இந்திய சினிமாவின் எவர்கீரின் தேவதை ஸ்ரீதேவி!

  இரமேஷ்   | Last Modified : 13 Aug, 2018 11:06 am

actress-sridevi-angel-of-indian-cinema

இந்திய திரையுலகில் ஸ்ரீதேவியின் பாய்ச்சல் அபாரமானது. 300 படங்களைக் கடந்து, தன் அசாத்திய நடிப்பால் அரை நூற்றாண்டுகள் ரசிகர்களை தன்வயப்படுத்தி வைத்திருந்தார் ஸ்ரீதேவி. அவருடைய திரையுலப் பயணத்தில் சில...

இன்றளவிலும் இந்திய சினிமாவின் எவர்கீரின் தேவதையாக கொண்டாடப்படுகிற ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்வை ஆரம்பித்து வைத்தவர் கவியரசர் கண்ணதாசன். 

வழக்கறிஞரான ஸ்ரீதேவியின் தந்தையும் கவிஞர் கண்ணதாசனும் நண்பர்கள். ஒருமுறை குழந்தை ஸ்ரீதேவியைப் பார்த்துவிட்டு, தன் நண்பரும், தயாரிப்பாளருமான சின்னப்பத் தேவரிடம், 'தனது நண்பனின் மகள், குழந்தை வேடத்திற்குப்  பொருத்தமாக இருப்பாள்' எனக் கண்ணதாசன் கூறியுள்ளார். ஸ்ரீதேவியைப் பார்த்த நொடியிலேயே 'எனக்கு அந்த முருகபெருமான கண்முன் வந்து நிற்பதுபோல் உள்ளது' எனக் கூறி தமிழில் வெளிவந்த தனது 'துணைவன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார் சாண்டோ சின்னப்ப தேவர்.

அதைத் தொடர்ந்து, ‘கந்தன் கருணை, ‘அகத்தியர்’, ‘குமார சம்பவம்’ உள்ளிட்ட பல படங்களில் அழகிய முருகன் வேடமணிந்தார் ஸ்ரீதேவி.

தனது நான்கு வயதில் ஆரம்பித்த கலைப் பயணத்தில், குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. எம்.ஜி.ஆர்., சிவாஜி என  திரையுலகின் இருபெரும் ஆளுமைகளுடன் குழந்தை நட்சத்திரமாக பிஸியாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. எம்.ஜி. ஆரின் 'நம் நாடு' படத்தில் குட்டி பத்மினியின் தம்பியாக ஆண் வேடமிட்டும் நடித்திருக்கிறார்.  

தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த அதே சமயம் தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும், பின் விஜயா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான 'ஜுலி' படம் மூலம் 1975ல் இந்தியிலும் அறிமுகமானார் ஸ்ரீதேவி.

அந்தக் காலகட்டங்களில், குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானோரை பார்ப்பதரிது. 1976ல் தனது 13ம் வயதில் இயக்குநர் பாலசந்தரால் 'மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். 

பள்ளிக்குச் செல்கிற, காதல்... திருமண பந்தம் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத, நிஜத்தில் ஒரு  13 வயது பெண் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரமும், அந்த கதாபாத்திரத்திற்காக அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகளும் இன்று வரையில் தமிழ் சினிமாவில் ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகின்றன. 

கமல், ரஜினி என இருவருடனும் இணைந்து நடித்த முதல் படம். தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய கதாநாயகி என்று சொல்லக் கூடிய அளவிற்கு 'மூன்று முடிச்சு' படத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார் ஸ்ரீதேவி. 

‘மூன்று முடிச்சு’ படத்தைப் பற்றி இயக்குநர் பாலசந்தர் குறிப்பிடும்போது "ஸ்ரீதேவி எதையும் எளிதில் கற்றுக் கொள்ளக்கூடியவர். 13 வயதேயான ஸ்ரீதேவி ஒரு 20 வயது பெண்ணுக்கான எமோஷன்களை எளிதாக வெளிக்காட்டினார்" எனக் கூறினார்.

70'களின் மத்தியில் ஆரம்பித்து தான் நடித்து வந்த தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் என அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர்களைக் கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. இன்றைய ஸ்டார் நடிகர்களான கமல், ரஜினியுடன் ‘16 வயதினிலே’ படத்தில் 'மயில்' கதாபாத்திரத்தில் இவர் வென்றிடாத நெஞ்சங்களே கிடையாது..

பாலுமகேந்திரா இயக்கத்தில் 'மூன்றாம் பிறை' படத்தில் சுய நினைவிழந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்ததை யாரும் மறக்கமுடியாத ஒன்று. 

கதாநாயகர்கள் கோலோச்சியக் காலக்கட்டத்தில் தனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலும், கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதிலும் தன்னிகரற்று விளங்கியவர் ஸ்ரீதேவி. இன்று பரவலாக பேசப்பட்டு வரும் 'கெமிஸ்ட்ரி' என்ற வார்த்தைக்கு அன்றே இவர்களுடனான படங்களில் அர்த்தம் சொல்லியிருப்பார் ஸ்ரீதேவி. 

மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார் ஸ்ரீதேவி. ‘ஆலிங்கனம்’, ‘குட்டவும் சிக்க்ஷையும்’, ‘ஆத்யபாடம்’, ‘ஆ நிமிஷம்’ போன்றவை ஸ்ரீதேவியின் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் ஆகும்.

1978ம் ஆண்டு ஸ்ரீதேவி இந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த முதல் இந்தி திரைப்படமான “சோல்வா சாவன்” துரதிருஷ்டவசமாக வெற்றி பெறவில்லை. பின்னர், இவருடைய இரண்டாவது படமான “ஹிம்மத்வாலா” பெரும் வெற்றியை தேடித் தந்ததோடு, இந்தி திரையுலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, அவருடைய ‘சத்மா’ திரைப்படம் பெரும் புகழையும், பாராட்டுகளையும் தேடித்தந்தது. 1980ம் ஆண்டு காலகட்டங்களில், இவர் ஒரு சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப் பெற்றார். பின்னர், ‘சாந்தினி’ திரைப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது மட்டுமல்லாமல், கோலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவரென்ற அந்தஸ்தையும் தந்தது.

1986ல் 'நான் அடிமை இல்லை' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்து, பாலிவுட்டில் பிசியானார். தமிழ், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அதிக அளவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட படங்களில் நடிக்கத் தொடங்கி பாலிவுட்டில் பெரிய ஹீரோயினாக வலம் வந்தார்.

சினிமா... சினிமா... என எல்லா மொழிகளிலும் பிஸியாக இருந்த ஸ்ரீதேவி ‘லம்ஹே’ படப்பிடிப்பின் போது தந்தையையும், ‘ஜூடாய்’ படப்பிடிப்பின் போது தாயையும் இழந்தார். பெற்றோரை இளம் பருவத்திலேயே இழந்ததால், சமூகத்தில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாயிற்று. போனிகபூருடனான திருமணத்திற்குப் பிறகும், அவருடைய மைத்துனரான (கணவனுடன் பிறந்த) அனில் கபூருடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். 

2004ம் ஆண்டு ‘மாலினி அய்யர்’ இந்தி தொலைக்காட்சித் தொடரில் நடித்த ஸ்ரீதேவி, பெரிய இடைவெளிக்குப் பின்னர் 2012ம் ஆண்டு ‘இங்க்லீஷ், விங்க்லீஷ்’ மூலமாக ரீ- என்ட்ரி நிகழ்ந்தது.  விஜய்யுடன்  'புலி' படத்தில் வில்லியாக நடித்திருந்ததே தமிழில் கடைசிப் படமாகவும் அமைந்தது. 

►  இந்தியில் வெளியான ‘மாம்’ திரைப்படம் ஸ்ரீதேவியின் 300வது திரைப்படம். ஸ்ரீதேவிக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்த படம். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின், அவரது மகள்கள் கண்ணீர் மல்க, விருதைப் பெற்றனர். ஸ்ரீதேவியின் கடைசிப் படமாக ஷாருக்கானின் ‘ஜீரோ’ இந்திப் படம் இந்த வருட டிசம்பரில் ரிலீஸாக இருக்கிறது.

80களின் தொடக்கத்தில் ஸ்ரீதேவி நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்று, இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தேடிக் கொடுத்தது. 

ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷி கபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகிய அனைத்து டாப் ஸ்டார்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. இன்றைய தேதி வரையில், பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் அத்தனை ‘கான்’ நடிகர்களின் எல்லாப் படங்களையும் கூட்டினால் கூட, ஸ்ரீதேவி நடித்த படங்களின் எண்ணிக்கையைத் தொடமுடியாது என்பதே ஸ்ரீதேவியின் சாதனை தான்.

அரை நூற்றாண்டு கால வாழ்க்கையை சினிமாவுக்காக அர்பணித்த நடிகை ஸ்ரீதேவி இந்திய திரையுலகின் எவர்கிரீன் தேவதை தான். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.