண்டு. அதிகபட்சம் தாமதம் ஆகலாம். எடுத்துக்காட்டுக்கு விக்ரம், விஜய் சேதுபதியிலிருந்து பலர் இங்கு இருக்கின்றனர். அவர்கள் இளம்பருவத்திலிருந்தே சினிமாவில் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தாலும் அங்கீகரிக்கப்பட்டது என்னவோ தங்கள் 35 வயதைக் கடந்தபோதுதான். சரண்யா பொன்வண்ணன் மற்றொரு நல்ல உதாரணம். ஒரு நாயகியாக அவருக்கு எதிர்பார்த்த புகழ் கிட்டாவிட்டாலும் ஒரு குணசித்திர நடிகையாக அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக புகழும் மரியாதையும் இன்று அவருக்குக் கிடைத்ததை நாம் மறுக்க முடியாது.' 

மேற்கண்ட இரண்டுமே மிகமுக்கியமான அடிப்படைத் தீர்வுகள்.

"சந்தர்ப்பம் கிடைத்தால் உபயோகித்துக் கொள்வது ஆணின் சாமர்த்தியம்; அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுப்பது பெண்ணின் சாதுர்யம்" என முகநூலில் ஒரு தோழி எழுதியிருந்தார். இதுவே இங்கு முற்றிலும் உண்மை.

ஆங்கிலத்தில் 'லேர்ன் டு ஸே நோ வித்தவுட் ஸ்டேட்டிங் எனி ரீஸன்ஸ்' என்றொரு சொல்லாடல் இருக்கிறது. 'எவ்வித விளக்கமும் கொடுக்காமல் நேரடியாக 'வேண்டாம்' என சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்" என்பதே அதன் பொருள். அப்படி 'வேண்டாம்' எனத் தெளிவாக மறுத்துவிடுபவர்களை வற்புறுத்தித் தொந்தரவு செய்யாமல் இருப்பது அதைவிட சீரிய பண்பு. இவை இரண்டுமே நாம் ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டிய மிக முக்கியமானப் பண்புகள். இதன் மூலம் பல சிக்கல்களையும் பிரச்னைகளையும் தவிர்க்கலாம். தொழில்துறை மட்டுமல்லாமல் பல இடங்களில் இத்தகைய தெளிவுசார் தனிமனித ஒழுக்கங்களாலேயே குற்றங்களை நாம் தவிர்க்கலாம்.

குற்றங்கள் தவிர்ப்போம்.

(முற்றும்)

- இந்து லோகநாதன்

முந்தைய அத்தியாயம்: மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 7 - எதிர்வினைகள் எத்தகையது?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close