இரு துருவங்கள் - பகுதி 4 | அஜித் Vs விஜய்

  பால கணேசன்   | Last Modified : 11 Aug, 2018 08:56 am
tamil-cinema-super-stars-ajith-vs-vijay

'தளபதி' விஜய் ஒரு பாரம்பரிய ஹீரோ மெட்டீரியல். நன்றாக ஆடுவார். பாடல்கள் சொந்தக் குரலில் பாடுவார். அதன்பின்னர்தான் இறுதியாக 'மாஸ்' என்கிற வட்டத்திற்குள் வருகிறார். ஆனால் 'தல' அஜித் இதில் நேரெதிர். சுமாராகத்தான் ஆடுவார். இதுவரை பாடியதேயில்லை அவர். ஆனால், இது எதுவுமே தேவைப்படாமலேயே மிகப் பெரிய 'மாஸ்' ஹீரோவாக உருவாகியுள்ளார். 

இந்த மேற்கண்ட பத்தியை இந்தக் கட்டுரையின் இறுதியில் எழுத எண்ணித்தான் தொடங்கினேன். ஆனால் ஒரேமாதிரி எழுத சலிப்பாக இருக்கிறது. அதான் முதலிலேயே முடிவுரையை எழுதிவிட்டு அதற்கான தரவுகளை அடுத்தடுத்து தரலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இது ஏற்கெனவே 'குஷி' படத்தில் எஸ்.ஜெ.சூர்யா பயன்படுத்திய உத்திதான். முடிவுரையை முதலிலேயே சொல்லிவிட்டு எழுதுவதில் ரிஸ்க்கும் அதிகம். ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கை ஏது?

தியாகராஜர் அறிமுகமானபொழுது கதாநாயகனாக இருந்த ஒரே தகுதி, சொந்தக் குரலில் பாட வேண்டும் என்பதே. காரணம் அப்பபோதெலாம் டப்பிங் கிடையாது. நேரடியாகதான் ஒலிப்பதிவு செய்யப்படும். எத்தனை டேக் எடுத்தாலும் அசராமல் பாடக்கூடிய திறமை இருத்தல் அவசியம். ஏற்கெனவே நாம் முதல் பாகத்தில் பார்த்தபடி என்னதான் பி.யூ சின்னப்பா சண்டைப்பயிற்சி கலைகளில் அதிக ஈடுபாடு காட்டினாலும் கூட பாடல் பயிற்சியும் எடுத்துக்கொண்டார் என்று சொன்னதன் அர்த்தம் இப்போது உங்களுக்கு புரிகிறதா? 

பின்னணி குரல் கொடுக்கும் முறைமட்டும் அறிமுகமாகி இராவிட்டால் எம்ஜிஆர் கதாநாயகனாக ஆகி இருக்கவே முடியாது. இதுதான் அன்றைய உண்மை. அடுத்து உருவம். ஏனோ நம்மவர்களுக்கு கதாநாயகன் என்றால் வெள்ளைத்தோல் உடையவனாக மட்டுமே இருக்கவேண்டும் என்கிற எண்ணம் மிகத் தீவிரமாக மனதிற்குள் புதைந்து போயிருக்கிறது. இன்றும் கூட அது தொடர்கிறது. "சிவப்பா  இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்.." என்கிற வடிவேலுவின் காமெடி வெறும் காமெடி மட்டும் அல்ல. பெரும்பான்மை சமூகத்தின் மனப்போக்கு அது. 

பாகவதர், எம்ஜிஆர் இருவருமே சுண்டினால் ரத்தம் வரும் நிறம் என்று சொல்வார்கள். அதனாலேயே அவர்கள் கடவுள் ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்பட்டார்கள் என்கிற வாதமும் உண்டு. இந்த நிற அரசியல் வெளிநாடுகளில் வெளிப்படையாக இருந்து பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சம உரிமை பெறப்பட்டது. ஆனால் இங்கே நாம் செய்வது நிற அரசியல் என்கிற புரிதலே இல்லாமல் மக்கள் அதை செய்துகொண்டிருந்தனர். அதற்கு சினிமாவும் தூபம் போட்டது. கருப்பான நபர்களை காமெடி காட்சிகளில் கலாய்ப்பது சினிமா தொடங்கிய காலம் தொட்டே இருந்து வருகிறது. அந்த மாயையை ரஜினிதான் முதலில் உடைத்தார். உண்மையில் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய உளவியல் இது. இதைப் பற்றி முடிவுரையில் விரிவாக பார்க்கலாம். தனுஷ் வந்தபிறகுதான் இந்த மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது என்று நம்புபவர்கள் இன்றும் இங்கே உண்டு. ஆனால் அது ரஜினியில் இருந்து தொடங்கி விஜய் வழியாக பயணித்தது என்கிற விஷயமே பலர் உணர்வதில்லை. எப்படி தெரியாமலேயே நிறவெறியை கடைபிடித்துக் கொண்டிருந்தோமோ அதேபோல் நாம் அறியாமலேயே அதைவிட்டு வெளியிலும் வந்தோம்.

அதிர்ஷ்டமும் தன்னம்பிக்கையும் 

என்னதான் சினிமா ஆளை விழுங்கும் அரக்கனாக இங்க பிரஸ்தாபிக்கப்பட்டாலும் கூட அந்த அரக்கனை தங்கள் கூர்வாளால் வெட்டி எரிந்தவர்கள் சிலர் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால்தான் சினிமாவில் ஜெயிக்கமுடியும் என்கிற இன்னொரு அரக்கனை தங்கள் உழைப்பால் வென்றவர்கள் அவர்கள். இங்கே யாரும் எளிதாக சினிமாவில் வென்று விடவில்லை. ஒருவேளை சோற்றுக்கு கூட வழி இல்லாமல் அலைந்த எம்ஜிஆர் பின்னர் தன்னை காண வரும் அனைவரையும் 'சாப்டாச்சா' என்கிற முதல் கேள்வியோடுதான் வரவேற்றார். முதல் படத்தில் ஒடிசலான தேகம் இருந்ததாலும், குரல் சரியாக வெளியே வரவில்லை என்பதாலும் நாயகன் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிவாஜி பின்னர் 'சிம்மக் குரலோன்' என்கிற பட்டத்தை பெற்றார். ஒருகட்டத்தில் என்ன செய்வது சினிமாவில் என்கிற யோசனையே தோன்றாமல் நடன இயக்குனரிடம உதவியாளராக சேர்ந்தார் கமல். 'நீ மிகப்பெரிய நடிகனாக வருவாய்' என்று நண்பர்கள் சொன்ன வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு சென்னையில் சுற்றியலைந்த ரஜினி இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை அடைந்தார். இதெல்லாம் கதையல்ல. உண்மை சம்பவங்கள். நிலைமை இப்படியிருக்க ஒரே ஒருவரை மட்டும் தன்னம்பிக்கையின் குழந்தை என்பதுபோல் சித்தரிப்பதை விட வேடிக்கை உலகிலேயே இல்லை.

அப்படி அஜித்தை தன்னம்பிக்கையின் வடிவம் என்று சொல்வதற்கான காரணத்தை ஆராய்ந்தால், அதற்கு காரணம் அவரை ஒப்பிடுவது விஜயுடன் என்பதால் மட்டுந்தான். ஏனெனில் விஜயின் தந்தை ஒரு இயக்குனர். தயாரிப்பாளர். தன் தந்தை அறிமுகப்படுத்தியதால் சினிமாவுக்கு வந்தவர். இந்த காரணங்களே போதும் அஜித் ரசிகர்களுக்கு. ஏனெனில் இங்கே, நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து அளவிடுவதை விட, எதிராளியிடம் என்ன இல்லை என்பதை வைத்து அளவிடுவதே வாடிக்கை. சரித்திரம் முழுக்க இது நடந்துகொண்டே இருக்கிறது. 

இன்னொரு உதாரணமாக கமல் - ரஜினியையே எடுத்துக்கொள்வோம். கமலைப் போன்று ரஜினி ஆறு ஏழு மணி நேரம் செலவு செய்து மேக்கப் அணிந்து நடிக்கமாட்டார். ஆனால் கமல் அதை ஒரு கடமையாக எடுத்துக்கொண்டு செய்வார். இதனாலேயே ரஜினிக்கு நடிக்க வராது என்று எண்ணுபவர்கள் அதிகம். ஏனெனில் இங்கே நடிப்பை ஒரு மேக்கப் தீர்மானிக்கிறது. அதேபோல் கமல் படங்கள் ரஜினி படங்களை போல் வசூல் செய்வதில்லை. அதனால் ரஜினிதான் பிளாக்பஸ்டர் நாயகன் என்று பேசுவார்கள். ரஜினி படங்களைத்தான் சிறந்தது என்றும் வாதிடுவார்கள். ஆனால் வெற்றிபெறாமல் போனாலும் கூட கமலின் படங்கள் காலத்தால் அழியாதவை. அதில் சந்தேகமே வேண்டாம். கமலின் சில முயற்சிகள் எல்லாம் காலம் தாண்டி நிலைக்கும் என்பது தெரியாமல் அது வசூல் செய்யவில்லை என்பதை மட்டுமே மையப்படுத்தி பேசுவதன் காரணம் ரஜினி படங்கள் ஓடுவது மட்டுந்தான். இப்படி எதிராளியிடம் இல்லாததை வைத்து இன்னொருவரை எடைபோடுவதை நிறுத்திவிட்டு உண்மையான காரணங்களை தேடிப்போவோம் நாம்.

அது ஒரு காதல் காலம்

விஜயின் ஆரம்ப கால படங்கள் எல்லாமே அவரின் தந்தையின் இயக்கம்தான். இது தெரிந்த செய்தியும் கூட. இளமை ததும்பும் படங்கள் என்கிற போர்வையில் ஆபாசக் குப்பைகளை அள்ளித் தெளித்தார்கள். ஆனால் இதனால் எல்லாம் விஜய் மக்கள் மனதில் பதிந்துவிடவில்லை. உண்மையில் ஆரம்பம் முதற்கொண்டே விஜயை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக முன்னிறுத்துவதில் அவரின் தந்தை மிகவும் மெனக்கெட்டார். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது என்பது உண்மை. மறுக்க இயலாத உண்மை. அவர் நினைத்ததுக்கு மாறாக விக்ரமன் விஜயை ஒரு ரொமான்டிக் ஹீரோவாக மாற்றினார். அந்த வகையில் விக்ரமன்தான் உண்மையில் விஜயின் வழிகாட்டி. விஜய்க்கு ஒரு நற்பாதை அமைத்துக்கொடுத்தவர் அவர். விஜய்யின் முதல் பெரிய ஹிட் படம் 'பூவே உனக்காக' அதை இன்றும் நிரூபிக்கிறது. 

இன்னொரு புறம் அஜித் ஆரம்பத்தில் நடித்த எந்த படமும் சரியாக போகாத காரணத்தால் சரியான வாய்ப்புக்காக காத்திருந்தார். 'ஆசை' படம் மூலம் அது நிகழ்ந்தது. உண்மையில் 'ஆசை' படத்தின் நாயகன் பிரகாஷ் ராஜ்-தான். ஆனால் மிகவும் டார்க்கான அந்த கதையில் அஜித் ஒரு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தார். அதனால் ஒரு அடையாளம் 'ஆசை' படம் மூலம் கிடைத்து அதுவரை வெறும் அஜித்தாக இருந்தவர் 'ஆசை' அஜித் ஆனார். இதில் நன்கு கவனித்தால் அஜித், விஜய் இருவருமே நல்ல இயக்குனர் ஒருவரின் படத்தின் மூலம்தான் ஜொலிக்க ஆரம்பித்தனர். எப்படி ஸ்டூடியோக்களின் புகழை தங்களின் புகழாக பாகவதரும், சின்னப்பாவும் மாற்றினார்களோ, எப்படி கலைஞரின் எழுத்து வன்மையை தங்களின் வெற்றிப்படியாக எம்ஜிஆரும், சிவாஜியும் உயர்த்தினார்களோ, பாலச்சந்தரின் செல்லப்பிள்ளைகளாக வளர்ந்து ரஜினியும் - கமலும் உச்சத்தை எட்டினார்களோ அதேபோல்தான் விக்ரமனும் - வசந்தும் அஜித் - விஜய்க்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார்கள். சரித்திரம் எப்பொழுதும் இப்படித்தான் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம்தான் வேரை புரிந்துகொள்ளாமல் பழத்தை மட்டும் பார்த்து சண்டையிடுகிறோம். 

தனக்கு கிடைத்த இந்த ரொமான்டிக் ஹீரோ பாதையை இருவருமே சரிசமமாக பிரித்துக்கொண்டனர். ஒருபக்கம் வரிசையாக விஜய் 'காதலுக்கு மரியாதை', 'லவ் டுடே' என பயணிக்க, 'காதல் கோட்டை' போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் பலமாக இடம்பெற்றார் அஜித். ஆனால் ஒருகட்டத்தில் இருவரின் பயணமும் சில பல தோல்விகளை சந்தித்தது. 'நினைத்தேன் வந்தாய்' வரை விஜய் ஹிட் கொடுக்க, 'காதல் மன்னன்' வரும் வரை அஜித் காத்திருக்க வேண்டியிருந்தது. 1999-ல் 'வாலி' மிகப்பெரிய வெற்றிபெற அஜித் மெல்ல முன்னேறி முக்கியமான இடத்தை பெற்றார். ஆனால் ஏற்கெனவே இருந்த இடத்தை காப்பாற்ற விஜய்க்கு ஒரு மெகாஹிட் தேவைப்பட்டது. அஜித்துக்கு அதை செய்துகொடுத்த எஸ்.ஜெ.சூர்யாவே அதை விஜய்க்கும் செய்து கொடுத்தார். 'குஷி' மிகப்பெரிய ஹிட்டானது. உண்மையில் அதுவரை மெல்லியதாக இருந்த ஒரு ரசிக கோடு பிரமாண்டமாய் உருவாக ஆரம்பித்தது இந்த புள்ளியில்தான். 

மாஸ் ஹீரோ

ஆரம்பத்தில் பத்து படங்களுக்கும் மேல் முழுநேர ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருந்தாலும் விஜய்யால் அடைய முடியாத ஆக்‌ஷன் ஹீரோ பட்டத்தை அஜித் 'அமர்க்களம்' என்கிற ஒற்றை படத்தின் மூலம் பெற்றார். ஆனால் அதை தக்கவைக்காமல் சற்று தடம்மாறி 'முகவரி', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'உன்னைக்கொடு என்னை தருவேன்' போன்ற படங்கள் கொடுத்தார். ஆனால் விஜய் 'பத்ரி', 'பகவதி' போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து மெதுவாக தனது ஆக்‌ஷன் பயணத்தை ஆரம்பித்திருந்தார். குறிப்பாக 'பகவதி' படம் விஜய், ரஜினியை நகலெடுக்க முயற்சி செய்வதை அப்பட்டமாக காட்டியது. ஆனால் அஜித் 'தீனா' மற்றும் 'சிட்டிசன்' நடித்து விஜய்க்கு முன்பாகவே ஆக்‌ஷன் ஹீரோவாக உருமாறி, தான் அமர்க்களத்தில் கண்டெடுத்த பாதையை மீண்டும் தன்பக்கம் திருப்பினார்.

இந்த நேரத்தில் 'சிட்டிசன்' பற்றி உரையாடுவது அவசியமான ஒன்று. விஜய் அதுவரைக்கும் எந்த படத்திலும் கெட்டப் மாற்றி நடிக்கவில்லை. 'வாலி' படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து, அதில் ஒன்றில் வில்லனாகவும் நடித்து ஓரளவு நல்ல பெயர் பெற்றிருந்தார். ஆனால் அஜித்துக்கு முன்பே 'ப்ரியமுடன்' படத்தில் விஜய் வில்லன் கதாபாத்திரம் முயற்சித்தாலும் அது தோல்வியில் முடிந்ததால் அதை அவர் தொடரவில்லை. 'வாலி'யை தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரமாக அஜித் சிட்டிசனை தேர்ந்தெடுத்து முதன்முறையாக ஒரே படத்தில் பல வேடங்களில் தோன்றினார். மேக்கப் போடுகிறவர் நல்ல நடிகர் என்கிற கமல் பிரதி அஜித்துக்கு இதன் மூலம் கிட்டியது. எனவே இயல்பாகவே விஜய் மீது ரஜினியின் பிரதி என்கிற பட்டம் வந்து சேர்ந்தது. 

நாம் முந்தைய பத்தியில் பார்த்தது போல் எதிராளி என்ன செய்கிறான் என்பதை வைத்து எடைபோடும் அதே வழக்கம்தான் இதிலும் நிகழ்ந்தது. அந்த வகையில் அஜித்தின் இரட்டை வேட படங்களான 'வில்லன்', 'அட்டகாசம்' என எல்லா படங்களுமே அவருக்கு வெற்றியை தந்ததும் இல்லாமல், விஜய்க்கு நடிக்க தெரியாது என்கிற விவாதத்தையும் உண்டாக்கி கொடுத்தது. விஜய் 'திருமலை' என்கிற படம் மூலம் ரஜினியின் பிம்பத்தை தனக்கு கொடுத்துக்கொண்டு அஜித் ஏற்கனவே செய்துகொண்டிருந்த மாஸ் ஹீரோ பாதையை இன்னும் உக்கிரமாக முன்னெடுக்க தொடங்கினார். இதன்பின்னர் இருவருக்கும் இடையிலான யுத்தம் மிகக் கடுமையானது.

பாகவதர்-சின்னப்பா, எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமலுக்கு இல்லாத ஒரு சிறப்பு அஜித்-விஜய்க்கு உண்டு. அது இருவருமே ஆக்‌ஷன் கதாநாயகனாக தங்களை முன்னிறுத்திக்கொண்டது. என்னதான் அஜித் 'வரலாறு' போன்ற படங்களில் பெண் தன்மையுள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூட அதுவும் ஒரு ஆக்‌ஷன் படம் என்கிற முத்திரையைதான் பெறுகிறது. 'மங்காத்தா'விற்கும் இதே நிலைமைதான். மாறாக விஜய் அழகிய தமிழ்மகனில் இரட்டை வேடத்தில் நடித்து அதில் ஒன்றில் வில்லனாக நடிக்க முற்பட்டபோது அது தோல்வியிலேயே முடிந்தது. அதற்கு முன்னதாக 'கண்ணுக்குள் நிலவு' தோல்வி அடைந்ததையும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

எப்பொழுதெல்லாம் விஜய் வித்தியாசமான கதாபாத்திரம் நடிக்க முன்னெடுக்கிறாரோ அப்பொழுதெல்லாம் தோல்வியையே சந்தித்திருக்கிறார். மாறாக அஜித்தின் பெரிய வெற்றிப்படங்கள் எல்லாமே ஏதேனும் ஒருவகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டதாகவே இருக்கிறது. ஆக தெரிந்தோ தெரியாமலோ ரஜினி-கமல் யுத்தத்தின் தொடர்ச்சியாகவே இது நிகழ்வதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அவரவர் பாதை

விஜய்-அஜித் இருவருமே ஆரம்பகாலத்தில் தங்களை நிலைநிறுத்த சரிசமமாகவே பாடுபட்டிருக்கிறார்கள். எப்படி ரஜினி ஒரு கட்டத்தில் வருடத்திற்கு ஒரு படம் செய்வதை நிறுத்திவிட்டு நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்ள தொடங்கினாரோ அதேபோல் அஜித் தனது தனிப்பட்ட காரணங்களான கார் ரேஸ் போன்றவற்றிற்காக சிறிது காலம் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். என்ன பிரச்னை நடந்தாலும் அசராது எல்லா முக்கிய பண்டிகையிலும் தன்னுடைய படம் ஒன்று வெளிவருமாறு விஜய் பார்த்துக்கொண்டார். அரசியலில் தீவிரமாக இருந்தபொழுதிலும் தொடர்ந்து எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்ததை இங்கே நாம் கவனிக்க வேண்டும். மக்களிடம் இருந்து எப்பொழுதும் விலகாத நடிகராக இருக்க அவர்கள் எடுத்த பிரயத்தனம் இங்கே ஒரு ஒற்றுமையை நமக்கு சொல்கிறது. அதேபோல் ரஜினி தான் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்று ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தோடு, ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் அஜித்துடன் உள்ள ஒற்றுமையை சொல்கிறது. 

ஆக ரஜினி-கமல் வரை தாங்கள் கொடுக்கும் படங்களிலும் கூட இரு  துருவங்களாக இருந்த இந்த பயணம், விஜய்-அஜித் காலத்தில் மாஸ் ஹீரோ என்கிற ஒற்றை துருவமாக சுருங்கிப்போனது. இந்த சுருங்கல் அடுத்து வந்த இன்னொரு தலைமுறையை சற்று தவறாக வழிநடத்த தொடங்கியது. அதில் ஒருவர் மட்டும் சமயோஜிதமாக தப்பித்து வந்தார். இன்னொருவர் அதலபாதாளத்தில் சிக்கினார்.

*** காத்திருங்கள் ***

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயம்: இரு துருவங்கள் - பகுதி 3 | ரஜினி Vs கமல்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close