இரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்

  பால கணேசன்   | Last Modified : 16 Aug, 2018 05:01 pm
tamil-cinema-super-stars-war-among-fans

தமிழ் சினிமாவின் இரு துருவங்களான தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர். - சிவாஜி கணேசன், ரஜினி - கமல், அஜித் - விஜய் ஆகியோரை கடந்த ஐந்து பகுதியிலும் அலசினோம். இதோ இந்த இறுதிப் பகுதி எழுதுவதற்காகத்தான் இவ்வளவு பில்டப் இதுவரை கொடுக்கப்பட்டது. 

சாதாரணமாக இதை ஒரே ஒரு கட்டுரையில் மொத்தமாக எல்லாரையும் அடைத்துவைத்து எழுதி முடித்திருக்கலாம். ஆனால் ஒரு காலகட்டத்தின் சரித்திரம் தெரிந்துகொள்ளாமல் அதைப் பற்றி பொத்தாம்பொதுவாக ஒரு விமர்சனம் வைப்பது எப்போதுமே எனக்கு ஏற்புடையதாக இருந்ததே இல்லை. அதனாலேயே ஒவ்வொரு துருவத்தை பற்றியும் குறைந்தபட்ச புரிதலை கடந்தக் கட்டுரைகளில் என்னால் முடிந்தளவு தெளிவுபடுத்த முயன்றேன். கட்டுரை எழுதும்போது இருந்த ஒரே குழப்பம் என்னவென்றால், இதை இப்போது இங்கே எழுதுவதா - இல்லை இறுதியில் எழுதுவதா என்கிற தடுமாற்றம் மட்டும்தான். அதை ஓரளவு சிறப்பாக செய்திருக்கிறேன் என்கிற நம்பிக்கையில் இதோ இறுதிப் பகுதி.

ஆறு மாதம் உழைப்பு, ஆறு மாதம் கலைவளர்த்தல் என்கிற ஒரு விஷயத்தை தமிழன் மேற்கொண்டிருந்தான் என்பதை சரித்திரங்களில் படித்து தெரிந்திருப்போம். அந்தளவிற்கு இயல், இசை, நாடகம் என தன் வாழ்க்கையோடு இரண்டற கலந்த விஷயங்களாக கலையை வைத்திருந்தான். சைவம், வைணவம் என ஒரே மதம் இரண்டாய் பிரிந்து சண்டையிட்டபோதும் கூட அவன் கலைகளை அந்த நோக்கில் பிரிக்கவில்லை. அதுவும் கலைகளை வளர்க்கும் இரட்டை வாய்ப்பு என்றுதான் அவன் நினைத்தான். உலகின் எந்த மூலையிலிருந்து யார் வந்து தங்கள் கலைகளை செய்து காட்டினாலும் அதற்கு தாக்க மரியாதையை தமிழன் கொடுக்க தவறியதே இல்லை என்பது அன்று மட்டுமல்ல இன்றும் நிரூபித்துக் கொண்டிருக்கிறான். எல்லாம் சரி. இந்த ரசிகனாக பிரிந்து சண்டை போடும் மனப்பான்மை எப்போதிருந்து தோன்றியிருக்கும்?

ஆரம்ப கால மேடை நாடகங்கள் நாட்டிய நாடகமாகத்தான் இருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அது உருமாறி ஆங்கிலேயர் வருகைக்கு பின் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் தாக்கத்தில் சமூக மற்றும் புராண வசன நாடங்களாக ஆகியது. இதில் முதல் ரசிகன் எதை அடிப்படையாக வைத்து தங்கள் ரசிகப் போரை தொடங்கினான் தெரியுமா? 

சாதியை வைத்து.

ஆம். நீங்கள் படித்த வரிகள் சரிதான். சாதியின் அடிப்படையில்தான் இங்கே முதன்முதலில் ரசிகர்களுக்கிடையே யார் பெரியவர் என்கிற விவாதங்கள் உருவாகின என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதில் பிராமணர்கள் தலையீடு அதிகமான காலகட்டத்தில் அதுவரை தெருக்கூத்தாக இருந்த பல கதைகளுக்கும் கூட ஒரு பிராமண சாயம் பூசப்பட்டு அம்மக்களிடம் இருந்து பறிக்கவும்பட்டது. பின்னர் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களிடம் மட்டும் இருந்த கர்நாடக சங்கீத திறமை சமூக நாடகங்களின் வெளிப்பாட்டின் காரணமாக எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை விதைத்தது. சாதாரண எடுபிடி ஆளாக நாடக குழுவில் சேர்ந்த பலரும் பின்னர் மிகப்பெரிய கலைஞர்களாக மாறியதும் இதன் அடிப்படையில்தான். இந்தப் போக்கு அதிகமானதும் சாதி வாரியாக பிரிந்திருந்த ரசிகர்கள் திறமை வாரியாக தங்கள் ஆதர்சத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர். 

அந்த வகையில் அந்நேரத்தில் மேடையில் தமிழ்ப் பாடல்களை தொடர்ந்து பாடியும், பாடுவதற்கு முன்பே அது என்ன ராகம் என்பதை தெளிவாக விளக்கியும், மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற எஸ்.ஜி.கிட்டப்பாவை நாம் இங்கே நினைவு கூறுதல் அவசியம். ஏனெனில், சாஸ்திரிய சங்கீதத்தை சாமானியர்களிடம் கொண்டுசென்று அதன் வனப்பை பெருகியவர்களில் முக்கியமானவர் இவர். இவரது 27-ஆம் வயதிலேயே மரணம் நேர்ந்ததால் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை தமிழகம் இழந்தது. இல்லையெனில் தியாகராஜ பாகவதரில் ஆரம்பித்த இந்த சூப்பர் ஸ்டார் இதிகாசம் அதற்கு முன்பாகவே கிட்டப்பாவில் இருந்து ஆரம்பித்திருக்கும். 

பாடலும் சண்டையும்

இத்தொடரின் முதல் பகுதியில் தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா இருவருக்கிடையிலான ரசிகர் சண்டையில் முக்கிய அங்கம் வகித்தது எதுவென்றால் ஒருவர் பாடலுக்கு பெயர் பெற்றார் மற்றொருவர் சண்டை, சாகச காட்சிகளில் பெயர் பெற்றார் என்பதால்தான்  என்பதை விரிவாக பார்த்தோம். உண்மையில் இந்தத் தொடக்கம் மிக அற்புதமான ஒன்று. ஏனெனில், இரண்டுமே வெவ்வேறு வகையில் ரசிகனின் திறனை வளர்க்கும் விஷயங்கள். பாடலை ரசித்து மன அமைதி பெறுவதற்கும், சாகசங்களில் மயங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் இது உதவியது. இது ஒரு நல்ல போக்கு என்பதை நாம் மறுக்கவே இயலாது. 

அன்றைய நாடகங்களும் சினிமாக்களும் பொழுதுபோக்கு தாண்டி பல விஷயங்களில் மக்களின் நலனை முன்னெடுக்க உதவியது என்பதற்கு இது சான்று. குறிப்பாக சுதந்திர போராட்டம் தீவிரமடைந்த காலகட்டங்களில் காங்கிரஸுக்கும், காந்திக்கும் ஆதரவான பாடல்கள் பாகவதர், சின்னப்பா ஆகிய இருதரப்பில் இருந்தும் பாடலாக படங்களில் பாடப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் புராண படங்களில் வரும் சில கதாபாத்திரங்களும் கூட வெள்ளை குல்லா அணிந்து நடித்த வரலாறு எல்லாம் இங்கே உண்டு. அந்தவகையில் என்னதான் பாகவதர் - சின்னப்பா ரசிகப்போர் இருந்தாலும் கூட அரசியல் என்கிற வகையில் அங்கே ஒன்றுபட்டுதான் இருந்தனர். இது ஒரு முக்கியமான குறிப்பாக ஏன் பார்க்கவேண்டும் என்றால் இதற்குப் பின் வந்த எம்ஜிஆர் - சிவாஜி சண்டையில் இந்த அரசியல் மிகமுக்கிய பங்காற்றுகிறது.

கலைஞரின் பங்கு

ஏற்கனவே சொன்னதுபோல் எம்ஜிஆர் - சிவாஜி இருவரின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய கலைஞர் திராவிடக் கட்சியின் ஒரு வேர். அவரது வசனங்களில் தெறிக்கும் தமிழ் வெறும் அலங்கார வார்த்தை மட்டுமல்ல. முழுக்க முழுக்க திராவிட சித்தாந்தங்களை மக்கள் மனதில் விதைக்க அவர் பயன்படுத்திய ஆயுதமும் கூட. அந்த வகையில் எம்ஜிஆரும், சிவாஜியும் கூட திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பறைசாற்ற உதவிய ஆயுதங்கள்தான். இதில் எம்ஜிஆர் அண்ணாவை தனது தலைவராக நேரடியாக ஏற்றுக்கொண்டார். அதை தன் படங்களின் வழியாக தொடர்ந்து வெளிப்படுத்தவும் செய்தார். ஆரம்பத்தில் காந்தியவாதியாக இருந்த எம்ஜிஆர் பின்னர் திராவிட கட்சிகளின் செல்லப்பிள்ளையாக மாறியது ஒரு முக்கியமான வரலாறு. 

எழுச்சியும் தோல்வியும்

கலைஞரின் வசனங்களில் நடிக்கும்போது மட்டுமல்லாது ஒரு மாஸ் ஹீரோவாக பரிணமிக்க ஆரம்பித்தபின் எல்லா படங்களிலுமே அண்ணாவின் புகழையும், திராவிட கட்சியின் புகழையும் பாடல் வரிகள் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும் தெளிவாக முன்னெடுத்தார் எம்.ஜி.ஆர். அன்பே வா என்கிற முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய படத்திலும் கூட "உதய சூரியனின் பார்வையிலே.. உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே" என பாடினார். "மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்.." என்கிற அவரது இன்னொரு பாடலையும் கவனிக்க வேண்டும். எதற்காக இந்த இரண்டு பாடல்களை குறிப்பிடுகிறேன் என்றால், இரண்டு பாடல்களுமே தணிக்கை துறையால் வரிகளை மாற்ற சொல்லி நிர்ப்பந்திக்கப்பட்ட பாடல்கள். உதய சூரியனின் பார்வையிலே பின்னர் புதிய சூரியனின் பார்வையிலே என்றும், மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா என்பது திருவிக என்றும் மாற்றப்பட்டது. சாதாரணமாக இதை அனுமதித்திருந்தால் கூட வராத எழுச்சி, பாடல் வரிகள் மறைக்கப்படும்போது இன்னும் அதிகமாக எழும். அது நடந்தது. இதைத்தான் எம்ஜிஆரும் எதிர்பார்த்தார். 

இன்னொரு பக்கம் ஆரம்பகாலகட்டங்களில் 1955 வரை திராவிட கட்சிகளின் ஆதரவாளராக இருந்த சிவாஜி கணேசன் எதார்த்தமாக திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல, அது மிகப்பெரிய விஷயமாக ஊடகங்களில் இடம்பெற, கடவுள் மறுப்பு கொள்கையை ஆணிவேராக கொண்ட திராவிட கட்சிகளின் மீது இது மிகப் பெரிய கேள்விக்கணையை தொடுத்தது. இதனால் சிவாஜி திராவிடக் கட்சிகளிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்தார். இதனால் மனமுடைந்த சிவாஜி, பின்னர் 1961-ல் காங்கிரஸ் கட்சியை வெளிப்படையாக ஆதரிக்க தொடங்கினார். மேலும் எப்படி எம்ஜிஆர் அண்ணா மீது ஒரு பற்று கொண்டாரோ அதேபோல் சிவாஜி அவர்கள் காமராஜர் மீது மிகுந்த மரியாதையை கொண்டிருந்தார். இதன் காரணமாக சிவாஜி அவர்களுக்கு ராஜ்ய சபா எம்பி பதவியும் இந்திரா காந்தி அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் 1987-ல் தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற பெயரில் ஒரு கட்சியையும் தொடங்கினார். ஆனால் மிகப்பெரிய தோல்வியை அரசியலில் சந்தித்து, முற்றிலுமாக ஒதுங்கினார். 

மேற்கண்ட இரண்டு பத்திகளையும் கவனியுங்கள். தமிழ் சினிமாவும், அரசியலும் ஒன்றோடு பின்னிப்பிணைய தொடங்கிய நெடும் வரலாறு அது. தமிழகத்தின் முதலமைச்சரை தமக்குள் ஒருவனிடம் தேடாமல், நட்சத்திரங்களிடம் மக்கள் தேடத் துவங்கிய ஒரு காலகட்டம். இங்கே ஒருவர் ஒரேநாளில் பிரபலமாக இரண்டே வழிதான். ஒன்று அரசியல். மற்றொன்று சினிமா. அந்த இரண்டும் கலக்கையில் நிகழ்ந்த ஒரு பிரளயம் இந்தநாள் வரை தமிழ்நாட்டின் சரித்திரத்தை எழுதிவருகின்றது. வெறும் திரை ரசிகனாக இருந்தவனை தனது தொண்டனாக மாற்றும் திறமையை எம்ஜிஆர் கண்டறிந்தார். எம்ஜிஆரின் அரசியல் வெற்றி, அவரை திமுகவில் இருந்து வெளியேற்றியது என தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் எல்லாமே ஒரு அற்புதமான திரைக்கதையின் ஒரு அங்கங்கள். இன்னொருபுறம் எந்த மக்கள் ஈடுபாடும் இல்லாது, அரசின் தயவில் எம்பியாக அமர்ந்த சிவாஜி. பின்னர் தனிக்கட்சி கண்டு இரண்டே வருடங்களில் தோல்வியடைந்த வரலாறு.

காலத்தின் கோலம்

இந்த இரண்டும் சேர்ந்து ரசிகனின் மனோபாவம் எத்தகையதாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஏனெனில் ஒரே மாதிரி திரைக்கதை அமைப்பே கொண்ட படங்களில் தொடர்ந்து நடிக்கும் எம்ஜிஆர் மீது ஒரு நடிகராக மிகப் பெரிய விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. அந்தப் படங்கள் ஓடினாலும் கூட எந்தவித பாதிப்பையும் ரசிகர்களை தவிர வேறு யாரிடமும் ஏற்படுத்தாத வெறும் திரைபிம்பங்கள்தான் அவை. ஆனால் இன்னொரு புறம் சிவாஜி எல்லாவிதமான பரிசோதனை முயற்சியையும் திரைப்படங்களில் செய்துகொண்டிருந்தார். அதற்கான பாராட்டுகளும் அவருக்கு கிடைத்துக்கொண்டேதான் இருந்தன. ஆனால் எம்ஜிஆர் தனது ரசிகர்களை தொண்டர்களாக தக்கவைக்க கட்சியின் கொடியை, பெயரை ரசிகர்கள் தங்கள் கைகளில் பச்சைகுத்த வைத்தார். அதை அவரது ரசிகர்களும் முழுமனதோடு செய்தார்கள். இன்று அதிமுகவில் இருந்து பிரிந்த போன பல முக்கிய அரசியல்வாதிகளும் கூட அந்த பச்சையை மறைப்பதற்காக முழுக்கை சட்டை மட்டுமே அணிவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். காலத்தின் கோலம்.

ஒருபக்கம் சினிமா என்கிற விஷயத்தில் தெம்பாக இருக்கும் சிவாஜி ரசிகர்கள், எம்ஜிஆர் ரசிகர்களை ஏளனம் செய்ய தவறியதே இல்லை. ஆனால் அதுவே அரசியல் என வரும்போது சிவாஜி ரசிகர்கள் வாயை திறக்கவே முடியாது. இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு கோயிலுக்கு சென்றதால் கடும் விமர்சனங்களை சிவாஜி சந்திக்க, எம்ஜிஆரோ தனிக்கட்சி தொடங்கியபின்னர் நேரடியாகவே தனது ஆன்மிக தேடலை வெளியில் காட்டிக்கொண்டார். சிவாஜியின் மீது எழுந்த இந்த விமர்சனம் எம்ஜிஆர் மீது திராவிட கட்சியால் மட்டுமே எழுப்பப்பட்டதே தவிர, மக்களால் அது கண்டுகொள்ளப்படவே இல்லை. ஏனெனில் தன் படங்கள் மூலம் மக்களை அந்தளவு தயார்செய்து வைத்திருந்தார் எம்ஜிஆர். ஆனால் சிவாஜிக்கு என்னதான் தனி ரசிகர்கள் இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை எதிர்த்து வாதங்கள் புரிந்தாலும் அவரது ரசிகர்கள் அவரது நடிப்பை சிலாகித்த அளவிற்கு அரசியலில் ஆதரவு தரவில்லை. சொல்லப்போனால் அவரது ரசிகர்கள் பலருக்கு சிவாஜி அரசியலுக்கு வருவதில் உடன்பாடே இல்லை. இந்த முரண் ரசிகனின் மனப்போக்கை எக்காலத்திலும் யாரும் கணிக்க முடியாது என்பதற்கு மிகப்பெரிய உதாரணம்.

கமல், ரஜினியின் வளர்ச்சி...

காதல் மன்னனாக பெயரெடுத்த ஜெமினி கணேசனுக்கு பிறகு காதல் இளவரசனாக வலம் வந்தார் கமல்ஹாசன். உண்மையில் மிகவும் பாதுகாப்பான பட்டம் அது. பெண்களின் ரகசியக் காதலனாகவும், ஆண்களே பொறாமை கொள்ளும் அழகும் இந்தப் பட்டத்தின் மூலம் நிரூபணமாவதால் எவ்வளவு பெரிய ரசிக சண்டை நிகழ்ந்தாலும் நாம் இன்னொரு புறம் வண்டி ஓட்டக்கூடிய வாய்ப்பு இதில் கிட்டும். பாலச்சந்தரின் 'மன்மத லீலை', 'மூன்று முடிச்சி' என ஒருபக்கமும், ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது' போன்றவையும் இந்த காதல் இளவரசன் பட்டத்தை வலுவாக்கியது. இன்னும் சொல்லப்போனால் என்னதான் கோவணம் கட்டி '16 வயதினிலே'யில் சப்பாணியாக இருந்தாலும் கூட ஆன்டி-ஹீரோவாக நடித்த 'சிகப்பு ரோஜாக்கள்' கமலின் மேல் பெண்கள் மையம் கொள்வதை பெரிதாகத்தான் ஆக்கியது. கொலைகாரன் மேல் காதல்வசப்படும் அந்த முரண் மனிதனுக்கே உள்ள இயல்பு அல்லவா? 

இந்தப் படங்கள் எல்லாம் வெளியான காலக்கட்டங்களில் எம்ஜிஆரும் - சிவாஜியும் நடித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் இருவரையும் மீறி ஒரு ரசிகர் கோட்டை எழுப்புவதில் சிரமம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனாலும் கூட இயக்குனர்களின் கைகளில் சினிமா இருந்த காலகட்டம் அது. கமர்ஷியல் படங்களின் வெற்றி நிலையற்று இருந்தாலும் கூட நூறு படங்களில் தொண்ணூறு படங்கள் அப்படிதான் வரும். ஆனால் கலையம்சம் உள்ள இயக்குனர்களின் படங்கள் ஒன்று நன்றாக ஓடினாலும் கூட அது பத்து கமெர்ஷியல் படங்களுக்கு உண்டான பெருமையை பெரும். இந்த முறையில்தான் கமல் - ரஜினி இருவருமே தங்களது ஆரம்ப காலகட்டங்களில் வளர்ந்தார்கள். முதல்வரான எம்ஜிஆர் நடிப்பதில் இருந்து விலக்கிக்கொண்ட தருணம் மாஸ் ஹீரோவுக்கான வெற்றிடம் திரைத்துறையில் விழுந்தது. அதை யார் பிடிப்பது என்கிற யுத்தம்தான் முதலில் நடக்க தொடங்கியது. 

1978-ல் தொடங்கியது அந்த யுத்தம். அந்த வருடம்தான் பைரவி மூலம் ஹீரோவாக மாறினார் ரஜினி. அதுவரை மாஸ் ஹீரோவாக இருந்த எம்ஜிஆர் திரையில் குடிக்கமாட்டார். புகைக்கமாட்டார். தாய்ப்பாசம் மிக்கவர். இவையெல்லாம் எம்ஜிஆர் கட்டமைத்த பிம்பம் மட்டும் அல்ல. அவர் இறுதிவரை கட்டிக்காத்த விஷயமும் கூட. ஆனால் காலம் மாறிக்கொண்டிருந்தது. எம்ஜிஆரின் பிரசித்தி பெற்றபோது இருந்த ஒழுக்கக் கோட்பாடுகள் மெல்ல மெல்ல அழியத்தொடங்கியது. தலைவனுக்கு இருக்கவேண்டிய குணம் என்கிற விஷயங்கள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. 

ரஜினி பிடித்த இடம்

ஒரு சிவாஜியின் கதாபாத்திரம் மதுவருந்துவது, புகைபிடிப்பது, கொலை செய்வது போன்றவற்றை வெளிப்படுத்தினால் அது யதார்த்தத்திற்கு அருகில் இருப்பதால் அது மக்கள் மனதில் வேறொரு ரீதியாக நிலைத்தது. இதுவே ஒரு மாஸ் ஹீரோ குடித்துவிட்டு குத்துப்பாட்டிற்கு ஆடினாலோ அல்லது தத்துவப்பாட்டு பாடினாலோ அது மக்களால் ரசிக்கப்பட்டது. வில்லனை ஒரு உதை உதைத்துவிட்டு ஒயிலாக சிகரெட்டை பிடிப்பது ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தியாவசிய தேவையாக மாறிப்போனது. காரணம் 1980-களில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பெரும்பிரச்சினையாக இருந்தது. ஒழுக்க நெறி கோட்பாடுகள் எல்லாம் உடைத்தெறியப்பட்டு, ஹிப்பி கலாச்சாரத்தின் பால் இளைய தலைமுறை நகர தொடங்கியது. தலைவனை, ரசிகன் பிரதிபலிக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடு உடைந்து, ரசிகன் செய்யும் செயல்களையே இன்னும் பூதாகரமாக செய்பவர் தலைவன் என்கிற விஷயம் உருவானது. ரஜினி அதைத்தான் செய்தார். முழுக்க முழுக்க எம்ஜிஆரின்  கருத்துக்களில் இருந்து வேறுபட்ட அடுத்த மாஸ் ஹீரோவாக ரஜினியை மக்கள் வார்த்தெடுத்தனர். சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, காக்கிச்சட்டை, விக்ரம் என கமல் அவ்வப்போது மசாலா படங்களில் தலைகாட்டினாலும் அவரது நோக்கம் மாற்று சினிமா என்கிற பாதையில் நகர்ந்துகொண்டே இருந்ததால் ஒருவகையில் ரஜினி போட்டியே இல்லாமல் எம்ஜிஆரின் இடத்தை அடைந்தார். 

அரசியலில் ஆரம்பத்தில் இருந்தே எம்ஜிஆர் இருந்ததாலோ என்னவோ அவரின் படத்திற்கு ஏற்பட்ட சிறு தடைகள் கூட மிகப்பெரிய அரசியல் பிரச்னையாகத்தான் ஊதி பெரிதாக்கப்பட்டது. 'உலகம் சுற்றும் வாலிபன்' அதற்கான உதாரணம். இன்னொரு பக்கம் சிவாஜி 'சிவந்த மண்' போன்ற படங்களில் எம்ஜிஆருக்கு எதிராக அவரும் வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி வெளியிட்டாலும் கூட உலகம் சுற்றும் வாலிபனை நெருங்க முடியவில்லை. காமராஜரை புகழ்ந்து தன் படத்தில் பாடல் வைத்தாலும் கூட அது கவனிப்பார் இன்றி போனது சிவாஜிக்கு. ஆக, தெரிந்தோ தெரியாமலோ இவருக்கு இதுதான் சரி என்கிற எண்ணத்தை ரசிகன் அந்தந்த நடிகர்களின் மனதில் பதியவைத்துவிட்டான். உண்மையில் இது ரசிகனின் மிகப்பெரிய வெற்றி. அதேபோல் அவனுக்கு அது "ஒரேமாதிரியா இருக்கு" என்கிற எண்ணத்தை தோற்றுவித்தால் உடனே அந்த குறிப்பிட்ட படத்தை தயவுதாட்சண்யமே இல்லாமல் தோல்வியுற செய்துவிடுவான். இந்த விஷயத்தில் ரசிகன் எந்த கொம்பனாக இருந்தாலும் அவரை தனது எல்லைக்குள்ளேயே வைத்திருக்கும் மந்திரத்தை கற்றுக்கொண்டு அதை ரகசியமாகவே பதுக்கி வைத்திருக்கிறான். 

சரி.. ரசிகன் ஜெயித்த கதையை இதில் பார்த்தோம். ரசிகனும் மனிதன்தானே? அதுவும் மகத்தான சல்லிப்பயல் வேறு. அவனும் அசிங்கமான ஒரு மனநிலை உடையவன்தான் என்பதை அவ்வப்போது நிரூபித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறான். அதற்கு சில நடிகர்களும் தூபம் போட்டனர். அதைப்பற்றி இறுதிப்பகுதியில் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாமா?

*** இறுதிப் பகுதி - விரைவில் ***

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயங்கள்: பகுதி 1 - தியாகராஜ பாகவதர் Vs பி.யூ.சின்னப்பா | பகுதி 2 - எம்.ஜி.ஆர். Vs சிவாஜி கணேசன் | பகுதி 3 - ரஜினி Vs கமல் | பகுதி 4 - அஜித் Vs விஜய் | பகுதி 5 - தனுஷ் Vs சிம்பு 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close