இரு துருவங்கள் - பகுதி 5 | தனுஷ் Vs சிம்பு

  பால கணேசன்   | Last Modified : 13 Aug, 2018 04:31 pm

tamil-cinema-super-stars-dhanush-vs-simbu

இதுவரை நாம் பார்த்த இரு துருவங்களில் மாறி மாறி அவர்களின் படங்கள் வெற்றி, தோல்விகளை கண்டிருந்தாலும் கூட எப்போதும் இருவருக்கும் இடையிலான போர் நின்றதே இல்லை. முன்பே குறிப்பிட்டபடி லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறையில் பாகவதர் இருந்தபோதிலும் அவரது 'ஹரிதாஸ்' திரையில் ஓடிக்கொண்டுதான் இருந்தது. அதை எதிர்த்து சின்னப்பா நான்கு படம் நடித்தார். ஆனாலும் ஹரிதாஸின் பிரம்மாண்ட வெற்றியை நெருங்க முடியவில்லை. அதைப்போலவே எம்ஜிஆர் முதல்வரான பின்னர் நடிப்பை விடவேண்டிய சூழல் வந்தபின், இன்னொரு பக்கம் சிவாஜி தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். ஆனால் அந்த நேரத்திலேயே ரஜினி - கமல் யுத்தம் ஆரம்பித்துவிட்டதால் அதன் பாதிப்பு பெரிதாக இருக்கவில்லை. விஜய்-  அஜித்தும் அப்படியே. ஆனால், இதன் பின்னர் வந்த தலைமுறை யுத்தம் இவ்வளவு சீக்கிரமாக முடிவுக்கு வரும் என்று யாரும் நினைத்தே பார்த்திருக்கமாட்டார்கள்.

மூன்று மாத கைக்குழந்தையாக இருந்தபோதே நடிக்க வந்தார் சிம்பு. பன்முகக் கலைஞர் டி.ராஜேந்தரின் புதல்வன் என்கிற இடம் அவருக்கு மிகவும் வசதியானதாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் டி.ராஜேந்தர் தொட்டதெல்லாம் துலங்கிக் கொண்டிருந்தது. எல்லா படங்களுமே நன்றாக ஓட, அதில் குழந்தை நட்சத்திரமாக சிம்பு தொடர்ந்து நடித்தார். பத்து வயதிலேயே ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பெல்லாம் கோடியில் ஒருத்தருக்கு கூட கிடைக்காது. ஆனால் அது சிம்புவுக்கு சாத்தியமானது. அதேபோல் திரையில் வந்த சிம்புவின் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து டி.ராஜேந்தர் தான் நடத்தி வந்த 'உஷா' மாத இதழில் ஒரு சித்திரக் கதை தொடரும் எழுதி வந்தார். அந்த வகையில் ஹாலிவுட் பாணியில் இதை செய்தது டி.ராஜேந்தர் சிம்புவை எப்படி வார்த்தெடுக்க பாடுபட்டார் என்பதை உணர்த்துகிறது. இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபொழுது தனுஷ் இதை ஒரு ரசிகனாக தியேட்டரில் அமர்ந்து விசிலடித்து ரசித்துக் கொண்டிருந்திருக்கலாம். 

'என் ராசாவின் மனசிலே' படம் மூலம் அறிமுகமான கஸ்தூரி ராஜா தொடர்ந்து கிராமத்து கதைகளை மட்டுமே படமாக எடுத்தார். அவரது 'நாட்டுப்புற பாட்டு' படமும், 'எட்டுப்பட்டி ராசா' படமும் பட்டி தொட்டியெல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆனால் அதன்பிறகு தொடர்ந்து தோல்வி படங்களே அவரால் கொடுக்க முடிந்தது. இதன் காரணமாக பெருங்கடனிலும் மூழ்கினார். இந்நேரத்தில் அவரது மூத்த புதல்வர் செல்வராகவன் சினிமாவின் மேல் மையம் கொண்டு படமெடுக்க ஆசையில் இருந்தார். 'துள்ளுவதோ இளமை' படம் ஒருவழியாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது படித்துக் கொண்டிருந்த தனுஷ் படத்தின் நாயகனாக ஆக்கப்பட்டார். தான் நடிக்க வந்ததே ஒரு விபத்து என பலர் தங்களது நேர்காணலில் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். தனுஷ் விஷயத்தில் அது நூறு சதவீதம் உண்மையானது. என்னதான் செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை' படத்தை பெரும்பாலும் இயக்கினாலும் அவரது தந்தை கஸ்தூரி ராஜா பெயரே டைட்டில் கார்டில் இயக்குனர் என்று வெளியானது.

2002-ல் 'காதல் அழிவதில்லை' படத்தில் நாயகனாக அறிமுகமாவதற்கு முன்பு, அதாவது லிட்டில் சூப்பர் ஸ்டாரிலிருந்து 'யங் சூப்பர்' ஸ்டாராக மாறுவதற்கு முன்பு சிம்பு நடித்திருந்த மொத்த படங்களின் எண்ணிக்கை பதினான்கு. அதே 2002-ல்தான் 'துள்ளுவதோ இளமை'யும் வெளியானது. ஆக, ஒரே வருடத்தில் இருவரும் நாயகனாக அறிமுகமானார்கள். அதிலும் சிம்பு அறிமுகமாகும்பொழுதே 'சூப்பர் ஸ்டார்' பட்டதோடு அறிமுகமானார். ஆனால் 'துள்ளுவதோ இளமை' பார்த்த யாருமே தனுஷை கண்டுகொள்ளவே இல்லை. நாயகியாக நடித்த ஷெரின் பற்றிதான் பரவலாக பேச்சு இருந்தது. இதை ஆரம்ப கால விஜய் படங்களில் விஜயை விட சங்கவி, யுவராணி போன்றோரை ரசிகர்கள் ரசித்ததோடு ஒப்பிடலாம். ஏனெனில் ஒரு கதாநாயகனுக்கான எந்தவித முக அமைப்பும், உடலமைப்பும் தனுஷிடம் இல்லை. 

'காதல் அழிவதில்லை' ஓரளவு சுமாரான வெற்றியை அடைந்தாலும் கூட, அந்தப் படம் ஓடியதற்கு மிகமுக்கிய காரணம் சிம்பு ஏற்கனவே ரசிகர்களுக்கு பழக்கப்பட்ட முகமாக இருந்ததுதான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சிம்புவைப் போலவேதான் விஜயும் தனது முதல் படத்திலேயே ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அது எடுபடவில்லை. காரணம் இந்த அறிமுகமின்மைதான். ஒரு பக்கம் நன்கு அறிமுகமான சிம்பு தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடிக்க தொடங்க, செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேனில் தனுஷ் நடித்தார்.

ஒரு நடிகரின் முகம் மக்கள் மனதில் பதிய 14 படங்களோ அல்லது 18 வருடங்களோ தேவையேயில்லை என்பதும், கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் வகையில் நடிப்பதே போதுமென்பதும் தனுஷ் விஷயத்தில் நிரூபணமானது. 'காதல் கொண்டேன்' அப்படி ஒரு பெருமையை தனுஷுக்கு கொடுத்தது. அதே சுமாரான முகம். அதே ஒல்லியான உருவம். இன்னும் சொல்லப்போனால் 'துள்ளுவதோ இளமை' படத்தில் கூட அவருக்கு நல்ல உடைகள் கொடுக்கப்பட்டு, ஓரளவு மேக்கப்பும் போடப்பட்டது. ஆனால் காதல் கொண்டேனில் அதுவும் இல்லை. நன்றாக இருந்த முடியையும் கூட வெட்டியிருப்பார்கள். ஆனால் இது எதுவும் பாதிக்காத வகையில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதை வென்றார் தனுஷ்.

'காதல் அழிவதில்லை'க்கு பிறகு சிம்பு நடித்த 'தம்', 'அலை' ஆகிய இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை. விரல்வித்தை நடிகர் என பட்டப்பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர். தனது கேரியரின் ஆரம்பத்தில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் இயக்குனரிடம் தன்னை ஒப்புவித்தலே நன்மை பயக்கும். இதை உணர்ந்த சிம்பு அப்போது 'சாமி' என்கிற மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஹரியின் இயக்கத்தில் 'கோவில்' படத்தில் நடித்தார். விரலுக்கு வேலை இல்லாமல் இருந்ததால் இந்தப் படம் சுமாராக ஓடியது. இதைத்தொடர்ந்து இவர் நடித்த தெலுங்கு ரீமேக் படமான 'குத்து'-வும் சுமாராக ஓடியது. 

இதன்பின்னர் சிம்புவே கதை எழுதிய 'மன்மதன்' படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை அடைய, இத்தனை வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் ஒருவரின் இந்த வெற்றி நிஜமாகவே மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. குறிப்பாக மன்மதனின் பல காட்சிகளில் சிம்புவின் நடிப்பு மிக அபாரமாக இருந்தது. அவருடனே வளர்ந்த என்னைப்போன்ற ஆட்களின் அந்நேரத்து உணர்வை எழுத்தில் வடிக்க இயலாது. ஏனெனில் 'யங் சூப்பர் ஸ்டார்' என்று தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொள்வதற்கு எல்லாம் ஒரு தகுதி வேண்டும் என்று ரஜினி ரசிகர்களாகிய பலரின் கருத்து. அப்படி போடுபவருக்கு நிச்சயமாக சில திறமைகள் இருந்தே ஆகவேண்டும். அது தனக்கு இருப்பதாக மன்மதனின் சிம்பு நிரூபித்தார். 

இன்னொரு பக்கம் காதல் கொண்டேனுக்கு சம்பந்தமே இல்லாமல் 'திருடா திருடி' என்றொரு படம் வந்து சக்கைபோடு போட திடுமென அந்த நெருப்பு பற்றிக்கொண்டது. அடுத்த தலைமுறை அதற்குள் உருவாகிவிட்டது என்பது தெளிவாக புரிய ஆரம்பித்தது. தனுஷின் நான்காவது படமான 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' வெளியாவதற்கு முன்பே ஏற்படுத்திய அதிர்வலைகள் எங்களுக்கே புதிய அனுபவம்தான். காரணம் வழக்கமாக மாஸ் ஹீரோவாக இருந்தால் அவரை ரஜினியுடன்தான் ஒப்பிடுவார்கள். ஆனால் தனுஷை நேரடியாக எம்ஜிஆருடன் ஒப்பிட்டு கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்தது. 

எப்படி எம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபனோ, அப்படித்தான் தனுஷுக்கு 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' என்கிற வாதமெல்லாம் எழுந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஜூனியர் விகடனில் இதைப்பற்றி ஒரு கட்டுரை கூட வந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக அடுத்து வந்த 'சுள்ளான்', 'ட்ரீம்ஸ்' இரண்டுமே ஓடவில்லை. ஏன் அதிர்ஷ்டவசமாக என்று எழுதினேன் என்றால், அந்தப் படங்கள் ஒருவேளை ஓடியிருந்தால் இன்றைய தனுஷை நாம் பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். பின்னர் வந்த 'தேவதையை கண்டேன்' சுமாராக ஓட, இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த செல்வராகவன் மீண்டும் தன் தம்பியை சரியான பாதையில் திருப்ப 'புதுப்பேட்டை' எடுக்க ஆரம்பித்தார். அதன்பின்னர் தனுஷுக்கு ஏறுமுகம்தான். நிற்கவேயில்லை எங்கும்.

அங்கே மன்மதனுக்கு பிறகு எல்லாம் மாறிவிடும் என்று கனவு கொண்டிருந்த ரசிகர்கள் தலையில் பெரும் இடியை இறக்கினார் சிம்பு. 'தொட்டி ஜெயா'வில் மட்டும் சற்று மாறுபட்டு நடித்த சிம்பு பின்னர் நடித்த 'சரவணா', 'வல்லவன்', 'காளை', 'சிலம்பாட்டம்' என எல்லாமே படுமொக்கையாகிப் போனது. இதில் 'வல்லவன்' அவரது இயக்கத்தில் வந்த படம் வேறு. என்னதான் மன்மதனை இயக்கியது சிம்பு என்று சில பல வாதங்கள் இருந்தாலும் கூட 'வல்லவன்' அதற்கு சற்றும் நியாயம் சேர்க்கவில்லை. 

ஆனால் தனுஷ் மிகத் தெளிவாக தனது பாதையை வடிவமைக்க ஆரம்பித்தார். மசாலாப் படங்கள் நடித்தாலும், மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்தாலும் நல்ல நடிகர் என்கிற பெயரை தக்கவைத்துக் கொண்டார். சிம்பு முறைப்படி இசை கற்றவர். நன்றாக பாடுவார். தனுஷும் பாடினார். சிம்பு பாடல்கள் எழுத தொடங்கினார். தனுஷ் ஒரு படத்தின் எல்லா பாடல்களையுமே எழுத தொடங்கினார். 'வல்லவன்' இயக்கி தோல்வி கண்டார் சிம்பு. 'பவர் பாண்டி'யில் அந்த கோட்டையும் தனுஷ் தாண்டினார். இன்னும் தனுஷ் இசையமைக்க மட்டும்தான்  செய்யவில்லை. மற்றபடி நடிப்பு தாண்டியும் இவர்களின் யுத்தம் தொடர்ந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லாமல் தனுஷே வெற்றிபெற்றார். 'கொலவெறி' பாடலின் வெற்றி அதை பறைசாற்றியது. இதில் இன்னொரு விசேஷம் இந்த நடிப்பு தாண்டிய ஒரு யுத்தம் இதுவரை நாம் பார்த்த எந்த சூப்பர் ஸ்டாருக்கும் இடையில் நடக்கவே இல்லை. தியாகராஜர் சண்டை காட்சியில் நடிக்கவில்லை. சிவாஜி படம் இயக்க முயற்சிக்கவில்லை. ரஜினி பாடல் எழுத முயற்சிக்கவில்லை. அஜித் பாட முயற்சிக்கவில்லை.

இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் தனுஷுக்கு வாய்ப்பு வந்தது. அதையும் மிகச் சரியான முறையில் அவர் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் 'வாலு' படம் வெளியாக நான்கு ஆண்டுகள் போராடினார் சிம்பு. இன்றும் கூட அவர் நடிக்கும் படம் வெளிவருமா என்கிற சந்தேகத்தை தனது ஒவ்வொரு பட அறிவிப்பின்போதும் சிம்பு எதிர்கொள்கிறார். சொல்லப்போனால் படம் முழுதாக எடுக்கப்படுமா என்கிற சந்தேகம்தான் முதலில் முளைக்கிறது. ஆக, இந்த யுத்தம் தொடர்ந்து நடக்கும்போலவே தெரியவில்லை. ஏனெனில் தனுஷ் அசைக்கமுடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார். இன்றும் கூட சிம்புவுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தாலும் கூட அவர்களும் கூட மனம் வருத்தப்பட்டு பேசும் நிலையில்தான் சிம்பு இருக்கிறார். இது இதுவரை வந்த எந்த இரு துருவங்களுக்கும் நடக்காத நிகழ்வு.

இதற்கிடையே, அதற்குள் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி ஒப்பீடுகள் இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து இன்று மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் சிவகார்த்திகேயனும், எப்படியாவது முன்னேறி விடவேண்டும் என முட்டி மோதி நடிகனாக மாறி இன்று அதிகளவு படங்களை வருடம் தோறும் வெளியிடும் நாயகனாக விஜய் சேதுபதியும் முன்னேறி  இருக்கிறார்கள். ஒரே நாளில் படம் வெளியிட்டு ஒரு பெரும் யுத்தத்தை இவர்கள் தொடங்கிவைப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. மூத்தவர்களின் பாதையும் மெல்ல மெல்ல மாற தொடங்கிவிட்டது.

இனி, ரசிக யுத்தத்தின் ஆழம் வரை சென்று பார்ப்போமா?

*** முடிவுரை தொடரும் ***

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயங்கள்: பகுதி 1 - தியாகராஜ பாகவதர் Vs பி.யூ.சின்னப்பா | பகுதி 2 - எம்.ஜி.ஆர். Vs சிவாஜி கணேசன் | பகுதி 3 - ரஜினி Vs கமல் | பகுதி 4 - அஜித் Vs விஜய்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.