இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்

  பால கணேசன்   | Last Modified : 21 Aug, 2018 01:19 pm
tamil-cinema-super-stars-fans-extreme-behaviours

'குஷி' படம் வெளிவந்தபோது விஜய்யின் முந்தைய படமான 'கண்ணுக்குள் நிலவு' பெருந்தோல்வி அடைந்திருந்தது. சொல்லப்போனால் அவரது முந்தைய இரண்டு மூன்று படங்களும் மிக சுமாராகவே ஓடியிருந்தது. அஜித்துக்கு அந்த நேரத்தில் 'அமர்க்களம்' வெளிவந்து அவரை ஆக்‌ஷன் ஹீரோவாகவும், அதேநேரத்தில் நடிக்க தெரிந்த ஒரு மாஸ் ஹீரோ என்பதாகவும் ரசிகர்கள் சித்தரிக்க தொடங்கினர். இயல்பாகவே விஜய் - அஜித் ஒப்பீடுகள் இருந்ததால் இந்தத் தொழுகையின் வெளிப்பாடாக பல இடங்களிலும் அஜித் - விஜய் ரசிகர்களுக்கிடையே சண்டை உக்கிரமடைய ஆரம்பித்தது. அஜித்துக்கு 'வாலி' என்கிற மிகப் பெரிய வெற்றியை கொடுத்த அதே எஸ்.ஜெ.சூர்யா எடுத்த 'குஷி'யில், "என்னை மட்டும் இல்ல.. என்னோட இமேஜை கூட உன்னால ஒன்னும் பண்ண முடியாது.." என்கிற வசனம் விஜய் பேசுவது போல் எடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக அது நேரடியாக மக்களை பார்த்து பேசுவது போல அமைக்கப்பட்டிருந்தது. 

எம்ஜிஆரும் சிவாஜியும் அரசியல் ரீதியாக பிரிந்திருந்த பொழுது தொண்டர்களின் சண்டை உச்சத்தில் இருந்தது. ஆனால் அது அரசியல். அங்கே அப்படித்தான் நடக்கும். அப்படித்தான் அரசியல் செய்தார்கள். ஆனால் கலை அப்படிப்பட்டதல்ல. எம்ஜிஆரின் படம் நன்றாக இல்லையா? நீ விமர்சனம் செய்து கிழி. சிவாஜியின் நடிப்பு எடுபடவில்லையா? அதைப்பற்றி பேசி மட்டம் தட்டு. இங்கே அதை யாருமே வேண்டாம் என்று சொல்லவில்லை. உண்மையில் இது நன்மையே பயக்கும். 

பின்னர் ரஜினி - கமல் முன்னின்ற பொழுது ரஜினிக்கு மனநலனைக் குறிக்கும் விமர்சனப் பட்டம் சூட்டப்பட்டது. ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்த தகவல்கள் பல வடிவங்களில் பரவியதன் விளைவு இது. இதை ஆழமாக வேரூன்றி பரப்பியவர்கள் கமல் ரசிகர்கள். இதற்கு நான் நேரடி சாட்சி. எங்கள் ஊர் சூப்பர் ஸ்டார் டெய்லர்ஸ் கடையின் உரிமையாளர் ஆண்டிச்சாமி அவர்களுக்கும், ஜோதி மியூசிக்கல்ஸ் உரிமையாளர் ஜோதிமுருகனுக்குமான உரையாடலை கூட அமர்ந்து கேட்டவன் நான். 'வேலைக்காரன்' ஒரு தீபாவளிக்கு எங்கள் ஊர் டூரிங் கொட்டகையில் வெளியாகி இருந்த தருணம் அது. படத்தில் ஒரு ஈயை வைத்து ரஜினி செய்யும் காமெடிகளை ஆண்டிச்சாமி அண்ணன் சிலாகித்துப் பேச, கமல் ரசிகரான ஜோதி அண்ணன், மனநலம் சார்ந்த பெயருடன் "அப்படி இருக்குறவருக்கு காமெடி பண்ண சொல்லியா தரணும்" என்று குதர்க்கமாக கேட்க, அதற்கு பதிலடி தரும் விதமாக தனிமனித ஒழுக்கத்தைக் குறிக்கும் ஸ்டேட்மென்ட் ஒன்றை என கமலை நோக்கி ஆண்டிச்சாமி அண்ணன் விமர்சனம் வைக்க, அவர்கள் இருவரும் ஒட்டுமொத்த ரஜினி - கமல் ரசிகர்களின் உதாரணங்களாய் அங்கே வீற்றிருந்தார்கள்.

ஆனால் இவையெல்லாம் ரசிகர்களுக்குள்  நிகழ்ந்தபோதும் ரஜினியை திட்டி கமலோ அல்லது கமலை திட்டி ரஜினியோ மறைமுக வசனங்கள் எதுவும் தங்கள் படத்தில் வைக்கவில்லை. அதாவது ரசிகனை தூண்டி விடவில்லை. மாறாக பொதுவெளியில் ஒன்றாக தோன்றுவதும், ஒருவரை மற்றொருவர் தொடர்ந்து புகழ்வதுமாக இருந்து அந்த எதிரி மனப்பான்மையை குறைக்கவே விரும்பினார்கள்.

ஆனால் விஜய் - அஜித் விவகாரத்திலோ இது முழுக்க எதிர்மறையாக நடக்க ஆரம்பித்தது. திருமலையில் "யார்ரா உங்க தல?" என விஜய் கேட்க, "இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன" என அட்டகாசத்தில் அஜித் திருப்பிக் கேட்க, ரசிகர்களின் யுத்தத்தை வைத்து காசு பார்க்க ஆரம்பித்தனர் நடிகர்கள். இதை முதலில் ஆரம்பித்தது விஜய்தான் என்றும், தொடர்ந்து அஜித் படங்களுக்கு பல சிக்கல்களை அவர் தோற்றுவித்தார் என்றும், அதன் காரணமாகவே அஜித் இப்படி பதிலடி தந்தார் என்றும் மிகத் தீவிரமான வாதங்கள் இணையமெங்கும் எதிரொலித்தன. செய்வதை திருப்பி செய்ய இவர்கள் இருவரும் தனிமனிதர்கள் அல்ல என்பதாய் இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த இடத்தில் சமூக வலைத்தளங்களின் வருகை பற்றி நாம் பார்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம்.

இணையத்தில் தமிழில் கட்டுரைகள் வர தொடங்கிய காலகட்டத்தில் வலைப்பூக்கள் என்றழைக்கப்படும் பிளாக்கர்கள் புகழ்பெற தொடங்கினர். சினிமா பற்றிய கட்டுரைகள் மட்டுமே எழுதும் பலர் தோன்றினர். அந்நேரத்தில் தான் உலக சினிமா என்கிற பதமும் இங்கே தமிழ் கூறும் நல்லுலகில் பிரபலமாக தொடங்கியது. பின்னர் பேஸ்புக், ட்விட்டரின் வருகை வலைப்பூக்களை புறம்தள்ளியது. உண்மையான ஆனால் ஒரு நிழல் யுத்தம் இங்கேதான் தொடங்கியது. அது வழக்கமான யுத்தமாக இருக்கவில்லை. ஆனால் இதுவரை நடந்த எந்த ரசிக யுத்தத்தை விடவும் கீழ்த்தரமான ஒரு யுத்தமாக அது இருக்கும் என்று ஆரம்பித்தபோது யாரும் அறிந்திருக்கவில்லை.

சமூக வலைத்தளங்களின் மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட் என்னவென்றால், நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நமக்கு ஒரு முகமூடி இங்கே இலவசமாக கிடைக்கிறது. அந்த முகமூடி கொடுக்கும் தைரியம் அளப்பரியது. காரணம் ரஜினி வெறியர் ஆண்டிச்சாமியும், கமல் பக்தர் ஜோதியும் சண்டையிட்டது நேருக்கு நேராக. சண்டை முடிந்த சில நிமிடங்களிலேயே ஒன்றாக டீக்கடையில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இது இணைய உலகில், சமூக வலைத்தளத்தில் அப்படி நிகழ்வதில்லை. ஆரம்பத்தில் ஒருவரை கிண்டல் செய்து மற்றவர்கள் பதிவிடுவதில் தொடங்கிய இந்த யுத்தம், பின்னர் மீம் கலாச்சாரம் கையில் கிடைத்தவுடன் அதை வைத்து தொடர்ந்தது. புகைப்பட மீம் பின்னர் வீடியோ மீமாக பரிணாமம் பெற்றது. அறிவியல் மட்டுந்தான் இங்கே பரிணாமம் பெற்றது. ஆனால் ரசிகனோ அந்த அறிவியல் மூலம் கீழ்த்தரமான விஷயங்கள் செய்து கற்காலத்திற்கே செல்ல ஆரம்பித்தான். அதைவிட கொடுமை என்னவென்றால் விஜய் ரசிகர்கள் இந்த கிண்டல்களை பொறுக்கமுடியாமல் காவல்துறையிடம் சென்று புகார் செய்யுமளவுக்கு இது கொடூரமாக இருந்தது.

ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது முன்னர் எல்லாம் எத்தனை நாட்கள் ஓடியது என்பதை கணக்கில் வைத்து நிர்ணயிக்கப்பட்டது. உண்மையில் அதில் தெளிவான கணக்கு என்பது எத்தனை திரையரங்கில் அது நூறு நாட்கள் ஓடியது என்பதை வைத்தே நிர்ணயித்தார்கள் ரசிகர்கள். பின்னர் மல்டிப்ளெக்ஸ் ஆதிக்கம் தொடங்கிய பின்னர் படம் ஓடும் நாட்கள் குறைவாகி முதல் மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் ஆகிறது என்கிற கணக்கை முன்னெடுத்தனர் ரசிகர்கள். இந்த இடத்தில்தான் சண்டை வலுக்க தொடங்கியது. வசூலின் சண்டை உக்கிரமாக நடக்கையில் இங்கே அந்தப் படத்தின் தரம் என்னவென்பதற்கான கேள்வியே எழாமல் போய்விடுகிறது. உண்மையில் இவர்கள் சண்டையிட வேண்டியது யார் படத்தின் தரம் உயர்ந்தது என்கிற நோக்கில்தான். அதுதான் ரசிகனுக்கான வேலை. ஒரு படத்தின் வெற்றியும், தோல்வியும் அப்படிதான் மதிப்பிடப்பட வேண்டும். 

நடிகராக இருந்து முதல்வராக ஆகும் அளவிற்கு எம்ஜிஆர் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்தாலும் கூட, அவரது திரைவாழ்வை பற்றி பேசுகையில் அங்கே தன்னிச்சையாக சிவாஜியின் பெயர் வந்துவிடும். அதனோடே சேர்ந்து என்னதான் இருந்தாலும் சிவாஜி அளவுக்கு எம்ஜிஆர் சிறந்த நடிகர் இல்லை என்றும், எம்ஜிஆர் படங்களை விட சிவாஜி படங்களே சிறந்தது என்றும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். கமல் - ரஜினிக்கும் இது பொருந்தும். எந்த ரஜினி படத்தையும் ஒவ்வொரு காட்சியாக பிரித்து இங்கே அலசல் வந்ததேயில்லை. தளபதி, காலா முதலானவை விதிவிலக்கு. ஆனால் கமலின் எல்லா தோல்விப் படங்களுமே இங்கே விஸ்தாரமாக அலசப்படும். அவரின் சில நகைச்சுவை படங்களும் கூட. இப்படி நடிகர்களை அவர்கள் தங்கள் ஆதர்சங்களாவே இருந்தாலும் அதை அவர்கள் கொடுக்கும் திரைப்படம் மூலம்தான் முந்தைய ரசிகன் அளவிட்டான். வசூல் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஆனால் இன்று?

ஒன்றும் வேண்டாம். ஒரு டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியாகும் அன்று அதை எத்தனை பேர் பார்க்கிறார்கள், எத்தனை பேர் விருப்பக்குறி இடுகிறார்கள் என்பதை கூட யுத்தமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். யுத்தத்திற்கு உண்டான மரியாதையே இவர்களால் கெட்டுப்போய்விட்டதுதான் உண்மை. இதில் அரசியலுக்கு வருவதை நோக்கமாக கொண்டிருக்கும் விஜய் எப்படி அஜித்தை நோக்கி நேரடியாக திரையில் விமர்சிக்க ஆரம்பித்தாரோ அதையே இன்னும் உக்கிரமாக அஜித் செய்ய ஆரம்பித்தார். ரசிகர்களின் யுத்தம் போகவேண்டிய பாதையை இவர்களே நிர்ணயம் செய்ததுதான் இங்கே பிரச்சினைக்கான ஆரம்பப்புள்ளி. இதில் அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக பகிரங்கமாக அறிக்கைவிட்ட பின்னரும் இந்த போக்கு தீவிரமடைந்திருக்கிறதே தவிர சற்றும் குறையவில்லை. இன்னொருபக்கம் இங்கே தனுஷ் - சிம்பு ரசிகர்கள் சண்டை ஆரம்பித்த விதமே வித்தியாசமானது. சொல்லப்போனால் தனுஷிற்கு ஆரம்ப காலகட்டத்திலேயே இவ்வளவு முக்கியத்துவம் எழவும் அந்தப் பிரச்னை வழிவகுத்தது. 

அது என்னவென்றால் ரஜினியின் மூத்த மகளை தனுஷ் திருமணம் செய்த சம்பவம். சிம்புவின் கூற்றுப்படி ஐஸ்வர்யாவும், சிம்புவும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்கள் எனவும், இடையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணமாகவே சிம்பு மீது கோபம் கொண்ட ஐஸ்வர்யா, சிம்புவை பழிவாங்கும் காரணத்திற்காகவே தனுஷை மணந்து கொண்டார் என்றும் ஒரு செய்தி பரவ, சிம்புவும் தன் பங்கிற்கு, "ஐஸ்வர்யா எங்கிருந்தாலும் வாழ்க.." என்றொரு பேட்டியில் கூற, சிம்பு - தனுஷ் ரசிகச் சண்டையின் ஆரம்பப்புள்ளியே திரைப்படமாக இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையாக அமைந்துபோனது இங்கே நாம் கவனிக்க வேண்டியது. கமல் விவகாரத்து பெற்ற செய்தியை வைத்து ரஜினி ரசிகர்கள் கேலி செய்வது என்பது ஒரு எக்ஸ்ட்ரீம் லெவல் சண்டையில்தான் நிகழும். மற்றபடி எல்லா சண்டையும் திரைப்பட அடிப்படையில்தான் நிகழும். ஆனால் இங்கே அடிப்படையே சொந்த வாழ்க்கை என்பது வருந்தவேண்டிய  விஷயம். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், இன்று எந்தவொரு செய்தியும் ரகசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மீது விழும் வெளிச்சம் பன்மடங்காக பெருகி ரசிகன் எதை முன்வைத்து பேசவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் அளவிற்கு இது பலம்பெற்று விட்டது. 

ஆனால் இதெல்லாம் கூட இங்கே மிகப்பெரிய பிரச்னையாக நான் பார்க்கவில்லை. என்னை அச்சுறுத்தும் பிரச்னையே வேறு. சென்ற பகுதியில் ஒரு வரி எழுதி இருந்தேன் நினைவிருக்கிறதா? இங்கே முதன்முதல் ரசிக சண்டை சாதியின் அடிப்படையில் நிகழ்ந்தது என்று? அந்த வரலாறு இதோ மீண்டும் திரும்பியிருக்கிறது. ஆம்.. இப்போது தளபதி விஜய், ஜோசப் விஜய் என்கிற கிறிஸ்தவர். அஜித் வெள்ளைநிறமாக இருப்பதால் உயர்சாதியை சேர்ந்தவர் என்கிற அடிப்படையில் இங்கே போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன. பேனர்கள் அதன் காரணமாகவே கிழிக்கப்படுகின்றன. ரசிகனின் விருப்பத்திற்குரிய நாயகன் திரையில் அரிவாள் தூக்குவது போல் இருக்கும் புகைப்படம் இங்கே ரசிகனின் சாதி பற்றிய குறிப்புக்கு சின்னமாக மாறிவிட்டது. கலை சாதியின் கையில் சிக்கி சின்னாபின்னமாகும் தருணமும் நெருங்கிவிட்டது. இதன் பாதிப்பு எந்தளவு விஸ்தாரணமாக இருக்கிறது என்றால், எம்ஜிஆர் ஒரு மலையாளி, கமல் ஒரு பிராமணர், ரஜினி ஒரு மராட்டியர் என்கிற சாதி, மத, மாநில அடிப்படையிலான பிரிவுகள் உக்கிரமடைந்தது இந்தச் சமூக வலைத்தளங்களின் புண்ணியத்தால்தான். இதில் ஒருபடி மேலே சென்று சினிமாவையே தலித் சினிமா, உயர்சாதி சினிமா என்று இருவேறு பிரிவுகளாக பிரிக்கும் முயற்சிகளும் இங்கே நடந்துகொண்டிருக்கின்றன. அதில் ரசிகனின் பங்கும் இருக்கிறது. ஆனால் இதில் பலிகடா ஆவதும் அதே ரசிகன்தான். 

ஏற்கெனவே ஒட்டப்பட்டிருக்கும் ஒரு நடிகரின் போஸ்டரின் மீது தனது விருப்பத்திற்குரிய நடிகனின் போஸ்டரை ஒட்டுவது, இரவோடு இரவாக தனக்கு பிடிக்காத நாயகனின் போஸ்டர் மீது சாணி அடிப்பது என முன்னர் நடந்த ஒரு சண்டைக்கெல்லாம் இப்போது மதிப்பே இல்லை. அதெல்லாம் களத்தில் நேரடியாக நடந்த விஷயங்கள். ரசிகர்மன்ற உறுப்பினர் எண் வாங்கியதும் அதற்காக கைக்காசு போட்டு பெயர்ப்பலகை வைக்க ராப்பகலாக உழைத்த ரசிகன் வாழ்ந்த மண் இது. இதுவே இன்னொருபடி உயர்ந்து 30 அடி கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய ஆரம்பித்தான் ரசிகன். அதுவும் தன் சொந்தக்காசில், உயிரை பணயம் வைத்து செய்தான். படம் பார்த்து முடித்துவிட்டு, தன் தலைவனை கண்ட சந்தோசத்தில் இன்னும் உற்சாகமாக மறுநாள் வேலைக்கு சென்றான். மீண்டும் அடுத்த படம் எப்போது என்று காத்திருக்க தொடங்கினான். 

"இவன் தலைவன் படம் வர்றப்போ மட்டும் பயலுக்கு கிறுக்கு பிடிச்சிரும்.. மத்தபடி நல்ல பையன்தான்.." என்கிற வசனம் எல்லாம் இங்கே ஒரு காலத்தில் மிகப் பிரபலம். இப்போதும் பாலூற்றும் ரசிகன் இருக்கிறான். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அவன் களத்தில் இருக்கிறான். அவன் உணர்வுகள் எப்போதும் போல அப்பழுக்கற்றது. போதையின் உச்சியில் இருந்தாலும் அந்த நேர சந்தோஷம் அவனுக்கு தரும் உற்சாகம் நாம் அளவிட முடியாதது. "நாளைக்கு பொழைப்பை பார்க்க போகணும் மச்சி.." என்பதும் கூட அவனின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான்.

ஆனால் இணைய வளர்ச்சி இந்த சண்டையை 24x7 மணிநேரம் வேலையாக மாற்றியிருக்கிறது. களத்தில் இறங்க தேவையில்லை. சமூக வலைதளமே களம். அவன் வைக்கும் எல்லா கட்டவுட்டும் ஐந்தரை இன்ச் செல்போன் ஸ்க்ரீனில்தான் அடங்கும். அவன் வைக்கும் விமர்சனங்களும் அதே ஐந்தரை இன்ச்-தான். "போனவாட்டி அவனுங்க முப்பத்திரண்டு அடியில வச்சானுங்க மச்சான். நாம 35-ஆவது வைக்கணும்டா.."என்கிற அளவெல்லாம் இப்போது இல்லை. காதல், காமம், அன்பு, பாசம், நேசம், சோகம், துக்கம், வருத்தம் என எல்லாமே ஃபாஸ்ட் ஃபுட்டாக மாறிவிட்டதைப் போல இந்த ரசிக மனப்பான்மையும் கூட அப்படியே மாறிப்போய் கிடக்கிறது. அன்பு, காதல் எல்லாம் கூட அத்தியாவசியம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ரசிக மனப்பான்மையோ என்றுமே ஆடம்பர விஷயமாகத்தான் இங்கே அறியப்படுகிறது. இதே சீக்கு பிடித்த மனநிலை தொடர்ந்தால் "முன்னொரு காலத்தில் சினிமாவில் தன்  விருப்பமானவர்களை ரசிக்கும், நேசிக்கும், அந்த நாயகனின் உயர்வுக்கு தன்னை அர்ப்பணிக்கும் ரசிகர்கள் என்றொரு கூட்டம் இருந்தது" என்று வரலாறுகளில் படிக்க வேண்டிய சூழல் வந்துவிடும். 

அப்படி ஒரு சூழல் வந்தால் உண்மையில் நாம் இழப்பது என்ன தெரியுமா? 

நம்முள் இருக்கும் குழந்தைத்தனத்தை. எவ்வளவு கோடி கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் அந்தக் குழந்தைத்தனம். வாழ்வின் எல்லா துன்பங்களையும் ஒரு இரண்டரை மணிநேரம் மறக்க செய்யும் அற்புதம் கொண்டது இந்தக் குழந்தைத்தனம். அடையாளமில்லா ஒரு சமூக வலைத்தளத்தில் அதை தொலைத்துக்கொண்டிருக்கிறான் ரசிகன். அவனை மீட்டெடுக்க வேண்டியது நம் கடமை. 

(நிறைவு)

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயங்கள்: பகுதி 1 - தியாகராஜ பாகவதர் Vs பி.யூ.சின்னப்பா | பகுதி 2 - எம்.ஜி.ஆர். Vs சிவாஜி கணேசன் | பகுதி 3 - ரஜினி Vs கமல் | பகுதி 4 - அஜித் Vs விஜய் | பகுதி 5 - தனுஷ் Vs சிம்பு | பகுதி 6 - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close