வசனங்களால் தெறிக்கவிட்ட 'திரைக் கலைஞர்' கருணாநிதி!

  பால கணேசன்   | Last Modified : 07 Aug, 2018 03:53 pm
kalaignar-karunanidhi-s-role-of-tamil-cinema-and-dravidian-politics

நீதிக்கட்சியும் காங்கிரஸும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம். திராவிட இயக்கம் என்னும் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்த தருணம். பெரியாரின் கருத்துக்களும், பேச்சுகளும் அதுவரை யாரும் கேட்காததாக இருந்தது. நேரடியாக "கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி" என்று சொன்னவர் அவர். சில நோய்களுக்கு வைத்தியம் சற்று கடுமையாகத்தான் இருக்கவேண்டும். அதைதான் பெரியார் செய்தார். இதை அண்ணா முன்னெடுத்து சென்றார். 

தனது நாடகங்கள் மூலம் சமூக நீதி கருத்துக்களை அடுக்குமொழி வசனங்கள் மூலம் சொல்ல ஆரம்பித்தார் அண்ணா. அவரின் 'வேலைக்காரி' திரைப்படம் 1949-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தியாகராஜ பாகவதரின் வீழ்ச்சிக்கு பிறகான ஒரு பிரளயம் 'வேலைக்காரி' படத்தின் மூலம் நிகழ்ந்தது. 'கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு', 'சட்டம் ஒரு இருட்டறை... அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.. ஆனால் அது ஏழைகளுக்கு எட்டாத விளக்கு' போன்ற வசனங்கள் இன்றளவும் மக்களால் மேற்கோள் காட்டப்படுகின்றன. இவையனைத்தும் இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்களே. அதிலும் குறிப்பாக 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கிற வசனம் உலகம் முடியுமட்டும் நாம் உள்ளத்தில் வைத்திருக்க வேண்டிய வசனமும் கூட.

சரித்திர மாற்றம்

அண்ணாவின் நிழலில் இருந்து உயிர்பெற்ற ஒரு ஓவியம் கலைஞர் கருணாநிதி. அண்ணா வகுத்து கொடுத்த கரடுமுரடான பாதையை செப்பனிடும் பணியிலிருந்து தொடங்கி, பின்னர் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்ட நாயகன் கலைஞர். தலைவர்கள் உருவாவது அப்படித்தான். 1947-ல் 'ராஜகுமாரி'யில் தொடங்கியது கலைஞரின் திரை வாழ்க்கை. டைட்டிலில் உதவி ஆசிரியர் என்கிற பெயரை தாங்கி வெளியான இந்தப் படத்தின் நாயகன் எம்ஜிஆர். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப்படம் அதுவரை இருந்த தமிழ் சினிமா சரித்திரத்தை மாற்றியமைக்கும் ஒரு படமாக அமைந்தது. இந்த நேரத்தில் கலைஞரை சினிமாவில் வார்த்தெடுக்க காரணமாக அமைந்த ஜூபிடர் பிக்ஸர்ஸ் நிறுவனத்தாருக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். 'ராஜகுமாரி' படத்தின் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி உடன் நாள் முழுக்க கூடவே இருந்து ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றி படம் வெற்றி பெற காரணமாக அமைந்தவர் கலைஞர் என்று சொன்னால் அது மிகையில்லை. காரணம் இந்த விஷயத்தை இயக்குனர் சாமியே ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.

இதே குழு ஜூபிடர் பிக்ஸருக்காக மீண்டும் 'அபிமன்யூ' படத்தில் இணைந்தனர். புராண இதிகாச கதைகள் மிக அதிகமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. சமகால நிகழ்வுகளை சாடி வசனம் எழுத புராண படங்களில் வழியில்லை. ஆனால் அந்த இடத்திலும் தன்னால் இயன்றதை செய்திருந்தார் வசனகர்த்தா கருணாநிதி. 'அபிமன்யூ' படத்தில் இறந்து கிடக்கும் அபிமன்யூவை பார்த்து, அபிமன்யூவின் தந்தை அர்ஜுனன் (எம்ஜிஆர் இந்த கதாபாத்திரத்தில்தான் நடித்தார்) "என் அன்பு தமிழ் மகன்" என்றொரு வசனம் பேசுவார். இந்த ஒற்றை வசனத்தில் அபிமன்யூவை தமிழ் மண்ணின் மைந்தனாக சித்தரித்து, வடநாட்டவர் உரிமை கொண்டாடிக்கொண்டிருந்த மஹாபாரதத்தை தமிழ்மண்ணுக்கு உரியதாக மாற்றியவர் கலைஞர். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் சிக்ஸர் அடிக்கும் திறனை கலைஞர் ஆரம்பம் முதலே கொண்டிருந்தார் என்பதற்கு இதுவே சான்று.

அதிரவைத்த வசனங்கள்

அதற்கப்புறம் வந்த 'மருதநாட்டு இளவரசி' கலைஞரின் புகழை, அவரின் கதை வசனத்தை உச்சியில் கொண்டுபோய் நிறுத்தியது. ஆனால் அதைத் தாண்டிய ஒரு பெருமையை அடுத்த படமான 'மந்திரி குமாரி' பெற்றது. படத்தின் வசனங்கள் எல்லாம் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. குறிப்பாய் கொள்ளையன் ஒருவன் தன் பக்கத்துக்கு நியாயம் ஒன்றை சொல்லும் காட்சிக்கு பலத்த எதிர்ப்புகள் வந்தது. அந்த வசனம் கீழ்வருமாறு:

"பார்த்திபா நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக்கூடாதா?"

"கொள்ளையடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா கலை!"

"என்ன கொள்ளையடிப்பது கலையா?"

" "ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!"

"இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?"

"கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.". 

- இந்த வசனத்தை முன்வைத்து எதிர்க்கட்சியினர் கருணாநிதி கொள்ளை அடிப்பவருக்கு ஆதரவாக பேசுகிறார் என்று வாதிட்டனர். அதற்கு கலைஞர் சொன்ன பதில்:”

"கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?"

இந்த பதில் கூறி அவர்களின் வாயை அடைத்தார். இந்த எல்லா படங்களிலும் எம்ஜிஆரும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் இவர்கள் இருவரும் வளர வளர இவர்களுக்கு இடையிலான நட்பும் வளர்ந்து கொண்டே இருந்தது.

பராசக்தி எனும் புயல்

வருடம் 1952. பராசக்தி என்கிற புயல் திரையை மையம் கொண்ட வருடம். சிவாஜி என்கிற நடிப்பு அரக்கன் அறிமுகமான வருடம். ஆனால் எல்லாவற்றையும் விட 'இனி எங்கள் ஆட்சிதான்.. எங்கள் பேச்சுதான்' என சூளுரைத்து சொல்லும் வண்ணம் வசனம் எழுதி, பட்டிதொட்டியெல்லாம் திராவிட வேர் பரவ உறுதுணையாய் நின்ற கலைஞரின் முக்கியமான படம். 

சில படங்கள் தரும் உணர்வுகளை நாம் எழுத்தில் கொண்டுவர இயலாது. சமூக நீதி ஒன்றையே தன் உயிர்மூச்சாக கொண்ட ஒருவர் தவிர வேறு யாரும் இப்படிப்பட்ட வசனங்களை எழுத முடியாது. வெறும் வார்த்தைக் கோர்வைகள் நிறைந்த வாய்ஜாலங்கள் அல்ல அந்த வசனங்கள். இன்றைய நாளில், இன்றைய நொடியில் சமூகம் என்ற ஒரு கூட்டில் யாராலும் மாற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த பல அநியாயங்கள் மேல் எழுப்பப்பட்ட வலுவான கேள்விகள் இவை. சில நூற்றாண்டுகளாக ஒரு சமூகத்தாரால் கட்டமைக்கப்பட்ட பல பொய்களை, போலித் திரைகளை தன் வசனம் என்னும் கூர்வாளால் கிழித்தெறிந்தார் கலைஞர். எத்தனையோ நாட்கள் ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உள்ளுக்குள் கதறியதை, மேடை போட்டு உரக்க சொல்லும் ஒரு கருவியாக கலைஞர் தன் வசனத்தை இந்தப் படத்தில் பயன்படுத்தினார்.

பராசக்தி ஒரு சமூகப் படம். அதில் புரட்சி கருத்துக்களை தன் பேனா கொண்டு வார்த்தெடுத்தார் கலைஞர். அதே பேனா சரித்திர கதைகளுக்கு வசனம் எழுதுகையில் ராஜபார்ட்டாக மாறி சிம்மாசனத்தில் அமரும். 'மனோகரா' அப்படிப்பட்ட ஒரு படம்தான். "பொறுத்தது போதும்.. பொங்கி எழு!" என கண்ணாம்பாள் சிவாஜியை பார்த்து சொல்லும் அந்த வசனமும், அதை தொடர்ந்து நடக்கும் காட்சிகளும் கண்டு உணர்ச்சிவசப்படாதோர் மிகக்குறைவு.

சிவாஜி கொண்ட பொறாமை

இப்படி எழுச்சிபொங்கும் எண்ணங்கள், மகிழ்ச்சி தரும் காதல் வார்த்தைகள் என எல்லா வகையான உணர்வுகளையும் திரைப்பட வசனங்களாக மாற்றும் கலையை கலைஞர் கற்றிருந்தார். குறிப்பாக 'மனோகரா' படத்தை பற்றி சிவாஜி குறிப்பிடுகையில், "படம் முழுக்க நான் நன்றாக நடித்திருந்தாலும் கூட அந்த இறுதிக்காட்சியில் "பொறுத்தது போதும் பொங்கியெழு" என்று ஒரே ஒரு வசனம் பேசி மொத்த கைத்தட்டலையும் கண்ணாம்பா அவர்கள் தட்டிச்சென்றார். 

உண்மையில் அந்தக் காட்சியை நான் பார்க்கும்பொழுது நான் ஒரு பெண்ணாக இருந்து இந்தக் காட்சியில் நடித்திருக்கக்கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன். அவ்வளவு உணர்ச்சிமிக்க வசனம் அது" என குறிப்பிட்டார். இதில் இன்னொரு ஆச்சர்யம் இதே 'மனோகரா' மேடை நாடகமாக இருந்தபொழுது அதில் கண்ணாம்பா வேடத்தில் நடித்தவர் சிவாஜி கணேசன்தான். ஆனால் அந்த நாடகத்திற்கு வசனம் எழுதியது கலைஞர் இல்லை என்பதால் இந்த பொறுத்தது போதும் பொங்கியெழு வசனமும் அப்போது இல்லை. சிவாஜியையே பொறாமை கொள்ள வைத்த வார்த்தைகள் அவை.

"முத்து விளைகின்ற மூன்று கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில், மும்முரசு கொட்டி, முச்சங்கம் வளர்த்து, முக்கொடியின் நிழலிலே முத்தமிழை காப்பாற்றும் மூவேந்தர் பெருமையினை மூளியாக்க முடி தறிந்த மன்னவரே!!" என மு வரிசை வார்த்தைகளால் கண்ணகி, பாண்டிய மன்னனின் முன்னணியில் தன் கதை சொல்லும் வசனத்தை எழுதினார் மு.கருணாநிதி. 'பூம்புகார்' என்கிற அந்த காவியம் மூலைமுடுக்கெல்லாம் மு.க-வின் திறனை மீண்டும் பறைசாற்றியது. கையில் தனிச்சிலம்புடன் அன்று பாண்டிய அரசவையில் நுழைந்த கண்ணகி பின்னர் ஒருநாள் சென்னையின் மையத்தில் சிலையானாள். "நீதியின் இலக்கணம் உரைக்கும் நெடுஞ்செழிய பாண்டியனே!! உனது நாட்டில் எதற்குப்பெயர் நீதி? நல்லார் வகுத்ததா நீதி? அல்ல அல்ல வல்லான் வகுத்ததே இங்கு நீதி" வசனமும், "ஆயிரமாயிரம் யானை சேனைகள் எதிர்த்து வந்தாலும் அண்ணாந்து தலைகுனியாது படைநடத்தும் உன் வீரம் எங்கே? கம்பீரம் எங்கே? வெற்றித் திருப்பார்வை எங்கே?" என்கிற கண்ணகியின் கேள்வியும் நீங்காது நிலைபெற்று வாழ்ந்திருக்கும்.

அதுமட்டுமா? 'ராஜா ராணி' படத்தில் சிவாஜியின் நடிப்பில் நடக்கும் சாக்ரடீஸ் மேடை நாடக வசனம் கலைஞரின் மிகச்சிறந்த வசனங்களில் ஒன்று. 'அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அறிவைத் தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்' என சாக்ரடீஸ் கூறுவது போல அவர் எழுதிய வசனம் உண்மையில் அவரது சொந்த வாழ்க்கை நிகழ்வு என்றே கூறலாம். அவ்வளவு விஷயங்களை அவர் கற்றுக்கொண்டு வளர்ந்தார். வளர்ந்தபோதும் கற்றுக்கொண்டார். நாற்றமடிக்கும் சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க சாக்ரடீஸ் அழைத்தது போல்தான் கலைஞரும் தன் சமூக நீதி காக்கும் கொள்கைகளை வசனங்கள் வழியாக எழுதி இளைஞர்களை அழைத்தார். 'வீரம் விலைபோகாது விவேகம் துணையிராவிட்டால்' என்பார் கலைஞர். இங்கே தமிழக அரசியலில் அவரைப்போல் விவேகம் மிக்க தலைவர் வேறாரும் நான் கண்டதில்லை. ஆக, தான் எழுதிய வழியிலே தன் பாதையை வடிவமைத்துக்கொண்டார் கலைஞர்.

இறுதியாக 'மந்திரி குமாரி' படத்தில் எம்ஜிஆர் கொலைக்களத்தில் நின்று கொண்டிருக்கும்போது பேசும் ஒரு வசனத்தை இன்றைய என் ஆசையாக கொண்டு எழுதுகிறேன்.

"நீ கடைசியாக சொல்ல நினைப்பது?"

"கடைசியாகவா? யாரிடத்தில் சொல்வது? என் உயிரை குடிக்க துடித்துக்கொண்டிருக்கும் சாவிடத்தில் சொல்வதா? என் கழுத்தை நெருக்க காத்திருக்கும் இந்தக் கத்தியிடத்தில் சொல்வதா? அல்லது வழிந்தோடும் என் ரத்தத்தைக் கண்டு ரசிக்க வந்திருக்கும் உன்னிடத்தில் சொல்வதா? யாரிடத்தில் சொன்னாலும் சரி.. யார் கேட்டாலும் சரி..என் இதயத் துடிப்புகள் கடைசி நேரத்திலாவது ஆவேசமாக துடித்து ஓயட்டும். என் கண்களிலே ஒருமுறை கனல் வீசி பின்பு அணைந்து போகட்டும். என் ரத்த ஓட்டம் சூடேறி பின்னர் சில்லிட்டு போகட்டும்..."

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close