இரு துருவங்கள் - பகுதி 3 | ரஜினி Vs கமல்

  பால கணேசன்   | Last Modified : 06 Aug, 2018 12:33 pm

tamil-cinema-super-stars-rajini-vs-kamal

எல்லோருக்கும் தெரிந்த வரலாற்றை மீண்டும் சொல்வதற்கு பதிலாக சில பல கேள்விகளுடன் இந்த அத்தியாயத்தை தொடங்கலாம் என்று விருப்பம். நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க தொடங்கிய குழந்தை என்றோ, பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜிராவ் கெய்க்வாட் பாலச்சந்தரின் கண்களில் பட்டு ரஜினிகாந்தாக மாறினார் என்றெல்லாம் எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடில்லாததும் இதற்கு ஒரு காரணம். கடந்த பல வருடங்களாக பலரின் மனத்திலும் இருக்கும் சில கேள்விகளை நானே தொகுத்து, அதற்கான பதிலை சில தரவுகளோடும், உதாரணங்களோடும் தரலாம் என்றிருக்கிறேன். ஆரம்பிப்போமா?

1. ரஜினி திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிப்பை கற்றுக்கொண்டவர். ஆனால், ரஜினி திரைப்பட கல்லூரியில் இருந்து வெளியே வரும்பொழுதே கமல் கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்து இருந்தார். அப்படியிருக்கையில் இந்த ஒப்பீடு எப்போதிருந்து தொடங்கியது? எந்த புள்ளியில் ஆரம்பித்தது?

கமல் சினிமாவில் அறிமுகமானபோது எம்ஜிஆரின் 'மன்னாதி மன்னன்', 'அரசிளங்குமரி' போன்ற படங்கள் வந்து வெற்றிநடை போட்டுகொண்டு இருந்தன. இன்னொரு பக்கம் சிவாஜிக்கு 'இரும்புத்திரை', 'தெய்வப்பிறவி', 'படிக்காத மேதை' ஆகிய படங்கள் வெளிவந்து எம்ஜிஆரின் படங்களுக்கு கடும் போட்டியை கொடுத்துக்கொண்டிருந்தன. இந்தப் போரின் இடையே ஜெமினி கணேசனின் படங்களும் கவனித்தக்க அளவு வெளியாகி ஓரளவு வெற்றியும் பெற்றன. சொல்லப்போனால், இன்றைய விமர்சகர்கள் அக்காலகட்டத்தை எம்ஜிஆர்-சிவாஜி என்று இரண்டாக மட்டும் பிரிக்காமல் மூவேந்தர்கள் என்று கூறி ஜெமினியையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருந்தார்கள். அதில் உண்மையும் உண்டு. ஆனால் ஜெமினியின் படங்களை ரசித்தவர்களில் பெரும்பான்மையினர் எம்ஜிஆர் அல்லது சிவாஜிக்கு ரசிகர்களாக இருந்ததால் ஜெமினிக்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகவில்லை. இந்த ஜெமினியின் படங்களில் ஒன்றுதான் 'களத்தூர் கண்ணம்மா'. 

பின்னர் கமல் முதன்முறையாக கதாநாயகனாக நடித்து பெருவெற்றி பெற்ற படமான 'அபூர்வ ராகங்கள்' வெளிவந்தபோது எம்ஜிஆருக்கு 'நாளை நமதே', 'நினைத்ததை முடிப்பவன்', 'இதயக்கனி', 'பல்லாண்டு வாழ்க' என பல படங்கள் வெளிவந்து நம்பர் ஒன்றாகவே இருந்தார். சிவாஜியும் சளைக்காமல் தங்கப்பதக்கம் போன்ற க்ளாஸிக் படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். இதில் வேடிக்கையான விஷயம் அதே அபூர்வ ராகங்களில் ரஜினியும் அறிமுகமானதுதான். எப்படி எம்ஜிஆர் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் 'ராஜகுமாரி' படத்தில் கதாநாயகனாக முன்னேறி வர பல வருடங்கள் ஆனதோ அதேபோன்றுதான் கமலுக்கும் ஆனது. எப்படி 'பராசக்தி' படத்தில் தனது சிறப்பான வித்தியாசமான நடிப்பில் கிடைத்த பெயரை சிவாஜி தக்கவைத்தாரோ அதேபோல்தான் ரஜினியும் தக்கவைத்தார். சிவாஜி நாயகனாக அறிமுகமானாலும் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தால் அதை தவறவிடவில்லை. ரஜினியும் அதேபோல் வில்லனாக, குணச்சித்திர வேடத்தில் என தொடர்ந்து நடித்து ஒரு இடம் பெற்றார்.

இந்த வரலாறு எதற்கென்றால், ஆரம்ப கட்டத்தில் சிவாஜியின் பாதையில் ரஜினி செல்வார் என்றும், எம்ஜிஆராக உருமாற கமலுக்கு வாய்ப்புள்ளதென்றுமே மக்கள் கணித்தார்கள். அதற்கு இன்னொரு காரணம், எம்ஜிஆர் மற்றும் கமலின் தோற்றம். ஆனால் காலம்தான் எவ்வளவு மாற்றங்களை உருவாக்கவல்லது! 1978-ல் வெளிவந்த கமலின் 'சட்டம் என் கையில்' படம்தான் அவருக்கு கிடைத்த முதல் முழுநீள மசாலா படம் என்று சொல்லலாம். அதற்கு காரணம் என்னவென்றால் 'உத்தமபுத்திரன்' காலத்திலிருந்து தொடரும் இரட்டைவேட கதாநாயகன் கதையை அதே மசாலாத்தனத்தோடு மீண்டும் திரையில் கொண்டுவந்தார் கமல். இதற்கு முந்தைய கமலின் வெற்றிப் படங்கள் பலவும் பரீட்சார்த்த முயற்சியாகவே இருந்தது. 'மன்மத லீலை', '16 வயதினிலே' போன்றவை இதில் மிக முக்கியமானவை. முழுநீள மசாலா என்பது மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் 'சட்டம் என் கையில்' படத்தில் இருந்தே தொடங்கியதாக தெரிகிறது.

இதே 1978-ல் ரஜினி நடிப்பில் 'முள்ளும் மலரும்', 'தப்புத்தாளங்கள்' போன்ற படம் வெளியாகி இருந்தது. 1978-ல் தான் ரஜினி முதன்முறையாக கதாநாயகனாக நடித்த 'பைரவி'யும் வெளியானது. இது 1978-ன் முதல் பாதிதான். இரண்டாம் பாதியில் ரஜினியின் பயணம் தடம் மாறியது. 'தாய் மீது சத்தியம்', 'ப்ரியா' ஆகிய இரண்டு ஆக்‌ஷன் படங்கள் வெளிவந்து ரஜினியை ஆக்‌ஷன் ஹீரோவாக முன்னிறுத்தியது. அதே 1978-ன் இரண்டாம் பகுதியில் கமலுக்கு 'சிகப்பு ரோஜாக்கள்' வெளிவந்தது. 

இந்த மேற்கண்ட பத்தியில் நான் குறிப்பிட்டிருக்கும் படங்களின் கதைகளும், அவை பெற்ற வரவேற்புகளும் உங்களுக்கு புரிந்தாலே நான் சொல்ல வருவது உங்களுக்கு தெளிவாக புரிந்துவிடும். 'முள்ளும் மலரும்' நடித்த ஒருவர் அதே வருடத்தில் 'ப்ரியா' நடிக்கிறார். 'சட்டம் என் கையில்' நடித்த ஒருவர் சிகப்பு ரோஜாக்களில் ஆன்டி-ஹீரோவாக வருகிறார். இந்த கண்ணாமூச்சி ஆட்டம்தான் கமல் - ரஜினியை உயரத்திற்கு கொண்டு சென்றது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அதே வருடம்தான் கமல்-ரஜினி இணைந்து நடித்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' மற்றும் 'அவள் அப்படித்தான்' போன்ற படங்களும் வெளியாகிறது. 

இறுதியாக 1979-ல் வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தோடு இருவரும் இணைந்து நடிப்பதை கைவிடுகிறார்கள். இணைந்து நடிப்பதை கைவிடுவது என்பதிலேயே இருவருக்குமான சந்தை உருவாகிவிட்டது என்பதற்கான புரிதல்தான். இந்த சந்தையின் முக்கிய காரணகர்த்தாக்கள் ரசிகர்கள். இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில் ஒருவருக்கு மற்றவரை விட காட்சிகள் குறைவாக இருந்தால் ரசிகர்கள் கோபப்பட ஆரம்பித்துவிடுவார்கள் என்கிற உண்மையையும் புரிந்தே இனி சேர்ந்து நடிக்கப்போவதில்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டார்கள். இந்தப் புள்ளிதான் அவர்களின் ஒப்பீடு தொடங்கிய இடம் என்று கூறலாம்.

2. ரஜினி மற்றும் கமல் படங்கள் ஒரே நாளில் பல முறை வெளிவந்துள்ளது. இதன் அடிப்படையில் நடந்த ரசிக சண்டைகள், வசூலில் யார் முன்னணி என்பதை வைத்து இவர்களின் திரை வாழ்க்கையை அலசினால் ஓரளவு சரியாக இவர்களின் திரை வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடியுமா?

நிச்சயமாக உணர்ந்து கொள்ளலாம். எம்ஜிஆர் - சிவாஜி காலத்திலும் இந்தப் பண்டிகை கால பட வெளியீடுகள் இருந்தாலும் கூட ரஜினி - கமல் காலத்தில் அது உச்சம் பெற்றது. ஒருகட்டத்தில் ரஜினி படங்கள் சில வருடங்கள் வெளியாகாமல் இருந்தபொழுது, "ரஜினி படம் வரும் நாள்தான் எங்களின் உண்மையான தீபாவளி நாள். அதனால் இந்த தீபாவளியை புறக்கணிக்கிறோம்" என்று ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிய கதையெல்லாம் உண்டு. அந்தளவிற்கு பண்டிகைகளும் சினிமாவும் தமிழகத்தில் பின்னிப் பிணைந்து இருப்பதை இன்றைய தலைமுறையினர் பலரும் உணர வாய்ப்பேயில்லை. 

1983-ல் கமலின் 'தூங்காதே தம்பி தூங்காதே' படமும், ரஜினியின் 'தங்கமகன்' படமும் தீபாவளி வெளியீடாக வந்தது. இரண்டுமே மசாலா படங்கள். இரண்டுமே வெற்றிப் படங்களும் கூட. ஆனால் கமலின் மசாலா ரஜினியின் மசாலாவை விட சற்று சுவாரஸ்யமாக இருந்ததால் கமலே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். 263 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது 'தூங்காதே தம்பி தூங்காதே'. மீண்டும் அடுத்த வருட தீபாவளியில் நல்லவனுக்கு நல்லவனும், எனக்குள் ஒருவனும் வெளியானது. இந்தமுறை வெற்றி ரஜினிக்கு. 1985-லும் ரஜினியே வெற்றிபெற்றார். படிக்காதவனில் தனது ஆதர்ஷ நாயகன் சிவாஜியோடு ரஜினி நடிக்க, கல்யாண ராமன் படத்தின் இரண்டாம் பாகமான ஜப்பானில் கல்யாணராமனில் கமல் நடித்திருந்தார். முதல் பாகம் பெருவெற்றி பெற்றிருந்ததால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளிவந்ததால் படம் தோல்வியுற்றதாக கூறுவர். 

இந்த மூன்று தீபாவளியிலும் வெளியான இருவரின் படங்களுமே தோல்வியடையவில்லை. சுமாராகவேனும் ஓடியது. ஆனால் 1986 - ரஜினிக்கு தீபாவளியன்று வெளியான 'மாவீரன்' படம் மிகப்பெரும் தோல்வியையே தந்தது. கே.பாலச்சந்தரின் 'புன்னகை மன்னன்' மிகப்பெரிய வெற்றியை சூடி கமலை வெற்றிபெற வைத்தது. மாவீரனின் தோல்விக்கு இதுமட்டுமின்றி கலைஞரின் வசனத்தில் உருவான 'பாலைவன ரோஜாக்கள்' படத்தின் வெற்றியும் ஒரு காரணமாக அமைந்தது. இதுவும் அதே தீபாவளிக்கு வெளியான படம்தான். 'புன்னகை மன்னன்' படத்தின் 25-வது வார வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு பாலச்சந்தர் "புரட்சி மன்னன்" என்கிற பட்டத்தை அளித்தார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. 

1985-ல் கமலின் 'ஒரு கைதியின் டைரி' வெளிவந்தது. ஏற்கெனவே கமல் 1981-ல் 'கடல் மீன்கள்' படத்தில் வயதானவர் வேடத்தில் நடித்திருந்தாலும் கூட 'ஒரு கைதியின் டைரி' படத்தில் அது இன்னும் நன்றாக வெளிப்பட்டது. 1984-ல் ரஜினி நல்லவனுக்கு நல்லவனில் வயதான வேடம் ஏற்றிருந்தாலும் கூட கமலின் வயதானவர் வேடத்தில் இருந்த அந்த அர்ப்பணிப்பு அதில் இல்லை. ஒரு மசாலா படத்தில் கூட ஒரு கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்தி காட்ட உழைக்கும் மனிதராக கமலை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இதுவே ரஜினி விஷயத்தில் "வயதான வேடத்தில் நடித்தாலும் ரஜினியின் அந்த இயல்பான ஸ்டைல் இருப்பதால் அதிகம் கவர்ந்தது" என்கிற பேச்சு ரசிகர்களுக்கிடையே இருந்தது. என்னவொரு அழகான முரண்!!

ஆனால், உண்மையான யுத்தம் 1987-ல் தான் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது என்று கூறலாம். நாயகனும், மனிதனும் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிவாகை சூடினாலும் கூட நாயகனே உண்மையான வெற்றி, இன்னும் மனிதன் மாதிரியான மசாலா கொடுமைகளை சகித்துக்கொள்ளவோ உற்சாகப்படுத்தவோ கூடாது என்று கமல் ரசிகர்கள் தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவாதம் இப்போது நடக்கும் எல்லா விவாதத்திற்கும் தாய் என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த ரசிகர் போராட்டமே கமலை இன்னும் மிக தீவிரமாக பரீட்சார்த்த திரைப்படங்களை எடுக்கும் பாதைக்கு தள்ளியது. 

ரஜினி தன்னுடைய பாதை இதுதான் என்பதில் மிகத் தீவிரமாக இருந்ததால் தொடர்ந்து மாஸ் ஹீரோ படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார். 1988-ல் ஐந்து நாட்கள் இடைவெளியில் தர்மத்தின் தலைவனும், சத்யாவும் வெளிவந்தன. இரண்டுமே இந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட படம்தான். ரஜினி வழக்கமான தன் நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் கதாபாத்திரத்திலும், அரசியல்வாதிகளை நம்பி ஏமாறும் பட்டப்படிப்பு படித்த இளைஞர் வேடத்தில் கமலும் நடித்து வெளியான இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.

1989-ல் வெற்றிவிழாவும், மாப்பிள்ளையும் ஒரே நேரத்தில் வெளியானது. இரண்டுமே மசாலா படங்கள். இரண்டுமே நல்ல வெற்றியை பெற்றன. ஆங்கிலத்தில் பிரபல நாவலான போர்னே ஐடன்டிட்டி படத்தில் இருந்து சுடப்பட்ட 'வெற்றிவிழா' கமலின் ஹாலிவுட் காப்பிக்கு முன்னோடி என்று சொன்னால் அது மிகையில்லை. அதேபோல் 'மாப்பிள்ளை' படத்தில் திமிர் பிடித்த மாமியாரை அடக்கும் வேடத்தில் ரஜினி நடித்து பெண்களை அடக்குமுறை செய்து வெல்லும் கதாநாயகனாக நடிக்கும் போக்கை தொடங்கிவைத்தார். இப்படி நல்லது மட்டுமல்லாமல் கெட்டதிலும் இருவரும் சேர்ந்தே வளர்ந்தது குறிப்பிடத்தக்கது. 1990 பொங்கலுக்கு வந்த பணக்காரன் மற்றும் இந்திரன் சந்திரன் இரண்டும் மீண்டும் அதை நிரூபித்தது. 'இந்திரன் சந்திரன்' ஹாலிவுட்டின் காப்பி என்றால், பணக்காரனில் விஜயகுமாரின் மனைவி திமிர் பிடித்த பெண்ணாக வருவார். இப்படி ரஜினி-கமல் படங்களை ஆழ்ந்து நோக்க தொடங்கினால் வேறுபாடுகளை விட ஒற்றுமைகள் அதிகம் தென்படுகிறது. 

இறுதியாக 1991 தீபாவளி. 'தளபதி'யும், 'குணா'வும் வெளியானது. வசூல் ரீதியாக ஜெயித்தது என்னவோ 'தளபதி'தான். ஆனால் கமல் ரசிகர்களை உக்கிரம் கொள்ள செய்த வெற்றி அது. ஏனெனில் 'தளபதி' வெறும் மசாலாவாக மட்டுமில்லாமல் ஓரளவு நல்ல கதையம்சத்தையும், அற்புதமான நடிப்பையும் கொண்டிருந்தது. இன்றைய காலகட்டத்தில் குணா - தளபதி இரண்டுமே க்ளாஸிக் வரிசையில் இருந்தாலும் கூட ரஜினி ஒரு படி அதிகமாக முன்னேற இந்த 'தளபதி' உதவியது என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் ரஜினி அதை தக்கவைக்க விரும்பவில்லை என்பது அடுத்த வருட தீபாவளியில் தெரிந்துபோனது. கமல் 'தேவர்மகன்' படத்தோடு வர, ரஜினியோ 'பாண்டியன்' கொடுத்தார். பின்னர் இறுதியாக 2005-ல் சந்திரமுகி - மும்பை எக்ஸ்பிரஸோடு இந்த ஒரே நாள் வெளியீடு பிரச்னை முடிவுக்கு வந்தது. அதே 2005-ல், விஜய்யின் 'சச்சின்' படமும் வெளிவந்தது. அஜித் தொடர்ந்து தோல்விகள் கொடுத்துக் கொண்டும், கார் ரேஸில் தனது நோக்கத்தை செலுத்திக்கொண்டும் இருந்தார்.

"என்ன அடுத்த பகுதிக்கு லீடா?" என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லும் பதில்....

ஆமாம்.

*** காத்திருங்கள் ***

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயம்: இரு துருவங்கள் - பகுதி 2 | எம்.ஜி.ஆர். Vs சிவாஜி கணேசன்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.