கனவு தேவதையின் கடைசி நிமிடங்கள்... தொடரும் சர்ச்சை!

  இரமேஷ்   | Last Modified : 13 Aug, 2018 11:08 am

actress-sridevi-s-death-and-controversy

தான் வரைகிற ஓவியங்களில், சிறந்ததென கருதுகிற ஓவியத்தை சுக்கு நூறாய் கிழித்து எறிந்து விடுகிற பழக்கம் ‘வான்கோ’விற்கு இருந்ததாம். சிறு வயது முதலே ஏக்கத்திலும், எதிர்பார்ப்பிலுமே ஸ்ரீதேவியின் வாழ்வையும், படைத்தவன் சிறந்த படைப்பென கிழித்தெறிந்து விட்டான். 

திரையுலகின் மறுபிரவேசம், பாலிவுட்டில் மகளின் அறிமுகம் என உற்சாகமாய் போய் கொண்டிருந்த ஸ்ரீதேவியின் வாழ்வில் விதி, போனிகபூரிடமிருந்து போன்கால் ரூபத்தில் விளையாடியது. கணவர் போனிகபூரின் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.  திருமண நிகழ்ச்சிகள் முடிந்தபின், கணவர் போனி கபூர், மும்பைக்கு சென்றுவிட்டார். பின் ஸ்ரீதேவிக்கு சர்ப்ரைஸ் மகிழ்ச்சி கொடுக்க நினைத்து, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மும்பையில் இருந்து துபாய்க்கு வந்துள்ளார்.

அங்குள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலுக்கு சென்று ஸ்ரீதேவியை போனிகபூர் சந்தித்துள்ளார். அவரைக் கண்டு ஸ்ரீதேவி இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார். ‘விரைவாக குளித்து தயாராகு... விருந்துக்குச் செல்லலாம்’ என்று மேலும் சர்ப்ரைஸ் கொடுத்தார் போனிகபூர். தனது கணவருடன் வெளியே புறப்பட்டுச் செல்ல தயாராவதற்காக, ‘குளித்து விட்டு வருகிறேன்’ எனக் கூறிச் சென்ற ஸ்ரீதேவி 15 நிமடங்களுக்கு மேல் ஆகியும்  வெளியே வராதது கண்டு போனி கபூருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, குளியல் அறை கதவை தட்டியும், ஸ்ரீதேவி திறக்கவில்லை. கதவை வலுக்கட்டாயமாக திறந்தபோது, ஸ்ரீதேவி குளியல் அறை தொட்டியில் மூர்ச்சையாகி கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த போனிகபூர், ஸ்ரீதேவியை குளியல் தொட்டியில் இருந்து தூக்கி, தனது நண்பருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் துபாய் போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீஸார் வருவதற்குள் ஸ்ரீதேவி உயிரிழந்துவிட்டார் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனது அன்பு மனைவிக்கு விருந்து அளிக்க நினைத்து ஆசையாசையாய் மும்பையிலிருந்து துபாய் திரும்ப வந்த போனி கபூருக்கு மனைவியை இழந்ததும் இல்லாமல், ‘கொலை செய்திருப்பாரோ’ என்கிற சந்தேக வளையமும் பெரிதும் அயர்ச்சியாக்கியது. 

கடந்த பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று அறிவிக்கப்பட்டது. 'போஸ்ட்மார்ட் ரிப்போர்ட் படி, ஸ்ரீதேவி, ‘நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது ரத்தத்தில் மது கலந்திருந்ததாகவும்’ தகவல்கள் வெளிவந்தன. இந்த அறிக்கை, அவரது உடலை இந்தியா கொண்டுவருவதில் மேலும் சிக்கல்களை உருவாக்கியது. தடயவியல் சோதனைகளுக்குப் பிறகு, சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, 4 நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 27ம் தேதி அனில் அம்பானிக்கு சொந்தமான தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் துபாயிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட அவரது உடல், மும்பை அந்தேரி பகுதியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அஞ்சலிக்குப் பின் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய தேசியக் கொடியை அவர் உடல்மீது போர்த்தி அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு மரியாதைக்குப் பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் சுமார் ஐந்தரை கி.மீ. தூரத்தைக் கடந்து சென்று, வில்லே பார்லே பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவர் உடலை சுமந்து சென்ற பாதை நெடுகிலும் காவல்துறையினரும், சிறப்பு ஆயுதப்படை போலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஸ்ரீதேவியின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த போதும், ‘ரத்தத்தில் மது கலந்திருந்தது’ என்கிற மருத்துவ அறிக்கை, ‘எந்தவித அரசுப் பணியிலும் இல்லாத ஸ்ரீதேவிக்கு ஏன் அரசு மரியாதை’ என்கிற சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக, அவரது உடல் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்ததை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

ஸ்ரீதேவி, ‘நாடு போற்றிய நடிகை. அவர் மீது எந்த வழக்கும் இல்லை. அவருடைய 54 வயதில் 50 வருடங்களை சினிமாவிற்கு என்றே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தவர். இந்திய அரசாங்கத்தால் ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கவுரவம் செய்யப்பட்டவர். ஒரு மாநிலத்தின் முதல்வர் நினைத்தால், அம்மாநிலத்தைச் சேர்ந்த யாருடைய மறைவுக்கு வேண்டுமானாலும், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த அதிகாரம் உண்டு’ என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இறுதி ஊர்வலத்திற்கு உச்சகட்ட காவல் துறை பாதுகாப்பு, மூவர்ணக் கொடி மரியாதை, துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க இறுதி மரியாதை என நிகழ்ந்தேறியது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.