பியார் பிரேமா காதல் பார்த்தாச்சா?- இல்லைனா... மிஸ் பண்ணிடாதீங்க!

  சௌந்தரியா   | Last Modified : 19 Aug, 2018 09:35 am
pyaar-prema-kadhal-imperfect-and-sensible-romcom-movie

“என் கேரக்டர் பத்தி தெரியாம எத பார்த்துடா லவ் பண்ண?... யார ஏமாத்துறீங்க” என்று ஹரிஷ் கல்யாணை பார்த்து ரைசா கேட்கும் காட்சியில் இப்படத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். என்ன? இன்னும் படம் பார்க்கலையா… அப்போ மிஸ் பண்ணிடாம தியேட்டர்ல பாருங்க. 'பியார் பிரேமா காதல்' செம ஃபீல் தரும். அது மட்டும் இல்லாமல் படம் பார்த்துட்டு வந்த பிறகு உங்களை யோசிக்கவும் வைக்கும்.

அப்படி இந்த படத்தை மிஸ் பண்ணாம பார்க்கணும்னு சொல்றதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதுல சில முக்கியமான காரணங்கள் பத்தி பார்க்கலாம்…

காதல் கதை தான் ஆனா… நீங்க நினைக்கிற மாதிரி இல்ல!

தமிழுக்கு காதலும் காமெடியும் கலந்த படங்கள் புதிதல்ல. சென்ற வாரம் வந்த ஒரு படம் கூட ரொமான்டிக் காமெடி படம் என்ற ‘டேக்’ உடன் தான் வெளியானது. ஆனால்  'பியார் பிரேமா காதல்' நிச்சயமாக அந்த பலவற்றில் ஒன்றல்ல. தற்கால இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் காதல், குடும்பம், வேலை, கனவு என கம்பிளீட் பேக்கேஜாக உருவாகி இருக்கிறது இந்த பியார் பிரேமா காதல் (காதல் காதல் காதல்…).

காதல் என்றதும் நாயகியின் பின்னால் சுற்றி, பார்வையையும் சிரிப்பையும்  ஓவர்ரேட் செய்து, காமத்தை புனிதப்படுத்தி என இதுவரை தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பார்த்து வந்த கிளீஷேக்களை சில காட்சிகளில் உடைத்தெறிந்திருக்கிறது இந்த படம். இன்னும் எத்தனை நாளுக்கு தான் காதல்னா என்னனு தெரியுமா என திரையில் ஏமாற்ற போகிறார்கள். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர தொடங்கி இருக்கும் தமிழ் சினிமாவிற்கு இந்த படம் அடுத்தக்கட்டம். 'சிவா மனசுல சக்தி' படத்தில் காதலர்களுக்கு இடையே ‘கசமுச’ நடந்துவிட அதற்கு பிறகான கிளைமாக்ஸ் காட்சிகள் நமக்கு தெரியும். இந்த படத்தில் அது போன்ற ‘காட்சிகள்’ நடக்கின்றன. ஆனால் அது கிளைமாக்ஸில் அல்ல. காமத்தில் போய் முடிவது தான் காதல் என்று பழங்கால கதைகள் எல்லாம் இந்த படத்தில் இல்லை. அதுவும் இதையெல்லாம் நாயகியின் வழியாக சொல்லி இருப்பது செம!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை இப்போது தான் திரையில் பார்க்க துவங்கி இருக்கிறது தமிழ் சமூகம். அப்படி வந்த சில படங்களும் 'கல்யாணம் பண்ணிக்கோங்க லைவ்ஃப் நல்லா இருக்கும்' என்ற அட்வைஸ் உடன் தான் முடிந்திருக்கிறது. இந்த படத்தின் முடிவு என்ன என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஹரிஷும் ரைஸாசவும்

பிக்பாஸ் புகழை சரியாக பயன்படுத்தி கொண்டவர்கள் என்று இந்த க்யூட் ஜோடியை சொல்லலாம். திரையில் இவர்கள் கெமிஸ்டிரி அள்ளுது.

இந்தி சினிமாவில் ஒருவர் இருக்கிறார். செம க்யூட்டான முகம். அழுதால் நம் கண்ணும் கலங்கிவிடும். பெண்களின் மனம்கவர் கள்வன் ஆயுஷ்மான் குரானா. ஹரிஷை பார்க்கும் போது அப்படிதான் இருக்கிறது. லுங்கி அணிந்துக்கொண்டு சன்மியூசிக்கில் கீழே வரும் “ஐ லவ் பிரியா”, “மிஸ் யூ சிவா” போன்ற மெசேஜ்களை படித்து கொண்டு இருக்கும் மிடில் கிளாஸ் பசங்களின் பிரதிநிதி ஹிரிஷ் கல்யாண். சிரிக்கிறார், அழுகிறார், கொஞ்சம் கோபம், வெட்கம் என அவர் என்ன செய்தாலும் அழகாக இருக்கிறது. நடிப்பிலும் முதல் பென்ச் மாணவனாக இருக்கிறார் ஹரிஷ்.

நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்கள் எனில், ரைசா இப்படியெல்லாம் நடிப்பாரா என்ற ஆச்சர்யம் உங்களுக்கு நிச்சயம் வரும். பிக்பாஸ் பார்க்காதவர்கள், ரைசாவுக்கு வார்ம்வெல்கம் கொடுப்பார்கள். முக்கியமான வசனங்களை எல்லாம் ரைசா தான் பேசுகிறார். உணர்சிகளை காட்ட கொஞ்சம் மெனக்கெடுவது வெளியே தெரிந்தாலும் ரசிக்க வைக்கிறார். போல்ட் லேடி கேரக்டரில் ரைசா கச்சிதம்.

இப்படி ரைசா, ஹரிஷ் பற்றி தனித்தனியாக கூறினாலும் ‘ஹரைசா’(இருவரும் ரியல் ஜோடியாக வேண்டும் என்று நித்தமும் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் போடும் மக்கள் வைத்திருக்கும் பெயர்) ஆக அவ்வளவு அழகாக இருக்கிறார்கள். 20ஸ் கிட்ஸ்களுக்கு இந்த ஜோடியுடன் நல்ல கனெக்ஷன் இருக்கும். இன்னும் சிங்கிளாக இருக்கும் அப்பாவி 90ஸ் கிட்ஸ்கள் வேறு வழி இல்லை… கனெக்ட் பண்ணிக்கோங்க.

சேர்ந்து எடுத்த போட்டோவ எல்லாம் லீக் பண்ணிடுவேன் பார்த்துக்க!

இந்த காலத்துல எல்லாம் மாறிடுச்சி  ப்ரோ. நீங்க அதையெல்லாம் ஏத்துக்கிட்டு தான் ஆகனும். பெண்கள் அசால்டாக புல்லட் ஓட்டுவார்கள். ஒரே கல்ப்பில் பீரை குடித்து முடிப்பார்கள், ஆண்கள் கதறி கதறி அழுவார்கள், இன்னும் பல…

அதையெல்லாம், ஏன் இப்படி பண்ற என்று கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. இதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம்  இல்லை. ஆனால், ஏற்றுக்கொள்ளாமல் “யோகி பொன்னம்பலம் சித்தப்ஸ்” மாதிரி பேசிக்கொண்டு இருந்தால் Unfit to live in this society என்று தூக்கி எரிந்து விடுவார்கள். எனவே இப்போதே முழித்துக்கொள்ளுங்கள்.

இதை ஏன் இப்போது நியாபகப்படுத்துகிறேன் என்றால்.. இந்த படத்தில் சில காட்சிகள் வருகின்றன. அதில் வழக்கமான ஹீரோயின்கள் செய்யாத விஷயங்களை செய்கிறார் ரைசா(டிரைலர் பார்க்காதவர்கள்... ஓடி போய் பார்த்துவிட்டு வரவும்). அதெற்கெல்லாம் தியேட்டர்  தெறிக்க கிளாப்ஸ் தான். அப்படியெனில் எல்லாம் மாறிடிச்சி தானே!

நான் உன்ன டைட்டானிக் ஜாக் மாதிரி பார்த்துப்பேன் என்று ஹரிஷ் அழும் காட்சியில் ரைசா அதனை டீல் செய்யும் விதம். வெறும் செக்ஸ்னால நம்ம நட்பு உடைஞ்சி போயிட கூடாது என்ற வசனம். அதற்கு பிறகான ஹரிஷின் மாற்றம் என அனைத்தையும் பார்வையாளர்கள் ரசிக்கிறார்கள். கொஞ்சம் சிக்கலான கதாபாத்திர அமைப்பு. அப்படி இப்படியென தவறி இருந்தால் நாயகியை வில்லியாகவும், ஹரிஷை அம்மாஞ்சியாகவும் காட்டியிருக்க கூடும். ஆனால் அந்த தவறு நடக்கவில்லை.

இளைஞர் இளன்!

இதை தான் சொல்ல வருகிறேன் என்று எந்த சமரசமும் செய்யாமல் சொன்னதற்கே இளனை பாராட்டலாம். முக்கியமாக சோ க்யூட் செயல்களை செய்யும் ஹீரோயினும்(அந்த டைரி மில்க் சாப்பிட்டுற சீனை தவிர்த்து), பாடி பில்டர் ஹீரோவும் ( நானும் பாக்சர் தான் சீனையும் சேர்த்து) இளன் படத்தில் இல்லை. இயக்குநரின் கலர்ஃபுல் சிந்தனைகள் இந்த படத்தை இன்னும் ஃபிரெஷ்ஷாக்கி இருக்கிறது. பல புரட்சிகள் பேசிவிட்டு கடைசியில் மக்களுக்கு எற்றார் போல கிளைமாக்சை அமைத்துவிட்டு இளன் தப்பிக்கவில்லை.

இந்த படத்தை பார்த்துவிட்டு, அந்த மாதிரி தான் அந்த பெண்ணு எனக்கும் ‘K’னு அனுப்பினா,  இப்படி தான் சும்மா ஹார்ட் ஸ்மைலி அனுப்பினேன்… அதை லவ்வுனு நினைச்சிட்டான் என பலர் கூறி வருகின்றனர். கதாபாத்திரத்தின் இடத்தில் தன்னை வைத்து பார்வையாளர்களை பேச வைத்ததிலேயே வென்றுவிட்டார் இயக்குநர். படத்தின் வில்லான மனித உணர்வுகளை வைத்து பிளே செய்து இருப்பது அவ்வளவு அழகு. வெளித்தோற்றமாக சிம்பிள் படமாக இருந்தாலும் இளன் நிறைய மெனக்கெட்டு இருக்கிறார் என்பது தெரிகிறது. அதில் பர்ஸ்ட் கிளாசில் பாசாகியும் இருக்கிறார்.

அம்மாவ நல்லா பார்த்துக்கணும் என்பது தான் என் கனவு என்று சொல்லும் நாயகனிடம், அது கனவு இல்ல கடமை என்று கூறுகிறார் நாயகி. காதலி சரக்கடிக்க கம்பனி கொடுக்கிறார் டீட்டோட்லர் நாயகன்… வேறென்ன வெல்கம்  ஹோம் பப்பிமா என்று இளனை வரவேற்போம்.

கலர் கலர்!

நடு ராத்திரியிலும் ரைசா ஃபுல் மேக்கப்பில் இருப்பதை மட்டும் நீங்கள் மன்னித்து விடுவீர்கள் எனில் இந்த  படம் ஒரு கல்ஃபுல் அனுபவமாக இருக்கும். ரெமோ படத்தில் வரும் பிறந்தநாள் சீனை போல இதிலும் ஒரு சீன் உள்ளது. ஆனால் இதில் ஹீரோ தேவையில்லாமல் இருட்டில் இருந்து நடந்துவரவில்லை, அப்போது பன்ச் வசனங்கள் பேசவில்லை… இது உணர்வுபூர்வமான காட்சியாக முடிகிறது.

ரைசாவின் உடைகள், வீடு, பாடல் காட்சிகள் என அனைத்தும் பிரஷ் பிரஷ். கொஞ்சமே வெளிச்சத்தில், ரத்தமும் சதையும் என சீரியஸ் Modeல் இருக்கும் கோலிவுட்டிற்கு அழகான டேட்டிங் டைம் இந்த படம். இதுவும் இப்படத்தை பலர் கொண்டாட காரணமாக இருக்கிறது.

யுவன்!

ஒரு படத்தில் பாட்டே இல்லை என்றாலும் பிஜிஎம்மில் தனித்து தெரிபவர் யுவன். இந்த படத்தில் 12 பாடல்கள். முதல் முதலாக தயாரிக்கும் படம் என்பதால் தேடி தேடி கதையை தேர்ந்தெடுத்திருப்பார். அப்படி இருக்க ‘யுவனிசை’ எப்படி இருந்திருக்கும்!!! படம் முழுக்க பாடல்கள், சின்னசின்ன பிஜிஎம்கள் என அசத்துகிறார் யுவன். ஆங்காங்கே சறுக்கும் படத்தை பலமாக தூக்கிவிடுகிறது படத்தின் இசை. யுவன் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பயங்கரமான விருந்து. அப்போ பார்க்கலாம் தானே?

படத்தில் அனைத்துமே நிறைகள் தானா? என்றால், நிச்சயமாக இல்லை. சில வசனங்கள், மற்ற கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தாமல் விட்டது, இன்டர்வெல்லின் போது வரும் பாடல், கிளைமாக்சின் முந்தைய காட்சி என மைனஸ்களும் இருக்கதான செய்கின்றன. ஆனால் அதையெல்லாம் தாண்டி வின்னராவது பிளஸ்கள் தான்! 

பின்குறிப்பு: யூஏ சான்றிதழ் தானே என குழந்தைகளை படத்திற்கு அழைத்து செல்லாமல் இருப்பது நலம்!

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close